தமிழரசுக் கட்சியை மட்டுமல்ல, பிற்போக்குத்தமிழ் தேசியவாதத்தையும் ஒழித்துக் கட்ட வேண்டும்! சுப்பராயன்


இலங்கை தமிழரசுக் கட்சிக்கு வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எதிர்ப்பு உருவாகியுள்ளதைக் காண முடிகிறது. ஆனால் இந்த எதிர்ப்பு சாதாரண தமிழ்ப் பொதுமக்கள் மத்தியில்
பரவலாக உருவாகவில்லை என்பதும், தமிழ்த் தேசியவாத சக்திகளிடமே அதிகமாகக் காணப்படுகிறது என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம். தற்போதைய எதிர்ப்பு நிலைமை வேகம்
பெற்றதற்கு அண்மையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சிச் சபைகளின் தேர்தலும் ஒரு காரணம். இருந்தாலும் தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரை இதற்கு முன்னரும் பல ஏற்ற இறக்கங்களை
அக்கட்சி கண்டுள்ளது.

1949இல் உருவான தமிழரசுக் கட்சி அதன் முன்னோடிக் கட்சியான தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து
உருவாக்கப்பட்ட ஒரு கட்சியாகும். அதன் காரணமாக அவ்விரு கட்சிகளும் 1952, 1960 (இரு தேர்தல்கள்), 1965, 1970 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் எதிரும்
புதிருமாகவே போட்டியிட்டு வந்துள்ளன. இந்த இரு கட்சிகளும் கடுமையான எதிரிகள் போலச் செயற்பட்டாலும் சாராம்சத்தில் ஒரே வர்க்கங்களை, அதாவது தமிழ் மேட்டுக் குழாமின், அதிலும் குறிப்பாக யாழ். உயர்சாதிப் பிரிவினரைப் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சிகளாகவே இருந்து வந்துள்ளன.
தென்னிலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து வந்து சிறீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கிய எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க அக்கட்சியை .தே.கவிலிருந்து மாறுபட்ட, ஏகாதிபத்தியஎதிர்ப்பு தேசியவாதிகளின் கட்சியாக உருவாக்கினார். அதன் மூலம் இலங்கை
முதலாளித்துவ வர்க்கத்தில் விதேசிய சார்பு, தேசிய சார்பு என இரு அணிகள் இருப்பதை வெளிப்படுத்தினார்.


தமிழரசுக் கட்சி உருவான போதும் அப்படி ஒரு நிலைமை இருக்கும் என்ற எதிர்பார்ப்பு சிலரிடம், குறிப்பாக கம்யூனிஸ்ட்டுகளிடம் இருந்தது. அதன் காரணமாக தமிழரசுக் கட்சி உருவான
ஆரம்ப காலங்களில் தமிழரசுக் கட்சியைச் செயற்பட விடாது  படுபிற்போக்கான தமிழ் காங்கிரஸ் கட்சி
அடாவடித்தனங்களில் ஈடுபட்ட போது, தமிழரசுக் கட்சி தனது பொதுக் கூட்டங்களை நடாத்துவதற்கு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி சில இடங்களில் தனது புரட்சிகர அணிகள் மூலம் மேடைப்
பாதுகாப்பு கூட வழங்கியது.  

அதற்கான காரணம் தமிழரசுக் கட்சி பண்டாரநாயக்கவின் சுதந்திரக் கட்சி போல ஒரு தமிழ் தேசிய முதலாளித்துவக் கட்சியாக, முற்போக்கான கட்சியாக இருக்கும் என்றும், அதன் காரணமாக
தெற்கில் பண்டாரநாயக்கவின் கட்சியுடன் சில விடயங்களில் சேர்ந்து செயற்படுவது போல தமிழ் பகுதிகளில் தமிழரசுக் கட்சியுடன் கம்யூனிஸ்ட் கட்சி நேச அணியாகச் சேர்ந்த செயற்படலாம் எனக்
கருதியதால் தான். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்பார்த்ததிற்கு மாறாக தமிழரசுக் கட்சி
இன்னொரு தமிழ் காங்கிரஸ் கட்சியாகத்தான் செயற்பட்டது. அதற்கான காரணங்களைப் பின்வருமாறு
வகைப்படுத்தலாம்.

தென்னிலங்கை போன்று வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் செறிந்து வாழ்ந்த பகுதிகளில்
தமிழ் தேசிய முதலாளி வர்க்கம் ஒன்று உருவாகி இருக்கவில்லை.
தமிழரசுக் கட்சியை உருவாக்கியவர்கள்  தமிழ் காங்கிரசிலிருந்து வர்க்க அடிப்படையிலான கொள்கை
வேறுபாடுகளுடன் பிரிந்து வரவில்லை. தமிழ் சமூகத்தில் உயர்சாதி பிரிவினரே அதிகம் என்பதால் தேர்தல்களில் அவர்களது வாக்குகளைக் கவருவதற்காக அவர்களைச் சார்நது நின்ற சந்தர்ப்பவாதப்
போக்கு.தமிழரசுக் கட்சித் தலைமையை அந்நிய ஏகாதிபத்திய விசுவாசமும், சிங்கள
மேட்டுக்குடிகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய .தே.கவுடனான  உறவையும் விரும்பிய கனவான்கள்
ஆக்கிரமித்திருந்தவை.

இந்தக் காரணிகளால் தமிழரசுக் கட்சியும் தமிழ் காங்கிரஸ் சென்ற வலதுசாரிப் பாதையிலேயே சென்றது. இருப்பினும் தமிழரசுக் கட்சி ஆரம்ப காலங்களில் கிளப்பிய தமிழ் மொழி உணர்வும், தமிழ்
பேசும் மக்களுக்கான கோசங்களும் சிறுபான்மை தேசிய இனங்களான வடக்கு கிழக்குத் தமிழர்களை மட்டுமின்றி, வடக்கு கிழக்கில் வாழ்ந்த இஸ்லாமியத்  தமிழர்களையும், மலையக இந்திய
வம்சாவழித் தமி;ழர்களையும் கூடக் கவர்ந்திழுத்தது. அதற்கு இன்னொரு காரணம் அந்தக் காலகட்டத்தில் வடக்கு கிழக்கு இஸ்லாமிய மக்களுக்கோ, மலையகத் தமிழ் மக்களுக்கோ அவர்கள் மத்தியில் இருந்து அரசியல் தலைமைகள் உருவாகியிருக்கவும் இல்லை. இதன் காரணமாக, தமிழரசுக் கட்சியின் தலைவரான எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தை 35 இலட்சம் தமிழ் பேசும் மக்களின் தலைவர் என, அதாவது வடக்கு கிழக்கிலும் மலையகத்திலும் வாழும் தமிழ் மக்களினதும், வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களினதும் தலைவர் என, தமிழரசுக் கட்சியினர் பெருமையுடன் அழைக்க ஆரம்பித்தனர்.

ஆனால் தமிழரசுக் கட்சி அந்த அடிப்படையில் செயற்படாது, யாழ்.மையவாத அடிப்படையில்
செயற்பட்டதால், காலப்போக்கில் முஸ்லிம் மக்களும், மலையகத் தமிழ் மக்களும் தமிழரசுக் கட்சியின் தலைமையை நிராகரித்ததுடன், தமது சொந்த அரசியல் கட்சிகளான சிறீலங்கா முஸ்லிம்
காங்கிரசையும், இலங்கை தொழிலாளர் காங்கிரசையும் உருவாக்கிச் செயற்பட ஆரம்பித்தனர்.
முதலாளித்துவ சமூகத்தில் ஒவ்வொரு தேசிய இனங்களிலுமுள்ள முதலாளித்துவ தேசியவாத சக்திகள் தமக்கான தனி அரசியல் பிரதிநிதித்துவத்தை உருவாக்கிச் செயற்படுவது எல்லா நாடுகளிலும் நிகழ்ந்து வந்திருக்கிறது என்ற போதிலும், தமிழரசுக் கட்சி போன்ற பெரிய சிறுபான்மை தேசிய இனத்தின் கட்சி
எல்லாச் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மத்தியிலும் வேற்றுமைகள் மத்தியிலும் ஒற்றுமையை உருவாக்கிச் செயற்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் தமிழரசுக் கட்சி அவ்வாறு செய்யவில்லை. தமது தலைமையை நிராகரித்த சிறிய இனங்களான
முஸ்லிம்களைதொப்பி பிரட்டிகள்”, “முக்கால்கள்”, “சோனிகள்எனத் துவேசித்ததுடன், மலையகத் தமிழர்களை தோட்டக்காட்டான்”, “வடக்கத்தையான்” “வயிற்றுக் குத்தை நம்பினாலும் வடக்கத்தையானை நம்பக்கூடாதுஎன்றும் துவேசித்தனர். இந்தவாறான துவேசத்தை தமிழரசுக்
கட்சி துவக்கி வைத்ததின் விளைவே பின்னர் அவர்களால் உருவாக்கப்பட்ட பாசிசப் புலிகள் வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை இனச் சுத்திகரிப்பு செய்ய வழிவகுத்தது. அதுமட்டுமின்றி, கிழக்கில் தமிழரசுக் கட்சியின் தூணாகச் செயற்பட்ட செ.இராசதுரை கட்சியுடன் அதிருப்தி கொண்டு வெளியேறிச் சென்ற போது கிழக்குத்  தமிழர்களுக்கெதிராகவும் தமிழரசுத் தலைமை பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டது. இது தமிழரசுக் கட்சியின் வாரிசாக உருவான புலிகளிடமும் பின்னர் வெளிப்பட்டது. அவர்கள் தமது இடைக்கால நிர்வாகசபைத் திட்டத்தை வெளியிட்ட போது அதன் நிர்வாகிகளாகப் பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியலில் கிழக்கு மாகாணத்தவர் ஒருவர் கூட இடம் பெறாதது தமிழரசுக் கட்சி தொடக்கி வைத்த போக்கின் விளைவே. யாழ்.மையவாதத் தலைமைகளை தமிழரசுக் கட்சியும், புலிகளும் கொண்டிருந்தமையாலேயே இராசதுரை தமிழரசுக் கட்சியிலிருந்து விலகியதற்கும், பின்னர் புலிகள் இயக்கத்திலிருந்து அதன் கிழக்கு தலைவர்களான கருணா, பிள்ளையான் போன்றோர் விலகியதற்கும் வழி வகுத்தது.

இருந்தும் தமிழரசுக் கட்சி தனக்கு நெருக்கடிகள் உருவாகும் காலங்களில் ஏதாவது ஒரு தந்திரோபாயத்தை மேற்கொண்டு தமிழ் மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை நிலை நிறுத்தியே வந்துள்ளது. உதாரணமாக, 1970 பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சி பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. அதன் தலைவர்களான .அமிர்தலிங்கம், டாக்டர் ஈ.எம்.வி.நாகநாதன், மு.ஆலாலசுந்தரம் ஆகியோர் தேர்தலில் படுதோல்வி அடைந்தனர். அதேபோல தமிழ் காங்கிரஸ் தலைவரான ஜீ.ஜீ.பொன்னம்பலமும், அக்கட்சியின் செயலாளரான மு.சிவசிதம்பரமும் கூட தேர்தலில் படுதோல்வி அடைந்தனர். அதற்குக் காரணம் அந்த இரு கட்சிகளும் தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளுக்கு எதிராக இலங்கையின் தரகு முதலாளித்துவக் கட்சியான .தே..வின் அரசாங்கத்தில் இணைந்திருந்ததும் (1965 – 70), வடக்கில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடாத்திய சமூக விடுதலைப் போராட்டத்துக்கு எதிராகச் செயற்பட்டதுமாகும். இந்தத் தேர்தல் தோல்விகளின் பின்னர்தான் தமிழ் தரகு முதலாளித்துவ வர்க்கங்களின் இரு பிரிவுகளான தமிழரசுக் கட்சியும், தமிழ் காங்கிரஸ் கட்சியும் தமது கையறு நிலையை உணர்ந்தனர்


அந்த நிலையைத் தவிர்ப்பதற்காக வரலாற்றில் முதல் தடவையாக அவை தமது தனிப்பட்ட குரோதங்களை மறந்து ஒற்றுமைப்பட்டதுடன், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற புதிய அமைப்பை உருவாக்கியதுடன், தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக தனித் தமிழ் ஈழம் என்ற கோசத்தையும் முன் வைத்தனர் அதன் மூலம் தம்மை அழிவிலிருந்து பாதுகாத்துக் கொண்டனர். அவர்கள் தமது தந்திரோபாயத்தை மாற்றினார்களே தவிர, தமது இனவாத, பிற்போக்கு கொள்கைகளில் எந்த மாற்றமும் ஏற்படுத்தவில்லை. பின்னர் அவர்களது நடைமுறைகள் வங்குரோத்தாகி, அதன் காரணமாக தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராடட்ட அமைப்புகள் உருவாகி, அவற்றிலும் புலிகள் இயக்கம் தனிப்பெரும் பாசிச இயக்கமாகி தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்கள் சிலரை ஒழித்துக் கட்டிய போது, தமிழரசுக் கட்சி பின்னடைவைச் சந்தித்தாயினும், புதிய தந்திரோபாயத்தைக் கைக்கொண்டு புலிகளின் அனுசரணையுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் புதிய அமைப்பொன்றை உருவாக்கித் தன்மைப் பாதுகாத்துக் கொண்டனர். ஆனால் புலிகள், சோரம் போன சில தமிழ் ஆயுதப் போராட்டக் குழுக்களையும் அதில் இணைத்திருந்ததால், தமிழரசுக் கட்சி தனது தனி ஆதிக்கத்தை அப்பொழுது காட்டுவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

ஆனால் புலிகளின் அழிவின் பின்னர் தமிழரசுக் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அமைப்பைத் தவிர்க்க முடியாதபடி தொடர்ந்ததுடன், தனது தனி ஆதிக்கத்தையும் படிப்படியாக வெளிப்படுத்த ஆரம்பித்தது. அதன் விளைவே தற்பொழுது சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான
.பி.ஆர்.எல்.எப். கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியேறிச் சென்ற நிலைமையும், கூட்டமைப்பின் எஞ்சியுள்ள பங்காளிக் கட்சிகளான புளொட், ரெலோ  என்பன தமிழரசுக் கட்சியுடனான கொண்டுள்ள முறுகல் நிலையும் ஆகும். இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விடயமென்னவெனில், தமிழரசுக் கட்சிக்கு கூட்டமைப்புக்குள்ளும் வெளியிலும் தோன்றியுள்ள எதிர்ப்பு கொள்கை சார்ந்ததா என்பதும், நீடித்து நிலைக்கக் கூடியதா என்பதுமாகும்.
ஏனெனில் தமிழரசுக் கட்சியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த அல்லது வகிக்கின்ற ஏனைய மூன்று கட்சிகளையும் பொறுத்தவரை அவைகளுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் எந்தவிதமான கொள்கை வேறுபாடுகளும் இல்லை. எல்லாமே பிற்போக்கு தமிழ் தேசியவாதத்தை வரித்துக் கொண்ட
கட்சிகள்தான்

அதேபோல, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வெளியே தமிழரசுக் கட்சித் தலைமையை எதிர்க்கின்ற வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவை, வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பனவற்றைப் பொறுத்தவரையிலும் கூட, அவை தமிழரசுக் கட்சியிலிருந்து மாறுபாடான கொள்கை எதனையும் கொண்டிருக்கவில்லை. அவையும்  பிற்போக்கு தமிழ் தேசியவாதத்தை வரித்துக் கொண்ட கட்சிகள்தான். இந்தக் கட்சிகள் எல்லாம் பிற்போக்கு தமிழ் தேசியவாதக் கட்சிகள் என்பதுடன் மட்டும் நிற்பனவல்ல. இவைகளின் உலக நோக்கு எகாதிபத்திய சார்பானதாகும்.

தேசிய நோக்கு படுபிற்போக்கான .தே.. சார்பானதாகும். தற்போது செயற்படுகின்ற தமிழ்
கட்சிகளைப் பொறுத்தவரையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (.பி.டி.பி) மட்டுமே சற்று வித்தியாசமான, விதிவிலக்கான கட்சியாகும். எனவே தமிழரசுக் கட்சியுடன் அதன் பங்காளிக் கட்சிகளோ அல்லது இதர தமிழ் தேசியவாதக் கட்சிகளோ கொண்டுள்ள முரண்பாடு தனிப்பட்ட அல்லது குழு நலன் சார்ந்த முரண்பாடுகளே தவிர, கொள்கை சார்ந்ததோ அல்லது தமிழ் மக்களின் தேசிய நலன் சார்ந்ததோ அல்ல.

தமிழரசுக் கட்சியை ஒழிக்கக் கோருபவர்கள் இன்னொரு வடிவத்தில் அதன் கொள்கைகளைத் தொடரப்
போகின்றவர்கள்தான். அதனால் தமிழ் மக்களுக்கு எந்தப் பிரயோசனமும் ஏற்படப் போவதில்லை. தமிழ் மக்களுக்கு இன்று தேவை பிற்போக்கான தமிழ் தேசியவாதத்திற்கு மாற்றான ஒரு கொள்கையும், அதை உறுதியுடன் முன்னெடுத்துச் செல்லக்கூடிய ஒரு புதிய தலைமையும்தான்இருப்பினும் இப்பொழுது இனவாத, பிற்போக்கு தமிழரசுக் கட்சிக்கு எதிராகத் தோன்றியுள்ள எதிர்ப்பு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அது மேலும்
வளர்க்கப்பட வேண்டும். அதேநேரத்தில் அந்த எதிர்ப்பு இன்னொரு தமிழரசுக் கட்சியை உருவாக்குவதில் போய் முடியக்கூடாது. பதிலாக தமிழ் மக்களை இனவாத எதிர்ப்பு, பிற்போக்கு எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, என்பனவற்றின் அடிப்படையிலான முற்போக்குத் திசை
வழியில் வழி நடாத்திச் செல்வதாக இருக்க வேண்டும்.

இந்த இடத்தில் 1975ஆம் ஆண்டு மார்ச்சிஸ்ட் - லெனினிஸ்டகம்யூனிஸ்ட்டுகள் தமிழ் மக்களுக்காக
முன்மொழிந்த பரந்துபட்டதமிழ் மக்களின் ஜனநாயக முன்னணியின் அவசியம் பற்றி
உண்மையான தமிழ் தேசியவாத சக்திகள் கவனத்தில் கொள்வது காலப் பொருத்தமானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்.

மூலம்: வானவில் இதழ் 84 மார்கழி 2017

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...