புத்தம் புது காலை : ஓகஸ்ட் புரட்சியை தொடங்கிவைத்த இரு கலகக்காரர்கள்!

டாக்டர் சசித்ரா தாமோதரன்

இன்று… ஓகஸ்ட் 9

79 ஆண்டுகளுக்கு முன், இதேபோல ஒரு ஓகஸ்ட் 9 அன்றுதான், இந்திய மண்ணின் அடிமை இருளைப் போக்க, ஒரு புதிய புரட்சி பேரொலியுடன் வெடித்தது. அது, வெள்ளையர்களை வெளியேறச் சொல்லி பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் ஒன்றாய்ச் சேர்ந்து முழங்கிய ‘வெள்ளையனே வெளியேறு’ புரட்சி.

இந்தியாவுக்கு சுதந்திரம் காந்தியால் கிடைத்தது என்பார்கள். ஆனால் காந்தியடிகள் தொடங்கிய ஓகஸ்ட் போராட்டத்திற்கு பெயர் வைத்த ஒருவரும், காந்தியடிகள் சிறையிலிருந்தபோது, அந்த சுதந்திர நெருப்பை கொழுந்துவிட்டு எரியச்செய்த இன்னொருவரும் என இரு ‘கலகக்காரர்கள்’ நம் விடுதலைக்கு முக்கியப் பங்காற்றியதை பற்றித்தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

அப்படி என்னதான் நடந்தது 1942-ல்?

1942 ஆரம்பத்தில் அமெரிக்க மற்றும் பிரிட்டன் படைகளைத் தாக்கி ஜப்பான் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட் இந்திய மக்களுக்கு அதிக அதிகாரம் தரவேண்டி கொடுத்த அழுத்தத்தினால் வின்ஸ்டன் சர்ச்சில், சர் ஸ்டஃபோர்ட் கிரிப்ஸ் தலைமையில் ஒரு தூதுக்குழுவை இந்தியாவுக்கு அனுப்பி இந்திய தேசிய காங்கிரஸ், முஸ்லிம் லீக் உட்பட அனைத்து கட்சிகளையும் சந்திக்கச் செய்தார்.

ஆனால், இரண்டாம் உலகப்போரில் தங்கள் பக்கத்தை வலுவாக்க இந்திய வீரர்களைப் பயன்படுத்த இங்கிலாந்து திட்டமிருந்ததால், கிரிப்ஸ் குழு சுதந்திரம் அளிப்பதற்கான முன்மாதிரி ஏற்பாடுகளை மட்டும் செய்வதாக பம்மாத்து செய்கிறது. முழுமையான சுதந்திரத்தை எதிர்பார்த்திருந்த இந்தியக் காங்கிரஸ் ஏமாற்றத்தால் அதை மறுக்க, பாகிஸ்தான் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லாததால் முஸ்லீம் லீக் அதை மறுக்க, இந்தியத் தலைவர்களுடன் கிரிப்ஸ் திட்டக்குழு நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி அடைகிறது.

ஏற்கெனவே 1939-ல் இந்தியர்களின் கருத்தைக் கேட்காமல் இந்தியாவும் தங்களுடன் போரில் இருப்பதாக வைஸ்ராய் சொன்னதில் வருத்தத்தில் இருந்த இந்தியத் தலைவர்கள், இப்போது இங்கிலாந்துடன் ஒரு அடிமையைப் போல போரில் பங்கேற்க மாட்டோம் என்று மறுக்கிறது.

இதேசமயம் மலேயா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, பர்மா போன்ற நாடுகளை கைவசப்படுத்திய ஜப்பான் அடுத்து இந்தியாவை நோக்கி நகர ஆரம்பிக்க, ஆங்கிலேயர்கள் இந்திய மண்ணில் இருக்கும்வரை மற்ற நாடுகளின் படையெடுப்பும், ஆபத்துகளும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்பதை உணர்ந்த காந்தியடிகள், இந்தியாவைக் காப்பாற்ற நமக்கு பூரண சுதந்திரம் கிடைக்க வேண்டி தொடங்கியது தான் ‘வெள்ளையனே வெளியேறு’ எனும் Quit India Movement.

போராட்டத்திற்கு ஒரு தினம் முன்பாக, 1942-ம் ஆண்டு, ஓகஸ்ட் 8-ம் தேதியன்று, மும்பை கௌவாலியா டாங்க் மைதானத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின்போது, மறுநாள் அனைவரும் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளைத் தெளிவுபடுத்தும் விதமாக உரையை நிகழ்த்தினார் மகாத்மா.

தனது உரையை ‘செய் அல்லது செத்துமடி’ என்று அப்போது துவக்கிய மகாத்மா, “அடிமைத்தனத்தை களைந்து அனைவருக்கும் சமத்துவமும், நமது மண்ணுக்கு பரிபூரண சுதந்திரமும் கிடைக்க, அகிம்சை முறையில் போராட உங்கள் ஒவ்வொருவரையும் அழைக்கிறேன்” என்று கூறி, மறுநாள் நாடெங்கும் நடக்கவிருக்கும் போராட்டத்திற்கான சிறந்த வாசகம் ஒன்றை முன்வைக்குமாறு போராட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறார்.

Retreat, Withdraw, Get Out என்ற பல முழக்கங்களை, வல்லபாய் பட்டேல், ராஜாஜி உட்பட பலரும் பரிந்துரைக்க, அப்போது அந்த 39 வயது காந்தியவாதி எழுந்து நின்று, ‘Bharat Chodo’, ‘Quit India’ என்று முழங்க காந்தியடிகள் அதற்கு மகிழ்வுடன் ‘ஆமென்’ என்று ஆமோதித்தாராம்.

ஆனால், மறுநாள் காலை ஓகஸ்ட் 9-ம் தேதி போராட்டம் துவங்கிய போதே அதை முடக்க மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, வல்லபாய் பட்டேல், அப்துல் கலாம் ஆசாத் உள்ளிட்டவர்களைக் கைது செய்கிறது.

ஓகஸ்ட் புரட்சி

அப்போது சிறிதும் கலங்காமல் ஒரு 33 வயதுப் பெண்மணி, காந்தியடிகள் உரை நிகழ்த்திய அதே கௌவாலியா டாங்க் மைதானத்தில், காங்கிரஸ் கொடியை ஏற்றிவைத்து, ‘வெள்ளையனே வெளியேறு’. ‘பாரத் சோடோ’ என்ற கோஷத்துடன் போராட்டத்தைத் துவக்கி வைக்க நாடெங்கும் சுதந்திர வேட்கையை பற்ற வைக்கிறது இந்த ஓகஸ்ட் புரட்சி.

அடுத்த ஓரிரு நாட்களில் நாடு முழுவதும் மூத்த தலைவர்கள் யாரும் இல்லாமலேயே சுதந்திரப் போராட்டம் இன்னும் வலுவடைகிறது. ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு சிறிதும் கலங்காமல், மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடினர். அறவழியில் தொடங்கிய போராட்டம் பல இடங்களில் வன்முறையாக மாறியது. இரயில் தண்டவாளங்கள், தந்திக் கம்பிகள், அரசு கட்டடங்கள் சேதப்படுத்தப்பட்டன. லட்சக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் வீர மரணமடைந்தனர்.

ஆனால், அன்று விதைக்கப்பட்ட விடுதலை எனும் நெருப்பு பெரும் வேள்வியானது. அப்போதைக்கு ஓரிரு மாதங்கள் போராட்டம் முடக்கப்பட்டது என்றாலும் ஐந்து ஆண்டுகள் கழிந்து, அதே ஓகஸ்ட் மாதத்தில்தான் இந்தியா சுதந்திர நாடாக உருவானது.

இதோ…

‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் 79 ஆண்டுகள் இன்றோடு நிறைவடையும் இந்த நாளில், விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில், நாடெங்கும், ‘ஓகஸ்ட் க்ராந்தி’ கொண்டாடப்படுகிறது. அப்படிப்பட்ட இந்த ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற போராட்டத்திற்கு பெயர் வைத்தது ஒரு கலகக்காரன் என்றால், காந்தியையே கைது செய்தாலும் கலங்காமல் அதே மைதானத்தில் காங்கிரஸ் கொடியேற்றி, சுதந்திர நெருப்பைப் பற்ற வைத்த கலகக்காரி இருவரும் நமது வரலாற்றில் முக்கியமானவர்கள் அல்லவா… அவர்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

யூசுப் மெஹெரெலி

அந்த 39 வயது ஆண் யூசுப் மெஹெரெலி. பம்பாயின் முதல் நூற்பு ஆலையை நிறுவி நடத்திவந்த பெரும் குடும்பத்தில் பிறந்து, பட்டங்கள் பெற்று, பிறகு நாட்டிற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். பம்பாயின் மேயராகப் பொறுப்பேற்று, தனது மக்களுக்காகப் போராடியவர். ‘சைமன் கோ பேக்’ மற்றும் ‘க்விட் இந்தியா’ என்ற கோஷங்களை இயற்றியதோடு மட்டுமன்றி அவற்றை செயல்படுத்தும் போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். ஒத்துழையாமை இயக்கம், உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என அனைத்திலும் இளைஞர் அணியின் தலைவராக முன்னின்று பலமுறை சிறை தண்டனையையும் அனுபவித்தவர். சிறையிலேயே மாரடைப்பு ஏற்பட்ட போதிலும், மருத்துவமனைக்கு செல்லாமல் பிடிவாதமாக நின்று சுதந்திர இந்தியாவைக் காணும் முன்பே மரணத்தை தழுவியவர்

“சுதந்திரம் என்ற ஜன்னலின் வழியாக நமக்குள் பரவும் வெளிச்சத்தில், கண்ணியமும், மனித நேயமும் காக்கப்படட்டும்” என்பது யூசுப் மெஹெரெலி அவர்களின் பார்வை.

அருணா ஆசஃப் அலி

அந்த 33 வயதுப் பெண், அருணா ஆசஃப் அலி. வங்காள மாநிலத்தில் ஒரு உணவகம் நடத்தி வந்த குடும்பத்தில் பிறந்து, பட்டம் பெற்று, ஆசிரியராகப் பணியாற்றியவர். பின்னர், ஆசஃப் அலி என்ற விடுதலைப் போராட்ட வீரரை மணந்து, தன்னை நாட்டிற்காக அர்ப்பணித்துக் கொண்டவர். இன்குலாப் பத்திரிக்கையின் ஆசிரியராக பொறுப்பு வகித்தவர். உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியவற்றில் முன்னின்று சிறை தண்டனையும் ஏற்றவர். சுதந்திர இந்தியாவைக் கண்டு மனதார ரசித்தவர். பின்னர் டெல்லியின் மேயராகப் பொறுப்பு வகித்து, மரணம் வரை மகளிர் நலனுக்காக உழைத்தவர்.

“மனிதர்களின் சிந்தனை வெளிக்குள் புதைந்திருக்கும் நம்பிக்கை எனும் விதைகள் மரணமடைவதேயில்லை. அவை ஒரு ஃபீனிக்ஸ் போல தன்னைத் தானே மீண்டும் மீண்டும் உயிர்ப்பித்துக் கொள்ளும். இந்த நம்பிக்கை விதைகள், சூரியனைப் போல சுடர்விட்டு பிரகாசிக்கையில்… நாம் அதன் வெளிச்சத்தில் பல புதிய சொர்க்கங்களைப் படைத்திருப்போம்!” என்பது அருணா ஆசஃப் அலியின் பார்வை..

இந்த இருவருமே காந்தியடிகளின் அரசியல் குழந்தைகள் என்றாலும், கார்ல் மார்க்ஸின் தத்துவக் குழந்தைகள் என்று அழைக்கப்பட்டவர்கள்!

ஓம், மாபெரும் வீரர்களால் மட்டுமல்ல… வெகு சாதாரணர்களாலும் நிகழ்ந்தது தான் நமது சுதந்திரம்!

வரலாற்றின் வாகனங்களாகத் திகழ்வது போராட்டங்களே!

-கார்ல் மார்க்ஸ்

source:chakkaram.com

No comments:

Post a Comment

UK Tory Party threatens war against Russia, prepares class war at home By Thomas Scripps

  Warning Russian President Vladimir Putin of “what could be a very, very bloody war”, UK Defence Secretary Ben Wallace announced yesterday ...