மன்னார் மனிதப் புதைகுழி அளித்த ஏமாற்றம்! -பங்கிராஸ்

ன்னார் நகரில் அகழப்பட்ட மாபெரும் மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 350 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த எலும்புக்கூடுகள் யாருடையவை என்பது பற்றிய சரியான விபரங்கள் இதுவரை தெரிய வராத போதிலும், இவை யுத்த காலத்தில் – குறிப்பாக இறுதியுத்த நேரத்தில் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போனவர்களின் எலும்புக்கூடுகள் என்றும், இவற்றை இராணுவமே புதைத்திருக்கலாம் என்றும் தமிழர் தரப்பின் சில பகுதிகளால் ஊகங்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன.
மறுபக்கத்தில், இந்த எலும்புக்கூடுகள் புலிகளால் கொல்லப்பட்ட – குறிப்பாக இந்திய அமைதிப்படை வெளியேறிய 1990 ஆண்டுக் காலப்பகுதியில் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற போது கடலில் புலிகளால் பிடிக்கப்பட்ட பல நூறு மாற்று இயக்கப் போராளிகளின் குடும்பத்தினரின் எலும்புக்கூடுகள் என்ற ஊகங்களும் வெளிப்படுத்தப்பட்டன.
இந்த எலும்புக்கூடுகளின் மாதிரிகள் இலங்கை அரசாங்கத்தால் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள ஆய்வுக்கூடத்துக்கு காபன் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. அந்த ஆய்வறிக்கை இலங்கைக்கு கிடைத்து அது மன்னார் நீதிமன்றத்தால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.


அமெரிக்க ஆய்வுகூட அறிக்கையின்படி இந்த எலும்புக்கூடுகள் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய, அதாவது 1499 – 1720 ஆண்டு காலப்பகுதிக்கு உரியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு, இந்த எலும்புக்கூடுகள் பற்றி ஆளையாள் குற்றம் சாட்டி வந்தவர்களுக்கு பலத்த ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. பலர் இந்த முடிவை ஏற்க மறுத்து புதிய ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். (அத்துடன் இந்த மனிதப் புதைகுழியை அகழும் பணியும் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.)
அத்தகையவர்களின் கோரிக்கை நியாயமானது. ஏனெனில் ஒரு ஆய்வை மட்டும் வைத்து எதையும் முடிவு செய்துவிட முடியாது. வேறு சில நாடுகளுக்கும், குறிப்பாக எமது அயல்நாடான இந்தியாவுக்கோ அல்லது ரஸ்யா, சீனா, பிரித்தானியா, யப்பான் போன்ற நாடுகளுக்கோ சில மாதிரிகளை அனுப்பி மேலதிக ஆய்வுகளை மேற்கொள்வது அவசியம்.
அதே நேரத்தில் இந்த எலும்புக்கூடுகளின் காலகட்டம் பற்றி சில சந்தேகங்களும் எழுகின்றன. ஏனெனில், இந்த அகழ்வாய்வின் போது பிஸ்கட் பக்கற் ஒன்றின் மேலுறை கண்டெடுக்கப் பட்டதாகவும், அந்த பிஸ்கட் தென்னிலங்கையிலுள்ள பிஸ்கட் கொம்பனி ஒன்றின் உற்பத்தி எனக் கண்டறிந்து, அதில் பொறிக்கப்பட்டிருந்த விலையை வைத்து அது எந்த ஆண்டுக்குரியது எனக் கண்டறிந்ததாகவும் ஊடகங்களில் ஒரு செய்தி வெளிவந்திருந்தது. அப்படியானால் ஏன் அந்த தகவல் இந்த எலும்புக்கூடுகள் பற்றிய கால ஆராய்ச்சியில் கவனத்தில் எடுக்கப்படவில்லை?
அது ஒருபுறமிருக்க, உண்மையில் அமெரிக்க ஆய்வறிக்கை சொல்வது போல இந்த எலும்புக்கூடுகள் 300 – 500 ஆண்டுகளுக்கு முந்தைய காலப்பகுதிக்கு உரியவை என்றால், அந்தக் காலகட்டம் இலங்கையில் ஒல்லாந்தர், போரத்துக்கீசர், ஆங்கிலேயர் போன்ற அந்நிய சக்திகளின் காலனித்துவ ஆட்சி நிலவிய காலகட்டமாகும். அந்தக் காலகட்டத்தில் அந்நிய ஆதிக்கத்துக்கு எதிராகப் போரிட்ட இலங்கை மக்கள் பலர் காலனித்துவப் படைகளால் கொல்லப்பட்டிருக்கின்றனர். எனவே இந்த எலும்புக்கூடுகள் அதனுடன் சம்பந்தப்பட்டதா என்பதையும் ஆராய வேண்டும்.
இதுதவிர, இலங்கையில் மன்னார் வழியாகவே இஸ்லாமும் கிறிஸ்தவமும் பரவியதாக சில வரலாற்று அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அந்தக் காலகட்டத்தில் சில மதச் சண்டைகளும் நிகழ்ந்துள்ளன.
குறிப்பாக, யாழ்ப்பாணத்தை ஆண்ட சங்கிலி மன்னன் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய 700 மன்னார் மக்களை தனது படைகளை அனுப்பி கொலை செய்ததாகவும் ஒரு தகவல் உண்டு.
எனவே, இந்த எலும்புக்கூடுகளில் இன்னும் சில மாதிரிகளை வெவ்வேறு நாடுகளுக்கு அனுப்பி, அவை உண்மையில் எந்தக் காலத்துக்குரியவை என்பதைக் கண்டறிவதுடன், அங்கு புதைக்கப்பட்ட மக்கள் – சிறுவர்கள், பெண்கள் உட்பட – யாரால், என்ன காரணத்துக்காக கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்கள் என்பதையும் விசாரணை மூலம் வெளிக்கொணர வேண்டும். நிச்சயமாக இந்த அநீதியை இழைத்தவர்கள் யார் என்பது கண்டறியப்பட வேண்டும்.
இந்த விவகாரம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயமாகும். இதை பாராமுகமாக விடுவது ஒரு மாபெரும் அநீதியை மறைப்பதற்கு ஒப்பானதாகும்.

No comments:

Post a Comment

The UK and the Pandora papers: A cesspit of the super-rich by Thomas Scripps

  No one in the UK needed to be told that the Johnson government is beholden to the interests of the super-rich. Indeed, it is a government ...