மக்களின் நலவாழ்வுக்கு மக்கள்நலனை மையமாகக் கொண்ட அமைப்புமுறை அவசியமாகும்’ உலக அரசியல் கட்சிகள் உச்சிமாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி


2021 ஜூலை 6 அன்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, இணைய வழியாக உலக அரசியல் கட்சிகளின் உச்சிமாநாடு ஒன்றை நடத்தியது. அதன் கருப்பொருள்: “மக்களின் நலவாழ்வு:அரசியல் கட்சிகளின் பொறுப்புகள்” என்பதாகும். இந்த உச்சிமாநாட்டில் 160 நாடுகளிலிருந்து ஐநூறுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கலந்துகொண்டன. உச்சிமாநாட்டை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர், ஷிச்சின்பிங், துவக்கி வைத்தார். அந்த சமயத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஆற்றிய உரையின் தமிழாக்கத்தைக் கீழே தந்திருக்கிறோம். உடன், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் நிலோத்பால் பாசு, மத்தியக்குழு உறுப்பினர்கள் ஜோகேந்திர சர்மா மற்றும் ஆர்.அருண்குமார் கலந்துகொண்டார்கள்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் ஷிச்சின்பிங் அவர்களே, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களே, உலக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளே, உங்கள் அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் எங்கள் இதமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த உச்சிமாநாடு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவுக் கொண்டாட்டத்தையொட்டிக் கூட்டப்பட்டிருக்கிறது. வரலாறு படைத்துக்கொண்டிருக்கும் இத்தருணத்தில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் எங்கள் இதமான சகோதரத்துவ வாழ்த்துக்களை சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மீண்டும் ஒருமுறை தெரிவித்துக்கொள்கிறோம்.

முன்னதாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் எங்கள் வாழ்த்துச் செய்தியை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங்கிற்கு தனியே அனுப்பி இருக்கிறோம். ஓரளவு வசதிபடைத்த சீனச் சமூகத்தைப் பன்முகங்களிலும் கட்டி எழுப்புவோம் (“moderately prosperous society in all respects”) என்கிற சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவாது நூற்றாண்டு இலக்குகளில் ஒன்றை முத்திரைபதித்திடும் விதத்தில் அது நிறைவு செய்திருப்பதனை அறியும்போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மிகவும் மகிழ்ச்சிகொள்கிறது. ஓர் அமைதியான மற்றும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கைக்காக சீன மக்கள் சுமார் 2500 ஆண்டுகளாகக் கனவுகண்டு வந்த ஏக்கங்கள், ஆசைகள் இப்போது சீனாவில் நிறைவேறியிருக்கின்றன.

இந்த இலக்கினை நிறைவேற்றுவதில் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது நூற்றாண்டு ஒரு தீர்மானகரமான பங்களிப்பினைச் செய்திருக்கிறது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 1978க்குப் பின்னர் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, பின்பற்றி வந்த சீர்திருத்தங்கள், 20ஆம் நூற்றாண்டில் ஜெர்மனி, ஜப்பான், தென் கொரியா முதலான முதலாளித்துவ நாடுகளின் பொருளாதார “அற்புதங்களை” எல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டு, மகத்தான வெற்றிகளை எய்தியிருக்கிறது. சீன மக்கள் குடியரசு, உலகத்தின் மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவாகும் நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த ஆண்டுகளில் மிகப் பெரிய சாதனை என்னவென்றால், சுமார் 77 கோடி மக்களை வறுமையின் கோரப்பிடியிலிருந்து விடுவித்திருக்கும் உண்மையாகும். மேலும் சீன மக்கள் குடியரசு, தன்னுடைய 2010ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியையும், தனிநபர் வருமானத்தையும் 2020ஆம் ஆண்டில் இரட்டிப்பாக்கியும் தன் இலக்கை எய்தி சாதனைப் படைத்திருக்கிறது.

சீன மக்கள் குடியரசு, கோவிட்-19 கொரோனா வைரஸ் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் வெற்றி பெற்றதுடன், தன் சமூகத்தையும் பொருளாதாரத்தையும் மீளவும் தேவையான பாதுகாப்புகளுடன் வளர்முகப்பாதையில் செலுத்திக்கொண்டிருப்பது, உலகிற்கே ஒரு படிப்பினையாக இருக்கிறது. முதலாளித்துவத்துடன் ஒப்பிடும்போது சோசலிச அமைப்புமுறைதான் உன்னதமானது என்பதை நிறுவி, முன்மாதிரியாகத் திகழ்ந்துகொண்டிருக்கிறது. சீன மக்கள் குடியரசு, கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும்கூட, தன்னுடைய சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை 9.2 சதவீதத்தை வீழ்ச்சியுறச்செய்திடாமல் 1978க்குப்பின்னர் கடந்த நாற்பதாண்டுகளாக, நிலைநிறுத்திக்கொண்டு வந்திருக்கிறது.

மக்களுக்கும் மனிதகுலத்துக்கும் இன்பமான வாழ்க்கை மற்றும் முன்னேற்றத்தை விளைவிக்கும் வரலாற்றுப் பொறுப்பை அரசியல் கட்சிகள் ஏற்க வேண்டும் என்கிற கருப்பொருளின் அடிப்படையில் இந்த உச்சிமாநாட்டின் நிகழ்ச்சிநிரலின் முன்மொழிவுகள் அமைந்திருந்தன. இவை இரண்டும் பாராட்டத்தக்கவையும் உன்னதமானவைகளுமாகும். எனினும், இவற்றை எய்திடவேண்டுமானல், உலக மக்கள், கடும் எதார்த்த நிலைமைகளையும் அமைப்புமுறைகளையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். அவையும் அங்கீகரிக்கப்பட வேண்டும். குறிப்பாக, கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிந்தைய உலகத்தில், அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கின்றன.

அமைதி, சமாதானம், சகவாழ்வு, வளர்ச்சி, நேர்மை, நீதி, ஜனநாயகம், சுதந்திரம் போன்ற மனித மாண்புகள் அனைத்தும் மனிதகுலம் அனைத்திற்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற முன்மொழிவுகளில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனாலும், ஒவ்வொரு நாடுகளிலும் காணப்படும் எதார்த்த நிலைமைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். உலக அளவில் அனைவருக்குமான பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அமைதி மற்றும் சமாதான சக வாழ்வு, சர்வதேச உறவுகளில் பன்முகத்தன்மை மற்றும் சர்வதேச சட்டங்களைக் கறாராகக் கடைப்பிடித்தல் ஆகியவற்றுக்கு ஒரு வலுவான அரசியல் உறுதியும், வல்லமையும் தேவையாகும்.

இக்குறிக்கோள்களை அடைய வேண்டுமானால் ஒவ்வொரு நாடுகளிலும் பின்பற்றப்படும் கொள்கைகளும், சீர்திருத்தங்களும் மக்கள் நலன் சார்ந்தவைகளாக இருந்திட வேண்டும். ஆனால், இன்றைய உலகில் பல நாடுகளில் உள்ள எதார்த்த நிலைமைகள் வர்க்க சுரண்டலை உக்கிரமாகக் கொண்டுசெல்லும் கொள்ளை லாபம் ஈட்டுபவர்களின் வழிகாட்டுதல்களின் கீழ் அமைந்துள்ளன. கொரோனா வைரஸ் பெருந்தொற்று நிலவும் இக்காலத்தில்கூட பல நாடுகளில் சமூகமுடக்கங்கள் ஏற்பட்டு பல லட்சக்கணக்கான மக்கள் வறுமை, பசி-பட்டினி, வேலையின்மை மற்றும் கையறுநிலைக்குத் தள்ளப்பட்டுள்ள காலத்தில்கூட, 16 அமெரிக்க பில்லியனர்களின் சொத்துக்கள் 2020 மார்ச்சில் இருந்ததைப்போல் குறைந்தபட்சம் இரட்டிப்பாகியுள்ளது. 2008 பொருளாதார மந்தம் ஏற்பட்டபின்னர், மூன்று ஆண்டுகளுக்குள்ளேயே பல பில்லியனர்கள் தங்கள் செல்வ வளத்தை 2018 வாக்கில் இரட்டிப்பாக்கிக்கொண்டுவிட்டனர். மறுபக்கத்தில், உலக அளவில் வருமானம் ஈட்டிவந்தவர்களில் 80 சதவீதத்தினர் 2008க்கு முன் தாங்கள் வாங்கிவந்த வருமானத்தை இன்னமும் எய்தமுடியாத நிலையிலேயே இருந்து வருகிறார்கள்.

உலகின் பல பகுதிகளில் பல லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களுக்காகவும், தங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும், தங்களின் ஜனநாயக மற்றும் குடிமை உரிமைகள் மீது ஏவப்பட்டுள்ள தாக்குதல்களுக்கு எதிராகவும் கடும் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் உள்ள நாங்கள் எங்கள் நாட்டின் செல்வத்தைத் தனியார் கார்ப்பரேட்டுகள் சூறையாடுவதிலிருந்து தடுப்பதற்காகவும், எங்கள் விவசாயத்தையும் விவசாயத்தில் அறுவடை செய்யப்பட்ட உணவு தான்யங்களை உலக வேளாண்-வர்த்தகப் பெரும்புள்ளிகளின் கொள்ளைகொண்டு போவதிலிருந்து பாதுகாப்பதற்காகவும், தொழிலாளர் வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் கடும் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), சிறந்ததோர் உலகத்தை உருவாக்க விரும்பும் அதே சமயத்தில், அதிலும் மிகவும் முக்கியமாக ஒரு சிறந்த வாழ்க்கை, சிறந்த சுகாதாரம், சிறந்த கல்வி, ஊட்டச்சத்து உலகில் உள்ள அனைவருக்கும் கிடைத்திட, உலகம் முழுதும் தங்கள் உயிர்வாழ்க்கைக்காகவும், தங்கள் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்காகவும் போராடிக்கொண்டிருக்கும் அனைத்து மக்களுக்கும் ஒருமைப்பாட்டை உரித்தாக்கிக் கொள்கிறது.

இந்த வாய்ப்பை எங்களுக்கு அளித்தமைக்காக, நூற்றாண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, சீனா மற்றும் அதன் மக்களின் வளர்ச்சியில் மாபெரும் வெற்றிகளை ஈட்ட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் எங்கள் சகோதர வாழ்த்துக்களை மீளவும் தெரிவித்துக்கொண்டு விடை பெறுகிறேன், நன்றி, வணக்கம்.

தமிழில்: ச.வீரமணி

 

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...