Tuesday, 14 May 2019

நேஸ்பி பிரபு (Lord Naseby) சொல்வது சரியானதா? -விடாக்கண்டன்


பிரித்தானிய பாராளுமன்றத்தின் பிரபுக்கள் சபை உறுப்பினரும், பிரித்தானிய சிறீலங்கா பாராளுமன்ற குழுவின் தலைவருமான நேஸ்பி பிரபு இலங்கை விவகாரங்களில் அதிக அக்கறையுள்ள ஒருவராவார். அவர் அடிக்கடி பிரித்தானிய பிரபுக்கள் சபையிலும், இலங்கை சம்பந்தமான கருத்தரங்குகளிலும், ஊடகங்களிலும் இலங்கை விவகாரங்கள் சம்பந்தமான கருத்துக்களை துணிகரமாகவும், கறாராகவும் முன்வைத்து வருகின்றார்.
ஆனால், நேஸ்பி பிரபுவின் கருத்துக்கள் பெரும்பாலான மேற்குலக அரசியல்வாதிகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் முன்வைக்கும் கருத்துகளை விட எப்பொழுதும் வித்தியாசமானவையாக இருக்கின்றன.


இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் பிரித்தானியாவோ அல்லது இதர மேற்குலக நாடுகளோ தலையிடுவது தவறானது என்பது நேஸ்பி பிரபுவின் தொடர்ச்சியான கருத்தாகும். ஏனெனில், இலங்கை மீது குற்றஞ்சாட்டுபவர்களின் நாடுகளிலும் அதே விதமான நிலைமைகள் இருக்கின்றன என்பது அவரது வாதமாகும்.
இன்னொரு விடயம், இலங்கையில் நடைபெற்ற அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இறுதிப் போரின்போது மரணித்த பொதுமக்கள் பற்றிய எண்ணிக்கை சம்பந்தமானது.
இறுதிப் போரின் போது இலட்சக்கணக்கானவர்கள் அரச படைகளால் கொல்லப்பட்டதாக புலிகளும் அவர்களுக்குச் சார்பானவர்களும் தொடர்ச்சியாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஐ.நா. கூட இலங்கை இறுதிப் போரில் நாற்பதாயிரம் பேர் வரை கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளது. இந்தக் கணக்குகளை இலங்கை அரசாங்கமும் தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் இலங்கை இறுதிப் போரின் போது கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை ஏறத்தாழ 5,500 பேர்வரைதான் இருக்கும் என நேஸ்பி பிரபு கூறிவருகின்றார்.
இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது மரணித்தவர்களின் உண்மையான தொகை எவ்வளவு என்பது குறித்து இலங்கை அரசாங்கமோ அல்லது ஏதேனும் ஒரு நடுநிலைமையான சர்வதேச நிறுவனமோ இதுவரை முறைப்படியான ஆய்வுகள் எதனையும் செய்திருக்கவில்லை. நேஸ்பி பிரபுவின் கருத்துக்கூட ஊகத்தின் அடிப்படையில் இருக்கக்கூடியதே.
இது சம்பந்தமாக இலங்கையில் வாழ்கின்ற சில மக்களுடன் தொடர்பு கொண்டு விசாரித்த போது முரணான தகவல்களே கிடைத்தன. ஆனாலும் தர்க்க ரீதியாகச் சிந்தித்துப் பார்ப்பதற்காக சில தகவல்களை முன்வைக்க வேண்டியுள்ளது. அதன்படி,
இறுதிப் போரின் போது நேரடியாகப் பாதிக்கப்பட்ட இரண்டு மாவட்டங்களான கிளிநொச்சி, முல்லைத்தீவு என்பனவற்றின் சனத்தொகை பற்றிய விபரம் வருமாறு:
கிளிநொச்சி மாவட்டத்தில் 4 பிரதேச செயலாளர் பிரிவுகளும், 95 கிராமசேவகர் பிரிவுகளும் இருக்கின்றன. இவற்றில் மொத்தமாக 112,875 மக்கள் வாழ்கின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 பிரதேச செயலாளர் பிரிவுகளும், 136 கிராமசேவகர் பிரிவுகளும் இருக்கின்றன. இவற்றில் மொத்தமாக 91,947 மக்கள் வாழ்கின்றனர்.
இத்தொகை பற்றிய விபரங்கள் 2012 இல் நடத்தப்பட்ட சனத்தொகைக் கணக்கெடுப்பிலிருந்து பெறப்பட்டவையாகும்.
இரு மாவட்டங்களினதும் மொத்தச் சனத்தொகை 204,822 ஆகும்.
ஐ.நா. வெளியிட்ட 40,000 பேர் என்ற புள்ளிவிபரத்தின்படி பார்த்தால், இரு மாவட்டங்களிலும் வாழ்ந்த மொத்த சனத்தொகையில் சுமார் 20 சத வீதமான மக்கள் இறுதிப் போரில் இறந்திருக்க வேண்டும். அதாவது, ஒவ்வொரு கிராமசேவகர் பிரிவிலும் சராசரியாக 18 பேர்வரை இறந்திருக்க வேண்டும்.
புலிகளின் ஆதரவாளர்கள் வெளியிடும் இறுதிப் போரில் அரச படைகளால் இரண்டு இலட்சம் பேர்வரை கொல்லப்பட்டதாகக் கூறப்படும் தகவலை வைத்துப் பார்த்தால் இரு மாவட்டங்களிலும் வாழ்ந்த முழு மக்களும் கொல்லப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இறுதிப் போரின் போது இராணுவத்திடம் சரணடைந்த 12,000 புலிப் போராளிகள் உட்பட 3 இலட்சம் மக்களுக்கு அரசாங்கம் புனர்வாழ்வு அளித்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில் புலிகளின் ஆதரவாளர்கள் சொல்லும் கணக்கு சரியா, ஐ.நா. சொல்லும் கணக்கு சரியா, அல்லது நேஸ்பி பிரபு சொல்லும் கணக்கு சரியா, என்ற விபரம் தெரியாது சாதாரண பொதுமகன் குழம்பி நிற்கிறான்.
இந்த விடயத்தில், எலிசபெத் மகாராணிக்கே கணக்கு படிப்பித்தவன் தமிழன்தான் (அந்தத் தமிழன் முன்னாள் வவுனியா நாடாளுமன்ற உறுப்பினர் காலஞ்சென்ற சி.சுந்தரலிங்கம்) என்று பெருமை பேசும் நமது தமிழினம், இறுதிப் போரில் கொல்லப்பட்டவர்களின் உண்மையான தொகையை அறிந்து வெளியிட்டால் சர்வதேசமும் அவர்களுக்குக் கடமைப்படும்.

மூலம்: வானவில் இதழ் 100 ஏப்ரல் 2019

No comments:

Post a comment

The lessons of the 1953 mass uprising (hartal) in Sri Lanka By Saman Gunadasa

2 September 2020 A mass semi-insurrectionary uprising, popularly known as the “hartal” (a strike coupled with a general stoppage of work and...