அரசாங்கம் என்ன செய்யப் போகின்றது?

 

2019இல் நடைபெற்ற இலங்கை ஜனாதிபதி தேர்தலிலும், 2020இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் தற்போதைய அரசாங்கக் கட்சியினர் மக்களின் அமோக ஆதரவைப் பெற்று ஆட்சிபீடம் ஏறினர். வழமையாக முற்போக்கு – ஜனநாயக சக்திகளுக்கு எதிரான ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு ஆசனத்தைக்கூட வெல்ல முடியாது வரலாற்றில் முதல் தடவையாகத் தோல்வியடைந்தது.

அதேவேளை, நாட்டு மக்கள் இன்றைய அரசாங்கத்திடம் பல ஆக்கபூர்வமான செயல்திட்டங்களை எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களது எதிர்பார்ப்புகள் கானல் நீராகிப் போய்விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

முதலாவது காரணம் பெரும் பெரும் வளர்ச்சி அடைந்த நாடுகளையே உலுக்கிப் போட்டுள்ள கொரோனா என அழைக்கப்படும் கொவிட் – 19 தொற்று நோயாகும். இந்த நோய் காரணமாக இலங்கைக்கு அதிக வருவாய் ஈட்டித்தந்த சுற்றுலா பயணத்துறை முற்றிலுமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. அதுமாத்திரமின்றி இந்த நோய்த் தாக்கம் காரணமாக நாட்டிலுள்ள தொழில்துறை, விவசாயத்துறை, மீன்பிடித்துறை, கல்வித்துறை, நிர்வாகத்துறை, ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் என எல்லாத்துறைகளுமே முடங்கிப் போயுள்ளன.

இந்தப் பேரிடருக்கு மத்தியிலும் சர்வதேச சமூகம் எனப்படும் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்தைய முதலாளித்துவ நாடுகள் இலங்கையில் நடந்து முடிந்த உள்நாட்டு யத்தம் சம்பந்தமாக தொடர்ந்தும் ஒருதலைப்பட்சமான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருவதுடன், தற்பொழுது புதிதாகவும் அங்கு மனித உரிமை மீறல்களும், ஊடக சுதந்திர மறுப்பும், சிறுபான்மை இனங்களுக்கு எதிரான பாரபட்சங்கள் அடக்குமுறைகளும் நிகழ்த்தப்படுவதாக குற்றம்சாட்டி வருகின்றன. அவர்களது ஒரே நோக்கம் 2015இல் நடைபெற்றது போன்ற ஆட்சி மாற்றம் ஒன்றை இலங்கையில் கொண்டு வருவதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

கடந்த மார்ச் மாதம் நடந்த ஜெனிவா மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடரில் மேற்கின் பலம் வாய்ந்த நாடுகள் சின்னஞ்சிறிய இலங்கைக்கு எதிராக ஓரணியில் திரண்டு நின்று கொண்டு வந்த கண்டனத் தீர்மானத்தில் இருந்தே இதை விளங்கிக் கொள்ளலாம்.

முன்னைய சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசின் மீதும், தற்போதைய சிறீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசின் மீதும் மேற்கத்தைய சக்திகள் காட்டமாக நிற்பதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.

 

அதில் ஒரு காரணம், மேற்கத்தைய சக்திகளால் இலங்கையின் இறைமைக்கு மட்டுமின்றி, தென்னாசியாவின் இறைமைக்கே சவால் விடக்கூடிய வகையில் உருவாக்கி விடப்பட்டிருந்த புலிகள் என்ற பாசிஸ இயக்கத்தை அன்றைய மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் வெற்றிகரமாக தோற்கடித்து நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டிமையாகும். குரங்கு அப்பம் பங்கிட்ட கதை போல நோர்வேயைச் சேர்ந்த சோல் ஹெய்ம் என்ற அரசியல் தரகர் மூலம் இலங்கையின் இனப் பிரச்சினையையும், இறைமையையும் சிக்கலுக்கு உள்ளாக்க அந்நிய சக்திகள் போட்டிருந்த திட்டத்தை மகிந்த அரசு தனது சொந்தப் பலத்தின் மூலமும், சில நட்பு நாடுகளின் உதவியுடனும் முறியடித்ததை இந்த அந்நிய சக்திகளால் தாங்கிக்கொள்ள முடியாமல் இருப்பதால்தான் ஜெனிவா நாடகம் திரும்பத் திரும்ப அரங்கேற்றப்படுகிறது என்பதில் சந்தேகம் இல்லை.

இலங்கை உலகிலேயே மிக மோசமான ஒரு பயங்கரவாத பாசிஸ இயக்கத்தை தோற்கடித்ததை இந்த சக்திகள் வரவேற்று போரற்ற இலங்கையின் வளர்ச்சிக்கு உதவுவதற்குப் பதிலாக இந்த சக்திகள் இலங்கையை சாண் ஏற முழம் சறுக்கும் நிலைமைக்குத் தள்ளி விட்டுள்ளன. இந்தச் சக்திகளின் இந்த தீய நாடகம் கொவிட் நோய்த் தொற்றுக்கு முன்னரே அரங்கேற்றப்பட்டது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இலங்கை மீதான மேற்கத்தைய நாடுகளின் வன்மப் போக்கிற்கு இன்னொரு காரணம், இலங்கை சீனாவுடன் நெருக்கமான உறவுகளை வைத்திருப்பதாகும். ஆனால் இலங்கை – சீன உறவு என்பது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. அதற்கு 2000 ஆண்டு வரலாற்றுப் பாரம்பரியம் உண்டு. நவீன வரலாற்றில் அது 1952இல் ஏற்பட்ட இரு நாடுகளுக்குமிடையிலான அரிசி – இறப்பர் ஒப்பந்தத்தின் மூலம் புது மெருகூட்டப்பட்டது. பின்னர் அது 1956இல் பண்டாரநாயக்க அரசாங்கம் சீனாவுடன் இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்த பின்னர் முழு வீச்சை அடைந்தது. அன்றிலிருந்து ஆபத்தான நேரங்களில் முதலில் ஓடி வந்து இலங்கைக்கு உதவும் நாடாக சீனா இருந்து வருகிறது.

ஆனால் அன்றைய காலகட்டத்தை விட இன்று இலங்கை – சீன உறவுகளை மேற்கு நாடுகளும் இந்தியாவும் வெறுக்கக் காரணம், அன்றைய சீனா வளர்ச்சியை நோக்கி நின்ற ஒரு ஏழ்மை நாடாக இருந்தது. சீனா ஒருபோதும் வளர்ச்சியடையாது சோசலிசத்தை வாயளவில் பேசிக்கொண்டிருக்கும் ஒரு ஏழை நாடாகவே இருக்கும் என்றுதான் மேற்குலகு கணக்குப் போட்டிருந்தது. ஆனால் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தீர்க்கதரிசனமிக்க தலைமை சீனாவின் வரலாற்றை மாற்றியமைத்து உலகின் இரண்டாவது சக்தி வாய்ந்த நாடாக மாற்றிய பின்னர்தான் மேற்கத்தைய முதலாளித்துவ உலகம் துடிதுடித்து வழித்துக் கொண்டது.

 

இது நெப்போலியன் ஒருமுறை சொன்னதாகக் கூறப்படும் ‘சீனம் உறங்குகிறது. அது உறங்கட்டும். அது விழிக்கும்போது உலகம் நடுங்கும்’ என்ற கூற்றைத்தான் நினைவூட்டுகிறது.

சீனா முழு மேற்கத்தைய முதலாளித்துவ உலகிற்கும் சவாலாக எழுந்து நிற்பதும், அதனுடன் முன்னாள் சோவியத் சோசலிஸ நாடான இன்றைய ரஸ்யா கைகோர்த்து நிற்பதும், முழு முதலாளித்துவ உலகையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. அத்தகைய அணியில் இலங்கையும் சேர்ந்திருக்கிறது என்ற எரிச்சலே இலங்கை மீதான மேற்குலகின் வெறுப்புக்குக் காரணம்.

பாசிஸ புலிகளை ஒழித்துக்கட்டியதும், சர்வதேச அரங்கில் இலங்கை ஏகாதிபத்திய எதிர்ப்பில் முடியுமானவரை இணைந்து நிற்பதும் நல்ல விடயங்கள்தான். ஆனால் இவை மட்டும் ஒரு நாட்டில் வெற்றிகரமான ஆட்சியைக் கொண்டு நடத்துவதற்குப் போதுமானவை அல்ல என்பதையும் சற்றுப் பாரதூரமாக எடுத்து நோக்க வேண்டும்.

இன்றைய இலங்கை அரசாங்கத்தின் மீது மேற்கத்தைய முதலாளித்துவ நாடுகளும் அவர்களுக்கு சேவகம் செய்யும் இலங்கையின் முதலாளித்துவ எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்கள் என்பனவும் தினசரி பலவிதமான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றன. அவற்றில் பல பொய்யான குற்றச்சாட்டுகள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனாலும் இலங்கையின் தற்போதைய அரசு கவனத்தில் கொள்ள வேண்டிய பின்வரும் விடயங்கள் இருக்கின்றன. அவையாவன:

○ மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளுக்கு செவிமடுப்பதை விட அரசாங்க மேல்மட்டத்தில் உள்ள ஒரு குழுவினரின் தீர்மானங்களுக்கு அமைய செயல்படுதல்.

○ ஒரே குடும்ப வம்சத்தைச் சேர்ந்த பல பேர் அரசாங்க உயர் பதவிகளை வகிப்பதன் மூலம் குடும்ப வாரிசு அரசியல் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது என்ற தோற்றப்பாட்டை மக்கள் மத்தியில் ஏற்படுத்தல்.

○ சிறுபான்மை இன – மத பகுதியினரின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அக்கறையற்று இருத்தல்.

○ அரசாங்கத்தில் முன்னாள் இன்னாள் இராணுவ அதிகாரிகளின் அதீத பிரசன்னம்.

○ நீதிமன்றங்களினால் வழங்கப்பட்ட சில தீர்ப்புகளை சரியான வழிமுறையின்றி அதிகாரத்தைப் பயன்படுத்தி மாற்றியமைத்தல்.

 

○ விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் பொறிமுறையொன்றை இன்னமும் வகுக்காதிருத்தல்.

○ அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை ஜனநாயக கலந்துரையாடல்களின் மூலம் தீர்க்காமல் பலம் வாய்ந்த பகுதியினர் ‘பெரியண்ணன்’ மனோபாவத்தில் செயல்படுதல்.

இப்படிப் பலவற்றைக் குறிப்பிடலாம்.

இந்த விடயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தித் தீர்க்காதுவிடின், மீண்டும் ஒரு ‘2015’ நிலைமை ஏற்படுவதற்கு அரசாங்கமே வழிவகுத்துக் கொடுத்ததாக முடிந்துவிடும் என்பதை ஜனநாயக – தேசபக்த சக்திகளின் சார்பாகச் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறோம்.

Source: vaanavil 127 July 2021

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...