ஒரு "கிராமத்து இதயம்" ஓய்ந்தது

ஒரு "கிராமத்து இதயம்" ஓய்ந்தது : எஸ்.எச்.எம். ஜெமீல் ( 21 நவம்பர்  1940 --- 27 ஏப்ரல் 2015) 

எஸ்.எம்.எம்.பஷீர் 

படிறும், பயனிலவும், பட்டி உரையும்,
வசையும், புறனும், உரையாரே - என்றும்
அசையாத உள்ளத்தவர்.
                                            ( கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் )


அமைதியான சுபாவமும் ,  அட்டகாசமில்லாத ஆளுமை வெளிப்பாடும் ,  நிதானமான  பேச்சும் செயலும் கொண்ட ஒரு மனிதனாகவே ஒரு மனிதன் வாழ் நாள் முழுவதும் ஒரே  பண்பியல்புகளுடன் வாழமுடியும்  என்பதற்கு  மறைந்த ஜெமீலைத் தவிர எனக்குவேறு யாரும் சட்டென்று ஞாபகத்துக்கு வரவில்லை. பல்வேறு  அரச உத்தியோக பணிகளுக்கு மத்தியிலும் அயராது இலக்கிய, சமூக வரலாற்று ஆய்வாளனாக தனது ஆளுமையை  ஆழமாகவே பதித்தவர்  மறைந்த எஸ்.எச் எம். ஜெமீல்.   
ஒரு கல்விமானாக சமூக அக்கறையாளனாக  ஆய்வாளனாக இலங்கையின் பல்வேறுபட்ட முஸ்லிம் சமூக இலக்கிய தளங்களில் தனக்கென ஒரு தனியான இடத்தைப் பெற்றிருந்தவர் என்பதை அவர் எழுதிய  25 நூல்களும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளும் சான்று பகர்கின்றன. 
மறைந்த எஸ்.எச் எம். ஜெமீல்  முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளராக ஆலோசகராக  சுமார் 11 வருடங்கள் கடமையாற்றியதுடன்  , தான் பணியாற்றிய காலத்தில் இலங்கை முஸ்லிம் சமூகம் தொடர்பான வரலாற்று, அரசியல் , இலக்கிய   நூல்கள் பலவற்றை  முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் அமைச்சின் மூலம் வெளியிட அரும் பங்காற்றி உள்ளார். மறைந்த எஸ்.எச் எம். ஜெமீல் முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளராக பணியாற்றிய  காலம் முஸ்லிம்களைப் பொருத்தவரை ஒரு பொற்காலம் என்றே சொல்லலாம். முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளராக தான் கடமை புரிந்த காலத்தில் மிகக் கரிசனையுடன் முஸ்லிம் சமூகத்தின் வரலாற்றை , தமிழ் இலக்கிய பங்களிப்புக்களை ஆவணப்படுத்திவிட வேண்டும் என்ற வேணவா அவரை ஆட்கொண்டிருக்கவேண்டும் என்பதனை அவரின் பதவிக் காலத்தில் வெளியான  நூல்களின் எண்ணிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.
கல்முனையிலில் உள்ள சாய்ந்தமருதை பிறப்பிடமாகக் கொண்ட பேராதனைப் பட்டதாரியான ஜெமீல் , யாழ் பல்கலைக் கழகத்தில் முதுமாணிப்பட்டமும் , இங்கிலாந்து சசக்ஸ் (Sussex University) பல்கலைக் கழகத்தில் பல்கலைக் கழக நிர்வாகம் தொடர்பில் பயிற்சியும் பெற்றவர்.   எஸ்.எச்.எம்.ஜெமீல் கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதற்  பதிவாளராக இருந்தவர் . ஆட்டளைச்சேனை ஆசிரிய கலாசாலை அதிபராக இருந்த காலம் பற்றி அங்கு ஆசிரியப் பயிற்சி பெற்ற  ஆசிரிய மாணவர்கள் சிலாகித்துப் பேச நான் கேட்டதுண்டு. 
தொன்னூறுகளின் பிற்பகுதிகளில் எஸ்.எச்.எம்.ஜெமீலை சந்திக்க நேரிட்ட பொழுது தாம் முன்னின்று உழைத்து உருவாக்கிய இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம் பற்றி என்னிடம் விவரித்தார். அதன் மூலம் பல ஆய்வு , வரலாற்று நூல்களை வெளியிடும் திட்டத்தை வெளிப்படுத்தினார். அதன் பின்னர்  அவர் அந்நிறுவனம் மூலம் வெளியிட்ட சில நூல்கள் வெளியிடப்பட்ட கையேடு எனக்கும் அவரின் கைப்பட "அன்பளிப்பாக " என்று எழுதி அனுப்பி வருவது அவரின்  வழக்கமாக இருந்தது. மிகவும் அருமையான நூல்கள் சில அவர் மூலம் எனக்கு இங்கிலாந்தில் கிடைத்தன. சில  மிகவும் நேர்த்தியான வகையில் தனது நாளாந்த வாழ்க்கைப் பணிகளை ஒழுங்குபடுத்திக் கொண்ட மனிதர் அவர். அதனாலேயே அவர் என்னுடன் ஏற்படுத்திக் கொண்ட தொடர்பு மூலம் எனக்கு அவரின் பனியின் மீதி இருந்த ஆர்வத்தினை மதித்து  தான் வெளியிட்ட நூல்களை அனுப்புவதில் ஒரு அர்ப்பணிப்புடன் செயற்பட்டார். அத்தகைய அனுபவம் அவருடன் பழகிய பலருக்கு நிச்சயம் இருக்கும் என்றே நம்புகிறேன்.
.
இலங்கையில் முஸ்லிம்களின் கல்வி மேம்பாடு தொடர்பில் காலஞ்சென்ற கல்வி அமைச்சர் கலாநிதி பதியுதீன் மீது மிகுந்த மரியாதையும் மதிப்பும்  கொண்டிருந்த எஸ்.எச்.எம்.ஜெமீல் "கலாநிதி பதியுதீன் மஹ்மூதின் கல்வி பணிகள்" என்ற நூலை வெளியிட்டார். இந்த நூல் முஸ்லிம் சமூகத்திற்கு பதியுதீன் மஹ்மூத் ஆற்றிய அளப் பெரும் கல்விப்பணியை வெளிக் கொணர்ந்த நூலாகும். இவர் எழுதி வெளியிட்ட பல நூல்களில் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள் , கவிஞர்கள் ஆய்வாளர்கள் எழுதிய நூல்கள் பற்றிய விவரங்கள் "சுவடி ஆற்றுப்ப்படை" தொகுப்புக்களாக வெளிவந்தன. அத்தகைய முயற்சிகளின் முன்னோடியாக அவர் விளங்கினார். இலங்கை முஸ்லிம்களின் கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் பற்றிய ஆய்வுகள் செய்பவர்களுக்கு அவசியமான கருவிகளாக அந்நூல்கள் அமைந்துள்ளன,
மேலும் வரலாற்று ரீதியாக  மாவட்ட ரீதியில் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை பரந்த ஆய்வின் அடிப்படையில் அவர் அணுகிய முறைமையும் பிற்கால  சந்ததியினருக்கு   அவர் விட்டுச் செல்லும் முதுசமாகும். 

இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் தனக்கு பரிச்சயமான தமிழ் முஸ்லிம் இலக்கிய ஜாம்பவான்களை   பற்றி இலங்கையின் பத்திரிகைகளில் எழுதிய வானொலி நிகழ்சிகளுக்க தயாரித்த ஆக்கங்களை எல்லாம் தொகுத்து காலச் சுவடுகள் என்ற நூலாக பிரசுரித்தார். தனது ஆரம்பக் கல்வியை காரைதீவு இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தில் ஆரம்பித்த காரணத்தினாலும் குடும்ப தொடர்புகளினாலும் சுவாமி விபுலானந்தர் பற்றி இளமைக் காலம் முதலே நன்கு அறிந்திருந்தார். அவ்வாறே பின்னர் பேராதனை பல்கலைக் கழக காலத்தில் பேராசிரியர் சு. வித்தியானந்தனுடன் ஏற்பட்ட தொடர்புகள் காரணமாக சு. நித்தியானந்தனின் மறைவு வரை மிக நெருக்கமான உறவினை அவருடன் பேணி வந்தார்.   ஜெமீலின் காலச் சுவடுகள் தொகுப்பானது நித்தியானந்தன் சுவாமி விபுலானந்தர் போன்ற தமிழ் இலக்கிய ஆய்வுப்  பெருந்தகைகளை மட்டுமல்ல இளங்கீரன் சுபைர், பித்தன் ஷா போன்ற முஸ்லிம் படைப்பிலக்கிய ஜாம்பவான்களையும் பற்றிய எழுத்துக்களை உள்ளடக்கியதாக வெளிவந்தது. பித்தன் ஷா , இளங்கீரன் சுபைர் ஆகியோர் ஜெமீலுடன் பரஸ்பர நெருக்கங்களை கொண்டிருந்தவர்கள் என்பதை அவரின் கட்டுரைகளில் காண முடிந்தது. அவையே அவர்கள் பற்றிய வரலாற்றுப்  பக்கங்களை என்றும் அலங்கரிக்கப் போவனவாகும்.  
              
அது தவிர இலங்கை முஸ்லிகளின் வரலாறு தொடர்பாக  சுதந்திர இலங்கையில் இஸ்லாம் (Islam In Independent Sri lanka) என்ற பெயரில் இலங்கையைச் சேர்ந்த பல முஸ்லிம் ஆய்வாளர்கள் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தின் ஊடாக வெளியிட்டார். இவரின்   திணைக்கள வெளியீடுகளுக்கு அன்றைய புத்தசாசன கலாச்சார சமய விவகாரங்களுக்கான அமைச்சர் லக்ஷ்மன் ஜெயக்கொடி முன்னுரை எழுதி இருப்பார். அவற்றில் பல்லின பல் சமூக அம்சங்களை அவர் தொட்டுக் காட்டி , அத்தகைய வெளியீடுகளுக்காக ஜெமீலை தட்டிக் கொடுத்திருப்பார். ஆனால் அதற்கெல்லாம் முன்பாக ஐக்கிய தேசிய அரசுக் காலத்தில் எஸ்.எச்.எம். ஜெமீலின் இலக்கிய கனவுகளுக்கு அனுசரணையாக இருந்தவர் முஸ்லிம்  கலாச்சார இராஜாங்க அமைச்சராக செயலாற்றிய ஏ .எச் .எம்.  அஸ்வர். அவரின் அமைச்ப் பதவிக் காலத்தில் கால்கோள் கொண்ட பல நூல் வெளியீட்டுத் திட்டங்கள் பின்னர் வந்த அமைச்சர் லக்ஷ்மன் ஜெயக்கொடி  காலத்தில் அரங்கேறின. 
முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் தலைவர் அஸ்ரப் , அவரைத் தொடர்ந்து வந்த ரவூப் ஹக்கீம் ஆகியோருடன் தொடர்புகளை சமூகம் சார்ந்த விடயங்களில் கொண்டிருந்ததுடன் அவ்வப்பொழுது முஸ்லிம் இலக்கியம் நூலாக்கம் தொடர்பில் ஆலோசனைகளையும் வழங்கி வந்துள்ளார். ஆயினும் அவர் அமைச்சர் அஸ்வருடன் பணியாற்றிய காலத்தை சிலாகித்து பேசுவார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் என்னிடம் தெரிவித்துள்ளனர். அதற்கான பிரதான  காரணம் ஜெமீலுக்கும் அஸ்வருக்கும்  இடையே இஸ்லாமிய இலக்கியம் தொடர்பாக சமதளத்தில் ஆர்வமும் அக்கறையும் இருந்தது , அதனால் இருவரும் நெருக்கமாக பனி புரிய முடிந்தது என்பது ஒன்று, . மற்றையது ஜெமீலை அசுரவைத்த அஸ்வரின் கடமை உணர்வும் நேர்மையான  செயற்பாடுகளுமாகும். அஸ்வர் அமைச்சராக இருந்த காலத்தில் அரச வாகனம் மற்றும்  காகிதாதிகள் பேனாக்கள் என  அமைச்சுக்கு (அரசுக்கு) சொந்தமான எந்தப் பொருளையும் தனது சொந்தப் பாவனைக்கு பயன்படுத்த மாட்டார் என்று ஜெமீல் பெருமிதத்துடன் சொல்வார்.  பொதுச் சொத்தினை தனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு பயன்படுத்தாத மனிதர் அஸ்வர் என்றும் அவரின் கீழ் பணியாற்றியது தனக்கு பெருமை என்றும் ஜெமீல் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் அவருக்கும் ஜெமீலுக்கும் இடையில் எத்தகைய நட்பு நிலவியது என்பதற்கு ஜெமீலின் மறைவை அடுத்து அஸ்வர் எழுதிய இரங்கல் கட்டுரையும் அவர் சில பத்திரிக்கைகளுக்கு வழங்கிய அனுதாபச் செய்திகளுமே சான்றாகும் . ஜெமீலின் நற்பண்புகளுடன் , அமைதியான வாழ்க்கை முறைகளுடன் , அவரின் சமூகப பணிகளில் காணப்பட்ட அபரிதமான ஆர்வமும் அர்ப்பணிப்பும் புதிய தலைமுறையினர்  அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களாகும்.  அவரின் நூல்களும் எழுத்துக்களும் மட்டுமல்ல அன்னாரின் அட்டகாசமில்லாத அமைதியான  வாழ்க்கையும் நற்பண்புகளும் நினைவு கூறும் வகையில் பல்லாண்டுகள் நிலைத்து நிற்கும்.  அவரின் பல விருதுகளும் வெற்றிகளும் இங்கு பட்டியல் இட முடியாதளவு நீண்டவை.     
   
2012 ஆம்  ஆண்டு  கொழும்பில் நடைபெற்ற இலக்கிய தமிழ் மாநாட்டில் கலந்து கொண்ட பொழுது , என்னுடன் அளவளாவினார். என்னை  அவர்  ஆறுதலாக சந்திக்க விரும்புவதாக கூறினார். தனது தொலைபேசி இலக்கத்தை  தந்தார். தொலைபேசியிலும் சம்பாசிக்கக் கிடைத்தது. தவிர்க்க முடியாத தனித்தனி  வேலைகள் காரணமாக பரஸ்பரம் இருவரும் பின்னர் சந்திக்க முடியவில்லை . ஆயினும் கிழக்கில் வெளிவந்த சகல கவிதை இலக்கியங்களை தொகுக்க வேண்டும் என்றும் , ஏற்கனவே அவர் அது தொடர்பில் , அண்மையில் அவர்  வெளியிட்ட தொகுப்பு நூல் பற்றியம் என்னிடம் கூறினார் . அந்த தொகுப்பு நூல் ஒன்றை எனக்கு தருவற்கு கூட அவர் முனைந்தார்.  ஆனால் தவிர்க்க முடியாமல் அதனைப் பெற முடியாது போய்விட்டது. எனினும் அவரின் இடையறாத முயற்சியும்   செயலூக்கமும் , அமைதியாக சாதிக்கும் சுபாவமும் அவரை என்றும் நினைவுறுத்தும் !  எல்லாவற்றுக்கும் மேலாக அவரின் சாகித்திய பரிசு பெற்ற கிராமத்துப் பாடல்களைப் பற்றிய ஆய்வு நூலான "கிராமத்து இதயம் " ஓய்ந்து விடாது உயிர்ப்புடன் நிலைக்கும் ஓய்ந்து போன இதயத்தின் ஓசைகளை உணர்ப்பிக்கும்.

03/05/201503/05/2015


No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...