வடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் பிரிப்பும் ; சூடுபிடித்துள்ள அரசியல் சதுரங்கம் ! (8)





எஸ்.எம்.எம்.பஷீர்.

வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்ட பின்னர் முதன் முறையாக நடைபெற்ற கிழக்கு மாகாண சபையில் ரவூப் ஹக்கீம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போட்டியிடாது அல்லது போட்டியிட முடியாது என்பதை நன்கு அறிந்திருந்தார். ஆகவேதான் ஹக்கீம் தமிழர்களின் வாக்குகளையும் பெற்று எப்படியாது தானே கிழக்கின் முதலமைச்சர் ஆகிவிட வேண்டும் என்று கனவு கண்டார்.  ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க தேர்தலில் வெற்றி பெறுவது  என்பது அவரின் அரசியல் எதிர்காலத்துக்கு, குறிப்பாக கிழக்கை தளமாகக் கொண்ட ஒரு அரசியல்  கட்சி என்ற வகையில்  அவசியம் என்று உணரப்பட்டது.

மறுபுறத்தில் ஆட்சியில் இருந்த கட்சியின் சார்பில் போட்டியிட்ட முதன்மை வேட்பாளர்களில் ஹிஸ்புல்லாவும் தானே முதலமைச்சராக முடியும் என்று பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தார். இதில் ஹிஸ்புல்லாஹ் கிழக்கு தனியான மாகாணமாக இருக்க வேண்டும் என்பதில் முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான அதாவுல்லாவுடன் சேர்ந்து ஒருமித்து குரல் எழுப்பி வந்தவராவார் .


இந்தத் தேர்தலில் முஸ்லிம்களுக்கு தனியான அலகு  அல்லது முஸ்லிம் மாகாண சபை வேண்டும் என்ற கோசங்களை முஸ்லிம் காங்கிரஸ் மிகக் கவனமாக தவிர்த்து வந்தனர். முதலாவது வடக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம்களுக்கு தனியான மாகாண சபை வேண்டும் என்று பிரச்சாரம் பண்ணியவர்கள் , முதலாவது கிழக்கு மாகான சபைத் தேர்தலில் அது பற்றிப் பேச விரும்பவில்லை. மாறாக தமிழர்களிடம் வடக்கு கிழக்கு இணைப்பை வலியுறுத்தும் தனக்கு வாக்களிக்குமாறு  கேட்டுக்  கொண்டார். இந்த நிலைப்பாடு தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  பின்புல ஆதரவை தரும் என்று  காங்கிரஸ் நம்பியது.

கிழக்கு மாகாண  சபைக்கான  தேர்தல் பிரச்சாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளரான ரவூப் ஹக்கீமை  ஆதரித்து பஸீர் சேகுதாவுத் ஆற்றிய உரையில் குறிப்பிட்டவை எப்படியும் கிழக்கு பிரிவினைக்கு ஆதரவாக இருந்தோரை தேர்தலில் நிராகரிக்க வேண்டும்  புலிகளுக்கு விசுவாசமாக செயற்ப வேண்டும் என்பதுமாகும். அந்த  பிரச்சாரக் கூட்டத்தில் அவர்  காத்தான்குடி மற்றும் ஏறாவூர் படுகொலைகளை பிரபாகரன் தலைமையிலான புலிகள் மேற் கொள்ளவில்லை  எனவும்
கருணா தரப்பினரே அப்படுகொலைகளை மேற்கொண்டதாகவும் பிரச்சாரங்களை  முன்னெடுத்தார்.

அவர்களின்   கட்சியின் கீழ் மாகாண சபைக்கான தோதலில் வேட்பாளராக போட்டியிட்ட தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளர்களில் ஒருவரான அமிர்தீன் என்பவரின் உடன்பிறந்த சகோதரர் ஒருவர் அக்கொலைச் சம்பவங்கள் இடம்பெற்ற காலகட்டத்தில் புலிகள் அமைப்பில் ஒரு முக்கியஸ்தராக பணியாற்றி இருந்தார். அந்த மேடையிலே அமீர்தீனும் அமர்ந்திருந்தார்.

மேற்படி ஏறாவூர்  படுகொலையில் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மூவரை புலிப்பயங்கரவாதிகள் படுகொலை செய்தமையைத் தொடர்ந்து அவர் ஒருவாரகால இடைவெளியில் பொலிஸாரிடம் சரணடைந்து தமக்கு பாதுகாப்ப வழங்குமாறு கோரியிருந்தார் . அப்பொழுது கருணாவை யாரும் வெளிப்படையாக படுகொலைகளுக்கு காரணம் என்று சொல்லவில்லை. 

அது மாத்திரமல்ல அக்கூட்டத்தில் பஸீர் சேகுதாவுத்  " புலிகளின் போராட்ட வரலாற்றில் அவர்கள் பல ஆயிரம் உயிர்களைத் தியாகம் செய்தவிட்டதாகவும் எனவே அவுர்களின் போராட்டத்திற்கு தாம் ஆதரவளிப்பதாகவும் குறிப்பிட்டார்"  அத்துடன் தாம் மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெறும்போது முஸ்லிம் மக்களக்கென தனியான அதிகார சபை ஒன்றினை உருவாக்கவதற்கு தமக்கு ஆதரவு தெரிவிக்கும் ஏனைய அரசியல் கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அவர்  குறிப்பிட்டிருந்தார்.


யதார்த்தத்தில் வடக்குக் கிழக்கில் உள்ள நிலத் தொடர்பற்ற முஸ்லிம் கிராமங்களையும் நகரங்களையும் மாவட்ட ரீதியில் அலகுகளாக ஒன்றிணைத்து அப்பிரதேசங்களில் வாழும் தமிழர்களை , சிங்களவர்களை நீக்கிவிட்டு முஸ்லிம்  கவுன்சிலாக்குவது என்பது நடைமுறையில் சிக்கலானது , சாத்தியமற்றது. வெறுமனே கிராமங்களை நகரங்களை இணைத்து முஸ்லிம் அலகுகளாக்கி அப்பிரதேசங்களை அண்மிய பொருளாதார நடவடிக்கைகளுக்கு தேவையான நில நீர் வளங்களை பகிந்து கொள்வது ;  எதிர்கால மக்கள் பரம்பலின் அடிப்படையிலான கிராம நகர விரிவாக்கங்களை கருத்திற் கொண்டு எல்லை நிர்ணயம் வளப் பங்கீடு சம்பந்தமாக உடன்பாடுகளை சமூகங்களுக்கு இடையில் எட்டுவது என்பது மிக இலகுவான காரியமல்ல , மிகுந்த நடைமுறைச் சிக்கல்கள் கொண்டவை. மேலும் தமிழ் -முஸ்லிம் பிரச்சினையை  கூர்மைப்படுத்துவதாகவும் இன  பாதிப்பதாகவும் அமையும். முஸ்லிம் காங்கிரஸ் மிக ஆழமான  ஆய்வுகளையும் மேற்கொள்ளாமல் "கீரைக் கடைக்கு எதிர்க்கடை வேண்டும் என்பது போல"  தமிழர்கள் தரப்பில் முன் வைக்கப்பட்ட வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபைக்கீடான ஒரு கோரிக்கையை ஏதோ ஒரு பெயரில் ஏதோ ஒரு விதத்தில் முன் வைத்து வந்திருக்கின்றனர்.

வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டாலும் அல்லது பிரிக்கப்பட்டாலும் தங்களுக்கென ஒரு ஆட்சி அலகு கோரிக்கையினை சந்திரிக்கா காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் முன் வைத்த பொழுது , நிலத் தொடர்பற்ற பிரதேசங்களை இணைப்பது எப்படி என்ற கேள்வி எழுந்தது. இந்தியாவில் உள்ள பாண்டிச்சேரியும் கோவாவும் உதாரணமாக கொள்ளப்பட்டது.

ஆனால் , ஏற்கனவே பிரான்சும் போர்துக்கல்லும் முறையே ஆட்சி செய்து கொண்டிருந்த இந்தியப் பிரதேசங்களை சுதந்திர இந்தியாவின் இறைமைக்குள் - இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்குற்பட்டு - உள்வாங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும் , அவற்றின் சுதந்திரம் குறித்த செயற்பாடுகள் என்பன ஒரு வரலாற்றுத்  தொடர்புடையவை. இந்திய சுதந்திரத்துக்கு பின்னரும் நீட்சி கொண்டவை. அது தவிர தனிப்பட்ட வகையில் இன மத அரசியல் சமூகப் பிரதேசப் போராட்ட  பின்னணியுடன்   பாண்டிச்சேரியும் கோவாவும்  சுயாதீனமிக்க நிர்வாக அலகுகளாக நிலத் தொடர்பற்ற பிரதேசங்களை உள்ளடக்கி  உருவாக்கப்படவில்லை. அல்லது அவற்றிற்கான போராட்டத்தை  இந்தியக் குடியரசுக் கெதிராக பாண்டிச்சேரியோ அல்லது கோவாவோ  முன்னெடுக்கவில்லை , அவற்றிற்கான அவசியமும் எழவில்லை.  இந்திய சுதந்திரத்திற்கு  பின்னரும் ஏற்கனவே இருந்த அமைப்பு நிர்வாக முறைமையை மிக நீண்ட காலம் பாண்டிச்சேரியிலும் கோவாவிலும் பேண முடிந்திருந்தது. ஒரு செயன்முறையினூடாக இந்திய அரசியல் கட்டமைப்புக்குள் பிரேரிக்கப்பட்ட அதிகார  மாற்றங்களை அமுல் படுத்த முடிந்தது.

எனவே அத்தகைய நிர்வாக ஏற்பாடுகள் குறித்த முஸ்லிம் காங்கிரசின் முன் மொழிவுகள் இலங்கைக்கு  பொருத்தமற்றவை என்பதை முஸ்லிம் காங்கிரஸ் உணரத் தவறி இருந்தது. நிலத் தொடர்பற்ற பிரதேசங்களை உள்ளடக்கிய ஒரு நிர்வாக அலகு என்ற வகையில் மாத்திரம் முஸ்லிம் காங்கிரஸ்  ஒரு அரசியல் அஸ்திரமாகவே பாண்டிச்சேரி யூனியன் அலகு (புதுச் சேரி ) பற்றிய கோரிக்கைக்கு அழுத்தம் கொடுத்தனர். தமிழர் தரப்பில் இருந்தும் , அப்பொழுது அறியப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி  (  தமிழரசுக் கட்சியாகவும் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவும் கூட்டமைக்க முன்னர்) முஸ்லிம் காங்கிரசின் தென் கிழக்கு கவுன்சில் பற்றி பிரஸ்தாபித்த பொழுதெல்லாம் அக்கோரிக்கையை ஆதரித்தனர்.  புளட், ஈ.பீ தீ.பீ , இலங்கை தொழிலாளர்  காங்கிரஸ் என்பன எதிர்த்த பொழுதும்  தமிழர் விடுதலைக் கூட்டணி  அக்கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்தனர் என்று ஒரு ஆங்கில பத்தி எழுத்தாளர்  குறிப்பிட்டிருந்தார். தெற்கிலே  ஆட்சிக்கு வரும் அரசுகளுடன் சமரசம் செய்து கொண்டு கூட்டாட்சி அமைத்துக் கொண்டு செயற்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு முகத்தை காட்ட வேண்டி இருந்தது. பேச்சுவார்த்தை அல்லது தீர்வு என்று வர முன்னர் முஸ்லிம் காங்கிரசின் தனித்துவ அலகுக் கோரிக்கையை தமிழர் தரப்புக்கு சமதையான , சவாலான கோரிக்கை என்ற வகையில் அரசாங்கம் ஒரு உபாயமாகவே பயன்படுத்திக் கொண்டது. ஆயினும்  பேச்சுவார்த்தை என்று வந்த பொழுது முஸ்லிம்கள் ஓரம் கட்டப்பட்டனர். ஆயுத பலமுள்ள புலிகள், அவர்களுக்கு அனுசரணையாக செயற்பட்ட  தமிழ் தேசியக் கூட்டணியினர் மாத்திரம் முக்கியத்துவம் பெற்றனர். அதற்கெதிராக வீரியத்துடன் குரல் எழுப்பும் தைரியத்தை முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியின் பங்காளிகளாக இருந்ததன் மூலம் அல்லது ஆட்சியின் ஆதரவாளராக பலமுறை இழந்து வந்திருக்கின்றனர் (உதாரணமாக இந்திய இலங்கை  ஒப்பந்தம் , நோர்வே ஒப்பந்தம் அடிப்படையிலான பேச்சுவார்த்தைகள் , பொதுக்கட்டமைப்பு , என்பன. உரிமைகளுக்கான குரல்கள் மவுனித்து சலுகைகளை பற்றி பேரம் பேசுபவர்களாகவே முஸ்லிம் அரசியல் மீண்டும் பயணிக்க ஆரம்பித்தது. அதுவே இன்றுவரை நிலவுகின்றது. 

முஸ்லிம் காங்கிரசின் இந்த வகையான ஏமாற்றம் தரும் செயற்பாடுகளின் அதிருப்தியின் வெளிப்பாடாகவே தென் கிழக்கு பல்கலைக் கழகத்தின் ஒலுவில் பிரகடனம் நோக்கப்பட  வேண்டும்.
தொடரும்

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...