வடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் பிரிப்பும் ; சூடுபிடித்துள்ள அரசியல் சதுரங்கம் !(6)


எஸ்.எம்.எம்.பஷீர்.
சந்திரிக்காவின் அரசியல் யாப்பு சீர்திருத்த மசோதாவின் மூலம்  இணைந்த வடக்கு கிழக்கு மாகாணப் பிரதேசங்களுக்கான ஒரு இடைக்கால அலகு பற்றிய சிந்தனைகளுடனே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி  சந்திரிக்காவை முன்னிறுத்தியது. ஆனால் சந்திரிக்காவுடன் யுத்த நிறுத்தம் செய்ய , சமாதானம் பேச முன் வந்த புலிகள் , அதற்கு முன்னரே 1993  ஆகஸ்டில் தமிழ் ஈழத்துக்கான பெருந் திட்டம்  (Master Plan) வகுத்திருந்தனர். அந்த திட்டம் வகுக்கு முன்னர் , அதற்கு தகுந்தவாறு வடக்கு கிழக்கினை தயார் படுத்தினர்.

1990, திட்டமிட்ட வகையில் வடக்கில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றி இருந்தனர் கிழக்கிலே படுகொலைகளை நடத்தி முஸ்லிம்களை தொடர்ச்சியாக துன்புறுத்தி பல முஸ்லிம் கிராமங்களையும் அவர்களின் வயல் நிலங்களையும் விட்டு வெளியேறச் செய்தனர். அவ்வாறே வடக்கு கிழக்கு தமிழ் பிரதேசங்களிலும் , எல்லைப்புற கிராமங்களிலும் வாழ்ந்த சிங்களவர்களின் மீது படுகொலைத் தாக்குதல்களை  நடத்தி சிங்கள மக்களையும் அச்சுறுத்தி அவர்கள் வாழ்ந்த பிரதேசங்களிலிருந்து வெளியேறச் செய்தனர். மொத்தத்தில் முஸ்லிம் சிங்கள மக்களின் பொருளாதார நடவடிக்கைகளை  தங்களின் பயங்கரவாத நடவடிக்கைக்குள் மூலம் தமிழ் பிரதேசங்களுக்குள் தடுத்து நிறுத்தியதன் மூலம் தமிழ் ஈழத்தை ஒரு தனித் தமிழர் பிரதேசமாக்கும் முயற்சியில் புலிகள் முனைப்புடன் செயற்பட்டனர். எனினும் புலிகளின் மிலேச்சத்தனமான மனிதகுல விரோத செயற்பாடுகள் எதிர்பார்த்த அளவு முழுமையான வெற்றி அளிக்கவில்லை என்றாலும் புலிகளைப் பொருத்தவரை முஸ்லிம்களின் எண்ணிக்கையையும் , வாழ் நிலங்களையும் கையகப்படுத்தியதன் மூலம் முஸ்லிம்களை  "தமிழ் ஈழத்தில் " (வடக்கு -கிழக்கில்) சிறுபான்மையாக ஆக்கிய வெற்றியினை அவர்கள் 1993ல் அவர்கள் வரைந்த பெருந்திட்டம் உறுதி செய்தது.   
       
புலிகளின் பெருந் திட்டம் மிக விரிவானது என்பதால் புலிகளின் அத்திட்டத்தின் சில முக்கிய அம்சங்களை இக்கட்டுரைக்கு  ஏதுவாக குறிப்பிடுவது பொருத்தமானது. மிக பரந்துபட்ட செயற்பாடுகளை நிர்வாக அமைப்புக்களை உருவாக்கும் திட்டத்தில் புலிகள் தங்களின் "தமிழ் ஈழத்தை "  20  மாநிலங்களாக பிரித்திருந்தனர். குறிப்பாக கிழக்கு மாகாணத்தை மட்டக்களப்பு மாநிலம், , வாகரை மாநிலம் ( இந்த மாநிலம் மட்டக்களப்பு , திருகோணமலை மாவட்டங்களில் உள்ள சில பகுதியினை உள்ளடக்கியதாகும்  ) வெல்லாவெளி மாநிலம்  (இந்த மாநிலம் அம்பாறை, மட்டக்களப்பு  மாவட்டங்களில் உள்ள சில பகுதியினை உள்ளடக்கியதாகும்  , அக்கரைப்பற்று மாநிலம், பொத்துவில் மாநிலம், திருகோணமலை மாநிலம், மூதூர் மாநிலம்  எனப் பிரித்திருந்தனர். அதிலும் தமிழ் ஈழத்தின் தலை நகராக திருகோணமலையையும் , தென் தமிழ் ஈழத்தின் தலைநகராக (மட்டக்களப்பு மாநிலத்தில்) கரடியனாறு தேர்வு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு மாநிலங்களுக்குமான தலை நகரங்களையும் புலிகள் தேர்வு செய்திருந்தனர். ஆனால் அவற்றில் உதாரணமாக மூதூர், அக்கரைப்பற்று , பொத்துவில் என்பன முஸ்லிம்களையும் , தமிழர்களையும் கொண்ட நகரங்களாகும், அதேவேளை சிலாபம் புத்தளம் ஆகிய பகுதிகளையும் "தமிழ் ஈழ" ஆட்புலத்திற்கு உட்பட்ட இரண்டு மாநிலங்களாக வரைபு செய்திருந்தனர்.

எனவே வடக்கு கிழக்கு இணைந்த பிரதேசங்களை உள்ளடக்கிய புலிகளின் "தமிழ் ஈழ " பெருந்திட்டம் முஸ்லிம்களை திட்டமிட்டு ஓரங்கட்டுவதிலும் குறியாகவே இருந்தது. முஸ்லிம்களின் புவியியல் பெரும்பான்மையை தவிர்க்கும் வகையிலே அவை வரையப்பட்டது.

ஏப்ரல் 1995இல் சந்திரிக்காவுடனான புலிகளின் தேனிலவு புலிகளின் யுத்த மீறுகையுடன்முடிவுக்கு வந்தது.  ""தமிழ் ஈழ" பெருந் திட்டத்தை  தயார்படுத்தியிருந்த புலிகள் சமாதனப் பேச்சுவார்த்தையை முடிவுக்கு கொண்டு வந்ததில் (திருகோணமலையில் கடற்படையினரின் மீதான புலிகளின் தாக்குதல் ) ஆச்சரியம் ஏதும் இருக்கவில்லை. முஸ்லிம் காங்கிரஸ் சந்திரிக்கா அரசுடன் கைகோர்த்திருந்த வேளையில் , ஆட்சியில் அதிகாரம் செலுத்திய வேளையில் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்த்து ஆங்காங்கே குரல் எழுப்பினர். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் அப்படியான கருத்தை வெளியிடவில்லை. அந்த சூழ்நிலையில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு என விடுதலைப் புலிகள் ஒரு பிரசுரத்தை வெளியிட்டனர். அதில் அவர்கள் " வடக்கையும் கிழக்கையும் இணைய விட மாட்டோம் . தமிழீழம் கிடைக்காது என்றெல்லாம் பேசுவது உலக விவகாரங்களில் முதிர்ச்சியான அறிவாற்றல் உள்ளோரின் கருத்தல்ல " என்று அவ்வாறான கருத்துக்களை முன் வைக்கும் முஸ்லிம் தலைவர்களுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்திருந்தனர்.  ஆனால் புலிகள் மீதான சர்வதேச எதிர்மறை கருத்துக்களை கவனத்தில் கொண்டு  1990 களில் செய்தது போல முஸ்லிம்களின் மீது மிக பரந்துபட்ட தாக்குதல்களையோ வெளியெற்றத்தையோ புலிகள் செய்ய முற்படவில்லை.  

அதேவேளை முஸ்லிம் காங்கிரசின் அப்போதைய தலைவர் அஸ்ரப்  வடக்கு கிழக்கு பிரிவு பற்றி பேசுவதை தவிர்த்தே வந்தார். ஏனெனில் சந்திரிக்காவின் அரசியல் யாப்பு சீர்திருத்தங்கள் வட கிழக்கு இணைந்த இடைக்கால நிர்வாக சபை பற்றியே பேசியது. ஆனாலும் நிபந்தனையற்ற இணைப்பை அஸ்ரப் எதிர்த்தார். ஆகஸ்ட் 1998 இல்  அஸ்ரப்  கிழக்கிலிருந்து வடக்கை பிரிப்பது பிரச்சினைக்கு தீர்வல்ல என்றும் ,  இரண்டுக்கும் இடையில்தான் தீர்வு இருக்கிறது என்றும்  அவர் கூறினார் . தென் கிழக்கு பிராந்தியம் என்பதே முஸ்லிம்களுக்கான தீர்வு என்று அவர் கருதினார் . சிங்களவர்களும் தமிழர்களும்  மாகாண சபைகளில் அல்லது பிராந்திய சபைகளில் முதலமைச்சராக  வர முடியும் , அதுபோலவே முஸ்லிம்களும் முஸ்லிம்களுக்கான பெரும்பான்மை அலகு  கோருவதில் என்ன தவறு இருக்க முடியும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் முஸ்லிம்களுக்கு தாயகம் ஒன்றுண்டு என்பதை அவர் மறுத்தார். மொத்தத்தில் ,. ஒரு புறம் தமிழர்களுக்கும் மறுபுறம் சிங்களவர்களுக்கும் இடையே தனது அரசியல்  நிலைப்பாடுகள் குறித்து  வெளிப்படையான கருத்துக்களை முன் வைப்பதில் அஸ்ரப்  நெருக்கடிக்குள்ளானார். வடக்கு கிழக்கு பிரிப்பு தொடர்பில் கேள்வி கேட்டு "ஆம்" அல்லது "இல்லை" என்ற பதிலை அளிக்கும் வகையில் எங்களை நிர்ப்பந்திக்க வேண்டாம் என்று அவர் சொல்லி இருந்தார்.

தொடரும்..    

No comments:

Post a Comment

Soaring food prices drive hunger around the world-by John Malvar

The 2021 Global Hunger Index (GHI), published on Thursday, revealed soaring levels of hunger among the poor and working populations around t...