இலங்கையின் அரசியல சாசனத்தில் ஜனாதிபதி ஒருவரின் வகிபாகம் - ஆனந்ததேவன்



இலங்கை வரலாற்றில் ஜனாதிபதிகளாக வில்லியம் கோபல்லவாவிலிருந்து இன்றைய மைத்திரிபால சிறிசேன வரை பலர் வந்து போனாலும் எமக்கு நினைவுக்கு வருபவர்கள் இருவர். ஒருவர் ஜே.ஆர். ஜெயவர்த்தனா, மற்றையவர் மஹிந்த ராஜபக்ஷா. முதலாமவர் , பாராளுமன்ற இறைமையைப் பாதிக்கக்கூடிய நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையைக் கொணர்ந்தவர். தன்வசம் அதிகப்படியான அதிகாரங்களைக் குவித்து வைத்திருக்கும் சட்டத்திற்கு அப்பாற்பட்ட,  ஜனநாயக விரோதமான, நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆட்சிமுறைமையை 1978இல் அறிமுகப்படுத்தியவர். பாராளுமன்றத்தில், தட்டிக்கேட்க ஆளிருந்தும் தட்டிக்கேட்க முடியாத நிலைமையை உருவாக்கிச் சென்றவர்.



 இரண்டாமவரோ இதே அதிகாரங்களைப் பயன்படுத்தி மூன்றாவது தடவையாகவும் பதவிக்கு வர முயன்று தோற்றவர். ஆனாலும் கெட்ட போரினை வேருடன் சாய்த்த ஆளுமைக்குரியவர். சொந்த நாட்டை மட்டுமல்லாது அந்தப் பிராந்தியத்தையே வெளிநாட்டு சக்திகள் மூலம் எதிர்காலத்தில் துண்டாடப்படுவதிலிருந்து தடுத்து நிறுத்தியவர். சாசனரீதியாக நோக்கின், இலங்கையின் முதலாவது அரசியல் யாப்பு கோல்புறூக் அரசியல் சீர்திருத்தம். 1833இல் உருவாக்கப்பட்ட இச்சாசனத்திலேயே தேசாதிபதி முறையும் உருவாகியது. அது  1947இல் வந்த சோல்பரி யாப்பில் மகாதேசாதிபதியாகி  1972இல் குடியரசு ஜனாதிபதியாகியது. தேசாதிபதி மகாதேசாதிபதி ஆகியோர் ஆயிரக்கணக்கான மைல்களுக்கப்பாலுள்ள பிரித்தானியாவின் முடியினால் நியமிக்கப்பட்டுää பிரித்தானியாவின் நலன்களைப் பேணிப்பாதுகாத்து வந்தனர். சுருங்கக்கூறின் பிரித்தானியாவின் கையில் நாணயக்கயிறு.



1972இலேயே பிரதமரினால் பெயர் குறிப்பிடப்பட்டு நியமிக்கும் ஜனாதிபதி முறைமைக்கு மாறுகிறது. இந்த அரசியல் யாப்பில் பிரதமரே அதிகாரம் வாய்ந்த சக்தியாகத் திகழ்ந்தார். ஜனாதிபதியின் பதவிக்காலமோ நான்கு ஆண்டுகள் மட்டுமே. ஜனாதிபதி இல்லாதவிடத்து பதில் ஜனாதிபதியை நியமித்தல், ஜனாதிபதியைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமாயின்ää பிரதமரினால், தேசிய அரசுப்பேரவையின்(முன்னைய பாராளுமன்றம்) 50வீதமான உறுப்பினர்களின் கையொப்பத்துடன் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்துடன் பதவிநீக்கம் செய்யமுடியும்.. ஜனாதிபதியின் அதிகாரங்கள், தேசிய அரசுப்பேரவையைக் கூட்டுதல்,  கலைத்தல்,  ஒத்திவைத்தல், சிம்மாசனப் பிரசங்கத்தை நிகழ்த்துதல், அவசரகால நிலையில் அவசரகால சட்டங்களை இயற்றுதல், போர்ப் பிரகடனம் செய்தல்.



சமாதானம் செய்தல்,  ஏனைய அமைச்சர்களையும், முப்படைத் தளபதிகளையும்,  அரச உயரதிகாரிகளையும் உயர்நீதிமன்ற, மேன்முறையீட்டு நீதிபதிகளையும் நியமித்தல் போன்றவையே. இவையனைத்தையும் இவரால் தன்னிச்சையாக மேற்கொள்ள முடியாது. அது மட்டுமல்ல நிறைவேற்றப்படும் அதிகாரங்களுக்கு கையொப்பமிடும் அதிகாரமும் இவருக்கில்லை. சட்டங்களனைத்தும் சபாநாயகரின் சான்றுரையுடனேயே அமுலுக்கு வரும். 1972இல் பெயரளவிற் காணப்பட்ட ஜனாதிபதியை மிகவும் சக்திவாய்ந்த நபராகää 1978இல் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக ஜே.ஆர். மாற்றினார். அன்றிலிருந்து இன்றைய 19ஆவது திருத்தச் சட்டம் வரை அதுவே கோலோச்சியது. இவரின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகளாகும். இவரே அரசின் தலைவராகவும் அமைச்சரவையின் தலைவராகவும்,  முப்படைகளின் தலைவராகவுமிருப்பார். இவரது அதிகாரங்களாக பாராளுமன்றத்தைக் கூட்டுதல், கலைத்தல், ஒத்திவைத்தல்,  சிம்மாசனப் பிரசங்கத்தை நிகழ்த்துதல், அவசரகால வேளையில்



சட்டமூலங்களை இயற்றுதல்,  தான் விரும்பிய சட்டமூலங்களை பாராளுமன்றம் நிராகரித்தாலும் சர்வஜன வாக்கெடுப்பிற்கு விடுதல்,  சட்டமா அதிபர்களை நியமித்தல்,  அமைச்சுக்களை ஒதுக்குதல், அமைச்சர்களை நீக்குதல், மாற்றுதல், அரச உயரதிகாரிகளை, வெளிநாட்டுத் தூதுவர்களை நியமித்தல்,  உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமித்தல் போன்றவை. இவையனைத்தையுமே பிரதமரின் ஆலோசனை எதுவுமின்றி தன்னிச்சையாகவே மேற்கொள்வார். ஜனாதிபதி தவறிழைக்கும் பட்சத்தில் அவருக்கெதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியாது. அவ்வாறு தொடரும் பட்சத்தில் சட்டமா அதிபரையே பிரதிவாதியாகக் குறிப்பிடப்படல் வேண்டும். ஜனாதிபதியைப் பதவி நீக்கம் செய்ய வேண்டுமாயின் மூன்றிலிரண்டு பெரும்பான்மை அல்லது ஐம்பது வீதத்திற்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் சபாநாயகர் மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட குற்றப்பிரேரணை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படல் வேண்டும். நிறைவேற்றப்பட்ட தீர்மானமோ உச்சநீதிமன்றத்தால் விசாரணை செய்து அங்கீகரிக்கப்படல் வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட தீர்மானம்,  பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படல் வேண்டும்.

இவ்வாறானதொரு நீண்ட இடியப்பச் சிக்கலான நடைமுறை ஒழுங்கினூடாகவே ஜனாதிபதியைப் பதவி நீக்கம் செய்ய முடியும். ஆனால் தற்போதைய 19ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம், ஐம்பது வீதமான உறுப்பினர்களின் கையொப்பத்துடன் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் பதவி நீக்கம் செய்ய முடியும். ஜனாதிபதி உடல்ää உளரீதியாக தகுதியின்றிக் காணப்படின் பிரதமர் , சபாநாயகர்,  பிரதம நீதியரசர் அடங்கிய குழுவினால் ஏகமனதாக அவரைப் பதவி நீக்கம் செய்ய முடியும். அவர் இரண்டு தடவைகளுக்கு மேல் பதவி நீடிப்புச் செய்ய முடியாது. ஜனாதிபதி சுகவீனமுற்றால் சபாநாயகர் கடமையாற்றுவார். அவருமில்லாத பட்சத்தில் பிரதிசபாநாயகர் பொறுப்பேற்பார். ஜனாதிபதியின் பதவிக்காலம் ஆறு வருடங்களிலிருந்து ஐந்து வருடங்களாக நறுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் ஆயுட்காலமும் ஐந்து வருடங்கள்தான். பாராளுமன்றத்தை நான்கரை வருடங்களுக்கு முன் கலைக்க முடியாது. அதுவும் பாராளுமன்றத்தின் சம்மதத்துடனேயே செய்ய முடியும். அமைச்சுக்களின் நியமனமும் கூட பாராளுமன்றத்தின் சம்மதத்துடனேயே செய்தல் வேண்டும். சுயாதீன ஆணைக் குழுக்களுக்கான அங்கத்தவர்களின் நியமனம்,  ஜனாதிபதியிடமிருந்து தற்போது அரசியல் நிர்ணய சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 19ஆவது திருத்தச் சட்டமூலத்தின் பிரகாரம்ää அவர் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூற வேண்டியவராகவுள்ளார். அவருக்கெதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தொடர வழி பிறந்துள்ளது. இது ஜனநாயகத்தின்பாற்பட்டது என்பதில் சந்தேகமில்லை.
19ஆவது திருத்தச் சட்டத்தைப் பொறுத்தவரை நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை வேருடன் சாய்ப்பதற்குப் பதில் , இடைஞ்சல் தரும் மரத்தின் சில கிளைகளை மட்டும் நறுக்கியுள்ளனர் என்று கொள்ளலாம். சிறுபான்மை பலத்தையுடைய கட்சி அரியணையிலும் பெரும்பான்மைப் பலத்தையுடைய கட்சி எதிரணியிலும் வீற்றிருக்கும் ஜனநாயக மோசடிக்கும்   யாப்பைச் செல்லாக்காசாக்கி,  தேர்தலொன்று நிகழாமலேயே  குறுக்கு வழியில்,  ரணில் பிரதமர் ஆசனத்தைக் கைப்பற்றிய ஜனநாயக ஊழலுக்கும் மத்தியில் இது நிகழ்ந்துள்ளமை ஆச்சரியமே.

ஒரு வேளை ஐக்கிய தேசியக் கட்சி எதிரணியிலும் அக்கட்சியைச் சேர்ந்தவர் ஜனாதிபதியாகவும் இருந்திருந்தால் இத்தகைய மசோதாவை அனுமதித்திருப்பார்களா என்பது சந்தேகமே. எது எவ்வாறிருப்பினும் கட்சிகளின் சுயநலன்களிற்கப்பால் ஜனநாயகப் பாதையில் சில சிரமதானங்கள் நடைபெற்றிருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. எல்லாமே எழுதப்பட்ட சட்டங்களை நேர்மையாகப் பின்பற்றுவதிலேயே தங்கியிருக்கிறது.

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...