இடதுசாரிகளுக்கான ஒரு வேண்டுகோள்!


shanmuganathannபிரபல இடதுசாரி செயற்பாட்டாளரான தோழர் ‘ சண்’ என நண்பர்களால் அழைக்கப்படும்  சண்முகநாதன் அவர்கள் சமீபத்தில் (07-04-2016) காலமான செய்தியை இந்த இணையத் தள மூலம் பலரும் அறிந்திருப்பீர்கள்.


இம் மனிதர் தனது மரணத்தின் இறுதி நாட்களில் தனது கைப்பட ‘ இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த இடதுசாரிகளுக்கான ஒரு வேண்டுகோள்’ என்ற தலைப்பில் கடிதம் ஒன்றை எழுதி தனது லண்டன் தோழரான ந. ஜெயபாலன் அவர்களிடம் இவ் வருடம் பெப்ரவரி மாதம்; கையளித்திருந்தார். இக் கடிதமே அவரது இறுதி எழுத்தாகவும், அவாவாகவும் அமைந்தது. தனது மரணத்தின் இறுதி நாட்களிலும் உழைக்கும் மக்களின் நல் வாழ்விற்காக தனது சிந்தனையைச் செலவிட்ட இவ் இனிய தோழரின் இறுதி விருப்பத்தை, அவரது கடிதத்தினை வெளியிடுவதன் மூலம் இன்னமும் அவ்வாறான எண்ணங்களோடு செயற்படும் தோழர்களைத் தூண்டிவிட எண்ணுகிறோம். மனித அபிலாஷைகள் வெறுமனே கனவாக அமையாமல் நிஜங்களாக மாற்றமடைய வேண்டும். இன்று அதற்கான காலம் கனிந்திருப்பதாக கருதுகிறோம். எனவே அவரது கடிதத்தினை கீழே தருகிறோம்.
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த இடதுசாரிகளுக்கான ஒரு வேண்டுகோள்!
அனேகமாக இளம் வயதில் இடதுசாரிக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு தொடர்ந்தும் இடதுசாரி அமைப்புகளில் தம்மை இணைத்துக்கொண்டு செயற்பட்டு வந்தவர்கள் பலர் புலம் பெயர்ந்த பின்னரும் அதே கருத்துக்களோடும், சிந்தனைகளோடும் வாழ்கிறார்கள். புகழ், பணம் மற்றும் பதவி ஆசைகளோடு வாழ்ந்தவர்கள் புலிகள் மற்றும் அவர்கள் சார்ந்தவர்களோடு இணைந்து கொண்டவர்களைத் தவிர ஏனையோர் தனி நபர்களாக இடதுசாரி எண்ணங்களுடன் தம்மாலான வரை செயற்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். புலம்பெயர் நாடுகளில் இலங்கையிலுள்ள அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் ஏனையோரது சக்தியையும் திரட்ட வேண்டிய அவசியம் உண்டு என்பதை அனைவரும் அறிவர்.
மார்க்சிச அமைப்புகளில் தத்துவ முரண்பாடுகள் தொடர்ச்சியான நிகழ்வுகள்தான் எனினும் அமைப்புச் சாரா நபர்களாக நாம் இருந்து எதனைச் சாதிக்க முடியும்? கம்யூனிசம் என்பது ஒரு வாழ்க்கை நெறி என்பது அடிப்படையானது என்ற போதிலும் கம்யூனிஸ்டுகள் அரசியல் அதிகாரத்தின் மூலமே அதனை அடைய முடியும் என நம்புபவர்கள். எனவே கம்யூ. கட்சி என்பது அவர்களுக்கு மற்றெல்லாவற்றையும் விட முதன்மையானது.

எனவேதான் தோழர்களே!

இலங்கையிலும், புலம் பெயர்ந்த நாடுகளிலும் செயற்படுவனவற்றில் கூடுமான வரை ஒத்துப் போகக்கூடிய கட்சியை அடையாளப்படுத்திக் கொள்வது நமக்கு முதன்மையாகிறது. புதிது புதிதாய் அமைப்புகளை உருவாக்கிக் கொள்வதை விட இருப்பவற்றில் கருத்து அடிப்படை மற்றும் ஆதரவுப் பலம் என்பவற்றைக் கருத்தில் கொண்டு கூடுமான வரை நம்மை நாம் அமைப்புச் சார்ந்த செயற்பாட்டாளர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
எம் முன்னால் உள்ள பணிகள்:

1.உலகமயமாதலின் வெளிப்பாட்டை எமது கிராமங்களும் உணரும் நிலையில் உள்ளதால் உள்ளுர் அரசியலும் பல்தேசிய நிறுவனங்களுக்கு எதிராக மக்களை திரட்ட வேண்டியுள்ளது.
2.நாம் பேசிக்கொண்டிருந்த நிலப் பிரபுத்துவ, முதலாளித்துவ, காலனித்துவ வடிவங்களுக்கு அப்பால் கத்தியின்றி ரத்தமின்றி ஏக போகச் சுரண்டலுக்கு எதிராக உலக மக்கள் போராட வேண்டிய நிலையில் உள்ளனர்.
3.பாராளுமன்ற ஜனநாயகத்தை நிராகரித்து, ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கிற காலம் பெருமளவில் கடந்து விட்டதாக தெரிகிறது. ஏனெனில் நடைபெறும் ஆயுதப் போராட்டங்கள்கூட உள்ளுரில் தீவிரமாகத் தோன்றினாலும் அவை சர்வதேச ஒடுக்கு முறையாளர்களாலேயே வழி நடத்தப்படுகிறது.
4.புலிகளும் அவர்கள் சார்ந்தவர்களும் தாம் வாழும் நாடுகளின் பிரஜா உரிமையைப் பெற்றுக் கொண்டு, அங்கு இலங்கை அரசியலை மட்டும் பேசிக் கொண்டிருக்க முடியாது. அதனால் நாம் வாழும் நாட்டிலும் செயற்படும் கட்சிகளில் முற்போக்கானவற்றை அடையாளப்படுத்தி அதில் எம்மை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.
5.ரொட்சிசம், ஸ்ரலினிசம், திரிபுவாதம், மாவோயிசம் எனக் காணப்பட்ட பிணக்குகள் பல காலம் கடந்துவிட்ட போதிலும் இன்று வரை ஏகாதிபத்திய எதிர்ப்புக்கு மேற்குறித்த தத்துவங்களை ஆதரிப்போர் ஒருமித்தே நிற்கிறார்கள். எனவே உலகமயமாதல் என்ற பெயரில் ஏகபோகங்களின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக வளர்ந்துவரும் நாடுகளின் அரசியல் கட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
தோழர்களே!
தோழர். ‘சண்’ அவர்களால் தெரிவிக்கப்பட்ட மேற்குறித்த கருத்துக்கள் மிகவும் ஆழமாக உற்று நோக்கப்படவேண்டிய அம்சங்களைக் கொண்டுள்ளது. இவற்றை மேலும் ஆழப்படுத்தி உரிய வேலைத்திட்டமாக மாற்றி செயற்படுவது முற்போக்கு மற்றும் ஜனநாயக சக்திகளின் கடமையாக உள்ளது. அதனை நிறைவேற்ற, அவரது கனவை நனவாக்க உழைக்குமாறு அவர் சார்பில் இவ் வேண்டுகோளை விடுக்கிறோம்.

Source:  http://salasalappu.com/?p=101731#more-101731

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...