"த.தே.கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு முழுத் துரோகம் இழைத்துள்ளது!"


லங்கையில் மைத்திரி – ரணில் தலைமையில் அமைந்திருக்கும் மேற்கத்தைய சார்பு வலதுசாரி அரசாங்கம் நாட்டு மக்களின் எதிர்ப்பையும் மீறி புதிய அரசியல் அமைப்பு ஒன்றைக் கொண்டு வரும் பெரும் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருக்கிறது.

இந்த அரசியல் அமைப்பின் நோக்கம் நாட்டில் எழுந்துள்ள பூதாகரமான பிரச்சினைகளான பொருளாதார மந்த நிலை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசியுயர்வு, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தீர்வு, இயற்கை வளங்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பது, கல்வி – சுகாதார – அரச சேவைகளை மேம்படுத்துவது, ஊடக சுதந்திரத்தையும் மனித உரிமைகளையும் வலுப்படுத்துவது போன்றவற்றுக்கும், நாட்டின் தலையாய பிரச்சினையான இனப் பிரச்சினைக்கும் தீர்வு காண்பது அல்ல.

மாறாக, எந்த அந்நிய சக்திகள் இந்த அரசாங்கத்தை ஆட்சிபீடம் ஏற்றினார்களோ, அந்த அந்நிய எஜமானர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக நாட்டின் வளங்களை அவர்களுக்குத்; தாரை வார்த்தல், விலைவாசிகளை உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற ஏகாதிபத்திய வட்டிக்கடைக்காரர்களின் ஆணைப்படி அதிகரித்தல், கல்வி, சகாதார, வங்கி மற்றும் அரச சேவைகளை தனியார்மயப்படுத்தல், சிறிய தேசிய இனங்களின் தனித்துவத்தை அழித்தொழித்தல், ஊடக சுதந்திரத்தை மட்டுப்படுத்தல் போன்ற தேவைகளுக்காகவே இந்த அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பு ஒன்றைக் கொண்டு வருகிறது.


ஏற்கெனவே தற்பொழுது நடைமுறையில் உள்ள அரசியல் அமைப்பும் இன்றைய அரசாங்கத்தின் பிரதமரான ரணிலின் மாமனாரான ஏகாதிபத்திய அடிவருடி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் அந்நிய சக்திகளின் தேவைகளுக்காக, திறந்த பொருளாதார பொருளாதாரக் கொள்கைகளை அமுல்படுத்துவதற்காக 1978இல் கொண்டு வரப்பட்ட ஒன்றுதான். அதுமட்டுமல்லாமல் அந்த அரசியல் அமைப்பின் கீழ்தான் எதிர்கட்சிகளும் தொழிற்சங்கங்களும் தடை செய்யப்பட்டு, வேலைநிறுத்தங்கள் ஆயுதப்படைகளால் முறியடிக்கப்பட்டு, வேலைநிறுத்தம் செய்தோர் வேலை நீக்கம் செய்யப்பட்டு, ஊடக சதந்திரம் நசுக்கப்பட்டு, இனப் பிரச்சினை தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தமாக மாற்றப்பட்டு, அரசரகால சட்டம், பயங்கரவாத தடைச் சட்டம் என்பன அமுலாக்கப்பட்டு, நாடு சர்வாதிகாரப் பாதையில் கொண்டு செல்லப்பட்டது. அப்பொழுதும் இன்று சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கொண்டு இந்த அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கெல்லாம் தலையாட்டுவது போல, அன்றும் அ.அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கொண்டு ஜே.ஆர். அரசின் எதேச்சாதிகார நடவடிக்கைகளுக்கெல்லாம் தலையாட்டிக் கொண்டிருந்தார். (பிறவித் தோசமோ?)

1978 அரசியல் அமைப்பு கொண்டு வரப்பட்ட போது அதை கடுமையாக எதிர்த்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும், பின்னர் சந்திரிக குமாரதுங்க தலைமையிலும், மகிந்த ராஜபக்ச தலைமையிலும் பதவிக்கு வந்தபோது, அந்த சர்வாதிகார அரசியல் அமைப்பை தாம் பதவிக்கு வந்தால் மாற்றுவதாக மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை மறந்து அந்த அரசியல் அமைப்பை மாற்றாமல் தாமும் அதில் பதவிச் சுகம் கண்டதன் விளைவே இன்று மீண்டும் ஐ.தே.க. தலைமையிலான அரசு ஒரு புதிய மக்கள் விரோத அரசியல் அமைப்பை நடைமுறைப்படுத்த எடுத்து வரும் முயற்சிகள் ஆகும்.

முன்னைய அரசியல் அமைப்பைக் கொண்டு வந்தவர்களும் இவர்களே என்ற போதிலும், இன்றைய நிலைமைக்கு ஏற்றவாறு ஏகாதிபத்திய சக்திகளுக்குச் சேவகம் செய்யவும், மக்களை அடக்கி ஒடுக்கி அவர்கள் மீது சர்வாதிகாரத்தனமான ஆட்சியொன்றைத் திணிக்கவுமே புதிய அரசியல் அமைப்பு கொண்டு வரப்படுகிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதைவிட இன்னொரு முக்கிய விடயமும் புதிய அரசியல் அமைப்புக் கொண்டு வருவதின் நோக்கத்தில் உள்ளடங்கி இருக்கிறது. அதாவது, புதிய அரசியல் அமைப்பின் மூலம் முன்னைய அரசியல் அமைப்பில் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு அடிகோலிய 13ஆவது திருத்தச் சட்டத்தை ஒழித்துக் கட்டுவதும் இன்றைய அரசின் தலையாய நோக்கமாகும். இதை ஆட்சியாளர்கள் வெளிப்படையாகச் சொல்லாவிடினும் அதுதான் அவர்களது நோக்கமாகும்.
ஆட்சியாளர்களின் நோக்கம் அதுவாக இருக்க, தமிழரசுக் கட்சித் தலைமையில் உள்ள மும்மூர்த்திகளான சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராசா ஆகியோர் புதிய அரசியல் அமைப்புக் கொண்டு வருவதின் நோக்கமே தமி;ழ் மக்களின் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத்தான் என திரும்பத் திரும்ப பொய்யுரைத்து வருகின்றனர். ஆனால் அரச தலைவர்களான ஜனாதிபதி மைத்திரியோ, பிரதமர் ரணிலோ புதிய அரசியல் அமைப்பு கொண்டு வரப்படுவதின் நோக்கம் இனப்பிரச்சினைத் தீர்வுக்குத்தான் என இன்று வரை தவறுதலாகத்தன்னும் வாய் திறந்து ஒரு வார்த்தை கூறவில்லை.

ஆனால் ஒருகாலத்தில் லங்கா சமசமாஜக் கட்சியில் இருந்தபோது தன்னை நேர்மையான, இனப் பாரபட்சமற்ற இடதுசாரி எனப் பீற்றியவரும், பின்னர் 180 டிகிரி பல்டியடித்து வலதுசாரி ஐ.தே.கவில் சங்கமித்து அதன் மூலம் நாடாளுமன்றப் பதவி பெற்றவரும், தற்போதைய புதிய அரசியல் அமைப்பு முயற்சிகளின் மூலகர்த்தாவாகத் செயற்படுபவருமான ஜயம்பதி விக்கிரமரத்ன புதிய அரசியல் அமைப்புக் குறித்து கூறியதை அவதானித்தால், அது கொண்டு வரப்படுவதின் நோக்கம் என்ன என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். அவர் பின்வருமாறு கூறுகிறார்:
“தற்போது நடைமுறையில் உள்ள அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்பட்டிருக்காத, பிரிவினைக்கு எதிரான ஏற்பாடுகள் புதிய உத்தேச அரசியல் அமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன. பிரிவினைக்கு ஆதரவாக நடக்கவோ, அதற்கேற்றாற் போன்ற தீர்மானங்களை நிறைவேற்றவோ, புதிய அரசியல் யாப்பில் மாகாண சபைகளுக்கு அதிகாரமோ இடமோ இல்லை. ஆளுநர் மற்றும் பிரதமர் கையில் எப்போதும் அதிகாரத்தை வைத்திருக்ககூடிய வகையில் புதிய அரசியல் யாப்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன”.

இதேநேரத்தில் ஜனாதிபதி மைத்திரியின் சிறீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவரும், தமிழ் மக்களின் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தவரும் அமைச்சருமான டிலான் பெரேரா கூறுவதைப் பாருங்கள்:
“சம்பந்தன்தான் எமக்குக் கடைசி ஆயுதம். ஓற்றையாட்சியையும், பௌத்த மதத்தையும் ஏற்றுக்கொள்ள தமிழ்த் தரப்பில் அவரைத் தவிர இனி எமக்கு வேறு யாருமில்லை.”
இவர்கள் மட்டுமின்றி, தம்மை சோசலிஸ்ட்டுகள் என்று கூறி, சிவப்புக் கொடி ஏந்தித் திரியும் போலி இடதுசாரிகளான ஜே.வி.பி. கட்சியின் செயலாளர் ரிஸ்வின் சில்வா அண்மையில் இந்தப் புதிய அரசியல் அமைப்புச் சம்பந்தமாக அதை எதிர்ப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்திருக்கிறார். அவர் தனது வேண்டுகோளில் “முன்னைய அரசியல் அமைப்பின் கீழ் உள்ள மாகாண சபை முறை பிரிவினைவாதத் தன்மையுடையது. ஆனால் வரப்போகும் புதிய அரசியல் அமைப்பில் பிரிவினை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இருக்கையில் அதை ஏன் எதிர்க்கிறீர்கள்?” என பொது எதிரணியினரைப் பார்த்துக் கேட்கிறார் ரிஸ்வின் சில்வா.

இவர்கள் அனைவரதும் கூற்றிலிருந்து தெரிவது என்ன? தமிழ் மக்களுக்கு ஓரளவு நன்மை பயப்பதும், இந்திய அரசின் அனுசரணையுள்ளதுமான மாகாண சபை முறைமையை ஒழித்துக் கட்டி, தமிழ் மக்களின் கழுத்தை ஒற்றையாட்சி என்ற கயிற்றின் மூலம் இறுக்குவதே புதிய அரசியல் அமைப்பின் நோக்கம். நிலைமை இவ்வாறிருக்க சம்பந்தன் குழுவினர் புதிய அரசியல் அமைப்பு தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்கப் போகின்றது எனச் சொல்வது பொய்யல்லாமல் வேறென்ன? உண்மையில் வரலாற்றைச் சற்று ஆழ்ந்து பார்த்தால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வுகளுக்கு சிங்களத் தலைவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட போதெல்லாம் அதைக் குழப்பும் சக்திகளுக்குத் துணை போனவர்கள் தமிழ்த் தலைமைகள்தான் என்பது தெரிய வரும். உதாரணமாக,
1957இல் பண்டாரநாயக்க – செல்வநாயகம் உடன்படிக்கை உருவாகி தமிழ் மக்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கவிருந்த நேரத்தில் ஜே.ஆர.ஜெயவர்த்தன தலைமையில் ஐ.தே.க. குழப்பங்களை உருவாக்கி அதைக் கிழித்தெறிய வைத்தனர். அந்த நேரத்தில் பண்டாரநாயக்கவின் கைகளைப் பலப்படுத்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த உதவியிருக்க வேண்டிய தமிழரசுக் கட்சியினர், பண்டாரநாயக்க அரசில் இருந்த சில இனவாத வலதுசாரி அமைச்சர்கள் திட்டமிட்டு ஒப்பந்தத்தைக் குழப்புவதற்காக தமிழ் பகுதிகளுக்கு அனுப்பி வைத்த சிங்கள சிறீ பொறித்த வாகனங்களுக்கு எதிராக ‘சிறீ எதிர்ப்புப் போராட்டம்’ நடாத்தி, சிங்கள இனவாதிகளின் கைகளைப் பலப்படுத்திபண்டாரநாயக்கவை ஒப்பந்தத்தைக் கிழித்தெறிய வைக்கும் நிலைமைக்கு உள்ளாக்கினர்.

அடுத்ததாக, 1987இல் இந்திய – இலங்கை உடன்படிக்கை உருவாகி தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபை முறை நடைமுறைக்கு வந்த போது புலிகளுடன் சேர்ந்த தமிழர் விடுதலைக் கூட்டணி அதை எதிர்த்ததுடன், இனவாதி பிரேமதாச மூலம் மாகாண சபையையும் கலைக்க வைத்தனர்.

பின்னர் சந்திரிக்க தலைமையிலான அரசாங்கம் 2000ஆம் ஆண்டில் வடக்கிலும் கிழக்கிலும் இருந்த தமிழ் பிரதேசங்களை ஒரே அலகாக இணைத்து, ஓரளவு சமஸ்டித் தன்மை வாய்ந்த பிராந்திய சபையை உருவாக்க முயன்றபோது, அந்தச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் வைத்து தீயூட்டி எரித்து ஆர்ப்பாட்டம் செய்த ரணில் தலைமையிலான ஐ.தே.கவுடனும், ஹெல உருமய, ஜே.வி.பி. போன்ற சிங்கள இனவாத கட்சிகளுடனும் சேர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணியும் அதை எதிர்த்து நடைமுறைப்படுத்த விடாமல் தடுத்து முறியடித்தனர். அப்படி ஏன் தாம் நடந்த கொண்டனர் என்பதற்கு தமிழ்த் தலைமையிடம் இருந்து இதுவரை எந்தவிதமான பதிலுமில்லை.

இவையெல்லாவற்றையும் செய்து தமிழ் மக்களின் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டு, இப்பொழுது தமிழ் மக்களுக்கு இருக்கின்ற அரைகுறைத் தீர்வான மாகாண சபை முறையையும் இல்லாதொழிக்கும் புதிய அரசியல் அமைப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரிப்பதின் மூலம் மீண்டும் ஒருமுறை தமிழ் மக்களின் முதுகில் குத்தி அவர்களுக்குத் துரோகம் இழைத்துள்ளனர். இந்தச் செயற்பாடுகள் எல்லாவற்றையும் தமிழ்த்தலைமைகள் தெரியாத்தனமாகவோ, அரசியல் அறிவீனம் காரணமாகவோ செய்யவில்லை. வேண்டுமென்றே செய்து வருகின்றனர்.

தமிழ்த் தலைமைகள் தமிழ் மக்களுக்கு எதிராக இந்தத் துரோகங்களைச் செய்வதற்கு ஐ.தே.க. தான் எப்பொழுதும் துணை நின்று வருகிறது. இதற்கும் பல உதாரணங்கள் உள்ளன.
1965இல் அன்றைய டட்லி சேனநாயக்க தலைமையிலான ஐ.தே.கவின் ஏழு கட்சி கூட்டரசாங்கத்தில் தமிழரசு –தமிழ் காங்கிரஸ் கட்சிகள் இணைந்ததுடன், மந்திரி மற்றும் உப சபாநாயகர் பதவியும் பெற்றிருந்தன. அந்த அரசாங்கத்தில் மந்திரிப் பதவி பெறுவதற்கு இந்தப் பெரிய தமிழரசுக் கட்சியில் ஆள் இல்லாமல் கொழும்புத் தமிழரான, தமிழ் பேசத் தெரியாத மு.திருச்செல்வத்தை ஐ.தே.க. தமிழரசுக் கட்சிக்கு இரவலாகக் கொடுத்து அவரை மந்திரியாக்கியது. திருச்செல்வம் தமிழரசுக் கட்சிக்கும் ஐ.தே.க. அரசாங்கத்துக்கும் தரகராகச் செயற்பட்டார். அதன் மூலம் சாதித்ததெல்லாம் ஒரு அதிகாரமுமில்லாத மாவட்ட சபைகளை வழங்குவதாகச் சொல்லி பின்னர் அதையும் வழங்காமல் ஏமாற்றியதுதான்.

பின்னர்1977இல் தமிழ் ஈழம் கோரி தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குக் கொள்ளையடித்து, சந்தர்ப்பவசத்தால் கிடைத்த எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வைத்துக் கொண்டு, ஜே.ஆர். அரசுடன் கூடிக்குலாவி ஒரு அதிகாரமும் இல்லாத (ஒரேயொரு விருத்தி என்னவெனில் டட்லியின் ‘மாவட்ட சபை’யில் இல்லாத ஒரு சொல் ‘அபிவிருத்தி’ என்ற சொல் கூடுதலாகச் சேர்க்கப்பட்டதுதான்) மாவட்ட அபிவிருத்தி சபையைப் பெற்று அதையும் நடைமுறைப்படுத்த முடியாமல் கையறு நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
பின்னர் சந்திரிக காலத்தில் இன்னொரு கொழும்புத் தமிழரான முன்னைய திருச்செல்வத்தின் மகனான நீலன் திருச்செல்வத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக்கி, அவரை சந்திரிக அரசுக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இடையிலான தரகராக வைத்திருந்தனர். அவரை புலிகள் தற்கொலைக் குண்டுதாரி மூலம் ஒழித்துக் கட்டியதும் அந்தக் கதையும் முடிந்தது.

தற்போது இன்னொரு கொழும்புத் தமிழரான சுமந்திரனை முதலில் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், பின்னர் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினராகவும் ஆக்கி இன்றைய மைத்திரி – ரணில் வலதுசாரி அரசாங்கத்துக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான தரகராக வைத்து காரியங்கள் நடைபெறுகின்றன. சுமந்திரனை ஐ.தே.கதான் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இரவலாக வழங்கியது என்பது ஒன்றும் இரகசியமான விடயமல்ல.

இப்படியாக, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்களுக்கு குழி தோண்டும் வேலையைத்தான் தமிழ்த் தலைமைகள் கொழும்பு ஐ.தே.க தரகர்களின் உதவியுடன் செய்து வந்திருக்கின்றன. இப்பொழுது அந்த வேலையை சம்பந்தன் – சுமந்திரன் – மாவை சேனாதிராசா குழு பொறுப்பெடுத்துச் செய்து வருகின்றது. ஆனால் ஒரு வித்தியாசம் என்னவெனில் இதற்கு முன்னர் சிங்களப் பேரினவாதத் தலைமைகள் தமிழ் மக்களுக்கு எதிராகச் செயற்பட்ட போதெல்லாம் தமிழ்த் தலைமைகள் மறைமுகமாக ஆதரித்து வந்தன. ஆனால் இந்தத் தடவை சமபந்தன் தலைமையிலான குழுவினர் வெளிப்படையாகவே தமிழ் மக்களுக்கு எதிராகச் செயற்படத் துணிந்துவிட்டனர். அதற்குக் காரணம் தமிழ் மக்கள் கொடுத்த இடம்தான்.

உண்மையில் இப்பொழுது செய்ய வேண்டியதெல்லாம் இரண்டு விடயங்கள்தான்.
ஒன்று, அரசாங்கமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சேர்ந்து திட்டமிட்ட முறையில் 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மாகாண சபைகளை இல்லாதொழிக்க எடுக்கும் முயற்சிகளை முறியடிப்பதுடன், மாகாண சபை முறையை அதன் முழுமையான அர்த்தத்தில் நடைமுறைப்படுத்தும்படி கோரி இயக்கம் நடாத்துவது. வேண்டுமானால் அதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்வது.

இரண்டாவது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்குச் செய்யும் துரோகத்துக்குப் பதிலடியாக எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தல்களில் மக்கள் சக்தியைக் கொண்டு கூட்டமைப்பைத் தோற்கடிப்பது.
‘மந்திரத்தால் மாங்காய் விழுத்த முடியாது’ என்பது போல, சும்மா இருந்து இவற்றைச் சாதிக்க முடியாது. இவற்றைச் சாதிப்பதற்கு எமக்கு முன்னால் உள்ள ஒரே வழி, மக்கள் விசுவாசமும், நேர்மையும் உள்ள அனைத்து தமிழ் தேசியவாத, ஜனநாயக, முற்போக்கு சக்திகளும் தமது கடந்த கால அரசியல் மற்றும் தனிப்பட்ட வேறுபாடுகளைக் களைந்து ஓரணியில் நின்று செயற்படுவதுதான். அதைத் தவிர வேறு எந்தக் குறுக்கு வழியும் இல்லை.
பாசிசப் புலிகளை ஒழிப்பதற்கு இலங்கை அரசும், சில சர்வதேச சக்திகளும் உதவின. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எனும் இந்த நாசகார சக்தியை ஒழித்துக் கட்டுவதற்கு மக்கள் சக்தியும் ஒற்றுமையும் என்ற எமது சொந்தச் கால்களில் தங்கி நின்றுதான் இதைச் சாதிக்க முடியும் என்பதை நாம் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.

‘முயற்சி திருவினையாக்கும்’.

No comments:

Post a Comment

The danger of US-China war and Australia’s anti-democratic election laws-by Peter Symonds

The new anti-democratic election laws in Australia, aimed at deregistering so-called minor parties, go hand in hand with the efforts of the ...