தண்டிக்கப்படாத அநியாயங்கள் !




எஸ்.எம்.எம்.பஷீர்
"எங்கு சட்டம் இருக்கிறதோ ; அங்கு அநீதி இருக்கும்"
                                                                        ( லியோ டால்ஸ்டோய்) 

“ Where there is law there is injustice “ (  Leo Tolstoy )



அண்மைக் காலமாக மேற்குலக நாடுகளில் அகதி அந்தஸ்து கோரிய புலிகள் மற்றும் பல சமூக குற்றவாளிகள் பலர் தாங்கள் நாடுகடத்தப்பட்டால் இலங்கையில் சித்திரவதை செய்யப்படுவோம்  தங்களின் உயிருக்கு ஆபத்து உண்டு என்று முறையிட்டு சர்வதேச மனித உரிமைச் சட்ட விதிகளின் படி இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவதிலிருந்து தடுக்கப்படுவதுடன் சில நாட்களின் பின்னர் அவர்களுக்கு அகதி அந்தஸ்தும்  வழங்கப்படுகிறது. மனித உரிமைக் காவலர்கள் எனப்படும் மேற்குலக நாடுகள் தங்களிடையே முஸ்லிம் பயங்கரவாத சந்தேக நபர்களை கடத்த,  சித்திரவதை செய்ய , கால வரையறை இன்றி அடைத்து வைக்க, நாடுகடந்து சென்ற விசாரணை இன்றி தாக்குதல் நடத்திக் கொல்ல என சட்டங்களை , நீதிமன்றத் தீர்ப்புக்களை நியாயங்களை உருவாக்கிக் கொண்டு , தாங்களே பயங்கரவாத இயக்கம் என்று பிரகடனப்படுத்தியுள்ள தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை "பாதுகாப்பதில்" காட்டிவரும் அக்கறை ஆச்சரியத்தை தருகிறது. பயங்கரவாதிகளையும் குற்றவாளிகளையும் அவர்கள் குற்றமிழைத்த நாட்டின் சட்ட திட்டங்களின்படி அவர்களின் நாட்டிலேயே  விசாரிக்கப்பட தண்டிக்கப்பட , அல்லது விடுவிக்கப்பட உள்ள உரிமையை திட்டமிட்டே மேற்குலக அகதி அந்தஸ்து வழங்கும் நாடுகள் மறுத்து வருகின்றன.  ஒரு நாட்டின் இறைமையை மீறுகின்ற ஒரு பாரிய தலையீடாகவே இவற்றை பார்க்க வேண்டி உள்ளது.  


இந்த பின்னணியில் , இலங்கையில் புலிகளில் இருந்த ஆயிரக்கணக்கானோர் குடியியல் வாழ்க்கை முறைக்குள் செயற்பட புனர்வாழ்வு அளிக்கப்பட்டதும், இலங்கை திரும்பிய புலி பயங்கரவாத சந்தேக நபர்கள் (பிரான்சிலிருந்து சென்ற பகீரதி  ) உட்பட சிலர் பிணையில் விடுவிக்கப்படுவதும் சாதாரண செய்திகளாகும்.  எல்லாவற்றையும் விட மேற்குலகு கூத்தாடிக் கொண்டாடும் "நல்லாட்சி" மலர்ந்துள்ள நிலையில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் அகதிகள் அதிலும் புலிகள் உயிராபத்தை எதிர் கொள்வார்கள் என்று பூச்சாண்டி  காட்டி இலங்கை நாட்டில் அவர்கள் இழைத்த குற்றங்களுக்காக , விசாரிக்கப்படவும்  தண்டிக்கப்படவும் கூடாது என்பதுபோல் தப்பிக்க விடப்படுவதேன்? . 


அந்த வகையில் சில அண்மைக்கால சம்பவங்கள் எமது கவனத்தை ஈர்க்கின்றன. இலங்கையில் யுத்தம் முடிந்த கையோடு தமிழ் அகதிகளை கனடாவுக்கு கப்பலில் கடத்தியவருக்கும் இலங்கைக்கு சென்றால் உயிராபத்து உண்டென்று கனடாவில் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் இருந்து அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட புவனேசன் துரைராஜா கனடாவுக்கு சென்று அங்கு அகதி அந்தஸ்து கோரி இருந்தார். ஆயினும் அங்கும் அவரின் விண்ணப்பம் கனடா குடிவரவுத்  திணைக்களத்தால் நிராகரிக்கப்பட்டாலும், சமஷ்டி நீதிமன்ற நீதிபதி இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால்  அங்கு அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும்  அந்த இளைஞரை இலங்கைக்கு  திருப்பி அனுப்பப்படுவதை நிறுத்தி அவரின் உயிருக்குள்ள அச்சுறுத்தலை  சரியான முறையில் மீண்டும் மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்று கனடிய அரசுக்கு கட்டளை இட்டுள்ளார். 

அந்த இளைஞர் தான் ஒரு புலி உறுப்பினர் என்றும் புலிகளின் ஆவணக் காப்பகம் உட்பட நிதிப்பிரிவில் வேலை செய்தவர் என்றும் அவர்  "இன்னலுக்குட்பட்டவர் அல்ல மாறாக இன்னலுக்குட்படுத்தியவர்" ( He was one of the persecutors , not one of the persecuted ) என்று நீதிபதி சீன் ஹாரிங்டன் (Sean Harrington ) குறிப்பிட்டிருந்தாலும் கனடா அவரைப் பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பட்டுள்ளார். அதாவது புலிகள் இன்னமும் இலங்கையில் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற மிகப்பெரும் பொய் உணமையாக ஏற்றுக் கொள்ளப்படுவதாகவே தோன்றுகிறது.   




இன்னலுக்குட்படுத்துபவனும் இன்னலுக்குட்பட்டவனும்

இந்தியப் படையினர்  இலங்கையில் இருந்த பொழுது , மட்டக்களப்பில் அப்பொழுதிருந்த புலிகளின் அரசியல் பொறுப்பாளாராக இருந்த ஒருவர் "சித்தா"  என அழைக்கப்பட்ட கணபதிப்பிள்ளை ஆசிரியரின் மகன்.
1988 தை மாதம்."சித்தா"வையும் அவருடன் இன்னுமிரு புலி உறுப்பினருமான சுபேசனையும் , பிரான்சிசையும்    இந்தியப் படையினர் மட்டக்களப்பில் வைத்து  கைது செய்தனர் . இவருடன் கைது செய்யப்பட்ட சுபேசன் தான் அணிந்திருந்த சைனைட் வில்லையை கடித்து தற்கொலை செய்து கொண்டார். சித்தாவை  சைனைட்  வில்லையை கடிப்பதில் இருந்து தடுத்து இந்தியப்படையினர் காப்பாற்றினார் . சித்தாவே மட்டக்களப்பில் வாழ்ந்த சில சிங்கள மக்களின் பல கொலைகளுக்கு பின்னணியில் இருந்தவர் என்பதை இக்கட்டுரையாளரின் தொடர்புகள் உறுதி செய்கின்றன. அவை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் எழுதப்பட வேண்டியவை.

இவர் பற்றிய ஒரு இன்னுமொரு செய்தி என்னவெனில் , இவரை  ( சித்தாவை  ) பின்னாளில் இந்தியப் படையினரிடமிருந்து (மான்ரேசா தடுப்பு முகாமிலிருந்து) விடுவித்தவர் மட்டக்களப்பில் வாழ்ந்த சித்தாவின் தந்தையான கணபதிப்பிள்ளையுடன் (ஆசிரியர்) தொழில் ரீதியில் நட்புறவு கொண்டிருந்த  ஒரு பிரபல முஸ்லிம் முக்கியஸ்தர். அவர் இந்தியப்படையினருடன் தனது குடியியல் பதவி மூலம் பெற்றிருந்த தொடர்புகளைக் கொண்டு சித்தாவை விடுவிக்க உதவினார். அந்த முஸ்லிம் பிரமுகரிடம் முஸ்லிம்களுக் கெதிராக செயற்பட்ட , இன ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும்  "சித்தா" வை ஏன் விடுவிக்க கோரிக்கை விடுக்கிறீர்கள் என்று அப்பொழுது மட்டக்களப்புக்கு  பொறுப்பாக இருந்த இந்திய இராணுவ உயர் அதிகாரி கேட்டதாக , அந்த முஸ்லிம்  பிரமுகர் இக்கட்டுரையாளரிடம் தெரிவித்துள்ளார். ஆயினும் சித்தாவின் தநதையின் வேண்டுகோளுக்காக -நட்புக்காக- சித்தாவை விடுவிக்க அவர் உதவி புரிந்தார்..  

இங்கு ஈண்டு குறிப்பிட வேண்டிய விபரம் என்னவெனில் . "சித்தா விடுவிக்கப்பட்ட பின்னர் புலிகளிடம் தன்னை மீண்டும் நிலை நிறுத்திக் கொள்ள தனது இயக்க "ஆளுமையை " செல்வாக்கை வெளிப்படுத்த சிங்கள முஸ்லிம் மக்கள் மீது தனது படுகொலையாட்டத்தை  நடத்தத் தொடங்கினார்.

முஸ்லிம்களுக் கெதிரான சில  பள்ளிவாசல் கொலைகளில் இவர் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதை  ஒரு ஆங்கில எழுத்தாளர் மூலம் கூட உறுதி செய்ய முடிகிறது.  உலகின் பல தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புகளைப் பேணி அவர்களைப் பற்றி ஒரு "பயங்கரவாதிகளுடன் இராப் போசனம் செய்தல்  " (Dining with the Terrorists) என்ற நூலை எழுதிய பில் ரீஸ் என்பவர் "செத்தா" (seta)  எனப்படும் ஒரு புலியினை தான் மட்டக்களப்பில் சந்தித்து பற்றி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். (http://www.bazeerlanka.com/2011/03/persecuted-to-be-prosecuted.html?m=1)
அண்மையில் பள்ளிவாசல் ஒன்றிற்குள் நுழைந்து  வணக்கத்தில் ஈடுபட்ட 31 பேரை சுட்டுக் கொன்றவரான  கருகருவென்ற மீசையும் தாடியும் கொண்ட செத்தா எனப்படும்  இளைஞனுடன் கைகுலுக்கியதை நினைவு கூறுகிறேன். அவர் மூளைச்சலவை செய்யப்பட்டவராய் , அறநெறி உலகில் இருந்து  தன்னை துண்டித்தவராய் அவர் தோன்றினார்.  " நான் ஒரு யுத்தம் புரிந்து கொண்டிருக்கிறேன் "   என்று அவர் என்னை வெறுமையுடன்  விறைத்துப்பார்த்தவாறு சொன்னார்.

இப்படிப்பட்ட ஒருவர் பின்னர் இலங்கையில் இருந்து வெளியேறி ஐரோப்பிய நாடொன்றில் தஞ்சம் பெற்று அங்கு மிக நீண்ட காலமாக வாழ்ந்து வருகிறார். அவர் விநோதமாக ஐக்கிய நாடுகள் அகதிகள் ஒப்பந்தப்படி (!) பாதுகாக்கப்பட வேண்டியவர் என அவருக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது.    உண்மையில் சர்வதேச அகதிகள் ஒப்பந்தம்  அகதிகள் அந்தஸ்து வழங்கப்படக் கூடாது என்று சொல்லப்படுகின்ற   உறுப்புரை ஒன்று எப்க்குள் (Article 1F) அடங்கும் பலர் புலிகள் உட்பட கொலை குற்றச் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் பலர் இன்று அகதிகளாகி பின்னர் அகதி அந்தஸ்து பெற்ற நாடுகளில் பிரஜைகளாகி ஒருவேளை இரட்டைப் பிரஜாவுரிமையும் இலங்கையில் இப்போதுள்ள அரசில் பெற்றுவிடக் கூடும்.

அண்மையில் ஐக்கிய  இராச்சியத்தில்  அகதி   விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட  புலிகளின்  முன்னாள் காவல் துறை (போலீஸ்) அதிகாரியான கண்ணன் காளிமுத்து (36 வயது) இலங்கைக்கு  திருப்பி அனுப்பப்படவிருந்த  வேளையில் அவர் திருப்பி  அனுப்பப்பட்டால் இலங்கையில்  புலி உறுப்பினர் என்ற காரணத்துக்காக அவர் சித்திரவதை செய்யப்படுவார் என்ற காரணத்தைக் காட்டி  அவர் நாடு கடத்தப்படுவதை மேல் நீதிமன்றம்  ஒத்தி வைத்துள்ளது. இத்தகைய சம்பவங்கள் என்ன செய்தியை சொல்கிறது என்பதே இங்குள்ள கேள்வியாகும்!  

1951 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அகதிகள் ஒப்பந்தம் அகதி அந்தஸ்து வழங்கப்படுவதில் அதன் உறுப்புரை ஒன்று எப் (Article F1) சில நிபந்தனைகளை விதிக்கிறது. அதன்படி சமாதானத்திற்கு எதிராக குற்றம் புரிந்தோர், யுத்தக் குற்றம் புரிந்தோர். மனித குலத்துக்கு எதிரான குற்றம் புரிந்தோர் , அகதி விண்ணப்பித்துள்ள நாட்டிற்கு வெளியே அரசியல் சார்பற்ற , ஆனால் பாரிய குற்றம் புரிந்த ஒருவருக்கும் அகதி ஒப்பந்தத்தின் கீழ் அகதி அந்தஸ்து வழங்கப்படக்கூடாது என்பதை வலியுறுத்துகிறது.

ஐக்கிய நாடுகளின் அகதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஒப்பந்த நாடுகளில் பல யுத்தக் குற்றவாளிகள் அகதி அந்தஸ்துப் பெற்றுள்ளார்கள். அண்மைக் காலத்தில் ஐக்கிய ராச்சியத்தில் அகதி அந்தஸ்து பெற்ற ஓர் ஆப்கானிய அகதியான பார்யாடி சர்டாத் (Faryadi Zardad) என்பவர் முன்னாள் ஒரு யுத்தப் பிரபு (war Lord) என்று ஐக்கிய ராச்சியத்தில் அவருக் கெதிராக வழக்கு தொடரப்பட்டது . ஆப்கானிஸ்தானில் 1991 தொடக்கம் -1996 வரையான காலப்பகுதிகளில் அங்குள்ள சோதனைச் சாவடிகளில் அவர் பலரை அச்சுறுத்தினார் என்ற வகையில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டு ஐக்கிய ராச்சியத்தில் தண்டனை வழங்கப்பட்டது. அவருக்கு அகதி அந்தஸ்து வழங்கி பாதுகாத்த ஐக்கிய ராச்சியத்திலேயே அவர் குற்றவாளியாகக் காணப்பட்டு தண்டிக்கப்பட்டார். இதுவே முதன் முதலில் வெளிநாட்டவர் மீது , வெளிநாட்டில் அவர் முன்னர் புரிந்த குற்றத்திற்காக  தண்டிக்கப்பட்ட சம்பவமாகும். அந்த சம்பவம் ஒரு முக்கிய செய்தியை  வலியுறுத்தியது .
     
அகதி அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தாலும்  ஒருவர் மீது , அவர் தனது நாட்டில் அல்லது வேறெங்கேனும் இழைத்த குற்றத்துக்காக முறைப்பாடுகள் கிடைக்கப்படுகின்ற  பொழுது , அவற்றினை விசாரித்து தண்டனை வழங்க முடியும். ஆனால் ஒரு பயங்கரவாத இயக்கம் என்று தாங்களே பிரகடனப்படுத்தி அந்த இயக்கத்தில் இருந்ததனால் பலருக்கு துன்பம் இழைத்திருக்கும் நிலையில் இருந்திருப்பார் என்ற பொதுப்புத்தி கொண்ட நிலையிலும் , அவர் இழைத்த குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் நீதி வழங்கப்பட வேண்டியவர்கள் என்ற நிலையிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு (இன்னலுக்குட்பட்டவர்களுக்கு ) நீதியை மறுக்கும் செயலையே மேற்குலக நாடுகள் செய்கின்றன . ஆகக் குறைந்தது சம்பந்தப்பட்ட நாடுகளின் இறைமையை மதித்து , அக்குற்றவாளிகளை அந்நாடுகள் துன்புறுத்தாமல் விசாரணை செய்ய ஒரு ஒப்பந்தத்தை செய்தாயினும் குற்றவாளிகளை,  பயங்கரவாத இயக்க நபர்களை நாடு கடத்தலாம். பிரித்தானிய பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலிலும், பின்னர் போலீஸ் கண்காணிப்பிலும் வைக்கப்பட்டிருந்த ஜோர்டானிய பிரஜையான முஸ்லிம் மதகுருவான  அபூ கடாடா என்பவரை ஜோர்டானிய நாட்டில் , அங்கு அவர் மீது ஏற்கனவே சுமத்தப்பட்டிருந்த  பயங்கரவாத  குற்றச்சாட்டுக்களுக்காக விசாரிக்கப்பட ஜோர்டானிய அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு பிரித்தானியா அவரை நாடு கடத்தியது. அதுபோலவே புலிகள் உட்பட பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்களை இலங்கைக்கு நாடு கடத்தப்படல் வேண்டும். ஒரு இறைமையுள்ள நாட்டின் நியாயாதிக்கம் நவீன காலனித்துவத்தின் கைதியாகக் கூடாது. !
24/05/2015

 


No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...