இன்றைய கொரோனா காலத்தில் உலவுகின்ற ஆதாரமற்ற வீண்வதந்திகளை நாம் நிராகரிக்க வேண்டும்!

 

‘இன்றைய கொரோனா காலத்தில் உலவுகின்ற ஆதாரமற்ற வீண்வதந்திகளை நாம் நிராகரிக்க வேண்டும். உள்ளத்தில் நம்பிக்கையைகட்டியெழுப்ப வேண்டும்’ என்று ஆலோசனை கூறுகின்றார் நிதியமைச்சின் தேசிய உளவளத்துணை நிலையத்தின் சிரேஷ்ட உளவியல் உளவளத்துணை ஆலோசகர் மனூஸ் அபூபக்கர். அவர் வழங்கிய விசேட பேட்டியில் இதனைத் தெரிவித்தார்.

கேள்வி: கொவிட் 19, டெல்டா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் உளவியல் ரீதியாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். எதிர்காலம் குறித்த நம்பிக்கையற்ற தன்மை அவர்களின் இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்துள்ளது. இந்த இக்கட்டான காலப் பகுதியில் மக்கள் தங்களது மனநிலையை எவ்வாறு அமைதியாக வைத்துக் கொள்ளலாம்?

பதில்: உண்மையில் ஒரு பேரிடர் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். மக்களின் பொருளாதாரம், பிள்ளைகளின் கல்வி, உணவு,பொதுப் போக்குவரத்து, அரச நிர்வாக கட்டமைப்பு, சமூக ஒன்றுகூடல் என எல்லாமே கேள்விக்குறியாகியுள்ள காலத்தில் நாம் வாழ்கிறோம். தற்போது மக்கள் மத்தியில் அடுத்து என்ன நடக்குமோ என்ற பயமும், சந்தேகமும் மக்களது மனநிலையை மாற்றியமைத்துள்ளன. கேள்விப்படுகின்ற செய்திகள், தகவல்கள் எல்லாமே எதிர்மறையாகவே சிந்திக்கத் தூண்டியுள்ளன. இக்காலப் பகுதியில் அதிகமான நேரத்தை வீட்டில் குடும்பத்தோடு கழிக்கிறோம். சாதாரண காலங்களில் நமது வீட்டிற்கென ஒதுக்கப்படும் நேரம் வெகு சொற்பமானதே. எனவே மகிழ்ச்சியான மனப்பாங்கை எங்கள் உள்ளத்தில் ஏற்படுத்தினால் அது எமது உடல், உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

கேள்வி: எப்படி அதனை ஏற்படுத்தலாம்?

பதில்: நான் நலமாக உள்ளேன். இந்த கொடிய வைரஸை எதிர்கொள்ளும் சக்தி எனக்கு உண்டு. இறுதி வரையும் நோய்க்கு எதிராக போராடுவேன். இந்த நோய்த் தாக்கத்திலிருந்து மீண்டு வருவேன்… இவை போன்ற நம்பிக்கை தரும் சிந்தனைகளை எமது உள்ளத்தில் மீண்டும் மீண்டும் அசைபோடச் செய்ய வேண்டும். அது எமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதேபோன்று துன்பப்படும் மக்களின் துயர் துடைக்க வேண்டும். அல்லல்படும் மக்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறுவது கூட ஒரு வகையில் துன்பத்தில் பங்கெடுப்பதுதான். மற்றவர்களை உற்சாகப்படுத்தும் ஊக்கப்படுத்தும் பேச்சுகளை அடிக்கடி பேச வேண்டும். தேவையுடையோருக்கு நிறைவான உதவி செய்ய வேண்டும். இவைகளை விடுத்து சமகால விடயங்களில் அடுத்தவர்களின் கருத்துக்கள், அபிப்பிராயங்களைக் கேட்பது. ஆதிகமாக சிந்திப்பது, உறுதிப்படுத்தப்படாத செய்திகளை நம்புவது, அதனைப் பகிர்வது எமது மனநிலையைப் பாதிக்கும். கொரோனா பற்றி, தடுப்பூசி தொடர்பாகவெல்லாம் விஞ்ஞான ரீதியற்ற கதைகள் பல வலம்வருகின்றன. அதனை நம்புவது கூட நமது மனநிலையைப் பாதிக்கும்.

உளவியல் ரீதியாக பார்ப்போமானால் நம்பிக்தை தரும் சிந்தனை அவசியம். மாறாக எதிர்மறைச் சிந்தனையை தவிர்க்க வேண்டும். பயம், பதற்றம், நம்பிக்கையீனம் நம்மை தேடி வந்து உளநெருக்கீட்டைத் தோற்றுவிக்கும். எனவே எந்தச் சந்தர்ப்பத்திலும் நாம் மனம் தளராமல் உள உறுதியோடு தைரியமாக எதனையும் எதிர்கொள்ளும் வல்லமையுள்ளவர்களாக மாற வேண்டும். நம்மில் அதிகமானவர்கள் கொரோனாவின் இறப்பைப் பற்றியே பேசுகின்றோம். ஏன் கொரோனாவினால் குணமடைந்தவர்களைப் பற்றி பேசுவதில்லை? இலங்கையில் ஓகஸ்ட் 26 வரை 412,370 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். ஆனால் 351,069 பேர் குணமடைந்துள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 8,157 ஆக உள்ளது. இதுதான் யதார்த்தம்.

கேள்வி: தற்பொழுது வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை, ஒட்சிசன் தட்டுப்பாடு, 60 வயதுக்கு மேற்பட்டோரின் மரண வீதம் அதிகரிப்பு, நாடு முடக்கம் என்றபடி நிலைமை உள்ளது. மக்களை அச்சத்திலிருந்து எவ்வாறு மீட்பது?

பதில்: இறுதியாக உருமாறி வந்திருக்கின்ற வைரஸ் வீரியம் கூடியது மட்டுமன்றி, வேகமாக பரவக் கூடியதாகவும் காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில் நோயின் அடிப்படை இன்னும் கண்டறிப்படாததும், அதற்குரிய மருத்துவ முறைகள் என்னவென்று நிர்ணயிக்கப்படாமல் உள்ளதும், வெளிவரும் வதந்திகளும்தான் இப்பயத்துக்குக் காரணம். இது இயல்பான பயத்தினை விட வித்தியாசமானது. இன்று சாதாரண தடிமன், காய்ச்சல், தலைவலி, உடல் நோவு என்றாலே மருத்துவரை நாடுகின்ற அளவுக்கு நிலைமை உள்ளது. இன்னொரு பக்கம் கடுமையான நோயாளியை வீட்டில் வைத்து நோயை தீவிரப்படுத்துவதும் நடந்து கொண்டிருக்கிறது. காரணம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றால் கொரோனா என அடையாளப்படுத்தி நம்மை தனிமைப்படுத்தி விடுவார்கள் என்ற பயம். அதனை அறிவியல் பூர்வமாக அணுக வேண்டியுள்ளது.

நாட்பட்ட தொற்றாத பாரிய உடல் நோய்களுக்கு பயப்படாதவர்கள் கூட இருமலுக்கும், தும்மலுக்கும் பயந்து ஒதுங்கும் மனப்போக்கினை கொரோனா வைரஸ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் உளவியலில் ஒரு உண்மை இருக்கிறது ‘ஒரு நோய் பற்றிய அதிக பயமே அந்த நோய் வரக் காரணமாக அமைந்து விடுகிறது’ இது உளவியலாளர்களின் ஆராய்ச்சி முடிவாகும்.

முக்கியமாக தனிமையைத் தவிர்க்க வேண்டும். தற்பொழுது நாம் வீட்டில் இருக்கிறோம். தனித்திருக்காமல் வீட்டிலுள்ளவர்களோடு சந்தோசமாக சேர்ந்திருப்போம். அடுத்தவர்களுடன் அன்பான முறையில் தொடர்பாடலை மேற்கொள்வோம். பயம் ஏற்பட்ட நபரின் உணர்ச்சிகளை மதிப்போம். அதனைக் குறைத்து மதிப்பிடாமல, உணர்வுகள் வெளிகொணர களம் அமைத்துக் கொடுப்போம். தேவையற்ற உறுதிப்படுத்தப்படாத செய்திகள், வதந்திகள் பகிரப்படுவதை தவிர்ப்போம். புதிய ஆக்கத்திறன் மிக்க செயற்பாடுகளில் ஈடுபடுவோம். இறை வழிபாடு, வீட்டில் கூட்டுப் பிரார்த்தனை, தியானம், யோகா, அப்பியாசம் மற்றும் மூச்சுப் பயிற்சிகளில் ஈடுபடுவோம். இவை நமக்கு ஏற்படும் பயத்தினைப் போக்கும்.

இக்காலப் பகுதியில் சிறுவர்கள் நம்மோடு வீட்டில் இருக்கிறார்கள். அவர்களது உள ஆரோக்கியத்திலும் நாம் கவனம் செலுத்துவோம். குறிப்பாக வீட்டிலுள்ள பெரியவர்கள் பயந்தால் அது வைரஸ் போன்று குழந்தைகளையும் தொற்றிக் கொள்ளும். எனவே நாம் தேவையற்ற அச்சத்திலிருந்து விடுபடுவது நம்மையும் நமது குழந்தைகளையும் பாதுகாக்கும்.

chakkram.com

No comments:

Post a Comment

இடதுசாரிகளுக்கு என்ன ஆயிற்று?- கு.பாஸ்கர்

நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது நா முதலாளித்துவத்தின் உச்சகட்ட ஜனநாயக அமைப்பு முறைகளுள் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் இப்படிப்பட்ட ...