ணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் தற்பொழுது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை (Prevention of Terrorism Act – PTA) நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக புதிய சட்டம் (Counter Terrorism Act – CTA) ஒன்றைக் கொண்டு வருவதில் தீவிரமாக முனைப்புக் காட்டி வருகின்றது. தற்பொழுது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டமும் 1978 ஆம் ஆண்டில் அப்போதைய அரச தலைவர், ரணில் விக்கிரமசிங்கவின் மாமனார் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐ.தே.க. அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்டதே.
தற்போதைய சட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கம் அந்தக் காலகட்டத்தில் உருவாகி வந்த அரசுக்கு எதிரான தமிழர்களுடைய போராட்டத்தை நசுக்குவதற்காகவே என்பது எல்லோரும் அறிந்த விடயம். ஆனால் அந்தச் சட்டம் தமிழர்களுக்கு எதிராக மட்டுமின்றி, தொழிற்சங்கங்கள், மனித உரிமை அமைப்புகள், ஊடகங்கள் என எல்லாவற்றுக்கும் எதிராகப் பயன்படுத்தப்பட்டதுதான் வரலாறு. ஆனால் அந்தச் சட்டத்தால் மிகவும் அதிகமாகவும் மோசமாகவும் பாதிக்கப்பட்டது தமிழ் மக்களே.


அந்தச் சட்டம் கொண்டு வரப்பட்ட நேரத்தில் நாட்டிலுள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மனித உரிமை அமைப்புகள், சிவில் அமைப்புகள் என எல்லாத் தரப்பினரும் அதை எதிர்த்தனர். இருந்தும் தொடர்ந்து வந்த எல்லா அரசாங்களாலும் இன்றுவரை அந்தச் சட்டம் பயன்படுத்தப்பட்டே வந்திருக்கிறது. யுத்தத்தைக் காரணம் காட்டியே அந்தச் சட்டம் பாதுகாக்கப்பட்டு வந்தது.
இப்பொழுது யுத்தம் முடிவுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் அந்தச் சட்டம் நீக்கப்படாமலே இருந்து வருகிறது. அதுமாத்திரமல்லாமல், அந்தச் சட்டத்தை முற்றாக நீக்க வேண்டிய சூழலில், அந்தச் சட்டத்தை நீக்கப் போவதாகச் சொல்லிக்கொண்டு அரசாங்கம் அதையும் விட மிக மோசமான சட்டம் ஒன்றை அதன் இடத்தில் வைப்பதற்கு முனைப்புக் காட்டுகின்றது.
வரப்போகும் புதிய சட்டம், அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், ஊடகங்கள், மனித உரிமை அமைப்புகள், சிவில் அமைப்புகள் என மக்களின் அனைத்துப் பிரிவினரையும் மிக மோசமாக ஒடுக்கப் போகும் சட்டமாகும். இந்தச் சட்ட மூலத்தின்படி யாராவது ஒருவர் ஜனநாயக வழிமுறையில் தன்னும் அரசாங்கத்துக்கு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினால் கூட, அவர் மறு பேச்சின்றி 20 வருடங்களுக்கு சிறையில் தள்ளப்படுவார். இந்தச் சட்ட மூலத்தின் பிரகாரம் பொலிசாருக்கு மேலதிக அதிகாரங்கள் வழங்கப்படுவது மட்டுமின்றி, அமைச்சர்களுக்கும் சில அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன. சாதாரண காலத்திலேயே தமது அரசியல் எதிரிகளைப் பழிவாங்கும் அமைச்சர்கள் இந்த அதிகாரம் கிடைத்தால் எப்படிச் செயல்படுவார்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
இந்தச் சட்ட மூலத்தின் மூலம் இலங்கையில் ‘பொலிஸ் இராஜ்யம்’ ஒன்றை அரசாங்கம் உருவாக்க முற்படுவதாக குற்றம் சாட்டியுள்ள எதிர்க்கட்சி, இதை எதிர்க்க நாட்டிலுள்ள அனைவரும் ஒன்றுபட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.
வழமையாக ஐ.தே.கவுக்கு எதிரான அரசாங்கங்கள் ஏதாவது நடவடிக்கை எடுத்தால்; “ஐயோ ஜனநாயகம் கொலை செய்யப்படுகிறது” என பூமிக்கும் வானத்துக்குமாகத் துள்ளிக் குதிக்கும் மேற்கு நாடுகளும், அவற்றால் போசிக்கப்படும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் ஐ.தே.க. அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து கள்ள மௌனம் காத்து வருகின்றன. அதற்குக் காரணம் எதிர்க்கட்சி சொல்வது போல இந்த சட்ட மூலத்தைக் கொண்டு வருவதில் சில சர்வதேச சக்திகளுக்கும் தொடர்பு உள்ளது என்பதால் தானோ என்னவோ என எண்ணத் தோன்றுகிறது.
எது எப்படியிருந்த போதிலும், இந்த புதிய மிலேச்சத்தனமான சட்டம் அமுலுக்கு வருவதை நாட்டு மக்கள் அனுமதிக்கக்கூடாது. மக்கள் அனுமதிக்கக்கூடாது என்றால், அவர்கள் தனித்தனியாக எதிர்த்து அதை முறியடிக்க முடியாது. அவர்கள் அமைப்புகளாக ஒன்றிணைந்து இந்தச் சட்ட மூலத்துக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராட வேண்டும்.
அதே நேரத்தில் இந்தச் சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினால்தான் சட்டமாக்க முடியும். அப்படி நிறைவேற்ற விடாமல் தடுப்பது மக்கள் பிரதிநிதிகளான எதிர்க்கட்சியினரின் தலையாய கடமையாகும்.
பிரதான எதிர்கட்சியைப் பொறுத்தவரை இந்தச் சட்ட மூலத்தை தாம் தீவிரமாக எதிர்ப்பதாக அது பகிரங்கமாக அறிவித்துவிட்டது. ஆனால் பிரதான எதிர்க்கட்சியிடம் 95 உறுப்பினர்கள் வரை மட்டும் இருப்பதால் இந்தச் சட்ட மூலத்தைத் தோற்கடிப்தற்கு அது போதாது. மற்றைய இரு எதிர்க்கட்சிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. என்பனவற்றிடமுள்ள 22 உறுப்பினர்களின் ஆதரவும் கிடைத்தால்தான் இந்தச் சட்ட மூலத்தை நிறைவேற்றாமல் தடுக்கு முடியும்.
கடந்த காலத்தில் நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதச் சட்ட மூலத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்களே. அப்படியான ஒரு சூழ்நிலையில் தற்போதைய சட்டத்தையும் விட மிகவும் மோசமான ஒரு சட்ட மூலம் கொண்டு வரப்படுகையில் தமிழ் மக்களின் பிரதான பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்தில் இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதை எதிர்த்தே ஆக வேண்டும்.
அதேபோல, தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் (1988 – 89 காலகட்டத்தில்) ஜே.வி.பியினர். அவர்களும் இந்தச் சட்ட மூலத்தை எதிர்த்தே ஆக வேண்டும்.
இவ்விரு தரப்பினரும் ஜனநாயகத்தின் மீதும், மக்கள் மீதும் உண்மையான அக்கறையுள்ளவர்களாக இருப்பின் பிரதான எதிர்க் கட்சியுடன் இணைந்து இந்தச் சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் எதிர்த்து தோற்கடிக்க வேண்டும். அப்படி ஒன்றிணைவார்களாக இருந்தால் இந்தச் சட்ட மூலத்தை அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியாமல போகும். அதை விடுத்து இப்பொழுது மறைமுகமாக அரசாங்கத்துக்கு முண்டு கொடுத்து வருவது போல இந்தச் சட்ட மூல விடயத்திலும் நடந்து கொள்வார்களாயின் நாடு இன்னொரு பாரிய அழிவைச் சந்திப்பது தவிர்க்க முடியாதது ஆகிவிடும்.
கப்பல் மூழ்கும் போது அந்தக் கப்பலில் உள்ள அனைவரும் சேர்ந்துதான் மூழ்க வேண்டி வரும் என்பதை இந்த இரு தரப்பினரும் புரிந்து கொண்டு செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்.

மூலம் : வானவில் இதழ் 100 -2019