முஸ்லீம் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் நன்கு திட்டமிடப்பட்டவை!

லங்கையில் இவ்வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும், நட்சத்திர விடுதிகள் மீதும் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலைத் குண்டுத் தாக்குதல்களால் 250 இற்கும் மேலானவர்கள் கொல்லப்பட்டதுடன், 500 இற்கும் மேலானவர்கள் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் இலங்கையர்களை மட்டுமின்றி, முழு உலக மக்களையும் அதிர்ச்சியிலும் பீதியிலும் ஆழ்த்தியது.
அதைத் தொடர்ந்து தற்பொழுது வடமத்திய மாகாணத்தின் பல பகுதிகளில் முஸ்லீம் மக்களின், வீடுகள், வர்த்தக நிலையங்கள், பள்ளிவாயல்கள் என்பன தாக்கப்பட்டு பலத்த சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் கண்டிக்கத்தக்க விடயம் என்னவெனில், கலகக்காரரை கட்டுப்படுத்த வேண்டிய பொலிசார் இந்தத் தாக்குதல்களைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தமைதான்.

இந்தத் தாக்குதல்களால் முஸ்லீம் மக்கள் உட்பட முழு இலங்கை மக்களினதும் இயல்பு வாழ்க்கை சீர்குலைந்துள்ளது. அரசாங்கம் என்னதான் நம்பிக்கையளிக்கும் வாக்குறுதிகளை வழங்கினாலும் நிலைமை வழமைக்குத் திரும்ப பல ஆண்டுகள் பிடிக்கலாம் எனக் கருதப்படுகிறது. அதைவிட மோசமான நிலைமை என்னவெனில், மேலும் பல பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்கலாம் என்ற நிலை இருப்பதுதான்.
ஏப்ரல் 21 தாக்குதலைத் தொடர்ந்து ஆயுதப்படையினர் நாடு முழுவதும் மேற்கொண்ட தேடுதல்களில் துப்பாக்கிககள், வெடிமருந்துகள், வாள்கள், சீருடைகள், பிரச்சார இறுவட்டுகள் என பல பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் தொகையைப் பார்க்கும்போது, இலங்கை மேலும் எத்தகைய அபாயங்களை எதிர்நோக்கி இருந்திருக்கிறது என்பதை விளங்கிக்கொள்ள முடிகிறது.
இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சிலர் படையினரின் சுற்றிவளைப்பின் போது தம்மைத்தாமே மாய்த்துக் கொண்டுள்ளனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல ஆயுதங்கள் கைப்பற்றப்படுவதோடு, பலர் கைது செய்யப்படலாம் என்ற நிலை தொடர்கின்றது.
கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் எண்ணிக்கையையும், பயங்கரவாதிகள பயன்படுத்திய பயற்சி முகாம்கள், அவர்களுக்கு நிதி வழங்கியோர், அவர்கள் பயன்படுத்திய அதிநவீன ஆயுதங்கள் என்பவற்றைப் பார்க்கும்போது, எவ்வளவு மிகப்பெரிய திட்டங்களை அவர்கள் வைத்திருந்திருக்கிறார்கள் என்பதை அனுமானிக்க முடிகிறது.
அதேவேளை, இத்தகைய மிகப்பெரிய செயல்பாடுகளும், ஆயுதக் குவியல்களும் பாதுகாப்புத் தரப்பினருக்கு எவ்வாறு தெரியாமல் போனது என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுவது நியாயமானது. இதில் எங்கேயோ சதித்திட்டம் ஒன்று மறைவாகச் செயல்பட்டுள்ளது என்பது புலனாகின்றது.
தற்போது வெளிவரும் தகவல்களைப் பார்த்தால் இந்தத் தாக்குதல்களுடன் அரச அதிகாரத்தில் இருக்கும், குறிப்பாக ஆளும் கட்சியுடன் இருக்கும் முஸ்லீம் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருந்தது தெரிய வருகிறது. இருந்தும் அரசு இதுவரை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அசமந்தமாக இருப்பதிலிருந்து, இந்தத் தாக்குதலால் அரசாங்கமும் நன்மை அடைந்திருப்பது தெரிய வருகிறது.
குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அரச இயந்திரமே தடையாக இருப்பதன் காரணமாகத்தான் சந்தேகத்துக்குரிய சில அமைச்சர்கள் மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தத் தாக்குதல் காரணமாக சாதாரண அப்பாவி முஸ்லீம் மக்களுக்கு தொல்லைகள் கொடுப்பவர்கள், ஏன் இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய செல்வாக்குமிக்க முஸ்லீம் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்ககின்றனர்? இதிலிருந்தே அரசின் கபடத்தனம் புரிகின்றது.
ஏப்ரல் தாக்குதல் நடந்தவுடன் பாரிய அளவில் முஸ்லீம் மக்கள் மீது பழிவாங்கும் தாக்குதல் நடத்தப்படலாம் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் இரண்டொரு அசம்பாவிதங்களைத் தவிர வேறு எதுவும் பெரிதாக நடக்கவில்லை. இதிலிருந்து ஒரு உண்மை தெளிவானது. அதாவது, கொழும்பு பேராயர் அவர்களின் சமயோசித நடவடிக்கைகளினாலும், பொதுமக்களின் சகிப்புத்தன்மையினாலும் பொதுமக்கள் உணர்ச்சிவசப்பட்டு எந்தத் தாக்குதலிலும் ஈடுபடவில்லை.
ஆனால், அதன்பின்னர் சுமார் இரண்டு வாரங்கள் கழிந்த நிலையில், வடமேல் மாகாணத்தில் முஸ்லீம் மக்கள் தாக்கப்பட்டுள்ளனர். இது பொதுமக்களின் தன்னெழுச்சியான தாக்குதல் அல்ல. அவர்கள் அவ்வாறு செய்வதானால் ஏப்ரல் 21 தாக்குதல் நடந்தவுடனேயே எதிர்வினையாற்றி இருப்பார்கள். எனவே இது திட்டமிட்ட ஒரு தாக்குதலாகும். ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் சில இனவாத சக்திகள் திட்டமிட்ட முறையில் தம்மைத் தயார்படுத்திக்கொண்டு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
வேறு பகுதிகளிலிருந்து பஸ்களில் காடையர்களைக் கொண்டுசென்று இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது. சரியாக இதேபோலத்தான் 1983 யூலையில் தமிழ்மக்கள் மீதும் வெவ்வேறு இடங்களிலிருந்து ஐ.தே.க. காடையர்களை பஸ்களில் ஏற்றிச்சென்று தாக்குதல் நடத்தியது ஐ.தே.க. ஆகையால்தால் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, “மீண்டும் ஒரு கறுப்பு யூலையை ஏற்படுத்த இடமளிக்க வேண்டாம்” என அர்த்தபுஸ்டியுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார் போலும்.
அதுமாத்திரமில்லாமல், 1983 யூலையில் தமிழ்மக்கள் தாக்கப்பட்ட பொழுது நடந்து கொண்டதைப் போலவே, முஸ்லீம் மக்களுக்கு எதிரான தற்போதைய தாக்குதல்களின் போதும், பொலிசார் தாக்குதல் நடைபெறும் வேளை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்திருக்கின்றனர். இவைகளையெல்லாம் பார்க்கும் போது, அதிகாரத்தில் உள்ள உயர்மட்ட சக்திகளின் ஆதரவில்லாமல் இப்படியான திட்டமிட்ட தாக்குதல்கள் நடக்க வாய்ப்பில்லை.
இலங்கையின் இன வன்செயல் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் சாதாரண சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் தன்னெழுச்சியாக ஒருபொழுதும் இன வன்செயல்களில் ஈடுபட்டதாக வரலாறு இல்லை. 1958, 1977, 1981 (மலையக மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்கள்), 1983 ஆகிய ஆண்டுகளில் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அத்தனை இனவாத வன்செயல் தாக்குதல்களையும் ஐ.தே.க.தான் பின்னணியில் இருந்து செயல்படுத்தியது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.
அதுமட்டுமல்லாமல், கடந்த ஆட்சிக்காலத்திலும், இன்றைய ஆட்சிக்காலத்திலும் முஸ்லீம் மக்களுக்கு எதிராக சில பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் போதும் அரசியல்வாதிகளே பின்னணியில் இருந்து செயல்பட்டிருக்கிறார்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.
சாதாரண மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் அதாவது சிங்கள, தமிழ், முஸ்லீம் மற்றும் மலையக மக்கள் ஒருவரோடுவர் பின்னிப்பிணைந்து கலந்தே வாழ்கின்றனர். உதாரணமாக, இலங்கைத் தமிழர்கள் வடக்கு கிழக்குப் பகுதிகள் தமது தாயகம் என்றும், அதற்கு சுயாட்சி வேண்டும் என்றும் கூறினாலும், வடக்கு கிழக்கிற்கு வெளியேதான் கூடுதலான தமிழர்கள், அதாவது 52 வீதமான தமிழர்கள் வாழ்கிறார்கள். எனவே அவர்களது வாழ்க்கை பெரும்பாலும் மற்றைய இனங்களுடன் பின்னிப்பிணைந்ததாகும். எனவே அவர்கள் காரணமின்றி ஒருவரையொருவர் அடித்துக்கொள்ளும் தேவையில்லை.
ஆனால் சகல இனங்களையும் சேர்ந்த அரசியல்வாதிகள் அப்படியல்ல. அவர்கள் இலங்கை சுதந்திரமடைந்த பின்னரான காலத்தில் தமது அரசியல் இருப்புக்கும், வளர்ச்சிக்கும் இனவாதம்தான் ஒரேயொரு ஊக்குவிப்பு மருந்து எனக்கண்டுபிடித்து அதையே தமது நிரந்தர செயல்பாடாகக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு சில உதாரணங்கள் இருக்கின்றன.
1956இல் பண்டாரநாயக்க முதன்முறையாக ஐ.தே.கவைத் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றிய பொழுது, ஐ.தே.க. அவரை வீழ்த்துவதற்கு தீவிர சிங்கள இனவாதத்தைத்தான் கையில் எடுத்தது.
பண்டாரநாயக்க பிற்போக்கு சக்திகளால் 1957 இல் கொல்லப்பட்ட பிறகு அவரது துணைவியார் சிறீமாவோ ஆட்சிக்கு வந்தபொழுது ஐ.தே.க. இராணுவச்சதி மூலம் அவரை ஆட்சியில் இருந்து அகற்ற முயன்ற அதேவேளை, தமிழரசுக் கட்சி சத்தியாக்கிரகம் என்ற போர்வையில் தமிழ் இனவாதத்தைக் கையில் எடுத்தது.
பின்னர் 1970இல் சிறீமாவோ தலைமையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைந்தபோது, ஐ.தே.க. மீண்டும் இனவாதத்தைக் கையில் எடுத்தது. அந்தத் தேர்தலில் தமிழரசு, தமிழ் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் தோல்வியடைந்ததால், அவை இரண்டும் தமது நீண்டகாலப் பகைமையை மறந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற போர்வையில் கூட்டுச் சேர்ந்து ‘தமிழ் ஈழம்’ என்ற போர்வையில் தமிழ் இனவாதத்தைக் கையில் எடுத்தன.
அதன் பின்னரான காலத்தில் 1977இல் ஆட்சிக்கு வந்த ஐ.தே.கவும், தமிழர் விடுதலைக் கூட்டணியால் தூண்டிவிடப்பட்ட தமிழ் ஆயுதக்குழுக்களும் தொடர்ச்சியாக இனவாதச் செயல்களை முன்னெடுத்து நாட்டை யுத்தம் என்ற அழிவுப்பாதையில் இழுத்துச் சென்றனர்.
இந்த வரலாற்று அனுபவங்களை வைத்துப் பார்க்கையில், மீண்டும் சில அரசியல சக்திகளுக்கு இனவாதச் செயல்பாடுகள் அவசியப்படுகின்றன என்பது தெளிவாகின்றது. குறிப்பாக, அடுத்த ஜனாதிபதி, மாகாணசபை, பொதுத்தேர்தல் என்பனவற்றில் தோல்வியடைவோம் என்ற பயத்தில் உள்ள சிங்கள – தமிழ் அரசியல் சக்திகளுக்கு தம்மைத் தோல்வியிலிருந்து காப்பாற்றுவதற்கு இனவாதம் தேவைப்படுகின்றது.
அவர்களுடைய இந்த இனவாதத் தேவையும் செயல்பாடுகளும் தனியனே அவர்களது சொந்த செயற்பாடு அல்ல. அவர்களை எந்த அந்நிய சக்திகள் தமது நலன்கருதி 2015 ஜனவரியில் ஆட்சியில் இருத்தினார்களோ, அந்த அந்நிய சக்திகளுக்கும் இதில் பங்குண்டு.
எனவே தற்போது நாட்டில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக நடைபெறும் சம்பவங்களை வெறும் இனவாதச் செயல்களாகக் கருதாமல் இதன் பின்னால் உள்ள அரசியல் நோக்கங்களையும் பொதுமக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். இன்று முஸ்லீம் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள இனவாத வன்செயல்கள் நாளை வடக்கு கிழக்கிலும் மலையகத்திலும் வாழும் தமிழ் மக்களுக்கு எதிராகவும் கட்டவிழ்த்துவிடப்படலாம். எனவே சிறுபான்மைத் தேசிய இன மக்கள் மிகுந்த விழிப்புடன் இருப்பதுடன், பெரும்பான்மை சிங்கள மக்களுடன் நேசபூர்வமாகவும் இருப்பது அவசியம்.
இனவாத அரசியல் சக்திகளினால் வழிநடத்தப்படும் காடையர் கூட்டம் பொய் வதந்திகளைப் பரப்பி, மக்களை தவறாக வழிநடத்தி, அவர்களை உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஆழ்த்தி, இனவன்செயல்களைத் தூண்டிவிட முயற்சிப்பார்கள். எனவே அவர்களது சதி நோக்கங்களில் சிக்காமல் மக்கள் விழிப்பாகவும், நிதானமாகவும். இன ஒற்றுமையுடனும் இருப்பது இன்றைய காலகட்டத்தின் அத்தியாவசிய தேவையாகும்.
நாம் அவ்வாறு செயல்படாதுவிட்டால் மீண்டும் ஒரு ‘கறுப்பு யூலை’ உருவாகுவதும், நாட்டில் இரத்த ஆறு ஓடி, நாட்டில் நிரந்தரமாக இருள் சூழ்வதும், அதனைப் பயன்படுத்த அந்நிய சக்திகள் தலையீடு செய்வதும் சாத்தியமாகிவிடும்.

வானவில் : மே 2019 இதழ் 101

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...