லங்கையைப் பொறுத்தவரை இந்த ஆண்டை தேர்தல் ஆண்டு எனக் குறிப்பிடலாம்.
ஏற்கெனவே காலம் முடிந்துபோன பல மாகாண சபைகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலை இருக்கின்றது. தோல்விப் பயம் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அவற்றுக்குத் தேர்தல் நடத்தாமல் இழுத்தடித்து வருகிறது.
அண்மையில் ஐ.தே.க. அமைச்சர் ஒருவர் இந்த ஆண்டிலும் மாகாண சபைகளுக்கு தேர்தல் நடக்காது என்று திமிர்த்தனமாகக் கூறியிருக்கிறார். ஐ.தே.க. அரசு மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தாமல் இழுத்தடிப்பதற்கு தோல்விப் பயம் மட்டும் காரணமல்ல.
இனப் பிரச்சினைக்கான தீர்வாக தீவிரமான யுத்தத்துக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாகவே மாகாண சபை முறை உருவாக்கப்பட்டது. அப்போதைய இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன வேண்டா வெறுப்பாகவே இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.
அவருக்குப் பின் ஐ.தே.க. சார்பில் ஜனாதிபதியான ஆர்.பிரேமதாச, இந்திய அமைதிப்படைக்கு எதிராகப் போரிட்ட புலிகளுக்கு சகல வழிகளிலும் உதவியதுடன், ஒன்றிணைந்த மாகாண சபையையும் கலைத்து, இந்திய அமைதிப்படையையும் வெளியேற்றினார். ஆக, ஒட்டுமொத்தமாக ஐ.தே.கவும் புலிகளும் மாகாண சபை முறைக்கு எதிராகவே செயல்பட்டனர்.


இன்று அதே ஐ.தே.க. அரசே பதவியில் உள்ளது. அந்த அரசின் பிரதான பாதுகாவலர்களாக புலிகளின் வாரிசுகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளனர். அதனால்தான் இரு பகுதியினரும் சேர்ந்து மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்து வருகின்றனர்.
ஒரு பக்கத்தில் ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்று சொல்லிக்கொண்டே, மறுபக்கத்தில் தற்பொழுது நடைமுறையில் இருக்கின்ற ஓரளவு அதிகாரப் பகிர்வு அலகான மாகாண சபையை ஒழித்துக்கட்டும் ஐ.தே.க. அரசின் சூழ்ச்சிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கி வருகின்றது. இந்த விடயத்தில் முன்னாள் வட மாகாண முதலமைச்சரான சி.வி.விக்னேஸ்வரன் கூட மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தாமல் மௌனமாக இருக்கின்றார். எனவே எல்லாத் தமிழ் தேசியவாத சக்திகளின் நோக்கமும் ஒன்றே என்பது புலனாகின்றது.
அதே நேரத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் இழுத்தடிக்கும் இந்த அரசு, முதலில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறுகின்றது. கடந்த ஆண்டு ஒக்ரோபரில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தல் ஒன்றுக்கு உத்தரவிட்ட போது அதை எதிர்த்து நீதிமன்றம் சென்ற ஐ.தே.க., ஜனாதிபதி தேர்தலுக்கான காலம் வருவதற்கு முன்பே அதற்கான தேர்தலை முதலில் நடத்த வேண்டும் எனக் கோருவது வேடிக்கையாக இருக்கிறது.
இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மாமனார் ஜே.ஆர்.ஜெயவர்த்தன 1977 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் தலைவரானதும் எதிர்க்கட்சித் தலைவர் சிறீமாவோ பண்டாரநாயக்கவின் குடியியல் உரிமையைப் பறித்ததும் அல்லாமல், உரிய காலத்தில் தேர்தலை நடத்தாது கருத்துக் கணிப்பு என்ற பெயரில் மோசடியில் ஈடுபட்டு தனது ஆட்சிக்காலத்தை சர்வாதிகாரத்தனமாக நீடித்துக் கொண்டவர் என்பதை நாட்டு மக்கள் மறந்துவிடவில்லை. அத்தகைய ஒரு கேடுகெட்ட ஜனநாயக விரோதச் செயலை சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசுகள் ஒருபோதும் செய்யவில்லை.
அந்தப் பாரம்பரியத்தில் வந்த ஜே.ஆரின் மருமகன் ரணிலும் மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் இழுத்தடிப்பதும், முடியுமானால் நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்தாமல் இழுத்தடிப்பதும் நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறார். ஜனாதிபதித் தேர்தலை மட்டும் உரிய காலத்துக்கு முன்னர் நடத்துமாறு ஐ.தே.க. கோருவதன் நோக்கம், தமக்கு எதிரான மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருப்பதனாலேயாகும்.
ஆனால், எந்தத் தேர்தல் நடந்தாலும். அது ஜனாதிபதி தேர்தலாக இருந்தாலென்ன, நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலென்ன, மாகாண சபைத் தேர்தலாக இருந்தாலென்ன, ஐ.தே.கவைத் தோற்கடித்து அந்தக் கட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்கு மக்கள் தயாராகக் காத்திருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
மக்கள் ஐ.தே.கவைத் தோற்கடிப்பதற்கு தயாராக இருந்தாலும், ஐ.தே.கவுக்கு எதிரான சக்திகள் அதற்காக மெத்தனமாக இருந்துவிடக்கூடாது. ஏனெனில் பலவிதமான சூழ்ச்சிகள் மூலம் தேர்தல்களில் வென்ற வரலாறு ஐ.தே.கவுக்கு உண்டு. அதுமட்டுமல்ல, ஐ.தே.கவை வெற்றி பெற வைப்பதநற்கு வெளிநாட்டு ஏகாதிபத்திய சக்திகள் கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படுவார்கள் என்பதும் திண்ணம். கடந்த வருடம் நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையின் போது இதை நாம் கண்கூடாகக் கண்டோம்.
ஐ.தே.கவினர் தமக்கு எதிரான சக்திகளை வீழ்த்துவதற்கு பலவிதமான சூழ்ச்சிகளைக் கையாளுவார்கள். அதில் ஒன்று வெளிப்படையானது. அதாவது பிற்போக்கான அரசியல் கட்சிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லீம் கட்சிகள், சில மலையகக் கட்சிகள் என்பனவற்றைத் தம்முடன் வைத்திருப்பது. இன்னொரு உத்தி அரசியல் சந்தர்ப்பவாதிகளான ஜே.வி.பியைப் பயன்படுத்துவது.
இதைவிட மறைமுகமான சில தந்திரோபாயங்களையும் ஐ.தே.க. கையாளும். அதில் முக்கியமானது எதிரணியில் முரண்பாடுகளையும் உடைவுகளையும் ஏற்படுத்துவது. 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது சந்திரிக குமாரதுங்க மூலம் ஐ.தே.க. அதைச் செய்தது. அதற்கு இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பலிக்கடாவாக்கப்பட்டார்.
மைத்திரி இன்று தனது தவறை உணர்ந்து ஓரளவு சரியான பாதைக்கு வந்துவிட்டாலும், சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இன்னமும் ஒரு ஐந்தாம் படையை ஐ.தே.க. வைத்திருக்கிறது. அண்மையில் நாடாளுமன்றத்தில் நடந்த வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது இதை அவதானிக்க முடிந்தது. கூட்டு எதிரணி மக்கள் விரோத வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்த போது, சிறீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாது தவிர்த்ததின் மூலம், வரவு செலவுத் திட்டம் நிறைவேற மறைமுகமாக உதவினர். இத்தகைய சிறீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் பதவிப் பித்துப் பிடித்தவர்கள், இன்னொரு பகுதியினர் ஐ.தே.கவின் கொள்கையுடன் ஒத்துப்போகக் கூடியவர்கள்.
இவர்கள் தவிர, பண்டாரநாயக்கர்களின் புதல்வி என்ற வகையிலும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவி மற்றும் முன்னாள் ஜனாதிபதி என்ற வகையிலும் சந்திரிக குமாரதுங்கவும் ஒரு பகுதி சிறீலங்கா சுதந்திரக் கட்சியினர் மத்தியில் செல்வாக்கைக் கொண்டிருப்பதுடன், ஐ.தே.கவுக்கு எதிரான சக்திகள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தும் முயற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறார்.
இவை ஒருபுறமிருக்க, ஜனாதிபதி மைத்திரி தவறை உணர்ந்து ஓரளவு சரியான பாதைக்கு வந்துவிட்டாலும், ஐ.தே.கவுக்கு எதிரான சக்திகள் சிறீலங்கா சுதந்திரக் கட்சி, சிறீலங்கா பொது பெரமுன என்ற இரண்டு அணிகளாகப் பிளவுபட்டு நிற்கின்றன. இந்த இரண்டு அணிகளையும் ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றிணைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், இரு கட்சிகளுக்குள்ளும் உள்ள சில சக்திகள் அந்த முயற்சிகளுக்கு குழிபறிக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன.
எது எப்படியிருந்த போதிலும், நாட்டினதும் மக்களினதும் நலன்களை விட அந்நிய ஏகாதிபத்திய சக்திகளின் நலன்களை முதன்மைப்படுத்திச் செயற்படுகின்ற ஐ.தே.கவை நாட்டின் சகல அதிகார அலகுகளில் இருந்தும் அப்புறப்படுத்துவது மிக அவசியமான கடமையாகும். அப்படி அப்புறப்படுத்துவதற்கான தேவை பின்வரும் காரணிகளை அடிப்படையாகக் கொண்டது.
ஐ.தே.க. அது தோற்றம் பெற்ற காலத்திலிருந்து ஏகாதிபத்திய சார்பு தேசத்துரோகக் கட்சியாகவே செயற்பட்டு வருகின்றது.
ஜனநாயகத்தை வாயளவில் உச்சரித்துக் கொண்டு நடைமுறையில் பல சந்தர்ப்பங்களில் எதேச்சாதிகார நடைமுறையையே பின்பற்றி வந்திருக்கிறது.
நாட்டின் ஏகப் பெரும்பான்மையான மக்களின் நலன்களை விட அந்திய உள்நாட்டு பெரும் முதலாளித்துவ சக்திகளின் நலன்களுக்காகவே செயற்பட்டு வருகின்றது.
சிறுபான்மை தேசிய இனங்களின் மீதான ஒடுக்குமுறையைத் தொடக்கி வைத்ததுடன், இனப் பிரச்சினைத் தீர்வுக்கான சகல முயற்சிகளையும் குழப்பியடித்து, நாட்டில் சிறுபான்மை இனங்களுக்கு, குறிப்பாகத் தமிழ் மக்களுக்கு எதிரான சகல இன வன்செயல்களையும் முன்னின்று நடத்தியதுடன், நாட்டைப் பேரழிவுக்கு உள்ளாக்கிய 30 வருடப் போரைத் தொடக்கி வைத்த கட்சியுமாகும்.
இத்தகைய ஒரு கட்சி நாட்டை ஆள்வதற்கு எந்திவிதத் தகுதியும் இல்லாதது. இந்தக் கட்சி இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் சகல மக்களினதும் பொது எதிரியாகும். இத்தகைய ஒரு கட்சியை குப்பைக்கூடைக்குள் தூக்கியெறிவதே சரியானதாகும்.
இந்த மகத்தான கடமையை நிறைவேற்றுவதானால், நாட்டிலுள்ள சகல ஐ.தே.க. எதிர்ப்புச் சக்திகளும் தமது குறுகிய அரசியல் வேறுபாடுகளை மறந்து ஓரணியில் திரண்டு நின்று செயற்பட வேண்டும்.
குறிப்பாக, ஐ.தே.கவுக்கு எதிரான பிரதான கட்சிகளான சிறீலங்கா சுதந்திரக் கட்சி, சிறீலங்கா பொதுஜன பெரமுன என்பன ஐக்கியப்படுவதுடன், சகல இடதுசாரி, முற்போக்கு, ஜனநாயக மற்றும் தேசபக்த கட்சிகளும் அவ்வணியில் இணைக்கப்பட வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் ஐ.தே.கவை எதிர்வரும் தேர்தல்களில் சுலபமாக வென்றுவிடலாம் என்ற மெத்தனத்தில் இருப்போமேயானால் அது சில வேளைகளில் தவறான கணிப்பாகவும் முடிந்துவிடலாம்.
இந்த இடத்தில் சீனப் புரட்சியின் தந்தையான மாஓசேதுங் அவர்களின் அறிவுரையை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர் சொல்கிறார்:
“நீண்டகால நோக்கில் நாம் எதிரியை எப்படியும் தோற்கடித்துவிட முடியும் என்ற திடமான நம்பிக்கையில் இருக்கின்றோம். ஆனால் ஒவ்வொரு சமரின் போதும் அவனை பாதூரமாகக் கணக்கில் எடுத்து அவனுடன் போரிட வேண்டும்”
ஐ.தே.கவுக்கு எதிரான எமது இன்றைய போராட்டத்துக்கும் இது பொருந்தும்.

மூலம் : வானவில் ஏப்ரல் இதழ் 99 -2019