நிலாந்தனின் அலட்டியல் ஆய்வு -ரகு


இந்த அலட்டியல் ஆய்வாளர்களின்  இம்சை இன்னும் முடியவில்லை. கனடாவில் சில அலட்டியல் ஆய்வாளர்கள் இருக்கிறார்கள். “டாம் சிவடாஸ்” இவர் ரிவிஐ தொலைக்காட்சி, சிஎம்ஆர் வானொலி ஆகியவற்றின் ஆஸ்தான அலட்டியல் ஆய்வாளர்.  நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாத இவர் அரசியல் ஆய்வு என்ற பெயரில் வந்து அலட்டுவார். திருகோணமலையில் புலிகள் சுழியோடிச் சென்று கப்பல் ஒன்றைத் தாக்கியபோது  புலிகள் நிலத்தை மட்டுமல்ல  நீருக்கடியிலும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றனர் என்று சிரித்துக்கொண்டே சொன்னவர். “குவின்ரஸ் துரைசிங்கம்” “தங்கவேலு” (நக்கீரன்) என்று இன்னும் சில புலி ஆதரவுப்  பிரக்கிருதிகள்  அலட்டியல் ஆய்வாளர்களாக இருக்கின்றனர். இவர்கள் அலட்டி ஆராய்வு செய்ததில் புலிகளின் நிலைமை எப்படிப் போய் முடியும். புலித்தலைவரின் முடிவு  என்னாகும் என்பதை ஆய்ஞ்சு கண்டுபிடிக்க முடியவில்லை!

இவர்கள் எல்லாரும் அலட்டி ஆராஞ்சது போதாதென்று இலங்கையிலிருந்து இன்னொரு அலட்டியல் ஆய்வாளரை  “ஈ குருவி”  கோஷ்டியினர் இலங்கையிலிருந்து ரொறொன்ரோவிற்கு  இறக்குமதி செய்திருக்கின்றனர்.  அவர்தான் “மகா நிலாந்தன்” . நிலாந்தன் அலட்டுவதைத் தண்ணி அடித்துக்கொண்டுதான் கேட்கவேண்டும் என்பது போல மண்டபத்தில் சிலர் தண்ணி அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.    அவர் அலட்டியவைகளில் சில!
2009 மே மாதமளவில் நீங்கள் இந்தப் பிரதான சாலைகள் முழுதும் திரண்டீர்கள்.ஆனால் உங்களால் யாரையும் காப்பாற்ற முடியவில்லை. யாரைக் காப்பாற முடியவில்லை. புலிகளையும் அதன் தலைமைகளையுமா? அல்லது அப்பாவிப் பொதுமக்களையா?
maxresdefault11ஒரு தேசமாக சிந்திப்பது என்றால் தமிழ்த்தேசியப் பரப்பில் அது ஈழத்தமிழர்கள் என்று சொல்லப்படுகின்ற வடக்கு கிழக்கு வாழ் தமிழர்களை மட்டும் குறிக்காது. ஒரு தேசமாக சிந்திப்பது என்பது  எல்லைகள் கடந்து தமிழகத்தையும், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களையும்தான் குறிக்கும். ,தமிழ்த் தேசியப்பரப்பு எனப்படுவது அதன் மெய்யான வினைத்திறன் மிக்க  பரந்தகன்ற தளத்தில் வைத்துப் பார்த்தால் அது வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களையும், தமிழகத்து தமிழர்களையும் , புலம் பெயர்ந்த தமிழர்களையும் குறிக்கும்.
ஈழத்தமிழர்கள், தமிழகத் தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள் என்ற மூன்று பரப்பும் ஒன்றிணைந்து சிந்தித்தால் மட்டும்தான் தமிழ் மக்களுக்கு விடிவு உண்டாம். ஒருதேசமாகச் சிந்திப்பது என்பது இந்த மூன்று பரப்பையும் இணைத்துச் சிந்திப்பதாம். இலங்கையில் வசிக்கும் மலையகத் தமிழர்கள், இஸ்லாமியத் தமிழர்கள் தமிழர்கள் என்ற கணக்கில் இல்லையா? ஏன் மலேசியாவில், சிங்கப்பூரில் இருக்கிற தமிழர்களையும் இணைக்கவில்லை.
தமிழகத் தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள்  இலங்கைத் தமிழர்களோடு இணைந்து சிந்தித்தால் என விடிவு கிடைக்கும்?  தமிழகத் தமிழர்கள் கப்டன் விஜய்காந்த் தலைமையில் இணைவதா? சீமான் தலைமையில் இணைவதா? கோபால்சாமி தமையில் இணைவதா? அல்லது ஜெயலலிதாவோ, கருணாநிதியின் தலைமையில் இணைவதா? இதைச் சொல்ல நிலாந்தன்  இலங்கையிலிருந்து வரவழைக்கப்பட்டிருக்கிறார்.
ஒரு தேசமாகச் சிந்திப்பது என்பது இந்த மூன்று பரப்பையும் இணைத்துச் சிந்திப்பதுதான். இந்த மூன்று பரப்பையும் இணைத்துச் சிந்திக்கவில்லையென்று சொன்னால் தமிழ் மக்களால் ஒரு தேசமாகச் சிந்திக்க முடியாது.
புலம் பெயர்ந்த தமிழர்களாக மட்டும் சிந்திப்பீர்களாக இருந்தால் 2009 மே மாதமளவில் நீங்கள் இந்தப் பிரதான சாலைகள் முழுதும் திரண்டீர்கள் ஆனால் உங்களால் யாரையும் காப்பாற்ற முடியவில்லை. இந்த மூன்று தரப்பும் ஒன்றுபட்டு சிந்தித்தால் மட்டும்தான் தமிழ் மக்களுக்கு விடிவு உண்டு. இல்லையென்றால்  தனித்தனியாக சிந்திப்போமாக இருந்தால் நாங்கள் உதிரிகளாக்கப்ப்ட்டு தோற்கடிக்கப்ப்ட்டு விடுவோம்.
ஏற்கனவே 2009  மே மாதம் தமிழர்களுடைய ஆயுதப் போராட்டம்  முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. அதிலிருந்து தொடங்கி கடந்த  ஏழு ஆண்டுகளாக  தமிழ் மக்கள் தொடர்ச்சியாக பேரம் பேசும் சக்தியை இழந்து வருகின்றனர்.
2009 ம் ஆண்டு ஐரோப்பாவிலும் ,அமெரிக்கக் கண்டத்திலும் தெருக்களை அடைத்துக் கொண்டு நின்றீர்கள் .ஆனால் ஒரு உயிரைத்தானும் உங்களால் காப்பாற்ற முடியவில்லை. அதற்குப் பின்னரும் கடந்த ஏழாண்டுகளாக இனப்படுகொலையைத் தடுக்க முடியவில்லையே என்று ஆவேசத்தோடு அது இனப்படுகொலைதான் என்று நிரூபிப்பதற்காக தொடர்ச்சியாக தொடர்ச்சியாக ஆவணங்களைத் தொகுத்து ஐநா மன்றம் வரை கொண்டு போனீர்கள். ஆனால் அதை இனப்படுகொலை என்று இன்றுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. நாங்கள் சொல்லுகிறோம் ஆனால் எந்த நாடும் சொல்லவில்லை.
ஆம் நிலாந்தன் அவர்களே ஒரு நாடும் அதனை இனப்படுகொலை என ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த இனப்படுகொலையை நடத்தி முடித்தது யார்?
போர்க்குற்றவாளிகள் யார்?
இலங்கை அரசா? இல்லை.
இந்த இனப்படுகொலையை நடத்தியவர்கள்  புலிகளும், உங்கள் முன்னால் தண்ணி அடித்துக்கொண்டு  நீங்கள் பேசுவது எதுவும் புரியாமல் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டிருக்கும் புலம் பெயர் தமிழர்களும்தான்.
பிரபாகரன் தனது மாவீரர் உரையில் இலங்கை அரசுடன் யுத்தம் செய்வதற்காக  புலம்பெயர்ந்தவர்களின் தார்மீக உதவியைத்தான் கேட்டிருந்தார். புலம் பெயர் யுத்தப் பிரியர்கள் பொற்குவைகளை அள்ளி வழங்கினார்கள். புலம் பெயர்ந்தவர்களின் இருப்புக்கு யுத்தம் அவசியம் அல்லவா! புலிப் பினாமிகளின் வளர்ச்சிக்கு யுத்தம் தானே கைகொடுத்தது. நாளாந்தம் பிணங்கள் விழுந்தால்தானே அவர்களால்  உண்டியல் குலுக்க முடியும்.
புலம் பெயர்ந்தவர்கள் ஐரோப்பாவிலும் அமெரிக்கக் கண்டத்திலும் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தார்கள். ஆனால் யாரையும் காப்பாற்ற முடியவில்லை. நிலாந்தன்  குறிப்பிடும் அந்தக் காப்பாற்ற முடியாமல் போனவர்கள் யார்? புலிகளின் தலைமைதானே?  புலிகளின் தலைமைகளுக்கு ஆபத்து என்றவுடன் தான் புலம் பெயர்ந்தவர்கள் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.  மக்கள் அழியப்போகிறார்கள் என்று இவர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. மக்களின் அழிவில் புலம் பெயர்ந்தவர்கள் அக்கறை கொண்டிருந்தால் யுத்தம் நடத்த புலிகளுக்கு நிதியினை வாரிக் கொடுத்திருக்க மாட்டார்கள். புலிகள் யுத்தம் புரியத் தொடங்கிய காலத்திலிருந்து மக்கள் அழிந்துகொண்டுதானே இருந்தார்கள்.
புலம்பெயர்ந்தவர்கள் ஆர்ப்பட்டம் நடத்திய நாடுகளில் எந்த நாடுகளும் இவர்களின் ஆர்ப்பாட்டத்தைக் கணக்கிலெடுக்கவில்லை. ஜேர்மனியில் ரயிலை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது அந்த நாடு சட்ட நடவடிக்கையை எடுத்தது. மக்களைக் கேடயமாகப் பயன்படுத்த வேண்டாம்,ஆயுதங்களைக் கைவிட்டு சரணடையும்படி வெள்ளை மாளிகைக்கு முன்னால் நின்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா புலிகளுக்கு கட்டளையிட்டார்.  ஆர்ப்பாட்டம் நடத்திய புலம்பெயர் தமிழர்கள் யாரும்  புலிகள் மக்களை மனித கேடயமாகப் பயன்படுத்தியதை எதிர்க்கவில்லை. யுத்தப் பிரதேசத்திலிருந்து மக்களை வெளியேற அனுமதிக்கும்படி புலிகளைக் கேட்கவில்லை. கிளிநொச்சி வீழ்ந்தபோது இலங்கை அரசு  ஆயுதங்களைக் கீழே போட்டு சரணடையும்படியும்  மக்களை வெளியேற அனுமதிக்கும்படியும் கேட்டுக்கொண்டது .ஆனால் புலிகள் அதனைக் கணக்கிலெடுக்கவில்லை. முள்ளிவாய்க்கால்வரை மக்களை அழைத்துச் சென்று யுத்தத்திற்குப் பலி கொடுத்தவர்கள் புலிகள். அப்போ யார் போர்க்குற்றவாளிகள்.?  புலிகள் யுத்தம் செய்யாமல் அரசாங்கம் மட்டும் யுத்தம் செய்ததா?  புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டபோது  மக்கள் கொல்லப்பட்டார்களா?
2009 மே மாதத்துடன் தமிழர்களின்  ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது என்கிறார் நிலாந்தன். முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது தமிழர்களின் ஆயுதப்போராட்டம் அல்ல. அது புலிகளின் தலைமையின் பாசிச இருப்புக்கான போராட்டமே தவிர தமிழர்களின் ஆயுதப்போராட்டம் அல்ல. தமிழர்களின் ஆயுதப்போராட்டம் ஏனைய இயக்கங்களின் ஆயுதப் போராட்டம் முடக்கப்பட்டு அவர்கள் அழிக்கப்பட்டு, தடை செய்யப்பட்டபோதே  தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மறுக்கப்பட்டு பாசிசப் புலித் தலைமையின் இருப்புக்கான போராட்டமாக மாறிவிட்டது. அதுதான் 2009 மே மாதத்துடன் முடிவுக்கும் வந்தது.
உங்களில் எத்தனை பேர் நாடு திரும்பி வரத்தயாராக இருக்கிறீர்கள்? என்று புலம்பெயர்ந்தவர்களிடம் கேள்வி எழுப்புகிறார் நிலாந்தன்.
நிலாந்தன் தப்புக் கணக்குப் போட்டுவிட்டார். தாங்கள் நாட்டுக்குத் திரும்பிச் செல்லக் கூடாது என்றுதானே புலம்பெயர்ந்தவர்கள் யுத்தத்திற்கு நிதியை வாரிக் கொடுத்தார்கள்.
புலம்பெயர்ந்தவர்கள் மகிந்த ராஜபக்சவின் கடுப்பாக இருப்பத்ற்குக் காரணம் அவர் இனப்படுகொலை செய்தார் என்பதற்காகவா? இல்லையே மகிந்த ராஜபக்ச புலிகளை அழித்து யுத்தத்திற்கு முடிவு கட்டிவிட்டார். புலம்பெயர் புலிப்பினாமிகளின்  பொருளாதாரத்தைச் சிதைத்து அவர்களின் வயிற்றில் புளியைக் கரைத்துவிட்டார். தங்கள் உறவுகளை ஐரோப்பாவிற்கும் கனடாவிற்கு அழித்து அரசியல் அகதி அந்தஸ்துப் பெறும் நிலைக்கு மகிந்த முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
இவர்கள் நாட்டுக்குத் திரும்பிச் செல்லும் அக்கறை உள்ளவர்களாயின் யுத்தம் நடத்த புலிகளுக்கு  நிதி கொடுக்காமல் புலிகளைச் சமாதான வழிக்குச் செல்ல வற்புறுத்தியிருப்பார்கள்.
தைப்பொங்கல், சித்திரை வருடம், தீபாவளி என்று கொண்டாட்ட நாட்களில்  “இரா சுப்பர் மாக்கற்” “ஸ்பைசி லாண்ட்”  வர்த்தக நிலலயங்களின் முன்னால்  நிலாந்தன் நின்று பார்க்க வேண்டும். புலம்பெயர் தமிழர்கள் தங்கள் வாழ்க்கையை எப்படி அனுபவிக்கிறார்களென்று  தெரியும்!  கோடை காலம் தொடங்கினால் ஊர்களின், ஒழுங்கைகளின், பாடசாலைகளின் கோடை கால ஒன்று கூடல் கொண்டாட்டங்கள், பணத்தைக் கொட்டி நடாத்தப்படும் பிள்ளைகளின்  பூப்புனித நீராட்டு விழாக்கள், பரத நாட்டியம், மிருதங்க அரங்கேற்றங்கள். ஆலய முன்றல்களில் தமிழக விஜய் தொலைக்காட்சி சுப்பர் சிங்கர்கள், நடிக நடிகைகளின் உல்லாசக் கேளிக்கை நிகழ்வுகள். ஹெலிகொப்டர் பயணங்கள் இவற்றையெல்லாம் துறந்துவிட்டு இவர்கள் நாடு திரும்புவார்களா?மூன்று தசாப்தங்களாக தமிழகத்தில் அகதிகளாகத் திறந்த வெளிச் சிறைச்சாலையில் அடிமை வாழ்க்கை வாழும் மக்களைப் பற்றி புலம் பெயர் மக்கள் மட்டுமல்ல, தமிழ்த் தேசியம் பேசும் அரசியல் வாதிகளும் அக்கறை கொண்டதுண்டா?  தமிழகத்தில் இலங்கை அகதி வௌவால் போல மின்கம்பத்தில் தொங்கவேண்டிய நிலைக்கு யார் காரணம்? யுத்தம் நடத்த நிதி கொடுத்தவர்களும், நடத்தியவர்களும்தானே?
நாட்டில் சமாதானம் வரக்கூடாது. சமாதானப் பேச்சுவார்த்தையை பல ஆண்டுகளுக்கு  இழுத்தடிக்க வேண்டும் என்பது புலித்தலைமைக்கு எவ்வளவு விருப்பமோ  அதுபோல நாட்டில் யுத்தம் முடியக்கூடாது அங்கு பிரச்சனை தீரக்கூடாது என்று வேண்டிக்கொண்டவர்கள் புலம்பெயர் தமிழர்கள். நாட்டிலுள்ள பல் இளைஞர் யுவதிகளுக்கும் இந்தக் கனவுதான் இருந்தது. காரணம் தாங்களும் ஐரோப்பாவுக்கோ , கனடாவுக்கோ அவுஸ்திரேலியாவுக்கோ சென்று அகதி அந்தஸ்துக் கோர வேண்டும்.  வெளிநாடுகளிலிருந்து தமிழர்கள் தங்கள் விடுமுறைக்காகக் கூட தாயகம் செல்வதை புலிப் பினாமிகளும், புலி ஆதரவு ஊடகங்களும் விரும்பவில்லை. அங்கு செல்பவர்களைத் தடுப்பதற்காக வதந்திகளைப் பரவ விடுகிறார்கள்.
இறந்த காலத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கப் போகிறீர்களா ?  நிலாந்தன். ஊறுகாய் உதவாது என்கிறார். பின்னர் எதற்கு போர்க்குற்ற நீதி விசாரணை கேட்கிறார்.? இறந்த காலங்களில் வாழ முடியாது. நிகழ்காலத்திற்கு வருவோம். மம்மியாக்கம் செய்யப்பட்ட இறந்த காலத்தை மியூசியத்தில்தான் வைக்கலாம். பிரேத பரிசோதனை செய்யப்பட்ட இறந்த காலம்தான் எங்களுக்குப் பாடங்களைக் கற்றுத்தரும். நாங்கள் இறந்த காலங்களைப் பிரேத பரிசோதனை செய்யத் தயாரா.?
ஆம் நிலாந்தன்  இறந்த காலங்களைப் பிரேத பரிசோதனை செய்தால் தவறு புலித் தலைமையிலும் ,புலம்பெயர் தமிழர்களிலுமே  சேரும். உண்மையான போர்க்குற்றவாளிகள், போராட்டம் என்ற பெயரில் தமிழினத்தைப் படுகொலை செய்தது புலித்தமை என்ற உண்மை உறுதிப்படுத்தப்படும். இதனால் யாரும் பல்லைக் கிண்டி மணக்கத் தயாராக இல்லை. இதைத்தான் வன்னியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அன்ரன் பாலசிங்கம்  சொன்னார்   “Please don’t dig in the past”.  தயவு செய்து பழசுகளைத் தோண்டாதைங்கோ! ஏனென்றால் தவறு விட்டவர்கள் நாங்கள்தான் என்று உலகம் அறிந்துவிடும்.
நிலாந்தன் அலட்டுவதை தண்ணீர் அடித்துக்கொண்டே ஒன்றும் புரியாமல் கேட்டுக்கொண்டிருக்கும் குடிமகன்களிடம் ஒன்றிற்கு ஒன்று சம்பந்தமே இல்லாமல் அலட்டிக்கொண்டிருக்கும்  நிலாந்தனை லட்சம் ருபாய்கள் செலவளித்து இறக்குமதி செய்த ஈகுருவிக் கோஷ்டி  வன்னியில் வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் அந்த மக்களுக்கு  உதவித் தொகையாகக் கொடுத்திருந்தால் அது ஆக்கபூர்வமான செயலாக இருக்கும்.
Source:  http://salasalappu.com/?p=101599#more-101599

No comments:

Post a Comment

Modi government seeking to tighten India's repressive film censorship regime- By Yuan Darwin

 India’s Hindu supremacist Bharatiya Janata Party (BJP) government is seeking to tighten the country’s already intrusive and pervasive film ...