வடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் பிரிப்பும் ; சூடுபிடித்துள்ள அரசியல் சதுரங்கம் ! (7)

எஸ்.எம்.எம்.பஷீர்.

அஸ்ரப் முஸ்லிம்களுக்கான தனியலகு கோரிக்கையை நியாயப்படுத்த பிரதான காரணம். வடக்கு கிழக்கு ஒப்பந்தத்தின் பின்னர் வடக்கில் இருந்து கிழக்கு பிரிக்கப்படுமா என்பது பற்றி சித்திப்பதற்கு அவரால் முடியாதிருந்தது. இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான சபை நடத்தப்பட்டு கலைக்கப்பட்டு போனாலும் , கிழக்கை பிரிப்பது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பைப் பற்றிப் பேசவோ, அல்லது மக்களின் இறைமையை கருத்திற்கொண்டு அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ் இணைக்கப்பட்ட கிழக்கை பிரிப்பது பற்றி ராஜீய ரீதியில் இந்தியாவை அணுகவோ இலங்கை அரசியல் தலைவர்கள் துணியவில்லை. இந்தியாவினை மீறி செயற்படும் திராணி எந்த அரசியல் தலைவர்களுக்கும் இருக்கவில்லை . இந்தியாவிற்கும் வடக்கு கிழக்கு இணைந்த பிரதேசமே அதன் புவி சார் நலன்களை உறுதி செய்வதாக அமைந்திருந்தது. நிர்வாக ரீதியில் வடக்கு கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்ட பின்னரும் யாழ் மையவாத தமிழ் தேசிய நிர்வாக அடக்குமுறைகள் வடக்கு கிழக்கு மாகாண சபைகளிலே கிழக்கு மாகாணம் பிரிக்கப்படும் வரை நிலவி வந்தது. ( அது பற்றிய ஆய்வுகளை முஸ்லிம் சமூக ஆர்வலர்கள் ஆதாரங்களுடன் திரட்டி இருந்தனர். அவர்களுடனான சந்திப்புக்கள் , அக்கறைகள் என்பன இக்கட்டுரையின் நீளம் கருதி இங்கு தவிர்க்கப்பட்டுள்ளது. ) . இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை நிர்வாக அடக்குமுறைகளினால் மிக நீண்ட காலம் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டார்கள். முஸ்லிம் காங்கிரஸ் அவ்வாறான நிர்வாக அடக்குமுறைகள் பற்றி ஒரு பொழுதும் குரல் கொடுக்கவில்லை.
முஸ்லிம் காங்கிரஸ் வட-கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி மற்றும் நாடாளுமனறத் தேர்தலிகளில் அக்கறை காட்டினார்களே ஒழிய  வ-கி  மாகாண சபைக் கலைப்புடன் மிக நீண்ட மவுனத்தையே  அவர்கள் கையாண்டனர். அவ்வப்பொழுது நிலவிய அரசியல் சூழ் நிலைகளுக்கேற்ப கிழக்கிலே முஸ்லிம் மாகாண சபை அல்லது முஸ்லிம்களுக்கான தனி நிர்வாக அலகு கோருவதில்  பிரச்சாரங்களை மேற்கொண்ட முஸ்லிம் காங்கிரஸ்  கிழக்கு முஸ்லிம் மக்களின் இறைமையை பாதுகாக்க  13 வது திருத்தச் சட்டம் அரசியல் அமைப்புக்குற்பட்டது என்ற வகையில் சட்ட  ரீதியில் ஏதேனும் பரிகாரம் காண முடியுமா என்பது பற்றி சிந்திக்கவில்லை. அதுபோலவே  இந்திய ஒப்பந்தத்தின் மூலம் ஒரு தலைப்பட்சமாக  உரிமை பறிக்கப்பட்டு , முஸ்லிம் மக்களின் மீது "அடிமைச் சாசனம்" என்று அஸ்ரப் குறிப்பிட்ட "அடிமைச் சாசனம்" பற்றி பேச விரும்பவில்லை. இந்தியப் படைகளுடன் சேர்ந்தியங்கிய தமிழ் ஆயுத   இயக்கங்களினால்  முஸ்லிம்கள் அளவில்லாத் துன்பம் அடைந்தனர். அஸ்ரப் தனது இந்திய  விசுவாசத்தை இந்தியப் படைகள் வெளியேறிய பொழுது "முஸ்லிம்களைப் பாதுகாப்பது யார் ?" என்ற கேள்வியை நாடாளுமன்றத்தில் முன் வைத்தார். இந்தியாவை நேரடியாக எதிர்க்கும் திராணி முஸ்லிம் காங்கிரசுக்கு  இருக்கவில்லை. இணைப்பு ஒப்பந்தம் மூலம் உருவாக்கப்பட்ட வ-கி மாகாண சபை அரசியல் ரீதியில் செயலிழந்த பின்னரும்  முஸ்லிம்கள் நிர்வாக ரீதியில்  தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டனர்.   ஆளுநர்கள் சிங்களவர்களாக இருந்திருப்பினும் உத்தியோக நிர்வாக நடைமுறை அதிகாரங்கள் பெரும்பாலும் வடக்கு மேட்டுக்குடி தமிழ்த் தேசியவாதிகளின்  கைகளுக்குள் இருந்தது. முஸ்லிம்கள் இந்திய இலங்கை ஒப்பந்தமெனும்  "அடிமைச் சாசனத்தை" தம் முதுகுகளில்  தொடர்ந்தும் சுமந்தனர்.

ஆனாலும் வடக்கு கிழக்கில் முஸ்லிம்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் காரணமாகவும் , அதிலும் குறிப்பாக ஆட்சியில் உள்ள எந்த அரசுகளுடனும் ஐக்கியமாகி செயற்பட்ட முஸ்லிம் அரசியல் அணுகுமுறை காரணமாகவும்  தேசிய ரீதியிலான பல அரச அனுகூலங்களை முஸ்லிம் மக்கள் பெற்றனர். அந்த வகையில் தமிழ் தேசிய தீவிர தேர்தல் அரசியலும் , புலிகளின் ஆயுதப் போராட்டமும் ஒப்பீட்டளவில் தமிழ் மக்களை சமூக , பொருளாதார அபிவிருத்திகளின் அடிப்படையில் பின்தங்கியவர்களாக்கியது.

இந்தப் பின்னணியில் வடக்கு கிழக்கு இணைந்த பிரதேசங்களை உள்ளடக்கிய புலிகளின் "தமிழ் ஈழ " பெருந்திட்டம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் காத்தான்குடி , சம்மாந்துறை , சாய்ந்தமருது, கிண்ணியா போன்ற பிரதேசங்களையோ அல்லது முஸ்லிம்களை வடக்கில் மன்னார் பிரதேசத்தில் ( ஏற்கனவே முஸ்லிம்கள்  வாழ்ந்த பிரதேசங்களையோ) திட்டமிட்டு ஓரங்கட்டுவதிலும் குறியாகவே இருந்தது. முஸ்லிம்களின் புவியியல் பெரும்பான்மையை கொண்டு அடையாளப்படுத்தப்படுவதை தவிர்க்கும் வகையிலே அவை வரையப்பட்டது. மேலும் பல சமூக வாழ்வாதார திட்டங்களை அந்தப் பெருந்திட்டம் உள்ளடக்கி இருந்தது.

மொத்தத்தில் வடக்கு கிழக்கு பிரிக்கப்படுவது பற்றிய சர்ச்சைகள் குறைவாகவே காணப்பட்ட கால கட்டங்களில் , தமிழர்களின் தரப்புக் கோரிக்கைக்கு எதிராக மிக தந்திரோபாயமான ஒரு அணுகுமுறையாகவே  அஸ்ரப் " வடக்கை கிழக்கிலிருந்து பிரிப்பது பிரச்சினைக்கு தீர்வல்ல என்றும் ,  இரண்டுக்கும் இடையில்தான் தீர்வு இருக்கிறது"  என்றும்  கூறினார். ஆனால் அஸ்ரப்  அவ்வாறு கூறியதற்குக் காரணம் தமிழர் தரப்பை அதிருப்தி அடையச் செய்ய அவர் விரும்பவில்லை.

அன்றைய கால கட்டங்களில் கிழக்கு தமிழர்களிடையே புலிகள் திட்டமிட்டு விதைத்த முஸ்லிம் விரோதத சிந்தனைகள் , பரஸ்பரமாக இரு தரப்பினரும் மோதிக் கொண்ட சமபவங்கள் , உயிர் உடமை இழப்புக்கள் என்பன மக்களின் மனதில் பசுமையாகவும் தொடரும் நிகழ்வாகவும் இருந்தன. கிழக்கு தமிழ்  மக்கள் வடக்குடன் கிழக்கு இணைந்திருப்பதையே ஆதரித்து வந்துள்ளனர். இன்றும் மிகப் பெரும்பான்மை தமிழர்கள் அக் கருத்தினையே ஆதரிக்கலாம். ஆனாலும் சர்வஜன  வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்கப்படுகின்ற விடயமாக மீண்டும் வடக்கு கிழக்கு இணைப்பு மாறுமானால்  , கிழக்கு தமிழர்கள் முழுமையாக விரும்பினாலும் அது சாத்தியப்படாது.


என்றாலும், இலங்கையின் இனப்பிரச்சினை வரலாற்றில் கடந்த ஒரு தசாப்த காலத்துக்குள் வடக்கு கிழக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. வடக்கு கிழக்கு மாகாணங்கள் சட்ட ரீதியாக பிரிக்கப்பட்டமை , புலிகளில் இருந்து பிரதேச வேறுபாட்டை முன்னிறுத்தி பிரிந்த கிழக்கு புலிகள் வன்னிப் புலிகளால் கொல்லப்பட்டமை. கிழக்கு மாகாண சபைக்கான முதலாவது தேர்தல் , தமிழ் முதலமைச்சராக  மக்கள் சேவை புரிந்த சந்திரகாந்தன் ,  அவர்களின் கிழக்கை தளமாகக் கொண்டு  உருவாக்கப்பட்ட முதல் தமிழ் அரசியல் கட்சியான  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி;  கடந்த மாகாண சபைத் தேர்தலில் சந்திரகாந்தன் தனிப்பட்ட வகையில்  பெற்ற வெற்றி, புலிகளின் தோல்வி என்பன இப்பொழுதுள்ள கிழக்கு மாகாண குடித்தொகை மாற்றங்கள் என்று பல காரணிகளுடன், மிக முக்கியமாக கிழக்கு தமிழர்களின் அரசியல் வரலாறும் முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக தேசிய  அரசுக் கட்சிகளில் அங்கத்துவம் வகித்த தமிழ் அரசியல்வாதிகள், அவர்களின் சந்ததியினர் இன்றும்  கொண்டுள்ள தேசிய அரசியல் கட்சிகளை ஆதரிக்கும் அரசியல் நிலைப்பாடு.  

கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டு , அதற்கான மாகாண சபைத் தேர்தல் நடைபெற்ற பொழுது, ஹக்கீம் , கிழக்கு முதலமைச்சர் வேட்பாளராக   ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து போட்டியிட்டார். அந்த தேர்தலில் அவர் பின்னர் அரசியல் களத்தில் ஏற்பட்ட மற்றங்களை கருத்திற் கொள்ளாது. அஸ்ரப் சொன்ன அதே சொற்றொடரை மீண்டும் " " வடக்கை கிழக்கிலிருந்து பிரிப்பது பிரச்சினைக்கு தீர்வல்ல என்றும் ,  இரண்டுக்கும் இடையில்தான் தீர்வு இருக்கிறது" என்று குறிப்பிட்டார். கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டு போனதன் பின்னரும் , கிழக்கு வடக்குடன் இணைந்திருப்பது போலவே அவர் கருதினார்.  சட்டத்தின் படியான பிரிவு ஒரு தற்காலிக  பிரிவுதான்;,மீண்டும் இணையத் தடையில்லை ; தமிழர் கூட்டமைப்பு அந்தத் தேர்தலில் போட்டியிட வேண்டும்;தமிழர்கள்  வாக்களிக்க வேண்டும், கிழக்கு புலிகள் அரச  பயங்கரவாதிகள் , அவர்கள் தமிழ் மக்களுக்கு  துரோகம்செய்கிறார்கள் தமிழர் கூட்டமைப்பு போட்டியிடா விட்டால் வடக்கு கிழக்கு பிரிந்தது போலாகிவிடும் என்றும் , பசில் ராஜபக்ச கிழக்கு  மாகாண சபைத் தேர்தலை கிழக்கு பிரிவினையை உறுதி செய்யும் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு என்று சொல்லுகிறார் என்றெல்லாம் தமிழர்  கூட்டமைப்பினை போட்டியிட உசார் படுத்தினார். சம்பந்தன் அசையவில்லை , அதற்கு காரணம் புலிகள் அப்பொழுது உயிருடன் இருந்தார்கள். அவர்களின் முதுகின் பின்னால் துப்பாக்கிகள் நீட்டப்பட்டிருந்தன. தமிழர்களுக்கும் தானே தலைவர் என்று எண்ணிக் கொண்டு ஹக்கீம் மேடைகளில் பிரச்சாரங்களை மேற் கொண்டார். 

தொடரும்  

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...