மொட்டத் தலைக்கும் , முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் ஒரு புரட்(டு)சி ‘மார்க்சியவாதி’!


இலங்கையில் ஒரு காலத்தில் 100 சதவீதம் புரட்சிகர மார்க்சியவாதியாக வலம் வந்தவர் நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணரத்ன. ஆனால் புரட்சியிலும் நாடாளுமன்ற அரசியலிலும் ஏற்பட்ட மோசமான தோல்விகளால் துவண்டு
விரக்தியடைந்து போனதாலோ என்னவோ, அவரது முன்னோடி ரொட்ஸ்கிசத் தலைவர்களான பிலிப் குணவர்த்தன, கலாநிதி எம்.எம்.பெரேரா, எட்மன் சமரக்கொடி,
பாலா தம்பு போன்ரோரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி தானும் அடிசறுக்கத் தொடங்கியுள்ளார்.



அவரின் தடம் புரளலின் கடைசி உதாரணமாக அண்மையில் நடைபெற்ற  கருத்தரங்கொன்றில் அவர் ஆற்றிய உரை அமைந்திருக்கிறது.அந்தக் கருத்தரங்கில் பேசிய அவர், சோசலிஸ்ட்டுகள் இலங்கையில் அந்நிய நாடுகள் முதலீடு செய்வதை எதிர்க்காது வரவேற்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்! அதற்கு அவர் சொல்லும் காரணம், இலங்கையில் உள்ள இயற்கை வளங்களை பயன்படுத்தக் கூடிய தொழில்நுட்பத்
திறன் இலங்கையர்களிடம் இல்லாதிருப்பதால், அந்நியர் மூலம் அதைச் செய்ய வேண்டும் என்பதாகும். அவரது பேச்சில் அநியாயமான விடயமென்னவெனில், தனது தடம்
புரளலுக்கு ஆதரவாக மாபெரும் சோவியத் சோசலிசப் புரட்சியின் தந்தை லெனினை வம்புக்கு
இழுத்திருப்பதுதான். அதுவும் உலகம் முழுவதுமுள்ள மக்கள் சோவியத் ஒக்ரோபர் புரட்சியின் 100ஆவது ஆண்டு நிறைவையிட்டு அதன் மேன்மையையும், படிப்பினைகளையும்
கொண்டாடி வரும் வேளையில், சோவியத் யூனியனில் தவிர்க்க முடியாத சில நிர்ப்பந்தங்களால் ஒரு சிறிது காலம் பின்பற்றிய ஒரு கொள்கையை இலங்கையின்
தற்போதைய மேற்கத்தைய சார்பு வலதுசாரி அரசாங்கத்தைப் பாதுகாக்க அவர் பயன்படுத்தியிருப்பதுதான்.

சோவியத் புரட்சி 1917இல் வெற்றி பெற்ற பின்னர் லெனின் தலைமையிலான அரசாங்கம் ஒரு குறுகிய காலம் பின்பற்றிய ‘புதிய பொருளாதாரக் கொள்கை’யையே (New Economic Policy )  விக்கிரமபாகு தனது முதலாளித்துவ விசுவாசத்துக்கு துணைக்கிழுத்திருக்கிறார்.
அவர் அது பற்றிச் சொன்ன விடயம் சரியா தவறா என்பதைப் பார்ப்பதற்கு முன்னர் அவர் இலங்கையர்களின் தொழில்நுட்பத் திறமையீனம் பற்றிச் சொன்னதை முதலில் பார்த்து விடுவோம். சிவம் துர்க்காராம் சிவம் துர்க்காராம் சிவம் துர்க்காராம் இலங்கையர்களிடம் வளர்ச்சி அடைந்த மேற்கத்தைய முதலாளித்துவ நாடுகளில் உள்ளதைப் போலவோ அல்லது
இன்றைய சோசலிச சீனா மற்றும் அன்றைய சோவியத் யூனியன் போன்ற சோசலிச நாடுகளில் உள்ளது போன்ற அதியுச்ச தொழில்நுட்ப வளர்ச்சியோ இல்லை என்பது உண்மைதான்.

ஆனால் அதை நிவர்த்தி செய்வதற்கான வழி என்ன என்பதுதான் கேள்வி. அதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, அந்நிய முதலீட்டாளர்களுக்கு எமது இயற்கை வளங்களையும், எமது மக்களின் மலிவான உழைப்பையும் தங்குதடையின்றித் திறந்துவிட்டு, அவர்கள் எமது நாட்டைக் கொள்ளை  அடித்துச் செல்ல அனுமதிப்பது. மற்றது, எமது நாட்டைச் சமதையாக
மதிக்கும் சோசலிச நாடுகள் மற்றும் நடுநிலைமை நாடுகளின் உதவியைப் பெற்று நாமே தொழில்நுட்பத் திறமையில் தேர்ச்சி பெற்று, சொந்தக் காலில் நின்று எமது நாட்டை நவீன பொருளாதாரம் கொண்ட நாடாக எதிர்காலத்தில் கட்டியெழுப்புவது.

இந்த இரண்டில் ‘தோழர்’ விக்கிரமபாகு முதலாவது, அதாவது முதலாளித்துவ
அணுகுமுறையையே இலங்கைக்குச் சிபார்சு செய்கிறார். அதன் மூலம் அவர் சோசலிசப் பாதையிலிருந்து முதலாளித்துவப் பாதைக்கு அடிசறுக்கி விட்டதை தன்னையறியாமலேயே
அம்பலப்படுத்தி விடுகின்றார். அடுத்ததாக அவர் தனது முதலாளித்துவ சார்பான கருத்துக்கு ஆதரவாக எமது மாபெரும் ஆசான் லெனின் அவர்களை வம்புக்கு இழுத்துள்ளதைப் பார்ப்போம்.

சோவியத் யூனியனில் 1917 ஒக்ரோபர் புரட்சிக்குப் பின்னர் முதலாளித்துவ அடிப்படையிலான ‘புதிய பொருளாதாரக் கொள்கை’யை ஒரு குறிப்பிட்ட காலம்
(1921 – 28) வரை அமுல்படுத்தியது உண்மையே. அதற்கான காரணிகள் என்ன என்பதைப் பார்ப்பது அவசியம். 1917 புரட்சியின் மூலம் லெனின் தலைமையிலான போல்ஸ்சிவிக்குகள்
அதிகாரத்தைக் கைப்பற்றிய நேரத்தில் ஆட்சியிலிருந்த எதேச்சாதிகார மன்னனான ஜார் ரஸ்யாவை முதலாம் உலகப் போரில் ஈடுபடுத்தி பொருளாதாரம் உட்பட நாட்டை
அனைத்துத் துறைகளிலும் சீரழித்து வைத்திருந்தான். அதைச் சீரமைப்பது
கம்யூனிஸ்ட்டுகளுக்கு இலேசான வேலையாக இருக்கவில்லை. இந்த நிலைமையில் அதிகாரத்தை இழந்த பிற்போக்கு சுரண்டும் வர்க்க சக்திகள் மீண்டும் அதிகாரத்தைக்
கைப்பற்றுவதற்காக நாடு முழுவதும் எதிர்ப் - புரட்சி நடவடிக்கையில் இறங்கினர். அதன் காரணமாக புதிய சோவியத் சோசலிச அரசாங்கம் அவர்களுடன் நான்கு வருடங்கள்
உள்நாட்டுப் போரில் ஈடுபட வேண்டி வந்தது. அதன் பின்னர் உலகின் முதலாவது தொழிலாளர் அரசை அழிக்கும் நோக்கில் இங்கிலாந்து,பிரான்ஸ், ஜேர்மனி உட்பட பத்துக்கும் அதிகமான மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகள் சோவியத்
யூனியன் மீது ஏககாலத்தில் போர் தொடுத்தன. இத்தகைய உள்நாட்டுப் போரையும், வெளிநாட்டு ஆக்கிரமிப்பையும் சமாளித்துக் கொண்டு, அதே நேரத்தில் கறாரான ஒரு சோசலிச அமைப்பைக் கட்டுவது சாத்தியமாக இருக்கவில்லை. அப்படி செய்யப்
புறப்பட்டிருந்தால் மக்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டி வரும்.


எனவே முதலில் நடைமுறையில் ஏற்கெனவே இருந்த முதலாளித்துவ அடிப்படையில் தன்னும் பொருளாதாரத்தை நிலைநிறுத்திக் கொண்டு, பின்னர் ஓரளவு ஸ்திரத்தன்மை வந்தபின்னர் சோசலிச பொருளாதாரக் கட்டுமானத்துக்குச் செல்ல வேண்டிய தேவையை உணர்ந்த
லெனின், ஸ்டாலின் போன்ற தலைவர்கள் ஒரு இடைக் காலகட்டத்துக்கு முதலாளித்துவ
அடிப்படையிலான புதிய பொருளாதாரக் கொள்கையை அமுல்படுத்தத் தீர்மானித்தனர்.
அதுவும் பாரிய கைத்தொழில்கள், போக்குவரதது, வங்கிகள், வெளிநாட்டு வர்த்தகம் என்பனவற்றை அரசின் கைகளில் வைத்துக் கொண்டு, மக்களை சிறு நிலத்துண்டுகளி;ல் தனிப்பட்ட விவசாயத்தில் ஈடுபடவும், சிறு கைத்தொழில்களில் ஈடுபடவும், சிறிய
வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடவும் தான் அனுமதித்தனர். இதனால் பொருளாதார நெருக்கடி ஓரளவு தீர்ந்தது. அதன் பின்னர் தற்காலிகமாக நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய
பொருளாதாரக் கொள்கை கைவிடப்பட்டு முற்றுமுழுதாக சோசலிச அமைப்பு முறை
கட்டியமைக்கப்பட்டது. விவசாய நிலங்கள் அனைத்தும் கூட்டுறவுப் பண்ணைகளாக மாற்றியமைக்கப்பட்டன. சகல தொழிற்சாலைகளும், வர்த்தக நடவடிக்கைகளும் தேசிய
மயமாக்கப்பட்டன. அதன் மூலம் 1924இல் லெனின் மறைவுக்குப் பின்னர் தோழர் ஸ்டாலின் தலைமையில் சோவியத் யூனியனில் மிக உயர்ந்த கட்ட சோசலிச அமைப்பு முறை
ஸ்தாபிக்கப்பட்டதுடன், அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு நிகரான பலம் வாய்ந்த வல்லரசு நாடாகவும் சோவியத் யூனியன் மாற்றியமைக்கப்பட்டது.

எனவே சில வரலாற்றுச் சூழல்களின் நிமித்தம் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ‘புதிய பொருளாதாரக் கொள்கை’யை நடைமுறைப்படுத்தியதில் எந்தத் தவறும் இல்லை.
ஆனால் இங்கே முக்கியமான ஒரு விடயமென்னவெனில், சோவியத் யூனியனில் பதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட காலத்திலும் சரி, அதன் பின்னரும் சரி,
அரசியல் அதிகாரம் தொழிலாளி வர்க்கத்தின் முன்னணிப் படையான கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருந்தது. அதனால் அங்கு புதிய பொருளாதாரக் கொள்கையால் முதலாளித்துவ மீட்சியைக் கொண்டுவர சுரண்டும் வர்க்கங்களால் முடியவில்லை. அது பின்னர் கட்சிக்குள்ளும்
அரசுக்குள்ளும் மறைந்திருந்த துரேகி குருசேவ் தலைமையிலான முதலாளித்துவக் கும்பலால் தோழர் ஸ்டாலின் மறைவுக்குப் பின்னர் படிப்படியான முதலாளித்துவ மீட்சியின்
மூலமே கபடத்தனமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அன்றைய லெனின் தலைமையிலான சோசலிச சோவியத் யூனியனுக்கும், இன்றைய இலங்கையின் மைத்திரி –  ரணில் தலைமையிலான ஏகாதிபத்திய சார்பு வலதுசாரி அரசுக்கும் உள்ள வேறுபாட்டை மறைத்து விக்கிரமபாகு இப்படி முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப் போடுவது வேண்டுமென்றே செய்யும் அயோக்கியத்தனம். தற்போதைய
விக்கிரமபாகுவிடம் இருந்து இதைத்தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது என்பதுதான் உண்மை. உண்மை என்னவெனில், அவர் தீவிர சோசலிசம் பேசிய காலத்திலேயே முதலாளித்துவக் கைக்கூலியாகச் செயல்பட ஆரம்பித்துவிட்டார். உதாரணத்துக்கு இங்கு சில சம்பவங்களைக் குறிப்பிடலாம். ஒரு காலகட்டத்தில் இலங்கையின் வேறு எந்த இடதுசாரித் தலைவரையும் விட விக்கிரமபாகுவே தமிழ் மக்களின் பிரச்சினையில் அதிக அக்கறையுடையவராக, அவர்களை ஆதரிப்பவராகக் காட்டிக் கொண்டார்.

ஆனால் உண்மை என்னவெனில், அவர் தமிழ் மக்களை ஆதரிக்கவில்லை, பாசிசப்  புலிகளையே ஆதரித்தார். அதனால்தான் அவரது கட்சியின் யாழ்மாவட்டச் செயலாளராகவும்,
நேர்மையான செயற்பாட்டாளராகவும் செயற்பட்ட தோழர் ஆ.க. அண்ணாமலையை புலிகள் அவரது மனைவிக்கும், ஒரேயொரு சிறுவயது மகளுக்கும் முன்னால் மிலேச்சத்தனமாகச்
சுட்டுக் கொன்ற பின்னரும் கூட, விக்கிரமபாகுவும் அவரது நவ சமா சமாஜக் கட்சியும் தொடர்ந்தும் புலிகளை ஆதரித்துக் கொண்டிருந்தனர். இந்தமாதிரியான கடைகெட்ட துரோகத்துக்கு உதாரணம் காட்டுவது சிரமம். அதுமட்டுமின்றி, 2000 ஆண்டில் சந்திரிக தலைமையிலான அரசாங்கம் ஓரளவு சிறந்ததொரு தீர்வை இனப்பிரச்சினைக்கு முன்வைத்த போது, புலிகளும் ஐ.தே.கவும் அதை எதிர்த்து நடைமுறைப்படுத்த விடாமல் முறியடித்தனர். ஐ.தே.க. அந்தத் தீர்வு நகலை நாடாளுமன்றத்தில் தீயிட்டுக் கொளுத்தியது. புலிகளின் ஆணைப்படி செயற்பட்ட அன்றைய பிரதான தமிழ் கட்சியான தமிழர் விடுதலைக்
கூட்டணியும் அந்தத் தீர்வை எதிர்த்தது. இவர்களுடன் ஹெல உறுமயவும்,
ஜே.வி.பியும் கூட சேர்ந்து நின்று எதிர்ப்புத் தெரிவித்தன. இவர்கள் எல்லோரும் சேர்ந்து சந்திரிகவின் தீர்வுத் திட்டத்துக்கு எதிராக கொழும்பு மாநகரசபை மைதானத்தில் எதிர்ப்புக்
கூட்டம் ஒன்றை நடாத்தினார்கள். அந்த நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காத
விக்கிரமபாகுவும் கலந்து கொண்டு தீர்வுத் திட்டத்துக்கு எதிராகப் பேசினார். தன்னைச் சோசலிசவாதி என்று சொல்லிக் கொண்டு முதலாளித்துவ – பேரினவாத சக்திகளுடன் சேர்ந்து நின்று சிறுபான்மை இனமொன்றுக்கு உரிமை வழங்குவதை எதிர்த்த விக்கிரமபாகுவின் இந்தக் கடைகெட்ட துரோகச் செயலை என்ன சொல்லியும் நியாயப்படுத்திவிட
முடியாது.

அதுமட்டுமின்றி, கடந்த மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் அவர் ஐ.தே.கவின் ஊதுகுழலாகவே மாறிவிட்டார். அவர் தனது கட்சிக் காரியாலயத்தை விட ஐ.தே.க.
தலைவரும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் காரியாலயத்திலேயே தனது பெரும் பொழுதைக் கழித்ததுடன், ஐ.தே.க. மகிந்த அரசுக்கு எதிராக நடாத்திய ஊடகவியலாளர் மாநாடுகளில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.
தற்போது ரணில் தலைமையிலான இன்றைய அரசு ஆட்சிக்கு வந்தவுடன், அவர்களுடன் கூடிக்குலாவித் திரிவதுடன், நாட்டில் திரும்பவும் திறந்த பொருளாதாரக் கொள்கையே
நடைமுறைப்படுத்தப்படும் என்று அடிக்கடி பேசி வரும் ரணிலுக்கு ஆதரவாக லெனின் தலைமையிலான சோசலிச சோவியத் அரசு வேறொரு சூழ்நிலையில், வேறொரு தேவைக்காக
நடைமுறைப்படுத்திய புதிய பொருளாதாரக் கொள்கையை இன்றைய இலங்கை அரசின் கேடுகெட்ட முதலாளித்துவக் கொள்கையுடன் சமப்படுத்தி சோசலிச அமைப்பையே
இழிவு செய்யும் நிலைக்கு மாறியுள்ளார்.

விக்கிரமபாகு கருணரத்னவைப் பொறுத்தவரை இன்னும் பாக்கியாக இருப்பது ஒரேயொரு விடயம்தான். அது என்னவெனில், அவரது பெயரளவிலான நவ சமசமாஜக் கட்சியைக்
கலைத்துவிட்டு, ஐ.தே.கவுடன் இரண்டறக் கலந்து விடுவதுதான். அப்படிச் செய்வதின் மூலம் அவர் உள்ளூர நேசிக்கும் முதலாளித்துவக் கொள்கைக்குச் சேவகம் செய்வதுடன்,
சில வேளைகளில் அவரது நீண்டகால நிறைவேறாத ஆசையான நாடாளுமன்றப் பதவி ஒன்றையும் அடைய முடியும்.
மூலம்: வானவில் இதழ் 84 மார்கழி 2017

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...