உள்ளூராட்சித் தேர்தல்: ‘நல்லாட்சி’ அரசுக்கும் அடிவருடிகளுக்கும் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு!


‘நல்லாட்சி’ அரசாங்கம் பல்வேறு சாக்குப் போக்குகளைச் சொல்லி இரண்டு வருடங்களுக்கும் மேலாக உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடாத்தாது இழுத்தடித்துவிட்டு இறுதியாக அடுத்த வருட முற்பகுதியில் தேர்தலை நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளது. அதன் அடிப்படையில் வேட்பு மனுக்கள் கோரப்பட்டு கட்சிகளும், சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணத்தைச் செலுத்தி வருகின்றன.
இந்தத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர்தான் எமது நாட்டின் அரசியல் கலாச்சாரத்தில் உள்ள அநாகரிகமான போக்குகளும், எமது ஜனநாயகத்தில் உள்ள ஓட்டை ஒடிசல்களும் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு வெளிப்படத் தொடங்கியுள்ளன.

இதுவரை காலமும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் போல நடித்த சில அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும், பங்காளிக் கட்சிகளும், பதவி என்று வந்ததும் அடிதடியிலும், குடுமிப்பிடிச் சண்டையிலும் இறங்கியுள்ளனர். பலர் தமது கட்சிகளில் இருந்து வெளியேறி புதிய கூட்டணிகளை ஆரம்பித்துள்ளனர். கட்சித் தாவல்களும் தாராளமாக நடைபெறுகின்றன. அரசாங்கமும் அதன் மேல்மட்டத் தலைவர்களுமே கட்சித் தாவல்களை ஊக்குவிக்கின்றனர். அப்படித் தாவுபவர்களுக்கு இலஞ்சமாக பதவிகளும் வழங்கப்படுகின்றன.



இந்தத் தேர்தல் திருவிழா காட்சிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலங்காரத் திருவிழாதான் மிகவும் சுவாரசியமாகக் காட்சியளிக்கிறது. புலிகளால் தமது தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு, புலிகள் இல்லாத இந்தக் காலகட்டத்தில் பதவிப் போட்டிகளால் சிதறு தேங்காயாக மாறியுள்ளது.

சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்கெனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி, வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறது. சுரேஸ் இந்தத் தேர்தல் அறிவிக்கப்பட முன்னரே கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சியின் எதேச்சாதிகாரம் பற்றி அடிக்கடி பேசி வந்த ஒருவராவார்.
சுரேஸ் வெளியேறிய பின்னர் உள்ளூராட்சி சபை ஆசனப் பங்கீடு சம்பந்தமாக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மற்றைய இரு கட்சிகளான ரெலோ, புளொட் என்பனவற்றிற்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது. இந்த முறுகலைச் சமாளிப்பதற்காக தமிழரசுக் கட்சியின் கொழும்புத் தரகர் சுமந்திரன் ஓடிஓடி ‘அலுவல்’ பார்த்தும் நிலைமை சீரானதாகத் தெரியவில்லை. அதனால் இந்தத் தேர்தலில் இருந்தே ஓதுங்குவது குறித்து ரெலோவும், புளொட்டும் ஆலோசித்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுதான் எமது தமிழர் அரசியலின் இன்றைய இலட்சணம்.

அதேநேரத்தில் தென்னிலங்கையிலும் இவ்வாறான கூத்துகள் நடைபெறாமல் இல்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சிறீலங்ககா சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறி ஐ.தே.க. கட்சியுடன் சேர்ந்து அதிகாரத்துக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது துரோகம் மக்களிடம் எடுபடவில்லை என்றதும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியை வளைத்துப் பிடித்து தனது வெற்றி வாய்ப்பைப் பெற எடுத்த முயற்சி தோல்வி கண்டுவிட்டது. இதனால் “சீ..சீ இந்தப் பழம் புளிக்கும்” என்ற நிலையில் இருக்கின்றார்.
இது ஒருபுறமிருக்க, நாட்டின் அரசியல் கலாச்சாரம் இப்படி இருக்கிறது என்றால், எமது தேர்தல் முறையிலுள்ள குழறுபடிகள் எமது ஜனநாயகத்தின் இலட்சணத்தை எடுத்துக் காட்டுகின்றன. அந்தக் குழறுபடிகள் காரணமாக பல கட்சிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இந்த நிராகரிப்புக்குக் காரணம் வேட்பு மனுக்களில் உள்ள தவறுகள் எனத் தேர்தல் திணைக்களம் கூறுகிறது.

அந்த அளவுக்கு இந்த வேட்பு மனுக்களைத் தயாரிக்கும் முறையை தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் நிலை போல தேர்தல் திணைக்களம் உருவாக்கி வைத்திருக்கிறது. எப்படித் தயாரித்தாலும் எங்காவது ஒரு தவறை விடும் வகையில் இந்த வேட்பு மனுக்கள் தயாரிக்கும் முறை உருவாக்கி வைக்கப்பட்டுள்ளது. அனுபவம் மிக்க சட்டத்தரணிகளாலேயே இந்த வேட்பு மனுக்களைச் சரியாகத் தயாரிக்க முடியவில்லை எனில், சாதாரண மக்கள் எம்மாத்திரம்.
சாதாரணமாக மாணவர்கள் பரீட்சைகளில் சித்தியடையாவிட்டால் இன்னும் ஒன்றிரண்டு சந்தர்ப்பங்கள் வழங்கப்படுவதைப் போல, தேர்தல் வேட்பு மனுக்கள் தயாரிப்பில் பெரும் மோசடிகள் தவிர்ந்த வேறு சிறு தவறுகள் நிகழ்ந்திருந்தால், சம்பந்தப்பட்ட கட்சிகள் அவற்றைத் திருத்தி அமைத்து மீளவும் அந்த மனுவைச் சமர்ப்பிக்க வாய்ப்பளித்தால் ஜனநாயகத்துக்கு என்ன கேடு வந்துவிடப் போகின்றது? அவ்வாறில்லாமல் ஒரு சிறு தவறுக்காக வேட்பு மனுவை நிராகரிப்பது ஜனநாயகப் படுகொலையல்லவா? இந்த வேட்பு மனுத் தயாரிப்பு ஒரு சூதாட்டம் போலல்லவா இருக்கிறது.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, எப்படியோ தொடர்ச்சியான வலியுறுத்தலால் உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் நடாத்துவதற்கான முடிவு அறிவிக்கப்பட்டு, கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட ஆரம்பித்துவிட்டன.

இந்தத் தேர்தல் ஆட்சி மாற்றத்துக்கான ஒன்று அல்லாவிடினும், இதன் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. ஏனெனில், முதற்தடவையாக அந்நிய சக்திகள் இலங்கையின் இரண்டு எதிரெதிரான பிரதான கட்சிகளை வலிந்திணைத்து தமக்கு சார்பான அரசொன்றை ஆட்சியில் அமர்த்திய பின்னர் நடைபெறும் தேர்தலாகும்.
அதேநேரத்தில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சொந்தக் கட்சிக்குத் துரோகம் இழைத்து, கட்சியின் பரம விரோதியான ஐ.தே.க. உடன் இணைந்து கூட்டரசாங்கம் ஒன்றை நடாத்தும் சூழ்நிலையில் நடைபெறும் தேர்தலுமாகும்.
இந்த அரசியல் பின்னணிகள் ஒருபுறமிருக்க, இந்த அரசாங்கம் நாட்டின் அபிவிருத்திகளை இடைநிறுத்தி, விலைவாசிகளை அதிகரித்து, அரச சேவைகள், கல்வி, சுகாதாரம், அரச சொத்துகள் என்பனவற்றை தனியார்மயப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகின்ற ஒரு சூழலில் இடம் பெறுகின்ற ஒரு தேர்தலுமாகும். இவையும் இதுபோன்ற இன்னும் மக்கள் விரோத, தேச விரோத நடவடிக்கைகளால் இந்தத் தேர்தல் ஒரு நாடாளுமன்றத் தேர்தலுக்குரிய முக்கியத்துவத்தைப் பெறுகின்றது.

அந்த வகையில் இந்தத் தேர்தல் முடிவுகள் ‘நல்லாட்சி’ என்று சொல்லப்படுகின்ற இந்த அரசாங்கத்தைப் பற்றி மக்கள் என்ன கருத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தப் போகின்ற ஒரு தேர்தலுமாகும். அதேவேளையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினர் தமது பாரம்பரியக் கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு பிறிதொரு கட்சியில் களம் இறங்கியுள்ள தேர்தல் ஆகையால் அவர்களை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதையும் வெளிப்படுத்தப் போகின்ற தேர்தல் ஆகும்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற ரணில் தலைமையிலான ஐ.தே.கவும், மைத்திரி தலைமையிலான சிறீ.ல.சு.கவும் இத்தேர்தலில் இரு வேறு அணிகளாகப் போட்டியிட்டாலும், இரண்டு தரப்புக்கும் பொதுவான எதிரி மகிந்த தலைமையிலான பொது எதிரணி என்பதில் சந்தேகம் இல்லை. எனவே, தம்மில் ஒருவர் வென்;று ஒருவர் தோற்றாலும் பரவாயில்லை, மகிந்த அணி வெற்றிபெற்று விடக்கூடாது என்பதிலேயே இரு அணியினரும் கண்ணாய் இருப்பர். அரச அதிகாரம் அவர்களது கைகளில் இருப்பதால், சகல வளங்களையும் பொது எதிரணிக்கு எதிராகப் பயன்படுத்தவும் அவர்கள் தயங்கமாட்டார்கள்.

ஆகையால் நாட்டு மக்களைப் பொறுத்தவரை இந்தத் தேர்தலில் நிறைவேற்ற வேண்டிய பாரிய பணி ஒன்று உள்ளது. அதாவது இந்த மக்கள் விரோத, தேச விரோத அரசாங்கத்துக்கு எதிராகத் தமது ஒவ்வொரு வாக்குகளையும் பயன்படுத்தி அவர்களைத் தோற்கடிக்க வேண்டிய நேரம் இது.
அவர்கள் இந்த அரசை நடாத்திச் செல்கின்ற இரண்டு பிரதான கட்சிகளையும் இந்தத் தேர்தலில் தோற்கடிப்பதின் மூலம், அரசாங்கத்தின் மக்கள் விரோத, தேச விரோத நடவடிக்கைகளை நிறுத்தும்படி ஒரு எச்சரிக்கையைக் கொடுக்க முடியும். அதேநேரத்தில் இந்த அரசின் இரண்டு பிரதான சாரதிகளை மட்டும் அன்றி, இந்த அரசைப் பதவிக்குக் கொண்டு வரவும், அதைப் பாதுகாக்கவும் தொடர்ந்து செயற்படும் நேரடி மறைமுகப் பங்காளிகளையும் இந்தத் தேர்தலில் மக்கள் தோற்கடிக்க வேண்டும்.

அதாவது, சிங்களப் பேரினவாதக் கட்சிகளை ஆதரிக்க மாட்டோம் என்று சொல்லிக் கொண்டு இந்த அரசாங்கத்தை பதவிக்குக் கொண்டு வந்ததுடன், எதிர்க்கட்சிப் பதவியில் இருந்து கொண்டு இந்த அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து ஆதரித்துக் கொண்டிருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பையும், இந்த அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டுவர ஒத்துழைத்ததுடன், இந்த அரசின் நடவடிக்கைகளை மறைமுகமாக ஆதரித்துக் கொண்டிருக்கும் ஜே.வி.பியையும் கூட மக்கள் இந்தத் தேர்தலில் தோற்கடிப்பது அவர்களது கடமையாகும்.

வாராது வந்த இந்தத் தேர்தலை மக்கள் சரியான முறையில் பயன்படுத்தி இந்த ‘நல்லாட்சி’ அரசின் மக்கள் விரோத, தேச விரோத நடவடிக்கைகளுக்கு கடிவாளம் போடாமல் அசமந்தமாக இருந்தார்களானால், அவர்களால் என்றென்றைக்கும் இருளில் மூழ்கி இருக்க வேண்டிய சூழலே உருவாகும். எனவே நாட்டு மக்கள் அனைவரும் இந்தச் சந்தர்ப்பத்தில் சிந்தித்து செயற்படுவது அவசியமாகும்.

வானவில் இதழ் : 84 - 12/2017

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...