ஆப்கானிஸ்தானும் பூகோள அரசியலும்….–ச.லெனின்ப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் தலிபான் அமைப்பு தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. ஆப்கன் ஜனாதிபதி அஷ்ரப் கனி நாட்டைவிட்டு சென்றுவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மக்களை அச்சம் சூழ்ந்துள்ளது. பேருந்து, ரயில்களில் ஏறுவதுபோல் நெருக்கியடித்துக் கொண்டு, கிடைக்கும் இடங்களில் தொற்றிக்கொண்டு விமானங்களில் மக்கள் ஏறி வெளியேறும் காட்சிகள்ஊடகங்களில் காட்டப்படுகின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு நாட்டைவிட்டு வெளியேறுவது நல்லதுதான். ஆனால் அதற்கான மாற்று தலிபான்கள் அல்ல. காலம் எதையும் தேக்கிவைப்பதில்லை. தலிபான்கள் போன்றே அனைத்து மத அடிப்படைவாதங்களுக்கும் இது பொருந்தும்.  

மீண்டும் தலிபான்களிடம்
அமெரிக்க இராணுவமும்  அது தலைமைதாங்கும் கூட்டுப்படையான நேட்டோ படையும் இம்மாதத்துக்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக  வெளியேறும் என்று அமெரிக்க ஜனாதிபதி பைடன் மீண்டும் மிகத்தெளிவாக அறிவித்துள்ளார். கடந்த 2001 செப்டம்பர் 11 அன்று அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்கப்பட்டது. இந்த தீவிரவாத தாக்குதலுக்கு அல்கொய்தா அமைப்புதான் காரணம் என்றும் அதுபாதுகாப்பாக இயங்குவதற்கான தளமாக தலிபான்களின் ஆட்சியின் கீழ் இருந்த ஆப்கானிஸ்தான் இருந்தது என்றும் அமெரிக்கா குற்றம் சாட்டியது. பிறகு தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்கிற முழக்கத்துடன் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த அமெரிக்க இராணுவம், தலிபான்களை ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்றியது. அதற்கு தேவையான ஒரு பொம்மை ஆட்சியையும்அங்கு அமைத்தது. அல்கொய்தாவின் தலைவர் ஒசாமாபின்லேடனை கொன்ற பிறகும் கடந்த இருபதாண்டுகளாக  தனது படையையும் அமெரிக்கா அங்கு  நிலைநிறுத்தி வைத்திருந்தது. அமெரிக்கா அங்கிருந்து முழுமையாக வெளியேறுவதற்கு முன்பே எந்த தலிபான்களை அகற்றுவதற்காக அங்கு செல்வதாக சொன்னதோ அதே தலிபான்களிடம் ஆப்கானிஸ்தானை கையளித்துவிட்டு வெளியேறியுள்ளது.

ஆப்கன் அரசிற்கும் தலிபான்களுக்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஏற்பாடு செய்து அதில் சில ஒப்பந்தங்களை  முன்மொழிந்துள்ளது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் உள்ள அடிப்படையில் அரசுத்தரப்பிற்கும் தலிபான் குழுவிற்கும் இடையே இணக்கம் ஏற்படவில்லை. இதை ஏற்றுக்கொண்டால் ஏற்றுக்கொள்ளுங்கள் இல்லாவிட்டால் எப்படியாவது செல்லுங்கள் என்று அமெரிக்க ஒதுங்கிக்கொண்டது. அதேநேரம், தலிபான்களிடம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி எந்த தாக்குதலும் இல்லாமல் அமெரிக்க படை வெளியேறுவதற்கான ஏற்பாடுகளை அது செய்து கொண்டுள்ளது. தாக்குதல் இல்லாமல், மக்கள் அவதிப்படாமல் அவர்கள் வெளியேறியது நல்லதுதான். தங்களின் தனிப்பட்ட நலன்களில் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதில் எப்போதும் அமெரிக்கா கவனத்தோடுதான் உள்ளது என்பதையே இது காட்டுகிறது.

இருபது ஆண்டுகள்
ஆப்கானிஸ்தானைவிட்டு அமெரிக்கா வெளியேறும் அறிவிப்பை ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்தபோது, சிலர் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு என்னவாகும்? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு “அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருபது ஆண்டுகள், ஆம் இருபதாண்டுகள் இருந்துள்ளது” என்று பதில் அளித்தார். கடந்த இருபது ஆண்டுகளில் இரண்டு டிரில்லியன் டாலர்கள் செலவு செய்யப்பட்டுள்ளது. 2314 படை வீரர்கள் இறந்துள்ளனர். சுமார் 47,000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வளவு இழப்புகளுக்கு பிறகும்,  அமெரிக்காவால் தலிபான்களின் தீவிரவாதத்தையும் ஒழிக்க முடியவில்லை, ஒரு சாதாரண சமரச ஒப்பந்தத்தையும் அங்கு அவர்களால்  ஏற்படுத்தமுடியவில்லை என்பதையே மேற்கண்ட நிலவரங்கள் தெளிவுபடுத்துகின்றன. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியவுடன் தலிபான்களின் கட்டுப்பாட்டிற்கு அத்தேசம் சென்றுவிட்டதே? என்ற கேள்விக்கு, ஜோ பைடன் சொல்கிறார் “ஆப்கன் மக்கள் தங்களுக்கான போராட்டத்தை தாங்களே மேற்கொள்ள வேண்டும்” என்று. உண்மைதான், நிச்சயம் ஆப்கன் மக்கள் அதை செய்வார்கள். பிறகு எதற்கு இத்தனை ஆண்டுகள் அமெரிக்க படை அங்கு முகாமிட்டிருந்தது?

தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற முழக்கத்துடன்தான் அமெரிக்கா 2001 -ல் ஆப்கானிஸ்தானிற்குள் நுழைந்தது. எங்களோடு அணி சேராதவர்கள் அனைவரும் தீவிரவாதத்திற்கு ஆதரவானவர்கள் என்று அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி புஷ்கூறினார். தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறிக்கொண்டபோதும், அமெரிக்க பெரு முதலாளிகளின் நலன் சார்ந்த அம்சங்களையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தினுடைய ஆதிக்க செயல்முறையின் பூகோள அரசியலையுமே இந்நடவடிக்கைகள் பிரதானமாக கொண்டிருந்தன. இராக்கில் நுழைந்து அந்நாட்டை நிர்மூலமாக்கி எவ்வித பொறுப்பையும் ஏற்காமல் அம்மக்களை நிர்கதியாக ஆக்கிவிட்டு அங்கிருந்து அமெரிக்கா அகன்றது. அதுவே ஆப்கனிலும் தற்போது
நிகழ்ந்துள்ளது.

ஆப்கனும் வியட்நாமும்
சில ஊடகங்கள், அமெரிக்கா ஆப்கனைவிட்டு வெளியேறுவதையும் வியட்நாமைவிட்டு அது துரத்தியடிக்கப்பட்டதையும் ஒப்பிட்டு எழுதுகின்றன. அத்தகைய ஒப்பீடு, ஒன்று அரசியல் அப்பாவித்தனமானதாக இருக்க வேண்டும் அல்லது உள்நோக்கம்கொண்ட அரசியல் பார்வையாக இருக்க வேண்டும். உலகில் எங்கு கம்யூனிசம் பரவினாலும் அதை அழிக்கும் வேலையில் ஈடுபடுவதே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வாடிக்கை. அந்த வகையில் வியட்நாம் போரில் அமெரிக்கா ஈடுபட்டபோது வியட்நாமின் வடக்குபகுதி கம்யூனிஸ்ட்டுகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.வியட்நாமின் தலைநகரான சைகோனை உள்ளடக்கிய வியட்நாமின் தெற்கு பகுதியை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஒரு நீண்ட போராட்டத்திற்கு பிறகு வலுவான அமெரிக்க ராணுவத்தையும் அதன் அதிநவீன ஆயுதங்களையும் வியட்நாமின் உழைக்கும் மக்கள் எதிர்கொண்டு முறியடித்தனர். 1975 ஏப்ரல் 30 அன்று அமெரிக்க ராணுவத்தை வீழ்த்தி வியட்நாமைவிட்டு துரத்தியடித்தனர். ஆனால், ஆப்கனின் பிற்போக்கு சக்திகளான தலிபான்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அகன்றுள்ளது அமெரிக்கா. அரசியல் ஆதாயங்களை கணக்கில் கொண்டே  ஒரு நாட்டிற்குள் நுழைவதையும் வெளியேறுவதையும் அமெரிக்கா செய்கிறது. ஆப்கனிலிருந்து அமெரிக்கா மிக அணுக்கமாக பேச்சுவார்த்தை நடத்திவெளியேறியுள்ளது, வியட்நாமிலிருந்து அது துரத்தியடிக்கப்பட்டது. ஆப்கன் மத தீவிரவாத பிற்போக்கு தலிபான்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது, வியட்நாம்புரட்சியின் மூலம் சமூக வளர்ச்சியின் அடுத்தகட்டத்திற்கு பயணித்தது.

தலிபான்களும் அமெரிக்காவின் வளர்ப்புதான். சோவியத் ரஷ்யாவின் ஆதரவுடன் செயல்பட்டுவந்த ஆப்கன் அரசுக்கு எதிரான சக்திகளை அமெரிக்கா வளர்த்தெடுத்தது. அப்படி அமெரிக்காவால் ஆப்கனில் வளர்க்கப்பட்ட முஜாஹிதின் இயக்கத்தின் வழித் தோன்றல்கள்தான் இந்த தலிபான்களும். இராக்கில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக அமெரிக்காவால் வளர்க்கப்பட்டவர்தான் சதாம் உசேனும், அல்கொய்தாவும் அதன் ஒசாமா பின்லேடனும் அந்த வழிவந்தவர்கள்தான். கம்யூனிச எதிர்ப்பும் அமெரிக்காவின் பூகோள அரசியலையும் மையமிட்டே இந்த நடவடிக்கைகளை அது தொடர்ந்து செய்துவந்துள்ளது. முன்பு ரஷ்யாவிற்கு எதிரான செயல்வடிவமாக அது செய்துவந்த பூகோள அரசியலை தற்போது சீனாவிற்கு எதிராக செய்துவருகிறது.

 பூகோள அரசியல்
ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் ஆப்கனில் போர் நிறுத்தத்தை முன்னேற்றி நீண்டகால அமைதியை நனவாக்க பாடுபடும் என்று சீனாகூறியுள்ளது. ஆப்கனில் ஒரு அரசியல் தீர்வை ஏற்படுத்திட பல நடவடிக்கைள் முன்பே மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஜுலை 13, 14 ஆகிய தேதிகளில் ஆப்கன் விவகாரம் குறித்து விவாதிக்க ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் கூட்டம் ஒன்று தாஜிக்ஸ்தானில் நடைபெற்றுள்ளது. இக்கூட்டமைப்பில் ஆப்கனை சுற்றியுள்ள ஆறு அண்டை நாடுகளான ரஷ்யா, சீனா,இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்டு மத்தியஆசியக் குடியரசு நாடுகளான தாஜிக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் கஜக்ஸ்தான் ஆகியவை உள்ளன. ஆப்கனும் ஈரானும் இவ்வமைப்பில் பங்கேற்பாளராக உள்ளன. ஆப்கனில் அமெரிக்காவின் தலையீடும் அதன் நீடித்த ராணுவ நிலைநிறுத்தலையும் ஆப்கனை சுற்றியுள்ள இந்த நாடுகளை உள்ளடக்கிய அமெரிக்காவின் பூகோள அரசியலை எளிதாக விளக்கிடும். ஷாங்காய் கூட்டுறவு அமைப்பில் இந்தியா உள்ளபோதும் அமெரிக்காவை சார்ந்த வெளியுறவுக்கொள்கை ஒரு உறுதியான நிலைபாட்டை எடுப்பதிலிருந்து இந்திய அரசை தடுக்கிறது.  முந்தைய அனுபவத்திலிருந்து பார்க்கும்போது, பிற்போக்கு இஸ்லாமிய மத பழமைவாதத்தை அமுலாக்கும் வேலைகளையே தலிபான்கள் செய்வார்கள் என்று கூறப்படுகிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் முந்தைய காலத்தில் கடுமையான கட்டுப்பாடுகளுக்குள்  முடக்கப்பட்டிருந்தனர்.

தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் சுகைல் ஷாகின்ப் பிபிசி ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் “நாங்கள்இஸ்லாமிய ஆட்சியை அமைக்க விரும்புகிறோம். நாங்கள் பெண்களுக்கான உரிமையை மதிப்போம்.பெண்கள் தனியாக வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பெண்கள் கல்வி கற்கவும், வேலைக்குச் செல்லவும் அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் ஹிஜாப் அணியும் பழக்கத்தை கடைப்பிடிப்பார்கள்” என்று கூறியுள்ளார். இதில் முதல் மற்றும் கடைசி வரியைதவிர மற்றவைகளில் தலிபான்களின் மாற்றத்தை வரவேற்கலாம். ஆனால் இது எந்த அளவிற்கு அமலாக்கப்படும்? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே. அமெரிக்காவின் மோசமான கொள்கையின் விளைவாக மீண்டும் தலிபான்களிடம் சிக்கியுள்ள ஆப்கன் மக்களை பாதுகாக்கும் வழிவகைகளை கண்டடையவேண்டியுள்ளது. அதற்கு இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா உள்ளிட்ட அண்டை நாடுகளின் கூட்டு முயற்சியுடன் கூடிய ராஜிய ரீதியான தலையீடுகளே தற்போதைய தேவையாகியுள்ளது.

ஆப்கனிலிருந்து அமெரிக்கா எந்த நல்லெண்ணத்தோடும் வெளியேறவில்லை. ஈரான், சிரியா, ஆப்கனை அடுத்து அது தனது கொடூரமான கால்தடத்தை வேறுஇடத்தில் பதிக்கும். ஆப்கனை தலிபான்களிடம் மீண்டும் கையளித்திருப்பதிலும் அமெரிக்காவில் அரசியல் கணக்கு இல்லாமல் இல்லை. தலிபான்களிடம் அதிகாரம் செல்லும் போது, ஆப்கனுடன் அதன் அண்டைநாடுகள் இணக்கமாக செல்லும் வாய்ப்பு குறையும் என்று அது கருதுகிறது. இதன் விளைவாக மத்திய ஆசியாவில் ஒரு நிலையற்ற சூழலை உருவாக்கும் கணக்கும் அமெரிக்காவிற்கு உண்டு.

-தீக்கதிர்
2021.08.19

source: chakkaram.com

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...