பிணத்தில் பிழைப்பு நடத்தும் ஈனப் பிறவிகள்!

Mediatamilஅழிவிலும், அவலத்திலும் பிழைப்பு நடத்தும் மரண வியாபாரிகள் எங்கும் உண்டு. ஆனால், அதை ஒரு கலையாக்கியவர்கள் புலிகளும் அவர்களின் ஆதரவாளர்களும்!
எதிரியை விட மோசமான வகையில் கொலைகளைச் செய்து, தம் இனத்தையே அழித்தாலும், எதிரியின் கொலைகளை உணர்வுபூர்வமாக பிரசாரத்திற்குப் பயன்படுத்தும் கலையை புலிகள் முழுமையாக கற்றறிந்திருந்தார்கள். கிழக்கில் பள்ளிவாசலில் நடத்திய கொடூரங்களின் வீடியோ, தற்போது மே 18 நினைவு தினத்திற்கு கண்காட்சியாகும் படங்களுக்கும் வீடியோக்களுக்கு ஒன்றும் குறைந்தததல்ல. இரண்டுமே கண் கொண்டு பார்க்க முடியாதவை. இரண்டுமே மனிதர்களால் ஏற்படுத்தப்படக் கூடிய கொடூரங்களின் உச்சம்.


இந்தக் கொடூரங்களிலும், கற்பழிப்பு எனப்படும் பாலியல் கொடூரம் எமது சமூகத்தில் கலாசார ரீதியாக ஏற்படுத்தும் பாதிப்பையும், அது ஏற்படுத்தும் அனுதாபத்தை அறுவடை செய்யக் கூடிய பயனையும் உணர்ந்த புலிகள் தாங்கள் கொலை செய்த பெண்களுக்கு அருகில் கூட, இராணுவத்தினர் விட்டுச் சென்றதாகக் காட்டும் பாதுகாப்பு உறைகளை எறிந்து செல்வதில் கூட கவனமாக இருந்தனர். இந்திய இராணுவமும், இலங்கை இராணுவமும் நடத்திய இந்த பாலியல் கொடூரங்களை திட்டமிட்ட முறையில் பிரசாரத்திற்குப் பயன்படுத்தியிருந்தனர்.
இவ்வாறாக அனுதாபத்தையும் குற்ற உணர்வையும் ஏற்படுத்தி, அந்தப் படங்களை பகிரங்கமாக வெளியிட்டு மரணத்தை பெரும் பொருளீட்டும் வியாபாரமாக்கி, பணத்தைக் கறப்பதில் புலிகள் கவனமாகவே இருந்தனர்.
அந்தப் படங்களை  புலன் பெயர்ந்த நாடுகளில் ஊடகவியலாளர்கள் என்று நடமாடித் திரியும் தான்தோன்றிகள், தங்கள் வியாபாரங்களுக்கு கச்சிதமாகப் பயன்படுத்தி, புலிகளையும் புலன் பெயர்ந்தவர்களையும் குஷிப்படுத்தி, புலி குதறிய மீதியில் வயிறு வளர்க்கும் நரிகளாக, பிழைப்பு நடத்தினார்கள்.
இந்த தான்தோன்றி ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட தமிழ்ப் பெண்களின் நிர்வாணப் படங்களையும், சிதறிப் போன குழந்தைகளின் படங்களையும் எந்தக் கூச்சமும் இன்றி, தங்களதும், அதைப் பார்க்கத் துடிக்கும் தங்கள் ஆதரவாளர்களினதும் வக்கிரங்களுக்கு தீனி போடுவதற்காக விலாவாரியான விளக்கங்களுடன், புலிகளை மிஞ்சிக் கொண்டே உப்புப் புளி சேர்த்து வெளியிட்டு வந்தனர்.

புலிகளின் அழிவின் பின்னால், யாரும் எதையும் எழுதலாம் என்ற இணைய வசதியும் சேர, இசைப்பிரியாவின் படம் முதல் வெளிவந்த வீடியோக்கள் வரைக்கும், எந்த வித மனித, ஊடக தர்மமும் இன்றி, வக்கிரமான முறையில் வெளியிட்டு வருகிறார்கள்.
இன்று கொல்லப்பட்ட இந்தப் பிள்ளையின் கொலை பற்றி, நேரில் நின்று பார்த்தது போன்ற, விலாவாரியான விபரிப்புகளுடன், மனவிகாரம் கொண்டவர்களின் வக்கிர உணர்வுக்கு தீனி போட, இணையத் தளங்கள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றன.
இதில் பிள்ளையை இழந்த பெற்றோரின் துயரங்களைக் கூட கருத்தில் கொள்ளாமல், தங்கள் தளங்களுக்கு பார்வையாளர்கள் மொய்த்தால் போதும் என்ற எண்ணத்துடன் மட்டுமே இந்த போட்டி நடைபெறுகிறது.
எமது மக்கள் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இதில் எதுவும் இல்லை.

இவர்கள் யார்?
இன்றைக்கு தமிழ்ச் செய்தி வெளியிடும் இணையத் தளங்கள் பலவற்றின் பின்னால் யார் இருக்கிறார்கள் என்றே தெரியாது. அரசியல் அமைப்புகளின் பின்னணி அல்லது பணம் சம்பாதிக்கும் நோக்கம் மட்டும் கொண்ட தனியார்கள் மட்டுமே இந்த இணையத் தளங்களை நடத்துகிறார்கள். அதிலும் மரண அறிவித்தல்களில் பணம் சம்பாதிக்கும் இணையத் தளம் பல்வேறு பெயர்களில் பல்வேறு ரசனைகளுக்கு இணையத் தளங்களை நடத்துகிறது. (பாலியல் வக்கிரங்களை பார்வைக்கு விடுதல் உட்பட!)
இவர்கள் ஊடகவியலாளர்களா?
இல்லை.

பல இணையத் தளங்களுக்கான தொடர்புகள் விளம்பரத்துக்கானவை மட்டுமே. பல கண் காணாத தேசங்களில், சம்பந்தமில்லாத பெயர்களில் பதிவு செய்யப்பட்டு, சந்தேகத்துக்கு இடமான இடங்களில் உள்ள கணனிகளிலிருந்து வெளியாகின்றன.
நேர்மையான வழியில் சம்பாதிப்பவர்கள் இவ்வாறு தாங்கள் யார் என்பதை மறைக்கத் தேவையில்லை. ஊடகவியலாளர்கள் என்றாலும், பெயர் பெறுவது கூட இவர்களின் நோக்கமாக இல்லை. இருந்திருந்தால், இவர்களின் வெளியீடுகளில் வரும் பதிவுகளில் பெயர்களாவது இருக்கும்.
அதுவும் இல்லை.
முழு நோக்கமுமே பார்வையாளர்களின் எண்ணிக்கையை வைத்துக் கொண்டு, விளம்பரங்கள் சேர்த்து பணம் சம்பாதிப்பது மட்டுமே.
இவர்கள் ஊடகவியலாளர்கள் இல்லை. தரகர்கள்.
தரகு வியாபாரிகள். பச்சையாகச் சொல்வதாயின், மாமாக்கள்!
இது இருட்டில் முகம் காட்டாது நடத்தும் விபசாரமே!
இவர்கள் எல்லாரும் வெளியிடும் செய்திகள் கூட, வேறெங்கோ திரட்டப்பட்டவையாகத் தான் இருக்கின்றன. வெட்டி ஒட்டும் கலையில் கை தேர்ந்த இவர்கள் சொந்தமாக எதையும் எழுதுவது கிடையாது. பரபரப்பை ஏற்படுத்தும் தலையங்கங்களுடன், வக்கிர உணர்வுடன் அலைவோரையும், சிந்திக்கத் தூண்டும் விசயங்களை வாசித்தால் உண்மை தெரிந்து விடுமே என்ற பயத்தில் உள்ளோரையும் தங்கள் தளங்களைப் பார்வையிட வைப்பதே இவர்களின் நோக்கம்.

அந்த அப்பாவிச் சிறுமி எவ்வாறு துன்புறுத்தப்பட்டாள் என்பதை விபரிக்கும் இவர்களது நோக்கம் என்ன? ஏற்கனவே அந்தச் சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமையை விட மோசமான கொடுமை இப்போது இணையத் தளங்களில் அந்தச் சிறுமிக்கு நடக்கிறது.
இந்தக் கொலை இவர்கள் பரபரப்பை ஏற்படுத்தியபடியோ, தமிழுணர்வாளர்கள் எதிர்பார்த்தபடியோ,  இராணுவத்தினாலோ, இவர்கள் சொல்லும் ஒட்டுக் குழுக்களினாலோ நடத்தப்பட்டதாக இல்லாவிட்டாலும், இவர்களின் வக்கிர வியாபாரத்துக்கு அது தடையாக இருக்கவில்லை.
குற்றவாளிகள் யார்? அவர்களின் பின்னணி என்ன? என்பது பற்றி தெரியப்படுத்துவதில் எந்த அக்கறையும் இல்லாமல், எவ்வாறு குற்றம் நிகழ்த்தப்பட்டது என்பதை விபரிப்பதிலேயே இவர்கள் அக்கறையாக இருக்கிறார்கள்.

கொலை செய்தவர்கள் இந்த அவலத்தை தங்கள் செல்பேசிகளில் படம் எடுத்தார்கள் என்று வேறு செய்தி வருகிறது. அதை தங்கள் தளங்களில் பதிவேற்ற இவர்கள் இராணுவம், அரசியல்வாதிகள் மூலமாக அதைப் பெற பகீரதப் பிரயத்தனம் எடுக்கக் கூடும்.
தங்களுடைய சகோதரிகளாக, பிள்ளைகளாக இருந்தால் இவ்வாறு வெளியிடுவார்களா?
நாளை உங்கள் குழந்தைகளுக்கு இவ்வாறான நிலை வந்தாலும், இவர்கள் இதே போலத் தான் அதை வைத்து வக்கிர வியாபாரம் செய்வார்கள்.
அன்று முதல் இன்று வரைக்கும் பிணத்தை வைத்துப் பிழைப்பு நடத்துவதில் இவர்களுக்கு வெட்கம் இருந்ததில்லை.
இந்த சமூக விரோதிகளுக்கு எங்கள் சமூகம் எப்படிப் பதில் அளிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள்.
இந்த முகமூடிகளின் பின்னால் நிற்கும் சமூக விரோதிகள் யார் என்பதை அம்பலப்படுத்துவதில் இருந்து ஆரம்பிக்கலாம் என்பது நமது கருத்து.
Source:  http://www.thayagam.com/webmedia/

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...