பிரித்தானியத் தேர்தலில் ஜனநாயகம் தோல்வியுற்றதா ? கேள்விக்கு உள்ளாக்க வேண்டிய தேர்தல் முறைமை - ஒரு சிறிய பார்வை !




எஸ்.எம்.எம்.பஷீர்

ஜனநாயகத்தின் தீங்குகளுக்கு மருந்து மேலும் கூடிய  ஜனநாயகமாகும்          எச்.எல். மென்கண்
 
 படம்: 09/05/2015 அன்று இலண்டனில் பிரித்தானியப் பிரதமரின் "நம்பர் டென்" முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு காவலுக்கு நிறுத்தப்பட்ட பொலிசார்.

உலகின் கவனத்தை ஈர்த்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ஐக்கிய  இராச்சியத்தின் நாடாளுமன்றத் தேர்தல் சென்ற வியாழக்கிழமை நடந்து முடிந்து விட்டது. இந்த தேர்தலில்   மரபுவாதக் கட்சி (Conservative Party) வெற்றி  பெற்றாலும் பெரும்பான்மையை பெறுவதற்கு பத்து அங்கத்தவர்கள் குறைவாகவே வெற்றி பெறுவார்கள் என்று  "எக்சிட் போல்" (Exit Post) தெரிவித்திருந்தது. ஆனால் பல்வேறுபட்ட  கருத்துக் கணிப்புக்களையும் கேள்விக்கு உட்படுத்தும் விதத்தில் தேர்தல் முடிவுகள் மாற்றமாகவே வெளிவந்தன. மரபுவாதக் கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 


கடந்த ஆட்சியில் மரபுவாதக் கட்சிக்கு ஆட்சி அமைக்க துணை புரிந்த தாராளவாத ஜனநாயக க்கட்சி கூட (Liberal Democrats) தனது தேர்தல் வாக்குகளில் அங்கத்துவ எண்ணிக்கைகளில் சரிவைச் சந்தித்துள்ளது. மரபுவாதக் கட்சிக்கு எதிராக ஆட்சி அமைக்க கங்கணம் கட்டிக் கொண்டு மிகுந்த எதிர்பார்ப்புடன் செயற்பட்ட தொழில் கட்சித் (Labour Party)  தலைவர் , சென்ற வருடம் இலண்டனில் நடைபெற்ற  இந்திய வம்சாவளியினரின் சமய கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பொழுது , அந் நிகழ்ச்சியின் அடுத்த வருட ( 2015) நிகழ்வு "நம்பர் டென்" எனும் பிரதமர் வாசஸ்தலத்தில் நடத்தப்படும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் கூறி இருந்தார். ஆனால் தேர்தல்களின் முடிவுகள் அவரின் கனவுக்கு ஒரு முடிவினைக் கொண்டு வந்துள்ளது.



யூ .கிப் (UKIP) எனப்படும் ஐக்கிய இராச்சிய  சுதந்திரக் கட்சியும் தேர்தலில் அக்கட்சியின் தலைவரான நைஜல் பராஜ் (Nigel Faraj) வெற்றி பெறுவார் என்றும்  அண்மைக் கால இடைத் தேர்தலில் தாங்கள் பெற்ற(கொண்டுள்ள)  இரண்டு தொகுதிகளையும் தக்க வைத்துக் கொள்வோம் என்றும் ; மேலும் பிரித்தானிய அரசியலில் மூன்றாம் இடத்தை பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் செயற்பட்டிருந்தார்கள் .  ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பும் ஏமாற்றத்தையே  அவர்களுக்கு அளித்துள்ளது.

ஆனால் மறுபுறத்தில் ஸ்காட்லான்ட் தேசியவாதக் கட்சியான எஸ்.என்.பீ (SNP) எனப்படும் ஸ்காட்லான்ட் தேசியக் கட்சி  மொத்த ஸ்காட்லான்ட்டின் 59 தொகுதிகளில் 56 தொகுதிகளைப் பெற்று பாரிய வெற்றியை பெற்றுள்ளது. இது பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு ஒரு புதிய சவாலை ஏற்படுத்தி உள்ளது. தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஆங்கில நாடாளுமன்றத்துக்கு சவாலாக அமையம்  விதத்தில் நடக்கப் போவதாக கூறியவாறே  , தமது மக்களின் அக்கறைகளை முன்னிலைப்படுத்தி செயற்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே சென்ற வருடம் செப்டெம்பர்  மாதம் ஸ்காட்லான்ட் தேசியக் கட்சி , ஸ்காட்லாந்தை சுதந்திர நாடாக பிரகடணப்படுத்த ஸ்காட்லாண்டு நாடாளுமன்றத்தில் தமக்குள்ள ஆட்சி அதிகாரத்தின் பயன்படுத்தி  சர்வஜன  வாக்கெடுப்பு ஒன்றினை  நடத்தி  , தோல்வியுற்றிருந்தனர். ஆனால் அவர்கள் 44.7 % வீதமான ஆதரவு வாக்குகளைப் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும்  சர்வஜன வாக்கெடுப்பு தோல்வியில் முடிய வேண்டும் என்பதில் ஒரே குறிக்கோளுடன் கங்கணம் கட்டிக் கொண்டு செயற்பட்ட தொழிற் கட்சி , மரபுவாதக் கட்சி, தாராளவாத ஜனநாயகக் கட்சி என்பன , அதற்கான விலையை பிறிதொரு வகையில் இப்பொழுது வழங்கி உள்ளார்கள்  என்றே குறிப்பிட  வேண்டும். ஸ்காட்லாண்டு தனி நாடாக வேண்டும் என்ற கோரிக்கையை தாங்கள் கைவிடவில்லை என்பதை சர்வஜன வாக்கெடுப்பின் பின்னரும் வலியுறுத்திய ஸ்காட்லான்ட் தேசியக் கட்சி , இந்த தேர்தலில் அக் கோரிக்கையினை முன்னிலைப்படுத்தவில்லை. ஆனாலும் சர்வஜன வாக்கெடுப்பின் பின்னர் ஸ்காட்லாந்து மக்கள் பிரதமர் டேவிட் கெமரூனின் (David Cameron) மரபுவாத ஆட்சியினர் நடந்து கொண்ட முறை காரணமாகவும், ஸ்காட்லாந்து  நாடாளுமன்றத்துக்கு அதிக அதிகாரங்களை வழங்க பிரேரித்த அம்சங்களில் காணப்பட்ட  அதிருப்தி காரணமாகவும்; தொழில் கட்சியின் தீவிர ஸ்காட்லாந்து பிரிவினைக் கெதிரான எதிர்ப்பு , பிரித்தானிய நாடாளுமன்றத்தில் சேர்ந்து ஆட்சி அமைக்கும் சூழல் உருவானால்  தொழில் கட்சிக்கு கைகொடுக்க விரும்புவதாக ஸ்காட்லாந்து தேசிய கட்சி விடுத்த வேண்டுகோளை பகிரங்கமாக மறுத்து ஒதுக்கிய நிலை குறித்த எதிர்வினைகள்  போன்ற பல காரணங்கள் மீண்டும்  ஸ்காட்லான்ட் மக்கள் ஸ்காட்லான்ட் தேசியக் கட்சியினரைப்  பலப்படுத்த உதவி உள்ளனர் என்பதையும் இத்தேர்தல் சுட்டிக் காட்டுகிறது.

இம்முறை தேர்தல் முடிவுகளின் படி அவதானிக்கப்பட்ட விடயங்களில் ஒன்று தொகுதிவாரி முறைத் தேர்தல் முறை மூலம் வெஸ்ட் மினிஸ்டர் நாடாளுமன்றத்தின் அங்கத்தவர் தெரிவு மக்களின் எதிபார்ப்புக்களை முறையாக பிரதிபலிக்கவில்லை என்பதாகும். எனவேதான் மக்களின் உண்மையான பிரதிநிதித்துவத்தை பேணும் முறையிலான ஜனநாயகத்தை பேண விகிதாசார தேர்தல் முறை அவசியம் என்று முன்னர் அவ்வப்பொழுது குரல் எழுப்பப்பட்டதாயினும்  பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் பிரதிநிதித்துவமுறை அமைப்பு குறித்து மிகுந்த அக்கறை கொள்ள வேண்டிய தருணம் இப்பொழுது ஏற்பட்டுள்ளது. ஆனால் அவை சிறிய கட்சிகளுக்கு அனுகூலமாக அமைந்துவிடும் என்பதால் பிரதான கட்சிகளான மரபுவாத கட்சியோ அல்லது தொழில் கட்சியோ தேர்தல் மாற்றம் குறித்து  சிலாகிப்பதில்லை.  அப்படியான  விவாதங்கள் எழும் பொழுது அவற்றை தவிர்ப்பதை அல்லது அதற்கு அவசியமில்லை என்பது போல கருத்துரைத்து வருகிறார்கள்.
பிரித்தானியா நாடாளுமன்றத்தில் 56 அங்கத்தவர்களைப் பெற்றுள்ள ஸ்காட்லாந்து  தேசியக் கட்சியோ (1454436  வாக்குகள்) எட்டு அங்கத்தவர்களைப் பெற்றுள்ள தாராளவாதக் கட்சியோ  (2415 888 வாக்குகள்) , பெற்ற மொத்த வாக்குகளைவிட அதிக  வாக்குகளை ( 1,454, 436 வாக்குககள் ) தேசிய ரீதியில் பெற்ற ஐக்கிய இராச்சிய சுதந்திரக்கட்சி (யு கிப்) ஒரே ஒரு அங்கத்தவரையே நாடாளுமன்றத்தில்  பெற்றுள்ளது. ஐரோப்பாவில் அதிகளவில் பின்பற்றப்படும் விகிதாசார தேர்தல் முறையானது பிரித்தானியாவில் இல்லை .
மொத்தத்தில் உலகிலே  பிரதமர் ஆட்சி செய்யும் நாடாளுமன்ற முறையினை உருவாக்கிய முன்னோடிகளான பிரித்தானியாவில் இன்னமும் first-past-the-post  வாக்களிப்பு முறையில் மாற்றம் வேண்டும் என்பதில் முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் மறு புறத்தில் வேல்சுக்கும் ஸ்காட்லாந்துக்கும்  வட  அயர்லாந்துக்கும் அதிகாரப் பகிர்வுக்கான தேர்தல்களின் பொழுது ஒரு வித விகிதாசாரப் பிரதிநிதித்துவ  தேர்தல் முறைமையினை பிரித்தானியா வழங்கி  இருந்தது. மேலும் இலண்டன் நகரான்மைத் தேர்தல் (மேயர்) முறையிலும் ஒரு வித விகிதாசார முறைமை பின்பற்றப்பட்டு வருகிறது பல தரப்பட்ட மக்களின் , கட்சிகளின்  பிரிதிநிதித்துவத்தை பிரதிபலிக்க  நிச்சயம் விகிதாசார பிரதிநிதித்துவ முறையிலான தேர்தல் முறை அவசியம் என்பதை இத் தேர்தலில் தனித்தனியாக கட்சிகள் பெற்ற வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு நோக்குகின்ற பொழுது எழுகின்றது. 

ஐரோப்பிய பாராளுமன்றதுக்கான தேர்தல்கள் "டி  ஹோன்ட்" D'Hondt system, டி ஹோன்ட் என்ற பெல்ஜிய வழக்கறிஞரின் கண்டுபிடிப்பான பிரதிநிதித்துவ முறை மூலம் நடைபெற்று வருகின்றதால் ) அந்த முறையினை கொண்டு பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்றிருந்தால் பிரித்தானிய நாடாளுமன்ற அங்கத்தவர்கள் தொகை சகல கட்சிகளையும் பாதித்திருக்கும் , அதிக எண்ணிக்கை பெற்ற கட்சிகளின் அங்கத்தவர்கள் அத்தகைய விகிதாசார முறைக் கேற்ப குறைந்திருப்பார்கள் , உதாரணத்துக்கு , ஸ்காட்லாந்து தேசியக் கட்சி 25 அங்கத்தவர்களையே பெற்றிருப்பர்கள் அதேவேளை சிறிய கட்சிகளின் நாடாளுமன்ற அங்கத்தவர்கள் அதிகரித்திருப்பார்கள். உதாரணத்துக்கு ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சி (யு கிப்) 83 நாடாளுமன்ற அங்கத்தவர்களைப்  பெற்றிருப்பார்கள். மேலும் இன்னும் ஒரு வித விகிதாசார பிரதிநிதித்துவ முறை மூலம் அவர்கள் 90 இடங்களைப் பெற்றிருக்க முடியும் என்றும்  ஒரு கருத்து முன் வைக்கப்படுகிறது.

அது போலவே பசுமைக் கட்சி (Green party)  உட்பட பல கட்சிகள் நாடாளுமன்றத்தில் தகுந்த அதிகரித்த பிரதிநிதித்துவத்தை பெற  முடிந்திருக்கும். அதன் மூலம் பல கட்சிகளின் கருத்துக்கள் எதிரொலிக்கும் இடமாக நாடாளுமன்றம் திகழ்ந்திருக்கும். மொத்தத்தில் இலட்சக்கணக்கான வாக்குகளை தாம்  சார்ந்த அரசியல் கொள்கைகளுக்காக அளித்தவர்கள்  இப்பொழுது உள்ள ஜனநாயக முறையில் புறக்கணிக்கப்பட்டவர்கள் ஆகிறார்கள்.  அரசின் கொள்கை வகுப்புச் செயற்பாட்டில் சட்டவாக்கங்களில் இவர்களின் அக்கறைகள் அலட்சியப்படுத்தப்படும் என்பது இங்கு கோடிட்டுக் காட்டப்பட வேண்டும்.    நாடாளுமன்றத்தில்  செல்வாக்கு செலுத்த முடியாத வகையில் இலட்சக்கணக்கான  மக்களின் வாக்குகள் தகுந்த பிரதிநித்துவம் இன்றி வீண் போவிட்டதோ என்ற அங்கலாய்ப்பும் ஏற்படுகிறது.!


பல தரப்பட்ட மக்கள் அபிப்பிராயத்தை உள்ளடக்கியதாக உண்மையான ஜனநாயக மக்கள் பிரதிநிதித்துவதை உறுதி செய்யும் விதத்தில்  உலகின் பல நாடுகளில் ( இலங்கை உட்பட ) பின்பற்றப்படும் விகிதாசார பிரதிநித்துவ முறையிலான தேர்தல் முறை ஒன்று பிரித்தானியவிற்கு தேவை என்பதை இத்தேர்தல் வலியுறுத்துகிறது. அது மாத்திரமல்ல இன்று (09/05/2015) இக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் மாலைப் பொழுதில் இலண்டனில் தேர்தல் மூலம் தெரிவான அரசை வெளியேறக் கூறி பிரதமரின் இலண்டன் உத்தியோக வாசஸ்தலத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இத்தகைய போராட்டங்கள் அரசு எதிர்கொள்ளப்போகும் சங்கடங்களுக்கு கட்டியம் கூறுகின்றன!

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...