பிறப்பும் சிறப்பும்


எஸ்.எம்.எம்.பஷீர்

செம்மான் ஊசியில் தன் 
உதிரமும் கலந்தே ,
அறுந்த செருப்புக்களை  ,
உயிர்ப் பித்தான் -அவை
பாதங்கள் புகுத்தி
மிடுக்குடன் நடந்தன !
அவனைப் பார்த்து பரிகசித்தன.


             

வீசியெறிந்த பாதுகையாய்
அவன் வாழ்க்கை
வீதியோரத்தில் கேட்பாரற்று
கிடப்பது வேண்டாம்
என்றவன் துணிந்தான்
ஊசியின் காதில் 
கனவுகளை  நுழைத்தான்

குந்தியிருந்தே தன் உதிரத்தை
சிந்தினான் 
ஒரே மகனை
"அவையத்து முந்தி "  
இருக்கச் செய்தே 
பின்னாளில் பிந்தியவன்
பிள்ளை இழந்தான்!

முந்திய பிள்ளையோ
தந்தை மறந்தான்
செய் தொழிலால்
சிறப்பெய்தி சிந்தை இழந்தான்
தடயம் தொலைத்தான்.
தந்தையோ செய் தொழிலால்
சிறப்பிழந்தான்.

"இவன் தந்தை" யாரென்று
கேள்வி தவிர்த்தான்
தந்தையின் தொழில் சொல்ல
தயக்கம் கொண்டான்
தனக்கும் தந்தைக்கும்
"சிறப்பொவ்வா" தென்றான்
வள்ளுவனின் வாய் மொழி அதுதானென்றான் !


  குறள் : பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
    செய்தொழில் வேற்றுமை யான்.


Comments

Popular posts from this blog

“மறப்போம்! மன்னிப்போம்!! “

“ सत्यमेव जयति “ ( “சத்யமேவ ஜெயதே “ )

"வேர் ஆறுதலின் வலி " - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்