கலைஞர் மாத்தளை கார்த்திகேசு மறைந்தார்


மாத்தளையைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரபல எழுத்தாளரும் திரைப்படத் தயாரிப்பாளருமான கருப்பையாப்பிள்ளை கார்த்திகேசு (மாத்தளை கார்த்திகேசு) 06.08.2021 அன்று மாத்தளையில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

கல்லூரி மாணவராக இருந்தபொழுதே, நலமே புரியின் நலமே விளையும், அன்பின் வெற்றி, இதுதான் முடிவு ஆகிய மேடை நாடகங்களில் நடித்து நாடகத்துறையில் ஒரு சிறந்த கலைஞனாக அறிமுகமானார்.

பின்னர் 1960 களில் ஹட்டன் நகரில் நடைபெற்ற கலைவிழாவில் சிங்ககிரிச் செல்வி என்னும் நாடகத்தில் நடித்து முதலிடத்தில் தெரிவானார். தீர்ப்பு, காலங்கள் அழிவதில்லை, களங்கம் , போராட்டம் , ஒரு சக்கரம் சுழல்கிறது போன்ற இருபத்தைந்துக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களை இவர் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாத்தளை கார்த்திகேசு அவர்கள் எழுதிய “குடும்பம் ஒரு கலைக் கதம்பம்”,”காலங்கள்” போன்ற நாடகங்கள் ரூபவாஹினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்றன.

இலங்கை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனத்தின் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட திரைக்கதை, வசனம் எழுதும் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற பெருமையும் மாத்தளை கார்த்திகேசு அவர்களுக்கு உண்டு. “சுட்டும் சுடர்” என்பதே இவரது பரிசு பெற்ற திரைப்பிரதியாகும்.

மாத்தளை கார்த்திகேசு அவர்களால் தயாரித்து திரைக்கதை வசனம் எழுதி உருவான திரைப்படம் “அவள் ஒரு ஜீவநதி” இத்திரைப்படத்தில் இவர் நடித்தும் உள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அன்று மக்கள் மனதில் இடம் பிடித்தவையாக இருந்தன. எம்.எஸ்.செல்வராஜாவின் இசையில், ஈழத்து இரத்தினம், மெளனகுரு, கார்த்திகேசு ஆகியோர் இயற்றிய பாடல்களை வி,முத்தழ்கு, கலாவதி, சுஜாதா, எஸ்.வி.ஆர்.கணபதிப்பிள்ளை, ஜோசெப் இராஜேந்திரன், தேவகி மனோகரன் ஆகியோர் பாடினார்கள்.

17.10.1980ல் ஆறு இடங்களில் ‘அவள் ஒரு ஜீவநதி’ திரையிடப்பட்டது. கொழும்பில் செல்லமஹால் திரையரங்கில் 22 நாட்கள் ஓடிய இத்திரைப்படம், ஏனைய இடங்களில் குறைந்த நாட்களே ஓடின.

மாத்தளை கார்த்திகேசு மறைவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பாக, கொழும்பிலிருந்து வெளியாகும் ‘ஞானம்’ சஞ்சிகையின் 255வது (ஓகஸ்ட் -2021) இதழில், இலண்டனில் வசிக்கும் மு.நித்தியானந்தன் எழுதிய, ‘மாத்தளையின் ஜீவநதி கார்த்திகேசு’ என்ற கட்டுரை வெளியாகியுள்ளது. அக்கட்டுரை மறைந்த மாத்தளை கார்த்திகேசு நினைவாகப் பிரசுரிக்கப்படுகின்றது.

மாத்தளையின் ஜீவநதி கார்த்திகேசு

-மு.நித்தியானந்தன்

லையகத்தில் தாங்கள் பிறந்த மண்ணை நெஞ்சுயர்த்தி, பெருமிதத்தோடு பிரகடனப்படுத்தும் எழுத்தாளர்கள், கலைஞர்களில் பலர் மாத்தளையின் அசல்மைந்தர்கள். தங்களுக்கு ஸ்நானப்பிராப்திகூட இல்லாத ஏரியாக்களின் பெயர்களை முன்னொட்டாக வைத்து, கேகாலை கொட்டாப்புளி, பொல்காவலை சிதம்பரநாதன் என்னும் புனைபெயர்களில் உலாவும் போலிகளைப் பார்க்கும் போதுதான், அசல்களின் பெருமிதம் தெரிகிறது. மலையகத்தின் அசல் மைந்தன் என்றதும் இத்தகைய போலிகள் ‘அசல் மைந்தன்’ என்பதை மேற்கோளுக்குள் போடும்போது, அது இவர்களை எப்படிப் பாதிக்கிறது என்பதை அவதானிக்க முடிகிறது. சிலர் இறந்த பிறகு தான், இவர்கள் எங்கே பிறந்தார்கள்? எங்கே படித்தார்கள்? என்பதைத் தேடி ஆராய வேண்டியிருக்கிறது

விஜய கல்லூரியில், கிறிஸ்தவ தேவாலயக் கல்லூரியில், மாத்தளை புனித தோமையர் கல்லூரியில், மாத்தளை பாக்கிய வித்தியாலயத்தில் மாத்தளை கார்த்திகேசு மேடையேற்றிய நாடகங்களின் பட்டியலை, மாத்தளையில் அரங்க ஆர்வம் கொண்ட யாரிடம் கேட்டாலும் ஒப்புவிப்பார்கள்.

மாத்தளையில் தமிழ் மாணவர் சார்ந்த கலைவிழாக்களா? தமிழ்த்தினப் போட்டிகளா? நாடக மேடையேற்றங்களா? எதுவென்றாலும் முன்னணியில் நின்று உழைப்பை நல்கும் பெரிய மனம் அவரிடம் இருந்திருக்கிறது. மாத்தளை இளைஞர் மன்றம், வள்ளுவர் மன்றம் போன்ற அமைப்புகளை ஆரம்பித்து, மாத்தளையில் சமூக, இலக்கிய செயற்பாடுகளுக்கு உந்துவிசையாக இருந்தவர் கார்த்திகேசு. தமிழகத்திலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் பேச்சாளர்களை மாத்தளைக்கு அழைத்து, சொற்பொழிவுகளை நடத்தும் பெரு முயற்சிகளை அசராமல் செய்தவர் இவர். அறுபதுகளில் துடிப்புமிக்க இளைஞர்கள் தத்தம் தோட்டங்களில் மன்றங்களை அமைத்து, நூலகங்களை நிறுவி, கலைவிழாக்களை நடத்தி, நாடகங்களை மேடையேற்றி, சொற்பொழிவுகளை நிகழ்த்தி, பத்திரிகைகளை வெளியிட்டு ஆத்மார்த்தமாக உழைத்தார்கள். அத்தகைய அர்ப்பணிப்பு கொண்ட பேரணியின் முக்கிய கண்ணி மாத்தளை கார்த்திகேசு.

அரங்க ஈடுபாடு என்பது ஒரு கலைஞனை மக்கள் மத்தியில் துரித கதியில் கொண்டு
போய் சேர்த்துவிடுகிறது. மாத்தளை மக்கள் மனதில் நிரந்தரமாக வாழும் கலைஞன்
கார்த்திகேசு. மாத்தளை ஆலயப்பணிகளில் அவர் காட்டிய ஈடுபாடு அவரின்மீது மக்களின்
கண்ணியத்தையும் கௌரவத்தையும் தேடிக் கொடுத்தது. தனிப்பட்ட வாழ்விலும் பொது
வாழ்விலும் கறைபடியாத கண்ணியவான் அவர்.

மாத்தளை கார்த்திகேசு கொழும்பு நோக்கி நகர்ந்தபோதும், அவர் கலைமீது கொண்டிருந்த நாட்டம் குறைந்து போகவில்லை.கொழும்பில் கவின்கலை மன்றம் என்ற அமைப்பில் ஜே.பி றொபர்ட் அவர்களுடன் இணைந்து, நாடக மேடையேற்றங்களில் தீவிரமாக உழைத்தார். தீர்ப்பு, களங்கம், போராட்டம், ஒரு சக்கரம்சுழல்கிறது போன்ற நாடகங்கள், அவரது கொழும்பு நாடக முயற்சியின் உன்னதமான அறுவடைகள். நாட்டு நிலைமை சீரற்ற நாட்களில் அவர் மேற்கொண்ட முயற்சிகள் இவை.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ‘குன்றின் குரல்’ நிகழ்ச்சியை நான் நடத்திய போது, நிகழ்ச்சிகளை நடத்த எனக்குப் பேருதவியாக இருந்தவர் மாத்தளை கார்த்திகேசு, மலையக இசைக்கலைஞர்களை, பங்கேற்றுநர்களை ஒருங்கிணைத்து உதவியர் அவர்.
ஜே.பி.றொபர்ட் உயரமான மனிதர். பம்பலப்பிட்டியில் அவரை நான் அடிக்கடி காண்பதுண்டு.
அவரும் மாத்தளை கார்த்திகேசுவும், அந்தனி ஜீவாவும் இணைந்து கொழும்பு நாடக இயக்கத்தினை வலிமையுறச் செய்தவர்கள். கூர்மையான நாடகநெறியாளுகைத் திறன் மிக்க சுஹைர் ஹமீட் அவர்களின் பங்களிப்பும் கார்த்திகேசுவின் நாடக வெற்றிக்குப் பலமாய் அமைந்தது.

மாத்தளை கார்த்திகேசுவின் ‘காலங்கள் அழுவதில்லை’ என்ற நாடகம், அவரின் பெயரை
ஈழத்து நாடக அரங்கில் நிலை நிறுத்தும் நாடகமாகும். மிகப் பல களங்களைக் கண்ட நாடகம் அது.

நாடகத்திலிருந்து சினிமாவை நோக்கித் திரும்பிய கார்த்திகேசுவின் கலைப்பயணம் ‘அவள் ஒரு ஜீவநதி’ என்ற திரைப்படமாகக் கனிந்த போது, ஒரு எழுத்தாளனின் பிரதியாக்கம் என்றும், வெற்றிகரமான மேடை நாடகத் தயாரிப்பாளன் என்ற வகையிலும் பெரும் எதிர்பார்க்கைகளின் மத்தியில், அப்படம் பெரும் வெற்றியைத் தரவில்லை. மீண்டும் அத்துறையில் முயன்றிருந்தால், தனது முன்னைய பட அனுபவத்தின் பலத்தில் அவர் வெற்றிகரமான ஒரு படத்தைத் தந்திருக்கக் கூடும். ஒரு படத்தயாரிப்பு என்பது அவ்வளவு சுளுவான காரியம் அல்லவே!

கொழும்பில் நாடக, சினிமா முயற்சிகள் என்பன மிகப்பெரும் நண்பர்கள் வட்டத்தையும், நம்பிக்கையானவர்களையும், எதற்கும் உதவ முன்வரும் நெருக்கமானவர்களையும் கொண்டது. கார்த்திகேசு நேசம் மிக்கவர். உதவி என்று போனால் தன்னால் முடிந்த எதனையும் செய்துதரும் பண்பு கொண்டவர். கொழும்பில் அவர் சந்திக்க நேர்ந்த கலைஞர்கள், எழுத்தாளர்கள், சமூக, அரசியல் செயற்பாட்டாளர்கள் அனைவரையும் அவர் என்றும் மதித்துப் போற்றினார்.

நாடகம், சினிமா என்று கலைத்துறையில் பயணித்த கார்த்திகேசு மலையக நாவல் துறையில் கால்பதித்து, பிரசுரம் தந்த நாவல் ‘வழி பிறந்தது’. தோட்ட த்திற்கும் கொழும்பிற்குமாக இரண்டு தளங்களில் இயங்கும் இந்த நாவல், டி.ஆர்.பி (Temporary Resident Permit) என்று, இந்திய வம்சாவளித் தமிழர்களைப் போதுமான தஸ்தாவேஜுகள் இல்லாத காரணம் காட்டி, கைது செய்து சிறையில் அடைத்து, இந்தியாவிற்கு நாடு கடத்தும் இலங்கை அரசின் கொடுமையைப் பேசும் முதல் நாவல் இது.

இலங்கையில் தமிழர்களுக்காகத் தடுப்பு முகாம் ஒன்று அமைக்கப்பட்டது என்றால் அது, கொழும்பு கொம்பனி வீதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு முகாம்தான். சாப்பிட்டுவிட்டு, கைகழுவ வெளியில் வந்த வையாபுரி என்பவரை, சாப்பாட்டுக்கையோடு கைது செய்த
பதுளை பொலீசார், அன்று மாலையே உடரட்ட மெனிக்கேவில் அவரைக் கைவிலங்கோடு
கொழும்பிற்கு கொண்டுசென்ற காட்சியை நான் பார்த்திருக்கிறேன். அவர் ஒரு டி.ஆர்.பி. காரர் என்றார்கள்.

கார்த்திகேசுவின் ‘வழி பிறந்தது’ நாவலின் சில பகுதிகள் இவை:

‘பரமசிவம் பொலிசின் உதவியுடன் இமிகிரேசன் அதிகாரிகளினாலே கைது செய்யப்பட்டு, கொம்பனி வீதியிலுள்ள தடுப்புமுகாமில் அடைக்கப்பட்ட பொழுது, தன்னுடைய எளிமை நிறைந்த வாழ்க்கைக்குப் பின்னாலே இப்படி ஒரு சதிப்பின்னல் சிக்கலாகப் பின்னப்பட்டிருக்கும் என்று கனவுகூடக் காணவில்லை.’

‘கொழும்பு நகரின் மத்தியிலே, இந்திய வம்சாவளியினருக்காக அமைக்கப்பட்டிருக்கும் தனியொரு நரக உலகத்திலே தான் அடைத்து வைக்கப்பட்டிருப்பதான உண்மையை நிதானிப்பதற்குப் பரமசிவத்திற்கு அதிக நாள்கள் பிடிக்கவில்லை.’

“(அந்த தடுப்புமுகாமில்) முகம் மட்டும் தெரியக்கூடியதாகப் பொருத்தப்பட்டிருக்கும் ‘வயர்மெஸ் கிராதி’ மூலமே முகதரிசனம் நடைபெறும்.”

எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்களுடன் மாத்தளை கார்த்திகேசு

டி.ஆர்.பி.காரர்கள் எனப்பட்டவர்களை கொம்பனித்தெருவில் அடைத்து, விசாரணை நடத்தி, அவர்களை நாடுகடத்தும் வரையிலான விபரங்களை இந்த நாவலில் கார்த்திகேசு துல்லியமாகக் கொண்டு வருகிறார். கைது செய்யப்பட்டவர்களைப் பார்வையிடச் செல்லும் உறவுகளுக்கு கைதிகள் எவ்வாறு காட்டப்படுகிறார்கள் என்று விபரிக்கும் இடங்கள் நெஞ்சைத் தொடுவன. கலாபூர்வமாக இந்நாவல் வெற்றிபெறுகிறதா என்பது கேள்விக்குரியதாயினும், தோட்ட வாழ்க்கையைக் கொண்டு செலுத்தும் இடங்களில், அந்த வாழ்வோடு எவ்வளவு தூரம் பின்னிப் பிணைந்திருக்கிறார் என்பதை நாம் உணர முடிகிறது. தோட்டத்து மக்களோடு நகமும் சதையுமாய் வாழ்ந்த அனுபவத்தின் பலமே, மாத்தளை கார்த்திகேசுவிற்கு இந்த நாவலை எழுதும் உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறது.

கைவிரல் கொண்டு எண்ணக்கூடிய அளவிலேயே மலையக நாவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஒரு நாவல் தொகுதியை நாம் உருவாக்க இவ்வாறு எண்ணற்ற நாவல்கள் எழுதப்படவேண்டும்.

மலையகக் கலை, இலக்கிய விகசிப்பிற்கான எல்லா ஓடங்களிலும் துடுப்பெடுத்து
ஓடியிருக்கிறார் கார்த்திகேசு.

மலையகத்தின் நூல் வெளியீட்டுத்துறையில் மாத்தளை கார்த்திகேசு ஆழ்ந்த தடங்களைப் பதித்திருக்கிறார். அந்தனி ஜீவாவின் ‘மலையக வெளியீட்டகம்’, சாரல் நாடனின் ‘சாரல் வெளியீடு’, துரை விஸ்வநாதனின் ‘துரைவி’ வெளியீடு போன்ற வெளியீட்டகங்களுடன் நோக்கும்போது கார்த்திகேசு சில தனித்தன்மைகளையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

‘மலையகப்பாரம்பரிய கலைகளைப்பற்றி இதுவரை காலம் ஆய்வுநூல்கள் எதுவும் எழுதப்பட்டதாகத் தெரியவில்லை’ என்று கூறி, மாத்தளை வடிவேலன் எழுதிய ‘மலையக பாரம்பரியக் கலைகள்’ என்ற முன்னோடி நூலை வெளியிட்டவர் கார்த்திகேசு.

மாத்தளை ரோஹிணி தனது நூலை வெளியிடுவது பற்றி கார்த்திகேசுவிடம் கேட்டபோது,
‘இது நம்ம வீட்டு வரலாறு அல்லவா? இதைப்புத்தகமாக வெளிக்கொணரவேண்டியது எனது
கடமை’ என்று சொன்னவர் அவர். ‘உரிமைப்போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள்’ நூல்
வெளிவந்த கதை அது.

மலையகத்தின் நாடிபிடித்து எழுதவல்ல நுட்பமான எழுத்தாளர் மு.சிவலிங்கம் அவர்களின் ‘மலைகளின் மக்கள்’ என்ற சிறுகதைத்தொகுப்பு வெளியாவதற்கு, ‘எனது சிறுகதைத் தொகுப்பு ஒன்றை எப்படியும் உருவாக்கியே தீருவேன் என்றுழைத்த என் அருமை நண்பர், கலைஞர் மாத்தளை கார்த்திகேசுதான்’ என்று சாட்சியம் தருபவர் மு.சிவலிங்கம்.

‘எனது நாவல்களைப் புத்தகமாகப் போட வேண்டுமென்பதில் பலர் ஆர்வம் காட்டியபோதும், இறுதியாக, கார்த்திகேசு அவர்கள்தான் இந்த நாவலைப் புத்தகமாகக் கொண்டுவர முயற்சி எடுத்தவர் என்று மாத்தளை ரோஹிணி அவர்கள் தனது ‘இதயத்தில் இணைந்த இருமலர்கள்’ என்ற நாவல் வெளியாவதற்கு நன்றி கூறுகிறார்.

‘கதைக்கனிகள்’ என்ற மலையகத்தின் முதல்தரமான சிறுகதைத்தொகுப்பினை, அத்தொகுப்பு கைக்குக்கிடைக்காத கனியாக இருந்த நிலையில், இருபது ஆண்டுகளுக்குப்பின் அதன் இரண்டாவது பதிப்பினை வெளியிட்டு, சிறுகதை வளத்திற்கு நீர் வார்த்திருக்கிறார் மாத்தளை கார்த்திகேசு.

இதற்கப்பால், பெனடிக்ற் பாலன் எழுதிய ‘தலைவிதியைப் பறிகொடுத்தோர்‘,
நா.சோமகாந்தன் எழுதிய ‘நிலவோ நெருப்போ…’ என்ற சிறுகதைத் தொகுப்புகளையும், அருணா செல்லத்துரை எழுதிய ‘வீடு’ என்ற நாடகப்பிரதியையும் வெளியிட்டு, பிற பிராந்தியங்களின் எழுத்துவளத்திற்கும் கால்வாய் வெட்டியிருக்கும் பெரிய மனதுக்காரன் இவர்.

பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டிருக்கும் மாத்தளை கார்த்திகேசு கனடாவிலிருந்து டொலர்களாகவும், இலண்டனிலிருந்து பவுண்டுகளாகவும் வந்த காசில் சொகுசு வெளியீடுகள் நடத்தியவர் அல்ல. சாமானியராக, அவரது சாதனை அது. கர்மயோகியின் யாகம். சித்தனின் சாந்தநிலை. ஓட்டையும் பொன்னையும் ஒப்பென நோக்கும் சாதகம். இம்மாதிரி மனிதர்கள் நம் காலத்தில் கொச்சிக்கடை ஜெம்பட்டா வீதியிலும், இன்று மாத்தளையிலும் நடந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பது அவரை அறிந்த எங்களுக்கு பெருமையைத் தருகிறது.

எதனைச் செய்தாலும் அதனை மனமுவந்து, அர்ப்பணிப்போடு செய்வது என்பது அவர்
நமக்கு சொல்லித்தரும் பாடம்.

மலையகத்தில் கலை, இலக்கியம், நாடகம், சினிமா, நாவல், நூல் பிரசுரம் என்று இத்தனை
துறைகளில் ஆளுமை காட்டிய பெருமகன் கார்த்திகேசு நூறாண்டுகாலம் வாழ்க, வாழ்க என
வாழ்த்துகிறேன்.

மறைந்த கலைஞர்மாத்தளை கார்த்திகேசு தொடர்பாக எழுத்தாளர் லெ.முருகபூபதியுடனான அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் நேரடிப்பகிர்வு

அஞ்சலிக்குறிப்பு: மாத்தளை கார்த்திகேசு விடைபெற்றார்

மலையக மக்களின் ஆத்மாவின் குரல் ஓய்ந்தது ! முருகபூபதி-நேற்றைய தினம் ( 06 ஆம் திகதி ) எமது அவுஸ்திரேலியா நேரம் இரவு 7-00 மணியளவில் லண்டனிலிருந்து தொடர்புகொண்ட இலக்கியவாதிகள் பத்மநாப அய்யர், மு. நித்தியானந்தன் ஆகியோருடன் ஓரிணைப்பில் பேசிக்கொண்டிருந்தேன். ஏ.ஜே. கனகரட்ணா பற்றிய எனது ஒரு கட்டுரை தொடர்பாக ஒரு முக்கிய செய்தியை ஊர்ஜிதப்படுத்துவதற்காக அந்த தொலைபேசித் தொடர்பை இணைத்தவர் பத்மநாப அய்யர். எமது உரையாடலில் எழுத்தாளரும் நாடக – திரைப்படக்கலைஞரும் கொழும்பு தமிழ்க்கதைஞர் வட்டத்தின் தலைவர் மற்றும் முக்கிய பொறுப்புகளில் இருந்தவருமான எமது நீண்டகால இனிய நண்பர் மாத்தளை கார்த்திகேசு பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். இந்த மாதம் ஞானம் இதழின் முகப்பினை அலங்கரித்தவர் மாத்தளை கார்த்திகேசு. குறிப்பிட்ட அட்டைப்பட அதிதி கட்டுரையை மு. நித்தியானந்தன் விரிவாக எழுதியிருந்தார். மாத்தளையின் ஜீவநதி என்ற அக்கட்டுரை , நன்றாக வந்துள்ளது. அதனை மேலும் பரவலான வாசிப்புக்கு பகிர்ந்துகொள்ளவேண்டும். அதன் மூலப்பிரதியை எனக்கு அனுப்பிவைக்கவும் எனவும் நித்தியிடம் கேட்டிருந்தேன். எமது தொலைபேசி உரையாடல் முடிந்ததும், மின்னஞ்சல்களை பார்த்தபோது அக்கட்டுரை வந்திருந்தது. அதனை மீண்டும் படித்துக்கொண்டிருந்தபோது, மற்றும் ஒரு தொலைபேசி அழைப்பு வாட்ஸ் அப் ஊடாக வந்தது. அதற்கு பதில் சொல்லிவிட்டு, பார்க்கின்றேன். எனது உறவினரும் மாத்தளையை பூர்வீகமாக கொண்டிருந்தவருமான சதீஸ் தியாகராஜாவிடமிருந்து மின்னலாக வந்த தகவலில் மாத்தளை கார்த்திகேசு மறந்தார் என்ற செய்தியைக்கண்டு அதிர்ச்சியடைந்தேன். நாம் ஆழமாக நேசிக்கும் ஒருவர் பற்றி பேசிக்கொண்டிருந்தால், அடுத்த கணம் அல்லது சில மணிநேரங்களில் அவர்பற்றிய ஒரு செய்தி வரும். அல்லது அவரே எம்முடன் தொடர்புகொண்டு பேசுவார். இதனை ரெலிபத்தி என்பார்கள். எனக்கு இதுபோன்ற ரெலிபத்தி சம்பவங்கள் நிறைய நடந்திருக்கின்றன. ஆனால், இந்த ரெலிபத்தி இப்படி ஒரு துயரத்தையும் எடுத்துவருமா..? எனினும் நண்பர் மாத்தளை கார்த்திகேசுவின் மறைவுச்செய்தியை ஊர்ஜிதப்படுத்திக்கொள்வதற்காக மீண்டும் லண்டனில் பத்மநாப அய்யருடன் தொடர்புகொண்ட பின்னர் இந்த அஞ்சலிக்குறிப்பினை கனத்த மனதுடன் எழுதுகின்றேன்.

நாம் பேசிக்கொண்டிருந்தபோது, மாத்தளை கார்த்திகேசு, நோய்வாய்ப்பட்டிருப்பதாகவே நண்பர்கள் சொன்னார்கள். பத்மநாப அய்யர் மாத்தளையுடன் மிகவும் நெருக்கமானவர். மு. நித்தியானந்தன் கலை, இலக்கிய ரீதியில் மாத்தளை கார்த்திகேசுவுடன் மிக மிக நெருக்கமானவர். இவர் எழுதிய பதிவை ஞானம் இதழில் பார்த்துவிட்டுத்தான் எமது நண்பர் தனது கண்களை நிரந்தரமாக மூடினாரா என்பது எனக்குத் தெரியாது. அவ்வாறு நிகழ்ந்திருப்பின் அவரது ஆத்மா சாந்தியடைந்திருக்கும் என நிச்சயமாக நம்பலாம். சமூகத்திற்காக வாழ்ந்தவர்களை வாழும்போதே கொண்டாடவேண்டும் , பேசவேண்டும் , எழுதவேண்டும். அவர்கள் மறைந்தபின்னர் எழுதப்படும் – பேசப்படும் எந்தவொரு அஞ்சலிக்குறிப்புகளும் எம்மை நாம் திருப்திப் படுத்திக்கொள்வதற்கான தேவைதான். சில வருடங்களுக்கு முன்னர் மாத்தளைக்குச்சென்றிருந்தபோது கார்த்திகேசு அவர்களையும் பார்த்தேன். எமது தாய்மாமனார் பெண் எடுத்த ஊர். எங்கள் அத்தையின் பூர்வீகம். அதனால் மாத்தளை , கண்டி, குருநாகல் முதலான பிரதேசங்களில் எமக்கு உறவினர்களும் அநேகம். அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வந்தபின்னர் இலங்கை செல்லும் சந்தர்ப்பங்களில் மாத்தளைக்கும் நேரம் ஒதுக்கி சென்றுவிடுவேன். அவ்வாறு இறுதியாக நான் சென்றவேளையில் மாத்தளை கார்த்திகேசு எனக்குச்சொன்ன ஒரு உண்மைச்சம்பவத்தின் பின்னணியிலேயே எனது கதைத் தொகுப்பின் கதையை எழுதினேன். இந்தத் தலைப்பில் எனது 70 வயது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் ஜீவநதி வெளியிட்டுள்ள கதைத் தொகுப்பின் கதைத் தொகுதியில் அந்தச்சிறுகதையும் இடம்பெற்றுள்ளது. அதுபற்றியும் லண்டனிலிருந்து தொடர்புகொண்ட இரண்டு நண்பர்களிடத்திலும் சொன்னபோது ஆச்சரியமடைந்தனர். அதுபற்றி இந்த அஞ்சலிக்குறிப்பின் இறுதியில் பேசுகின்றேன்.நான் கடலையே பார்த்ததில்லீங்க… என்னைப்போய் கள்ளத்தோணி என்கிறாங்க – இது மாத்தளை கார்த்திகேசுவின் ஒரு நாடகத்தில் ஒரு பாத்திரம்பேசும் வசனம்.. இலங்கைக்கு 60 சதவீதமான வருவாயை தேடித்தந்த உழைக்கும் வர்க்கத்திற்கு எங்கள் தேசத்து இனவாதிகள் வழங்கிய அடையாளம்தான் கள்ளத்தோணி. இனவாதிகள் மாத்திரமா..? நான் வசிக்கும் அவுஸ்திரேலியாவுக்கு கடல் மார்க்கமாக வந்து குவிந்த அகதிகளைக்கூட இங்கே அரசு தரப்பும் வெள்ளை இனத்தவர்களும் Boat People – படகு மனிதர்கள் என்றுதான் நாகரீகமாக அழைக்கின்றார்கள். ஆனால், இன்றும் எங்கள் இலங்கை தேசத்தின் மலையகத்தில் பசுமையை தோற்றுவிக்க, காடுமேடு எங்கும் அலைந்து அட்டைக்கடி உபாதைகளுடன் வாழ்ந்த உழைக்கும் வர்க்கத்திற்கு வழங்கிய பெயர்கள் வடக்கத்தியான் – கள்ளத்தோணி. அந்த உழைக்கும் வர்க்கத்தின் அடுத்தடுத்து வந்த தலைமுறையும் தென்னிலங்கை – வட இலங்கைக்கு வீட்டுவேலைக்காரர்களாக – பணிப்பெண்களாக இறக்குமதிசெய்யப்பட்ட அவலத்தின் பின்னணியில், அவர்கள் வெறும்சோற்றுக்கே வந்தவர்கள் என்ற சிறுகதையை சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே எழுத்தாளர் செ. கதிர்காமநாதன் எழுதிவைத்துவிட்டு, அவரும் மாத்தளை கார்த்திகேசு சென்றவிடத்திற்கே பல ஆண்டுகளுக்கு முன்னர் போய்ச்சேர்ந்துவிட்டார்.

லெ.முருகபூபதி

Source:chakkaram.com

No comments:

Post a Comment

President Chandrika and former Chief Justice Shirani Bandaranayke By Victor Ivan

  Former President Chandrika Kumaratunga and Former Chief Justice Shirani Bandaranayake    Publication of a biography by former Presid...