சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகள் இலங்கைக்கு பயனளிக்குமா? -டேவிட் ராஜ்

லங்கையில் தேர்தல்கள் வரப்போகும் ஒரு சூழ்நிலையில் சீர்திருத்தக் கொள்கைகளை இலங்கை தொடர்ந்தும் முன்னெடுப்பதை உறுதிப்படுத்த வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை செய்துள்ளது.
அமெரிக்க தலைநகர் வொசிங்டனில் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய – பசிபிக் இலாகாவின் உதவி பணிப்பாளர் Anne-Marie Gulde அம்மையார் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்.
அத்துடன் தேர்தல் வரவுள்ள சூழலில் இலங்கை கட்டாயமாக புத்திசாலித்தனமான கொள்கையைப் பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கிறார்.
மேலும் அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில்,


நாங்கள் இலங்கைக்கு மூன்று விடயங்களை வலியுறுத்த விரும்புகிறோம். வருவாயுடன் கூடிய புத்திசாலித்தனமான நிதிக் கொள்கை, ஜாக்கிரதையான நிதிக் கொள்கை, தொடர்ந்து நிதிக் கையிருப்பை பேணுதல் என்பனவற்றையே நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
உங்களுக்குத் தெரியும் அங்கு பெரும் பொதுக்கடன் உள்ளது. அப்படியிருக்கையில் சந்தைக்கான நம்பிக்கையை ஏற்படுத்துவது கடினமானது. அமைப்பு ரீதியான மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவர்கள் வர்த்தகத்தைத் திறத்தல், சீர்திருத்தங்களை ஏற்படுத்துதல், போட்டித்தனமையை அதிகரித்தல் என்பவற்றில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
இலங்கையில் வேலையில்லா நிலை கீழ்மட்டத்தில் உள்ளது. ஆனால் இலங்கையைப் பொறுத்தவரையில், போட்டித்தன்மையை அதிகரிப்பது, வளர்ந்து வரும் முதியோர் நிலையில் கவனம் செலுத்துவது, தொழில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது என்பவை முக்கியமானவையாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
உலகின் மிகப்பெரிய வட்டிக்கடைக்காரர்களில் ஒன்றான (மற்றது உலக வங்கி) சர்வதேச நாணய நிதியத்தின் முக்கியமான அதிகாரி ஒருவர் இலங்கையில் நடைபெறப்போகும் தேர்தல்களுடன் சம்பந்தப்படுத்தி இலங்கையின் பொருளாதார நிலை பற்றி தெரிவித்துள்ள இந்தக் கருத்துக்கள் மூலம் சில முக்கியமான விடயங்கள் தெளிவாகின்றன.
அதாவது, இலங்கை தனது வருவாயைப் பெருக்க வேண்டும் என்பதையே அவர் வலியுறுத்துகிறார். ஆனால் எப்படி வருவாயைப் பெருக்க வேண்டும் என்பதில் அவர் தெளிவான விளக்கத்தைக் கொடுக்கவில்லை.
பொதுவாக ஒரு நாடு தன் வருவாயைப் பெருக்குவதானால், அது சிறந்ததொரு தேசிய பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். அதன் மூலம் தேசிய உற்பத்தியைப் பெருக்கி, உள்நாட்டுச் சந்தையில் பொருட்களின் விலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க வேண்டும்.
இதன் மூலம் இறக்குமதிக்கு செலவாகும் அந்நியச் செலவாணியை மீதப்படுத்த முடியும். இப்பொழுது தேசிய வருவாயில் 50 சதவிகிதம் இறக்குமதிக்கு செலவிடப்படுகின்றது.
அத்துடன் இன்னொரு வழியில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலமும், அதன் தரத்தை மேம்படுத்துவதின் மூலமும் ஏற்றுமதியை அதிகரித்து அந்நியச் செலவாணி வருவாயையும் அதிகரிக்க முடியும்.
இவற்றின் மூலமே அரச கருவூலத்தில் பணத்தைச் சேமிக்க முடியும்.
ஆனால் வொசிங்டனில் பேட்டியளித்த சர்வதேச நாணய நிதிய அதிகாரி, இவற்றைப் பற்றிக் குறிப்பிடாமல், வேறு வழிகளில் பணத்தை திரட்ட முயற்சிக்குமாறு பூடகமாகக் குறிப்பிடுகிறார்.
அதாவது, பொருளாதாரக் கட்டமைப்பு முறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளுமாறு குறிப்பிடுகிறார். நிச்சயமாக இதன் அர்த்தம், தற்போது இலங்கையில் அரச துறைகளாக இருக்கும் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, எரிபொருள், துறைமுகம், போன்ற அத்தியாவசியத் துறைகளை தனியார்மயப்படுத்த வேண்டும் என்பதாகும். அத்துடன் அவற்றைத் தனியார்மயப்படுத்தி போட்டியை ஊக்குவிக்க வேண்டும் என்பதுமாகும்.
இன்னொன்றை அவர் வெளிப்படையாகச் சொல்லவில்லை. ஆனால் அதைத்தான் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் என்பனவற்றின் தாளத்துக்கு ஏற்ப செயற்படும் இன்றைய ஐ.தே.க. அரசாங்கம் செய்து வருகின்றது.
அதாவது, உற்பத்தியை ஊக்குவித்து, முதலீடுகளைக் கவர்ந்திழுத்து வருவாயைப் பெருக்குவதற்குப் பதிலாக, ஐ.தே.க. அரசு மக்கள் மீதான வரிகளை அதிகரித்து தனது நிதிப் பிரச்சினையைத் தீர்க்க முயல்கிறது.
இது வீட்டின் கூரையைப் பிடுங்கி சமைப்பதற்கு அடுப்பை எரிப்பதற்கு பயன்படுத்துவது போன்றது.
அண்மையில் நிதியமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தில் இதை அவதானிக்கலாம். அதுமட்டுமின்றி, இரண்டு வரவு செலவுத்திட்டங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் பொருட்களின் விலைகளை திடீர் திடீரென பலமடங்கு அரசாங்கம் உயர்த்துவதிலிருந்தும் இதைக் கண்டு கொள்ளலாம்.
ஆனால் சர்வதேச நாணய நிதிய அதிகாரியின் பேட்டியிலிருந்து இன்னொரு விடயமும் புலனாகின்றது. அதாவது, இலங்கை அரசு நாணய நிதியத்தின் ஆலோசனைகளுக்கிணங்க பொருளாதாரத்துறையில் ஏற்கெனவே மாற்றங்களைச் செய்ய ஆரம்பித்துவிட்டது என்பதே அது. அதற்காகத்தான் நிதியமைச்சர் மங்கள சமரவீர அடிக்கடி வொசிங்டனுக்கு காவடி தூக்கிச் சென்றார் என்பதும் தெரியாத விடயமல்ல.
அதேநேரத்தில் இலங்கையில் ஒரு வருட கால அவகாசத்தில் நடைபெறவுள்ள மாகாண, ஜனாதிபதி, நாடாளுமன்றத் தேர்தல்களில் தற்போதைய ஏகாதிபத்திய சார்பு ஐ.தே.க. அரசுக்கு எதிரான தேசபக்த சக்திகளே வெற்றியீட்டப் போகின்றன என்ற எச்சரிக்கை உணர்வும் சர்வதேச நாணய நிதிய அதிகார அம்மையாரின் பேச்சில் வெளிப்பட்டு நிற்கின்றதை அவதானிக்க முடிகிறது.

No comments:

Post a Comment

The UK and the Pandora papers: A cesspit of the super-rich by Thomas Scripps

  No one in the UK needed to be told that the Johnson government is beholden to the interests of the super-rich. Indeed, it is a government ...