பெகாசஸ்: எதேச்சாதிகாரத்தின் இணைய வழி ஆயுதம்--பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்[நடைபெற்றிருக்கும் சம்பவங்களின் காலவரிசையிலிருந்து இஸ்ரேலுடனான புதிய பாதுகாப்புக் கூட்டுச்செயல்பாடு என்பது மோடியின் பயணத்திற்காக 2017மார்ச் மாதத்தில் அஜித் டோவல் சென்றிருந்தபோதே, என்.எஸ்.ஓ (N.S.O)-உடன் புதிய பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கக்கூடும் எனத் தெரிகிறது.]

பெகாசஸ் (Pegasus) வேவு மென்பொருள் (spyware) ஊழல், நாட்டுமக்களின் அந்தரங்கத்திற்குள் மூக்கை நுழைக்கும் ஒரு வழக்கோ, அல்லது சட்டவிரோதமான ஊடுருவலோ, அல்லது உளவு ஸ்தாபனங்களின் வேவு வேலையோ மட்டுமல்ல. பெகாசஸ் ஒரு ராணுவ வேவு மென்பொருளாகும். அது இணையதளங்களில் ஊடுருவி வேவு பார்ப்பதை புதிய மட்டத்திற்கு எடுத்துச்சென்றிருக்கிறது. இதன் முழுமையான சித்திரத்தை எவரும் தெளிவாகப் பார்க்க முடியாது.

பாஜக அரசாங்கம் கடந்த ஏழு ஆண்டு காலமாகக் கட்டியெழுப்பியுள்ள பெரிய அளவிலான எதேச்சாதிகார கட்டமைப்பின் ஓர் அங்கம்தான் பெகாசஸ் பயன்பாடுமாகும். இதன் செய்தி கூறுவது என்னவெனில், எதேச்சாதிகார இந்துத்துவா ஆட்சியை நிறுவிடவும் ஒருங்கிணைத்திடவும் எந்த வழியையும் அது பின்பற்றும் என்பதேயாகும். பீமா கொரோகான் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் கணினிகளில் தீம்பொருள்களை (malware) விதைத்து, அதனை சாட்சியமாகக் கொண்டு அவர்கள்மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச்சட்டத்தின்கீழ் வழக்கு தொடுத்ததைப்போலவே, அமலாக்கத் துறையினரும், இதர ஒன்றிய புலனாய்வு அமைப்புகளும் தங்களுக்கு வேண்டாதவர்களை மிரட்டிப் பணிய வைப்பதற்காகவும், சிறைப்படுத்துவதற்காகவும் பெகாசஸ் வேவு மென்பொருள் அரசியல் எதிரிகளுக்கு எதிராக ஏவப்படும் ஓர் இணைய வழி ஆயுதமாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றன.

இஸ்ரேல் நிறுவனமான என்.எஸ்.ஓ என்பதனால் உற்பத்தி செய்யப்படும் பெகாசஸ் வேவு மென்பொருள் இந்தியாவில் பயன்படுத்தப்படுவதாக வெளிச்சத்திற்கு வந்திருப்பது எதைக் காட்டுகிறது?

பிரெஞ்சு ‘அரசு சாரா நிறுவனம்’ ஒன்றிற்கு என்.எஸ்.ஓ அளித்திட்ட தரவுகளிலிருந்து, உலக அளவில் கசிந்துள்ள 50 ஆயிரம் தொலைபேசிகளில், சுமார் ஆயிரம் தொலைபேசி எண்கள் இந்தியாவிலிருக்கின்றன. அந்த எண்களில் பெசாசஸ் வேவு மென்பொருள் நிறுவப்பட்டிருக்கின்றன. இவற்றில் 300 எண்கள் சரிபார்க்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பட்டியல் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இதில் ராகுல்காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் அபிஷேக் பானர்ஜி போன்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் எண்களும் அடங்கும். மேலும் கர்நாடகாவில் முன்பு ஆட்சியிலிருந்த காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவற்றின் முதல்வர், துணை முதல்வர் ஆகியோரின் உதவியாளர்களின் எண்களும் இருக்கின்றன. இப்போது ஒன்றிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரு அமைச்சர்களின் எண்களும் அவற்றில் இடம்பெற்றிருக்கின்றன. இவர்களில் ஒருவர் 2017இல் நாடாளுமன்ற உறுப்பினராகக்கூட இல்லை. மேலும் 40 இதழாளர்கள், தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர் ஒருவர், உமர் காலித், ஒரு ரயில்வே தொழிற்சங்கத் தலைவர் போன்ற இதரர்களின் எண்களும் இந்தப் பட்டியலில் அடக்கம்.

இதன் நோக்கமும் இது பயன்படுத்தப்படும் விதமும் மிகவும் தெளிவானது. ஆட்சியில் இருப்பவர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ளும் விதத்தில், எதிர்க்கட்சியினரைப் பலவீனப்படுத்திடவும், ஊடகங்களில் வெளிவரும் புலனாய்வுக் குரல்களைக் கண்காணித்திடவும் இது பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக முறையீடு தாக்கல் செய்த பெண்மணியைக் குறிவைத்து அவர் மற்றும் அவர் தொடர்பான உறவினர்களில் 11 நபர்களின் போன்கள் பெகாசஸ் வேவு மென்பொருளுடன் இணைக்கப்பட்டிருந்திருக்கின்றன. முக்கியமான புள்ளி ஒருவரைப் பாதுகாத்திடவும் அதே சமயத்தில் நீதித்துறையைத் தங்களின்கீழ் கொண்டுவரவும், கிடைத்திடும் தகவல்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதுவே இவற்றின் அச்சுறுத்தும் நோக்கங்களாகும்.

மோடி ஆட்சியின்கீழ் அரசமைப்புச்சட்டத்தின்கீழ் இயங்கும் அமைப்புகள் அரித்து வீழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்று தொடர்ந்து கூறிவருகிறோம். தேர்தல் ஆணையத்தில் அரசுக்கு எதிராகக் கருத்துக் கூறிய அசோக் லாவாசா அவர்களின் செல்பேசியும் இவ்வாறு பெகாசஸ் வேவு மென்பொருளுடன் இணைக்கப்பட்டிருப்பதிலிருந்து, எந்த அளவிற்கு அரசமைப்புச்சட்டத்தின்கீழ் இயங்கும் அமைப்புகளைக்கூட மிரட்டி, பணியவைத்திடக்கூடிய விதத்தில், இந்த வேவு மென்பொருள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

அரசாங்கத்தை அவதூறு செய்வதற்கான சதி என்று கூறியும், இது “ஜனநாயகத்திற்குத் தீங்கிழைக்கும்” என்று கூறியும் மோடி அரசாங்கம் பெகாசஸ் தொடர்பாக வெளிவந்துள்ளவற்றைத் தள்ளுபடி செய்கிறது. நாடாளுமன்றத்தில் இது தொடர்பாகப் பேசும்போது, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அமைச்சர், வைஷ்ணவ், என்எஸ்ஓ-வின் அறிக்கையை மேற்கோள்காட்டி, வெளியாகியுள்ள பட்டியலுக்கு அடிப்படை எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். எனினும், பெகாசஸ் வேவு மென்பொருளை என்எஸ்ஓ-விடமிருந்து வாங்குவதற்காக தன்னுடைய அரசாங்கத்தின் எந்தவொரு முகமையும் அதனுடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறதா என்பது குறித்து எதுவும் கூறவில்லை. அவருடைய கூற்றிலிருந்து நாட்டிற்குள் அதிகாரபூர்வமற்ற கண்காணிப்பு சாத்தியமில்லை என்பது மீளவும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

ஒன்றிய அரசாங்கம், என்எஸ்ஓ-விடமிருந்து வேவு மென்பொருள் எதுவும் பயன்படுத்தப்பட்டது குறித்த தகவல் எதுவும் தெரியாது என்று மறுத்துக்கொண்டிருக்கிறது. உண்மையில், 2019இல், பீமா கொரோகான் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறவர்களில் சிலரின் செல்பேசிகள் உட்பட 121 நபர்களின் செல்பேசிகளில் பெகாசஸ் வேவு மென்பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக வாட்சப் குழு அறிவித்தபோதும், இத்தகைய மறுப்பு இந்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப் பட்டது.

என்எஸ்ஓ நிறுவனமே தன்னுடைய அதிகாரபூர்வ இணையதளத்தில் என்ன கூறியிருக்கிறது தெரியுமா? “இந்த நிறுவனம், அரசாங்க உளவு ஸ்தாபனங்களுக்கும், சட்டத்தை அமல்படுத்தும் முகமைகளுக்கும் மட்டுமே பயங்கரவாத மற்றும் ஆழமான குற்றங்களைத் தடுக்கும் நோக்கத்திற்காக தங்கள் பொருள்களைப் பயன்படுத்து வதற்கான உரிமங்களை வழங்கியிருக்கின்றன” என்று கூறியிருக்கிறது. மேலும் இத்தகைய உரிமங்கள் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்தின் ‘பாதுகாப்பு ஏற்றுமதிக் கட்டுப்பாடு முகமை” (Defence Export Control Agency)யின் மேற்பார்வையின்கீழ் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறது.

எனவே, இந்தியாவிற்குள் தனியார் இதனைப் பெற்றிருப்பார்கள் எனக்கூறப்படுவது அடிபட்டுப்போகிறது. மேலும், கர்நாடகாவில் ஆட்சி செய்த எச்.டி.குமாரசாமியின் உதவியாளர்களின் போன்களை அல்லது ஜார்கண்டில் தங்கள் நிலங்களிலிருந்து பழங்குடியினர் வெளியேற்றப்பட்டதை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த ஓர் இதழாளரின் போன்களை வேவு பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் எந்த வெளிநாட்டு அரசாங்கத்திற்கு அல்லது நிறுவனத்திற்கு இருந்திடும்?

எனவே இவற்றை மோடி அரசாங்கம் மற்றும் அதன் பாதுகாப்பு முகமைகளைத் தவிர வேறு எவரும் செய்திருக்க முடியாது. இதர நாடுகளில் நடைபெறும் இது தொடர்பான விசாரணைகளிலிருந்தும் இது தெளிவாகிறது. மெக்சிகோவில், அதிகமான அளவிற்கு செல் பேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டபோது (மொத்தத்தில் 15 ஆயிரம் செல் பேசிகள்), அவற்றில் 50 செல் பேசிகள் தற்போதைய அதிபர் மானுவல் லோபேஷ் அப்ராடார் (President Manuel Lopez Obrador) என்பவருக்கு நெருங்கிய நபர்கள், அவருடைய மனைவி, குழந்தைகள், உதவியாளர்கள் மற்றும் டாக்டர் ஆகியவர்களுக்குச் சொந்தமானவைகளாகும். இவை அனைத்தும் இவர் 2017இல் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்டவை.

மெக்சிகன் அரசாங்கம், இந்த பெகாசஸ் வேவு மென்பொருள் 2011இல் தன்னுடைய பாதுகாப்பு அமைச்சகத்தால் முதலில் வாங்கப்பட்டது என்றும், பின்னர் தேசியப் பாதுகாப்பு உளவுத் துறை (National Security Intelligence Service) மற்றும் அரசுக்குச்சொந்தமான பல பாதுகாப்புப் படையினரால் வாங்கப்பட்டது என்றும் உறுதிப்படுத்தியிருக்கிறது. மெக்சிகோ அரசாங்கம் தாங்கள் பெகாசஸ் வேவு மென்பொருளைப் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டிருக்கிற அதே சமயத்தில் இந்திய அரசாங்கமோ அதனைச் செய்ய மறுக்கிறது.

நடைபெற்றிருக்கும் சம்பவங்களின் “காலவரிசை”யிலிருந்து இஸ்ரேலுடனான புதிய பாதுகாப்புக் கூட்டுச்செயல்பாடு என்பது மோடி 2017 ஜூலையில் இஸ்ரேலுக்குச் சென்ற சமயத்திலேயே, இந்தியாவில் இந்த வேவு மென்பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக சில ஊடகங்கள் கூறியிருந்தன. மோடி இவ்வாறு இஸ்ரேலுக்குப் பயணிப்பதற்கு முன்பு, தயாரிப்புப் பணிகளுக்காக, அவருடைய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர், அஜித் டோவல், அவருக்கு முன்பு மார்ச் மாதத்தில் சென்றிருந்தார். அந்த சமயத்தில்தான் “பாதுகாப்பு” சம்பந்தமாக இரு நாடுகளுக்கும் இடையே இணைந்து செயல்படுவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய புதிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன என்றும், மோடியின் இந்தப் பயணம், இரு நாடுகளுக்கும் இடையே பயங்கரவாதம் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் வலுவான உறவுகளுக்கானத் தயாரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு உதவியது என்றும் ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

இஸ்ரேலிடமிருந்து ராணுவத் தளவாடங்களை வாங்குவதில் இந்தியா மிகப்பெரிய வாடிக்கையாளராகும். உள்நாட்டுப் பாதுகாப்பு நோக்கங்களுக்கான தளவாடங்களையும் தொழில்நுட்பத்தையும் வழங்குவதிலும் இஸ்ரேல் கேந்திரமான பாத்திரம் வகிக்கிறது. மேலும் இவ்வாறு இந்தியாவில் உள்ள உளவு ஸ்தாபனங்கள் மற்றும் பாதுகாப்பு முகமைகள் பயன்படுத்தும் பெகாசஸ் வேவு மென்பொருள் விலை மிகவும் அதீதமானதாகும்.

நாட்டு மக்களின் உரிமைகளையும், நாட்டின் ஜனநாயக அமைப்புமுறையையும் பேணிப் பாதுகாப்பதற்கு, இவ்வாறு நாட்டின் சட்ட திட்டங்களை எல்லாம் மீறிச் செயல்பட்டிருப்பதற்குக் காரணமானவர்கள் யார் என்பது கண்டறியப்பட்டு பொறுப்பாக்கப்பட வேண்டியது அவசியமாகும். மோடி அரசாங்கம் இவற்றை மறுப்பதாலும், இதற்குக் காரணமானவர்களைப் பாதுகாத்திடக் கோருவதாலும், இது தொடர்பாக ஓர் உயர்மட்ட அளவிலான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியது அத்தியாவசியமாகும். இதுபோன்றதொரு விசாரணையை உச்சநீதிமன்றம் தொடங்கி, மேற்பார்வையிட வேண்டும்.

தமிழில்: ச.வீரமணி

ஜூலை 21, 2021

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...