தோழர் 100--அ. குமரேசன்முப்பெருங்கால முத்திரையாகத் திகழும் தோழர்

இந்திய நாட்டின் விடுதலைக்கான முன்னாளைய இயக்கம், விடுதலைக்குப் பிறகு சமத்துவ மாற்றங்களுக்கான பின்னாளைய இயக்கம், அதற்காக உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின்படி உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான இந்நாளைய போராட்ட இயக்கம் – இம்மூன்று போராட்ட இயக்கக் காலத்திலும் களம் கண்டு தடம் பதித்தவர், முப்பெருங்கால முத்திரையாகத் திகழ்பவர் தோழர் என். சங்கரய்யா. நூறு வயதைத் தொடும் சங்கரய்யா இன்று நம்மோடு வாழ்கிறார் என்பதை விட, அவரோடு நாம் வாழ்கிறோம் என்று நினைக்கையில் உள்ளம் சிலிர்க்கிறது.

இயக்கமே வாழ்க்கையெனக் கொண்டவர் சங்கரய்யா என்பதற்கு இதோவொரு சான்று: மதுரையில் நான் ‘தீக்கதிர்’ அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, ஒரு தேர்தல் பரப்புரைக்காக வந்திருந்த சங்கரய்யாவிடம் சிறப்பு நேர்காணல் எடுக்க விரும்பி என்னைத் தொடர்புகொண்டார் ‘ஜூனியர் விகடன்’ செய்தியாளர். அவரை அழைத்துச் சென்று சங்கரய்யாவிடம் அறிமுகப்படுத்தினேன். நமக்கும் புதிய தகவல்கள் கிடைக்கும் என்று நேர்காணல் முடியும் வரையில் நானும் உடனிருந்தேன்.

அரசியல் தொடர்பான கேள்விகளுக்குப் பிறகு, “உங்களுடைய சொந்த வாழ்க்கை பற்றிச் சொல்லுங்கள்,” என்று கேட்டுக்கொண்டார் நண்பர். “இவ்வளவு நேரம் அதைத்தானே சொல்லிக்கொண்டிருந்தேன்,” என்றார் சங்கரய்யா! “இல்லை, உங்களின் பள்ளி, கல்லூரிப் படிப்பு பற்றிச் சொல்லுங்கள்,” என்றார் நண்பர். “ஓ, அதைக் கேட்கிறீர்களா,” எனக் கேட்டவாறு தனது படிப்பு பற்றியெல்லாம் சொல்லிக்கொண்டே வந்தவர் அப்படியே அன்றைய விடுதலைப் போராட்டம், அதிலே மாணவர்கள் பங்கேற்பு என்று இறங்கிவிட்டார். அவர் பத்திரிகையாளர் விடாமல் “உங்களின் குடும்ப வாழ்க்கை பற்றிச் சொல்லுங்கள்,” என்றார். “அதுவா,” என்று தொடங்கிய சங்கரய்யா, திருமணத்திற்குப் பிறகு வந்த ஒரு மக்கள் போராட்டம் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்தார்.

நண்பருக்கு ஏமாற்றமே என்றாலும், “இயக்க வாழ்க்கையையும் சொந்த வாழ்க்கையையும் பிரித்துப் பார்க்க முடியாத ஒரு தலைவரைச் சந்தித்தது பெருமிதமாக இருக்கிறது,” என்று பின்னர் என்னிடம் நெகிழ்ச்சியோடு கூறினார்.

மக்களின் வழக்கறிஞராக

மதுரை அமெரிக்கன் கல்லூரியில், ஒரு வழக்கறிஞராக உருவாக வேண்டும் என்ற விருப்பத்தோடு இவரைச் சேர்த்துவிட்டார் தந்தை. மூன்றாமாண்டு இறுதித்தேர்வுக்கு இரண்டு வாரங்களே இருந்த நிலையில், நாட்டின் விடுதலைக்காகவும், போராளிகள் மீதான ஒடுக்குறைகளைக் கண்டித்தும் பெரும் அலையாக எழுந்த போராட்டத்தில், இவர் கலந்துகொண்டார். தான் கலந்துகொண்டதோடு சக மாணவர்களையும் கலந்துகொள்ளச் செய்தார். சகித்துக்கொள்ளுமா ஆங்கிலேய அரசு? சங்கரய்யாவைக் கைது செய்து சிறையில் அடைத்தது. பதினெட்டு மாதங்கள் கழித்துதான் சிறையிலிருந்து வெளியே வந்தார். வழக்கறிஞராக முடியாவிட்டால் என்ன? மக்களுக்காக வாதாடுகிறவராகப் பரிணமித்தார். நாட்டின் அரசியல் விடுதலை சமுதாய ஏற்றத்தாழ்வுகளிலிருந்தும் விடுதலை பெறுவதோடும் இணைந்தால்தான் முழுமையடையும் என்ற தெளிவோடு, அதற்கான பாதையாக  மார்க்சியத் தத்துவ வெளிச்சத்தில் நடைபோட்டு, ஒரு கம்யூனிஸ்ட்டாகக் களமாடத் தொடங்கினார்.

மாணவர் சங்கம், விவசாயிகள் சங்கம் போன்ற அமைப்புகளின் தலைமைப்பொறுப்புகளில் செயல்வட்டவரான அவர், கட்சித் தலைவராக, அனைத்துத் துறை சார்ந்தவர்களின் பிரச்சினைகளையும் அறிந்து, அவர்களுக்குத் தீர்வுக்கான வழிகளைச் சொல்கிறவராக விளங்கினார். பல்வேறு துறை சார்ந்த நிலைமைகளைத் தெரிந்துகொள்வதற்கான ஆவணங்களையும் உள்வாங்கிப் படிப்பார். கள நிலைமைகளுக்கு ஏற்ப சரியாக வழிகாட்டுவார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என தொழில் சார்ந்தோர் மட்டுமல்ல, கலை இலக்கியவாதிகள் கூட முக்கியமான திருப்பங்கள் நேர்கிறபோது அவரோடு அமர்ந்து பேசி வெளிச்சம் பெற்றிருக்கிறார்கள். உள்ளடக்கமா, உருவமா என்ற இந்தக் களத்தினருக்கே உரிய விவாதம் முன்னுக்குவந்தபோது, மார்க்சியப் பார்வையோடு இரண்டின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்ததை, முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கிய முன்னோடிகள் பலரும் தெரிவித்திருக்கிறார்கள். படித்துத் தெரிந்துகொண்ட புரிதல்கலிருந்து மட்டுமல்லாமல், போராட்ட அனுபவப் பள்ளியிலிருந்து கற்றறிந்த தெளிதல்களிலிருந்தும் இவ்வாறு வழிகாட்டும் ஆசானாய்ப் பாடம் நடத்தினார்.

அதுதான் பரிசு!

நாடு சுதந்திரமடைந்த பிறகு, சமத்துவ லட்சியங்களோடு போராடிய கம்யூனிஸ்ட்டுகள் மீது ஆட்சியாளர்களால் ஒடுக்குமுறைகள் ஏவப்பட்டன. மறுபடி சிறைவாசம். ஆம், ஆங்கிலேயர் ஆட்சியில் நான்காண்டு, காங்கிரஸ் ஆட்சியில் நான்காண்டு என்று எட்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார் சங்கரய்யா. முந்தைய ஆட்சியின் சிறைவாசம் எப்போது முடிந்தது என்றால், 1947 ஆகஸ்ட் 14 அன்று! ஆம், தேச விடுதலைக்கு ஒரு நாள் முன்பு!

விடுதலைப் போரின்போது சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கான தியாகிகள் ஓய்வூதியத் திட்டத்தை அன்றைய ஒன்றிய அரசு கொண்டுவந்தது. விடுதலைக்காகப் போராடும் கடமையை நிறைவேற்றியதற்கு ஓய்வூதியமா என்று கேட்டு, அதை ஏற்க மறுப்பது என்று கம்யூனிஸ்ட்டுகள் முடிவு செய்தார்கள். சங்கரய்யாவிடம் இது பற்றி ‘தினமணி’ செய்தியாளர் சோமசுந்தரம் கேட்டபோது, ”சுதந்திரத்திற்காக ஜெயிலுக்குப் போனதே பெரிய பரிசுதான்,” என்று இயல்பாகக் கூறினார்.

தீண்டாமை ஒழிப்பில்

சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, 1990களில் தமிழகத்தில் பல இடங்களில் சாதிய மோதல்கள் நிகழ்ந்தன.  அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியுடன் தொடர்பு கொண்டு, வன்முறைகளை ஒடுக்கவும், காரணமானவர்கள் மீது சட்டப்பூர்வு நடவடிக்கைகள் எடுக்கவும் வலியுறுத்தினார். அத்துடன், அந்த வன்முறைகளின் ஊற்றுக் காரணியாக இருப்பது தீண்டாமைக் கொடுமைதான், அதற்கு எதிரான சமூக உணர்வை வளர்ப்பதில் அரசுக்குப் பொறுப்பிருக்கிறது என்று கூறினார். அதை ஏற்றுக்கொண்டார் கலைஞர். பல்வேறு மாவட்டங்களிலும் தீண்டாமை ஒழிப்பு மாநாடுகளை அரசாங்கமே நடத்தியது. அதில் சிறப்புரையாளராகப் பங்கேற்று முழங்கினார் சங்கரய்யா. அன்றைய சூழலில் சாதிய வன்முறைத் தீ பரவாமல் அணைக்கப்பட்டதில் சங்கரய்யாவின் இந்த முனைப்புகளுக்கு முக்கியப் பங்கிருக்கிறது.

ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாடு அவரது அடங்காத கனவு. காயிதே மில்லத் கல்லூரியில் நடந்த ஒரு விழாவில், காயிதே மில்லத் கல்வி அறக்கட்டளை சார்பில், மக்கள் நல்லிணக்க சேவைக்கான விருது சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது. விருதுகளை ஏற்கிற வழக்கமில்லாத அவர், அறக்கட்டளையின் நோக்கம் குறித்த மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டார். விருது விழா அறக்கட்டளை சென்னை மேடவாக்கத்தில் நடத்திவரும் காயிதே மில்லத் கல்லூரயில் நடைபெற்றது. அந்த விழாவில் தனக்குத் தரப்பட்ட இரண்டரை லட்சம் ரூபாய் விருதுப் பணத்தை, அந்தக் கல்லூரியில் தலித், பழங்குடி மாணவர்களுக்கான கல்வி உதவி நிதியை ஏற்படுத்தித் தொடர்ச்சியாகப் பயனளிக்குமாறு கேட்டுக்கொண்டு அறக்கட்டளையிடமே ஒப்படைத்தார்.

இளைய தலைமுறையினர் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பவர் சங்கரய்யா. “இன்றைய இளைஞர்கள் உங்கள் காலத்தைப் போல பொது அக்கறையற்றவர்களாக இருக்கிறார்களா,” என்று ஒருமுறை அவரிடம் கேட்டேன். “இல்லை. அவர்கள் தங்களுடைய பொது அக்கறைகளை வேறு வேறு வடிவங்களில் வெளிப்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதைப் புரிந்துகொண்டு, அதே வேளையில் சமத்துவ மாற்றங்களுக்கான லட்சியங்களை அவர்கள் ஏற்க வைக்கிற பொறுப்பு நமக்குத்தான் இருக்கிறது. அது பற்றி அவர்களோடு நாம் பேசுகிறோமா, அல்லது அவர்களுக்கு அக்கறையில்லை என்று விட்டுவிடப்போகிறோமா என்பதே முக்கியம்,” என்றார். அவ்வாறு பேசுவதற்குக் கிடைக்கிற எந்தவொரு வாய்ப்பையும் அவர் தவறவிட்டதில்லை.

குடும்பத்தில் போராடுங்கள்!”

இளைஞர்கள் மேற்கொண்ட ஒரு மாநிலந்தழுவிய பரப்புரை இயக்கத்தின் நிறைவு நிகழ்ச்சி சில ஆண்டுகளுக்கு முன் தாம்பரத்தில் நடைபெற்றது. அதில் வாழ்த்துரை வழங்கிய சங்கரய்யா, ”இளைஞர்களின் மற்ற பிரச்சினைகள், கோரிக்கைகளுக்காகப் பொது வெளியில் போராடுங்கள். அதே வேளையில், சாதிப்பாகுபாடற்ற சமுதாயத்தை உருவாக்க உங்கள் குடும்பத்திலும் போராடுங்கள். உங்கள் வீட்டில் உங்கள் சகோதரியோ சகோதரனோ சாதி கடந்து, மதம் கடந்து காதலிக்கிறார்கள் என்றால் அந்தக் காதலுக்கு ஆதரவாளர்களாக இருங்கள், அவர்களுக்காக உங்கள் பெற்றோர்களோடு வாதாடுங்கள்,” என்று அறைகூவல் விடுத்தார். கூடியிருந்த இளைஞர்களிடையே அந்த அறைகூவலால் ஏற்பட்ட எழுச்சிகரமான உணர்ச்சி அங்கே பேரலையோசையாக எழுந்த கரவொலிகளில் எதிரொலித்தது.

மேடைகளிலும் தனிப்பட்ட முறையிலும் இதைச் சொல்வதற்கான முழுத்தகுதி அவருக்கு உணடு. அவரே மதமறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்தான். கிறிஸ்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர் நவமணி. இயக்க வாழ்க்கைக்கும் வந்தவர். அவரும் இவரும் இணைந்து இல்லறம் காண விளைந்தபோது இரு தரப்பிலுமே பெற்றோர்களும் உற்றார்களும் தயங்கினர். தனது முடிவில் உறுதியாக இருந்த சங்கரய்யாவும் அவருடைய அண்ணனும் குடும்பத்துப் பெரியவர்களுடன் எடுத்துப்பேசி ஒப்புக்கொள்ள வைத்தார்கள். அதே போல உறுதியாக இருந்த நவமணியும் அவருடைய அண்ணனும் தங்களுடைய குடும்பத்துப பெரியவர்களுடன் பேசி ஏற்கவைத்தனர். சங்கரய்யா-நவமணி இணையரின் பிள்ளைகள், அவர்களுடைய பிள்ளைகள் என எல்லோருமே காதல் மணம், சாதி மறுப்பு மணம், மதமறுப்பு மணம் என்று முன்னுதாரணம் படைத்திருக்கிறார்கள்.

எனக்கு அவர் ஊக்கமளித்த அனுபவத்தையும் இங்கே பகிர்ந்தாக வேண்டும். தொலைக்காட்சி விவாதங்களிலும், வேறு பல பத்திரிகைகயில் எழுதுகிறபோதும் எனது சொந்தக் கருத்துகளை வெளிப்படுத்துவதுண்டு. 2019 மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து, இடதுசாரிகள் தங்களுக்குள் பேசியாக வேண்டியது என்ன என்ற ஒரு கட்டுரையை ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டில் எழுதினேன். பாராட்டு, விமர்சனம் இரண்டுக்கும் அந்தக் கட்டுரை உள்ளானது. பின்னொரு நாளில் சங்கரய்யா வீட்டிற்குச் சென்றிருந்தபோது, “நிறைய எழுதுறீங்க. மற்ற பத்திரிகைகள்லேயும் எழுதுறீங்க டிவி விவாதங்கள்லேயும் பங்கெடுக்கிறீங்க. மாறுபட்ட விசயங்கள் சொல்றீங்க…” என்று சொல்லிவிட்டு நிறுத்தினார். அவர் முகத்தையே உற்றுக்ககவனித்தேன். “நல்லது. தொடர்ந்து எழுதுங்க.” எனக்கு எத்தகைய உற்சாகத்தை அது தந்தது என்று விளக்க வேண்டியதில்லை.

ஒருவரை நூறாண்டு வாழ்கவென வாழ்த்துவது தமிழ் மக்களின் ஒரு பண்பாட்டு வெளிப்பாடு. தங்களின் அன்புக்கு உரியவர்களை, ஆசிர்வாதம் கோரி வணங்குகிறவர்களை இவ்வாறு வாழ்த்துவார்கள். தோழர் சங்கரய்யாவின் அர்ப்பணிப்பு மிக்க போராட்ட வாழ்க்கையால் சமூகத்தில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களைச் சந்தித்தவர்கள், சொந்த வாழ்க்கையில் நன்மைகளை அடைந்தவர்கள், உரிமைகளை உறுதிப்படுத்திடும் நம்பிக்கை பெற்றவர்கள் எல்லோருமே மனம் நிறைந்து வாழ்த்தியிருப்பார்கள் – நூறாண்டு வாழ்கவென்று. தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள், ஒடுக்கப்பட்ட மக்கள், பெண்கள் – யாருககாக அவர் போராடவில்லை? அவர்கள் அனைவரும் வாழ்த்தியிருப்பார்கள். உழைப்பாளி மக்களின் எதிர்பார்ப்புக்கேற்ப வாழ்ந்து காட்டியிருப்பது போலவே, அவர்களின் இந்த வாழ்த்துக்கேற்பவும் வாழ்கிறார் சங்கரய்யா.

ஆகவேதான், தமிழகமே அவரது நூறாவது பிறந்தநாளை உணர்வுப் பூர்வமாகக் கொண்டாடுகிறது. கட்சி மாறுபாடுகளைக் கடந்து அரசியல் தலைவர்களும், பல்வேறு களச் செயல்பாட்டாளர்களும் இன்று அவரை வாழ்த்துகிற வாய்ப்பில் வணங்கி மகிழ்கிறார்கள். நாமும் அந்த மகிழ்ச்சியில் இணைவோம். அந்த வாழ்த்து, அவரது பொதுநல வாழ்க்கை நதியின் ஒரு துளியிலேனும் நம்மையும் நனைக்கும்.

source: chakkaram.com

 

No comments:

Post a Comment

இடதுசாரிகளுக்கு என்ன ஆயிற்று?- கு.பாஸ்கர்

நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது நா முதலாளித்துவத்தின் உச்சகட்ட ஜனநாயக அமைப்பு முறைகளுள் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் இப்படிப்பட்ட ...