‘இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வொன்றினை இலங்கையர்களே காண வேண்டும். வெளிநாட்டவர்களால் இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வொன்றினைக் காணமுடியாது.’ – எரிக் சொல்ஹெய்ம்

 

1998 முதல் 2005 வரை இலங்கையில் சமாதான முன்னெடுப்புகளுக்கு பிரதான அனுசரணையாளராக செயற்பட்ட நோர்வேயைச் சேர்ந்த முன்னாள் சமாதான பேச்சுவார்த்தையாளரான எரிக் சொல்ஹெய்ம், இலங்கையிலிருந்து வெளியாகும் டெய்லி மிரர் பத்திரிகையுடன் சமீபத்தில் நடாத்திய உரையாடல். ருவிட்டரில் விவாதத்தைப் பின் தொடர்ந்தவர்கள், இந்த நேரடி டிஎம் ருவிட்டர் (DM Twitter) வெளி ஒளிபரப்பின்போது, கேள்விகளை முன்வைக்கவும் நேரடியாக சொல்ஹெய்முடன் தொடர்பாடல் கொள்ளவும் தனித்துவமான வாய்ப்பைப் பெற்றிருந்தனர். கலந்துரையாடலின் பகுதிகள்:

கேள்வி: இலங்கையில் சமாதான முன்னெடுப்புகளினுடைய சாராம்சம் என்ன?

 

எரிக்: 1998இல் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் தமிழீழ விடுதலைப் புலிகளும் சமாதான முன்னெடுப்புகளில் மூன்றாவது தரப்பினராக நோர்வேயை அணுகினார்கள். அவர்கள் வேறு வழிகள் பற்றியும் விவாதித்தனர், எனினும் நோர்வேயுடன் நின்று கொண்டனர், நோர்வே இலங்கையில் எந்தவித குறிப்பிடக்கூடிய நலன்களும் எதுவுமில்லாத மற்றும் இரு தரப்பினர்களுக்கும் ஏற்புடைய ஒரு தொலைதூர நாடு என்பதே அதற்கான முக்கிய காரணமாகும். அத்தோடு முக்கியமாக இந்தியாவுக்கும் இலங்கையில் வேறு சில முக்கிய வெளிநாட்டு தரப்பினர்களுக்கும் ஏற்புடையதாகவும் நோர்வே இருந்தது.

முதல் இரண்டு வருடங்களாக அனைத்தும் முற்றுமுழுதாக கொழும்பில் இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. (ஜனாதிபதி) சந்திரிகா மற்றும் அப்போதைய வெளியுறவு அமைச்சர் கதிர்காமர் ஆகியோர் மாத்திரமே புலிகள் தரப்பில் மேற்கொண்ட முயற்சிகள் பற்றி அறிந்திருந்தனர். ஆனால் 2000 ஆம் ஆண்டில் சந்திரிகா புலிகளால் தாக்கப்பட்டு, அவர் கிட்டத்தட்ட கொல்லப்படும் நிலைமை உருவாகிய பின்னரே, அவர் முன்னோக்கிச் சென்று நோர்வேயின் பாத்திரத்தினை பகிரங்கப்படுத்தினார். 2001 மற்றும் 2002 இல் நாங்கள் போர் நிறுத்த உடன்படிக்கையை செய்தோம். முதல் இரண்டு ஆண்டுகளாக நம்பவே முடியாத அளவிற்கு அது வெற்றிகரமாகவே இருந்தது. இரு தரப்பிலும் எவரும் கொல்லப்படவில்லை.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு சுயாட்சி தீர்வொன்றினை இரு தரப்பினரும் ஆராய்வார்கள் என்று சொல்லப்படும் ஒஸ்லோ பிரகடனம் என அழைக்கப்பட்ட உடன்பாடு எட்டபட்டது. இது நடந்தபோது புலிகள் தமது அதிகாரத்தின் உச்சநிலையில் இருந்தார்கள். புலிகள் பலவீனமான நிலையில் இருந்ததால்தான், அவர்கள் சமாதான முன்னெடுப்புகளுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு அதனைச் செய்ததாக, கொழும்பில் உள்ள பெரும்பாலான மக்கள் கூறினார்கள். ஆனால் புலிகள் அப்போதுதான் ஆனையிறவு இராணுவ முகாமினை கைவசப்படுத்திக் கொண்டு, யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து இலங்கை இராணுவத்தை அகற்றுவதற்கு மிக, மிக நெருக்கமாக இருந்தார்கள். விமான நிலையத்தின் மீதான தாக்குதல்கள் இலங்கை பொருளாதாரத்தினை முடக்கக்கூடிய நிலைமைகளை ஏற்படுத்தியிருந்தன. எனவே புலிகள் சமாதான முன்னெடுப்புகளை ஆரம்பித்த போது, தமது அதிகாரத்தின் உச்சக்கட்டத்தில் இருந்தார்கள்.

REPORT THIS ADPRIVACY SETTINGS

படிப்படியாக சமாதான முன்னெடுப்புகள் தகர்ந்ததுடன், இரு தரப்பிலும் கொலைகள் அதிகரிக்கத் தொடங்கின. ஆனால் புலிகள் அரசதரப்பை விட அதிகமான கொலைகளைச் செய்தார்கள். மஹிந்த ராஜபக்ஷ அதிகாரத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ஆரம்பத்திலிருந்தே வீதியோர வெடிகுண்டுகள் மூலம் புலிகள் அவரது தலைமையை சீர்குலைக்கத் தொடங்கினார். மஹிந்த தெரிவு செய்யப்படுவதினை புலிகள் சாத்தியமாக்கினர்.

ஆரம்பத்திலிருந்தே பிரபாகரன் மிகவும் வெற்றிகரமானதொரு இராணுவத் தலைவராக இருந்தார், ஆனால் ஓர் அரசியல் தலைவராக அவ்வளவு வெற்றிகரமானவராக இருக்கவில்லை. அவர் தவறுக்கு மேல் தவறாகச் செய்யத் தொடங்கினார், கொலைகாரர் படையொன்றினைக் காட்டிலும், ஒரு மரபுசார்ந்த இராணுவத்தைப் போலவும் செயற்படத் தொடங்கினார். போரின் முடிவில் இரு தரப்பினரும் போர்க்குற்றங்கள் புரிந்தனர் என்பது மிகவும் தெளிவாக உள்ளது என நான் நினைக்கிறேன். புலிகள் தமது உறுப்பினர்களைக் காப்பாற்றுவதற்காக மக்கள் திரளினரை பிணையக் கைதிகளாக வைத்திருந்தனர். அதே நேரத்தில் இலங்கை ஆயுதப் படைகள் மக்கள் அடர்த்தியாக இருந்த பகுதிகளில் குண்டுவீசி, மருத்துவமனைகள் போன்ற சிவில் நிறுவனங்களை இலக்கு வைத்தார்கள். இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச மனித உரிமைகள் ஆணையங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் பாரிய போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டன என்பது மிகவும் தெளிவாக உள்ளது என்று நான் நினைக்கிறேன்.

கேள்வி: அரசியல் தீர்வொன்றினை அடைவதில் சிக்கலாக இருக்கின்ற இலங்கை அரசியல் தலைமைகளிடையேயான தொலைநோக்குப் பார்வை இல்லாமை பற்றி நீங்கள் பேசினீர்கள். நீங்கள் இதுபற்றி விரிவாகக் கூற முடியுமா?

எரிக்: அந்த நேரத்தில் கொழும்பில் இருந்த இரண்டு பிரதான அரசியல் முகாம்களான ஐ.தே.க மற்றும் ஸ்ரீ.ல.சு.க. ஆகிய இருகட்சிகளுமே ஒருபோதும் ஒன்றுக்கொன்று ஒத்துழைக்க முடியாமலிருந்தார்கள். அவர்கள் பாராளுமன்றத்திலும் அரசாங்கத்திலும் ஒரே பதவிகளுக்காக போட்டியிட்டனர். இலங்கையின் இரு பிரதான கட்சிகளும் பொதுவான அடித்தளத்திற்காக இணைந்து செயற்படுவதற்கான திறனைக் கொண்டிருக்கவில்லை என்பது சமாதான முன்னெடுப்புகளை மிகவும் கடினமாக்குவதாக இருந்தது. ஐ.தே.க சமாதான முயற்சி எடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளுடன் உடன்படிக்கையொன்றினை செய்து கொண்டால், ஸ்ரீ.ல.சு.க. அதனுடன் இணைந்து பயணிக்கவும் மாட்டார்கள், அதனை சீர்குலைப்பார்கள், எதிராகவும் செயலாற்றுவார்களென அவர்கள் அஞ்சுவார்கள். சந்திரிகா (முன்னாள் ஜனாதிபதி) சமாதானத்திற்காக ஏதாவது செய்ய முயற்சித்தபோது, அந்த நேரத்தில் ரணில் அதை சீர்குலைப்பார் என்று அவர் பயந்தார். இது அமைதியை மிகவும் கடினமாக்கியதுடன், இரு கட்சிகளும் புலிகளுடன் சமரசம் செய்து கொள்ள பொதுவானதொரு அடித்தளத்தை கண்டுபிடிப்பதை விட ஒருவருக்கொருவர் சண்டையிடுவதில் அதிக கலோரி சக்திகளை செலவழித்ததாக சில நேரங்களில் உணர வேண்டியிருந்தது.

REPORT THIS ADPRIVACY SETTINGS

கேள்வி: ஒரு சமாதான பேச்சுவார்த்தையாளர் என்ற உங்கள் பாத்திரப் பின்புலத்துடன், பேச்சுவார்த்தையின் பெறுபேற்றை மாற்றுவதற்கு உங்களால் செய்யக்கூடியதாக அங்கே ஏதாவது இருந்ததா?

எரிக்: பொதுவான தளமொன்றினை கண்டுபிடிப்பதற்கு முக்கிய கட்சிகள் மீது நோர்வேயால் உண்மையில் செல்வாக்குச் செலுத்த முடியவில்லை. ஒருவேளை நாங்கள் இந்தியாவுடன் இன்னும் நெருக்கமாக வேலை செய்திருக்கலாம். அவ்வாறாக வேலை செய்வதற்கு கொழும்பு அரசியலில் சில பொதுவான முயற்சிகளை மேற்கொள்வதென்பது கடினமாக இருந்தது. அது கடினமாக இருந்திருந்தாலும், நாங்கள் அந்த பக்கத்தில் இன்னும் அதிகமாக செய்திருக்க வேண்டும். இலங்கையில் உள்ள மதத் தலைவர்களை அணுகுவதற்கு நாங்கள் இன்னும் அதிகமாக பிரயத்தனங்கள் எடுத்திருக்க வேண்டும். நான் கண்டிக்கு விஜயம் செய்து, பல தடவைகள் மகாநாயக்கரிடம் பேசினேன். குறிப்பாக பௌத்தமதத் தலைவர்களுடன் சிறந்ததொரு உறவை ஏற்படுத்திக் கொள்வதென்பது நல்லதே. ஏனெனில் இலங்கையில் மதம் மிகவும் முக்கியமான செல்வாக்கைச் செலுத்துகிறது.

பிரபாகரனை மேலும் பலதடவைகள் சந்திப்பதற்கு எங்களை அனுமதித்திருக்க வேண்டும். பலரை பிரபாகரனுடன் சந்திக்கச் செய்வதை நாங்கள் உறுதி செய்திருக்க வேண்டும். பிரபாகரனின் பார்வை மிகவும் குறுகியதாக இருந்தது. அவர் உண்மையில் இந்தியாவைப் புரிந்து கொள்ளவில்லை, இந்தியாவின் பிரதமரான ராஜீவ் காந்தியைக் கொன்றது போன்ற முட்டாள்தனமான கிரிமினல் வேலை ஒன்றை அவர் செய்திருந்தார். பிரபாகரன் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட சர்வதேசப் பார்வையைக் கொண்டிருந்தார். இன்னும் அதிகமான மக்கள் அவரைச் சந்தித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஆசியத் தலைவர்களை அவரைச் சந்திக்கச் செல்லுமாறு ஊக்குவிக்க நாங்கள் முயற்சித்தோம், ஆனால் இது இலங்கை அரசாங்கத்தால் நிறுத்தப்பட்டது. வெளிநாட்டுத் தலைவர்கள் பிரபாகரனிடம் விஜயம் செய்வதை அரசாங்கம் விரும்பவில்லை. அடிப்படையில் நானும் நோர்வேஜியர்களும் மாத்திரமே பிரபாகரனைச் சந்தித்த வெளிநாட்டவர்களாக அந்தக் கதை முடிந்தது. 15 ஆண்டுகளாக (நாங்கள் சமாதான முயற்சிகளில் ஈடுபட ஆரம்பித்த காலத்திற்கு முன்பு) எனக்குத் தெரிந்தவரை, பிரபாகரன் எந்த சிங்களவரையோ, இந்தியர்களையோ சந்தித்ததில்லை. அடிப்படையில் அவர் சந்தித்த ஒவ்வொருவரும் தமிழர். மேலும் உலகின் பரந்த தொலைநோக்குப் பார்வையை அவர் பெற்றிருந்தால், அது மிகவும் நன்றாக இருந்திருக்கும்.

கேள்வி: அரசியல் அல்லது புவிசார் அரசியல் தொடர்பான எந்த அறிவையும் பிரபாகரன் கொண்டிருக்கவில்லை என்று நீங்கள் பலமுறை கூறியிருக்கிறீர்கள். நீங்கள் பிரபாகரனுடன் அதிக நேரம் செலவளிக்கவில்லை என்றால், இந்த அறிவை அவர் கொண்டிருக்கவில்லை என்று நீங்கள் எப்படி உறுதியாக நம்புகிறீர்கள்? நீங்கள் இதனைத் தெளிவுபடுத்த முடியுமா?

எரிக்: நான் பிரபாகரனுடன் சிறிது நேரம் செலவிட்டேன். ஆனாலும் புலிகளின் பிரதம பேச்சாளரான அன்ரன் பாலசிங்கத்துடன் நிறைய நேரம் செலவிட்டேன்.

நேரடியாக ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள், இந்தியர்கள் அல்லது பிறரிடமிருந்து பரந்த பார்வைகள் தொடர்பாக மேலும் அவர் கற்றுக்கொள்ளக் கூடிய வகையில், மற்றவர்களைப் பிரபாகரனைச் சந்திக்க வைப்பதென்பது பயனுள்ளதாக இருந்திருக்கும்.
அந்த நேரத்தில் இந்த கருத்துக்களை நான் பிரபாகரனுக்கு சொல்லியிருந்தால், அவர் அதனை என்னிடமிருந்து கேட்க விரும்பியிருக்க மாட்டார். என் பார்வையில், அன்ரன் பாலசிங்கம் சமாதான முன்னெடுப்புகளின் கதாநாயகனாக இருந்தார். சில நேரங்களில் பிரபாகரன் பாலசிங்கம் சொல்வதைக் கேட்டார், சில நேரங்களில் கேட்கவில்லை. அவர் பாலசிங்கம் சொல்வதைக் கேட்காது, கொரில்லா படையைக் காட்டிலும் ஒரு மரபுசார்ந்த இராணுவமாக போராடுவது போன்ற பிரதான தவறுகளை அவர் செய்தார். இது 2009 இல் முடிவுக்கு வந்தது. பாலசிங்கம் வலுவாக ஆதரித்த தீர்வு, ஒரு முறையான கூட்டாட்சித் தீர்வு அல்ல,

கேள்வி: இலங்கை அரசாங்கம் புலிகளை கவனித்துக் கொண்ட பின்னர், இப்போது அவர்கள் தங்கள் சொந்த காரணங்களுக்காக இஸ்லாமோஃபோபியாவைப் (Islamophobia) பயன்படுத்தி முஸ்லிம்களை தங்கள் புதிய எதிரியாகக் கண்டுள்ளனர் என்று நினைக்கிறீர்களா? இதுபற்றி கொஞ்சம் உங்கள் பார்வையைச் செலுத்த முடியுமா?

எரிக்: இதில் இரண்டு அம்சங்கள் உள்ளன. முஸ்லீம் பயங்கரவாதம் என்பது ஓர் உண்மையான விஷயம்தான். ஈஸ்டர் தாக்குதல்களின் போது முஸ்லீம் பயங்கரவாதத்தின் கொடூரமான கொலைகளை நாங்கள் கண்டுள்ளோம். அரசாங்கம் இந்த அம்சத்தை தீவிர கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் தீவிரவாதக் குழுக்கள் மீதான பார்வையை மிகவும் உன்னிப்பாக அவதானித்தால், ஒருவேளை அவர்கள் வெளிநாட்டவர்களால் சில சந்தர்ப்பங்களில் ஊக்குவிக்கப்பட்டும் இருக்கிறார்களோ என்னவோ. ஆனால் அது ஒருபுறமிருக்க, முஸ்லிம்களை மரியாதையுடன் அணுகுவது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன். அத்தோடு இலங்கையில் உள்ள நான்கு மதங்களையும் தான் மரியாதையுடன் அணுக வேண்டும். இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களிலும் தீவிரவாதிகள் உள்ளனர் என்பதை எங்களுக்கு நாங்களே நினைவுபடுத்திக கொள்ள வேண்டும். சமூகத்தில் உள்ள முஸ்லிம்களை அணுகுவது மற்றும் முஸ்லிம்களில் இருந்து எதிரிகளை உருவாக்காமல் பார்த்துக்கொளவது என்பது மிகவும் முக்கியம்.

கேள்வி: யுத்தத்தின் போது கூட முஸ்லிம்கள் அரசுத் தரப்பில் இருந்ததோடு, அவர்கள் அரசுக்கு எதிராக ஒருபோதும் இருந்ததில்லை. ஆனால் ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்பே குறிப்பாக புத்த மதகுருமார்கள் மத்தியில் முஸ்லீம் விரோத உணர்வு நிறைய இருந்தது. ஆனால் அரசு முஸ்லீம்களை நடத்தும் விதத்தை நான் இஸ்லாமோஃபோபிக் என்றே பார்க்கிறேன்.

 

எரிக்: சமாதான முன்னெடுப்புகளின் போது முஸ்லிம்கள் சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு தனியான முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைக் கோரினர். புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான இரு தரப்புப் பேச்சுவார்த்தையாக இருக்க வேண்டும் என வலியுறுத்திய புலிகளால் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதன் முடிவில் முஸ்லீம் தலைவர் ரவூப் ஹக்கீம் அரசாங்க பிரதிநிதிகள் குழுவில் சேர்க்கப்பட்டார். இலங்கையில் அநேகமான முஸ்லிம்கள் தமிழ் தனிநாட்டை ஆதரிக்கவில்லை.

கேள்வி: மோதல் முடிந்ததில் இருந்து கதை பல்வேறு யு.என்.எச்.ஆர்.சி தீர்மானங்கள் போன்ற முயற்சிகள் உள்ளன. சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் தீர்மானங்களில் நான் மிகக் குறைந்த முன்னேற்றத்தையே காண்கிறேன். நல்லிணக்கத்தை வளர்த்தெடுக்க உங்களைப் போன்ற வெளியாட்கள் என்ன செய்ய முடியும்?

எரிக்: முதலாவதாக, இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வொன்றினை இலங்கையர்களே காண வேண்டும் என்று நான் நம்புகிறேன். அதாவது வெளிநாட்டவர்களால் இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வொன்றினைக் காணமுடியாது. முடிவாக, இலங்கை என்பது சிங்களவர், முஸ்லிம்கள் மற்றும் தமிழர்களின் தீவாக உள்ளது. இது இந்தியர்கள், ஐரோப்பியர்கள் அல்லது அமெரிக்கர்களின் தீவு அல்ல.
தீர்மானங்கள் உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட வேண்டும். அதனை ஆதரிப்பதைத்தான் சர்வதேச சமூகத்தால் செய்ய முடியும். இதுவரை வேறெந்த ஒப்பீட்டுக்கும் இடமில்லாமல், இந்தியாதான் மிக முக்கியமான வெளிநாட்டுத் தரப்பு, 13வது திருத்தச்சட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் என அவர்கள் தெளிவாக கோரியுள்ளனர். இந்தச் சட்டம் தமிழர்களுக்கான சுய அரசாக இருக்கும், ஆனால் இலங்கை என்ற தேசத்திற்குள் இருக்கும். இலங்கை அரசாங்கம் இதனை ஏற்றுக்கொண்டால், உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் பாரிய ஆதரவு இருக்கும். அமெரிக்கா, ஐரோப்பா அல்லது சீனாவிலோ இதனை எவரும் ஆட்சேபிக்க மாட்டார்கள்.

கேள்வி: 13வது திருத்தச்சட்டம் என்பது இந்தியாவால் உத்தரவாதமளிக்கப்பட்டதொரு தீர்வு ஆகும். அத்துடன் அமுல்படுத்துவதைப் பொறுத்தவரையில் இது பாரிய சச்சரவு நிறைந்ததும் ஆகும். பொறுப்புக்கூறல் பொறிமுறைகளின் அடிப்படையில் யூ.என்.எச்.ஆர்.சி. தலையிட்டு எடுக்கும் நடவடிக்கைகளால், உண்மையில் நல்லிணக்கத்திற்கு இட்டுச்செல்லும் என்பதை என்னால் பார்க்க முடியாதுள்ளது, இது சமூகங்களை மேலும் கூறாக்குவதை நோக்கித் தள்ளுகின்றது.

எரிக்: உதாரணமாக, இந்தியப் பிரதமர் மோடி இலங்கைக்கு விஜயம் செய்தபோது, அவர் பிரச்சினைக்கு தீர்வுகளைக் கேட்டார் என்று நான் நம்புகிறேன். நிச்சயமாக அவர் அவற்றை திணிக்கவில்லை. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்குக் கிழக்கில் தமிழர்களுக்கு ஒருவகையான சுய அரசாங்கம் தேவை என்பதை அங்கீகரிப்பதற்கான முன்னோக்கிய வழியை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், தமிழர்கள் அவர்களது சொந்த நாட்டில் இரண்டாந்தரக் குடிமக்களாக அல்லாமல், முதல் தரமாக நோக்கப்பட வேண்டியது அவசியம்.
முக்கியமாக சிங்கள தேசியவாதிகளிடமிருந்தும் சில நேரங்களில் தீவிரவாதிகளிடமிருந்தும் நிறைய விமர்சனங்கள் அந்த நேரத்தில் எனக்குக் கிடைக்கப்பெற்றன. பிரபாகரனைக் கொன்ற நபர் நான் தான் என்று கூறி புலிகளின் எச்சசொச்சங்களால் பி;ன்னாளில் அதே வழியில் அல்லது அதைவிட மோசமாக விமர்சிக்கப்பட்டேன். இந்த குற்றச்சாட்டுகள் அனைத்துமே முற்றிலும் அர்த்தமற்றவை என்பதுடன் அந்த குற்றச்சாட்டுகளின் தீவிரத்தைப் பற்றி நான் உண்மையில் அதிகம் கவலைப்படவில்லை. அது மக்களின் வாழ்வா அல்லது மரணமா என்பது பற்றியதாக இருந்தது என்பதை நாங்கள் அறிந்திருந்தோம், இலங்கையில் சமாதானத்தை கொண்டு வர எங்களால் முடிந்திருந்தால், ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். எங்களால் வெற்றி பெற முடியவில்லை என்பதும் ஏராளமான இலங்கையர்கள் கொல்லப்பட்டனர் என்பதுமே பெரியதொரு வருத்தம்.

கேள்வி: உங்களுக்கு ஏதேனும் வருத்தம் உள்ளதா அல்லது உங்கள் தரப்பில் ஏதேனும் தோல்விகளை அவதானிக்கிறீர்களா?

எரிக்: எங்களால் எதனையும் அமுல்படுத்த முடியவில்லை. சமாதானத்தை அமுல்படுத்துமாறு (ஜனாதிபதி) சந்திரிகா மீதோ அல்லது பிரபாகரன் மீதோ எங்களால் எந்த அழுத்தத்தையும் பிரயோகிக்க முடியவில்லை. அந்த நேரத்தில் இரு கட்சிகளும் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று விரும்பினவோ, அதனை மாத்திரமே எங்களால் செய்ய முடிந்தது. சமாதானத்திற்காக போராடும் மக்களின் தன்னம்பிக்கையை இழக்கச் செய்வதை நான் விரும்பவில்லை. இன்று உலகில் ஏராளமான மோதல்கள் உள்ளன. சமாதானத்தை ஏற்படுத்துவதென்பது ஆபத்தானதொரு காரியம், பெரும்பாலும் இது தோல்வியிலேயே முடிவடையும். ஆனால் உலகில் சொற்பளவில் அல்ல, அதிகளவிலான சமாதானவாதிகள் தேவை.

கேள்வி: இலங்கையில் இன்னுமொரு ஆயுதப் போராட்டம் எழலாமா?

எரிக்: இலங்கை மக்கள் போரினால் மிகவும் சோர்வடைந்துள்ளனர் என்று நான் நினைப்பதால், இலங்கையில் எதிர்காலத்தில் ஆயுதப் போராட்டம் எதுவும் நடைபெறுவதற்கான சாத்தியத்தை நான் காணவில்லை. இந்த மோதலுக்கு காரணமாகவிருந்த பிரதான பிரச்சினையான தமிழ் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. இலங்கை எப்படி இருக்கிறது என்பதை தமிழர் ஒருவரது கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ள முயற்சிப்பது, இலங்கை சிங்கள மக்களுக்கு நல்லது. தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டில் இரண்டாம் தர குடிமக்களாக உணர்கிறார்கள், அவர்கள் புரிந்து கொண்ட மொழியில் காவல்துறையினரையோ அல்லது அதிகாரிகளையோ அணுக முடியாது. இலங்கை முன்னேறிச் செல்வதற்கு தமிழர் பிரச்சினைக்கு தீர்வொன்றினைக் காண வேண்டிய தேவையொன்றுள்ளது.

கேள்வி: இலங்கை புலம்பெயர்ந்தோரின் மீள் ஈடுபாடு மூலோபாயத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? அவர்கள் இங்கே முதலீடு செய்வது எவ்வளவு முக்கியம்?

எரிக்: புலம்பெயர்ந்த சமூகத்திற்கு பாரிய பங்கு உள்ளது. இலங்கை புலம்பெயர்ந்தோர் பிரதானமாக தமிழர்கள் மாத்திரமல்ல, சிங்களவர்களும் தான். அத்துடன் அவர்கள் வெற்றி பெற்ற சமூகமாகவும் இருக்கின்றார்கள். அவர்கள் உயர்ந்த கல்வியறிவு கொண்ட குழுவாக இருக்கிறார்கள். எனது நாடான நோர்வேயில், இளம் தமிழர்கள் பல்கலைக்கழகங்களில் சராசரி இளம் நோர்வேஜியர்களை விட மிகச் சிறப்பாகக் கல்வி கற்று வருகின்றனர். கனடா, ஜேர்மனி மற்றும் பிரித்தானியாவிலும் இதுதான் நிலை. இலங்கையில் உள்ள நல்ல பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், வேலைகள், தொழிற்சாலைகள் அல்லது சுற்றுலாத் தலங்களில் நாங்கள் (சாத்தியமான) முதலீடு செய்ய முடிந்தால், அது இலங்கையை முன்னேற்றத்திற்கு கொண்டு செல்லும். அனைத்து சமாதான முயற்சிகளுக்கும் புலம்பெயர்ந்தோர் ஆதரவு வழங்க வேண்டும், ஆனால் இலங்கையின் சமாதான முயற்சி இலங்கையாலேயே தலைமை தாங்கப்பட வேண்டும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். விமர்சன, புலமைசார்ந்த மற்றும் தார்மீக ஆதரவை வழங்குவதற்கு புலம்பெயர்ந்த சமூகம் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

 

பேட்டி கண்டவர்: கலானி குமாரசிங்க
(டெய்லி மிரர், 5 ஜுலை 2021)
தமிழில்: ‘வானவில்’

(முஸ்லிம் என்பவர் பகுத்தறிவு குறைந்தவர், நவீன காலத்திற்கு முந்திய பேர்வழி, தேங்கிப் போனவர், வளர்ச்சியுடன் மேற்செல்லத் தெரியாதவர், நவீனத்துவத்திற்குத் தகுதியற்றவர் என்றெல்லாம் சொல்வதுதான் இஸ்லாமோஃபோபியா – ‘வானவில்’)

Source : Vaanavil 127 July 2021

No comments:

Post a Comment

President Chandrika and former Chief Justice Shirani Bandaranayke By Victor Ivan

  Former President Chandrika Kumaratunga and Former Chief Justice Shirani Bandaranayake    Publication of a biography by former Presid...