மக்கள் விரோத – தேச விரோத ஐ.தே.கவுக்கு எதிரான சக்திகள் ஐக்கியப்பட வேண்டும்!- வானவில்



வ்வருடம் ஜனவரி 08ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று புதிய அரசாங்கம் அமைந்த பின்னர், நாட்டின் ஆட்சி முறையிலும், மக்களின் நாளாந்த வாழ்விலும் பல தலைகீழ் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. மாற்றங்கள் என்பது இயல்பானவையும், தவிர்க்க முடியாதவையும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். எனவே ஒரு தனி மனிதனும் சரி, ஒரு நாடும் சரி, மாற்றங்களை ஒருபோதும் தவித்துவிட்டு வாழ முடியாது.
ஆனால் அந்த மாற்றங்கள் நல்ல வழியில் நடந்தால் மட்டுமே அதனால் பயன் உண்டு. அப்படி நல்ல வழியில் மாற்றங்கள் நடப்பதற்கு மனிதப் பிரயத்தனம் மிக அவசியமானது. அப்படிப் பார்த்தால் நமது நாட்டில் ஜனவரி 08ஆம் திகதி நடைபெற்ற ஆட்சி மாற்றம் நல்ல திசை வழியில் நடைபெற்றுள்ளதா என்பதை ஆராய்ந்து பார்ப்பது அவசியமானது.


ஜனவரி 08ஆம் திகதி ஆட்சி மாற்றத்தைத் செய்ய வேண்டும் என்று கோரியவர்கள், ‘நாட்டில் சர்வாதிகாரம் தலைதூக்கியுள்ளது. ஒரு குடும்பத்தின் ஆட்சி நடைபெறுகிறது. இலஞ்சமும் ஊழலும் தலைவிரித்தாடுகின்றது. இதற்கெல்லாம் காரணம் நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதி முறை இருப்பதும், அதை ஜனாதிபதி பதவியில் இருப்பவர் பிரயோகிப்பதும்தான் காரணம்’ எனக் கூறியே பொதுமக்களிடம் வாக்குக் கேட்டனர்.
அவர்களது வேண்டுகோளில் ஏமாந்த பொதுமக்கள் அன்றிருந்த ஜனாதிபதிக்கு அளித்ததை விட சற்று அதிகமான வாக்குகளை எதிரணி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவுக்கு அளித்து அவரை நாட்டின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்தனர். ஜனவரி 08இல் நடைபெற்றது ஜனாதிபதித் தேர்தல் ஆகையால், மக்கள் ஜனாதிபதியை மாற்றினார்களேயொழிய, பாராளுமன்றத்தை மாற்றவில்லை. ஜனாதிபதித் தேர்தலுடன் சேர்த்து அதற்கான வேண்டுகோளும் விடுக்கப்பட்டிருக்கவில்லை. இருப்பினும், ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து நாட்டின் ஆட்சியிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
உண்மையில் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்னால் இரண்டு தெரிவுகளே இருந்தன. ஒன்று இன்னமும் ஆயுட்காலம் முடிவடையாமல் உள்ள பாராளுமன்றத்தையும், அந்தப் பாராளுமன்றம் தெரிவு செய்த, ஏறத்தாழ மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் உள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தையும் தொடர்ந்தும் செயற்பட அனுமதிப்பது. இரண்டாவது தெரிவு, பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடாத்தி, அதில் தெரிவாகும் புதிய அரசாங்கத்தைச் செயல்பட
அனுமதிப்பது. ஆனால் ஜனாதிபதி மைத்திரி இந்த இரண்டில் எதுவொன்றையும் செய்யவில்லை. அந்த இடத்தில்தான் அவர் நாட்டை அழிவுக்கு இட்டுச் செல்லும் பெருந்தவறு ஒன்றை இழைத்துள்ளார்.
அவர் தன்னை ஜனாதிபதியாகத் தெரிவு செய்வதில் விட்டுக் கொடுப்பையும், ஆதரவையும் வழங்கிய ஐக்கிய தேசியக் கட்சிக்கும், அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் நன்றிக்கடன் செலுத்துவதற்காக, நாட்டின் ஜனநாயக மரபையும், நடைமுறைகளையும் மீறி, எந்த நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்தாரோ, அந்த நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தியே ஐ.தே.க அரசாங்கம் அமைய வழி செய்ததோடு, ரணிலை பிரதமராகவும் முடிசூட்டி வைத்தார். இதனால் உலகில் எங்குமே நடைபெறாத வகையில், 225 உறுப்பினர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் வெறுமனே 48 உறுப்பினர்கள் கொண்ட ஐ.தே.க. அரசாங்கம் நடாத்துகிற விந்தை நடைபெறுகிறது. சொல்லப்போனால் இன்றைய அரசாங்கம் செத்துப்போன ஜனநாயகத்தின் வயிற்றில் பிறந்த, ‘தாயைக் கொல்லி’க் குழந்தையாகக் காட்சி அளிக்கிறது.
அதன் பின்னர் என்ன நடந்தது? 100 நாள் வேலைத்திட்டம், நல்லாட்சி என்று எல்லாம் கூறியவர்கள், தமது அரசியல் எதிரிகளை ஒழித்துக் கட்டுவதற்காக, பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதிலும், கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் காலத்தைக் கடத்துகின்றனர். அதுமட்டுமல்ல.
புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் முன்னைய அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட சகல அபிவிருத்தி நடவடிக்கைகளும் கைவிடப்பட்டுள்ளன.
நிதி நெருக்கடி ஏற்பட்டு, திறைசேரி காலியாகி, அரச ஊழியர்களுக்கே சம்பளம் கொடுக்க முடியாத நிலை தோன்றியுள்ளது.
நீண்டகால அனுபவம் மிக்க அரச நிர்வாகிகள் பழிவாங்கப்பட்டு, பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், அரச நிர்வாகம் முடங்கிப்போய் உள்ளது.
புலிப் பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகள் சம்பந்தமாக மெத்தனப்போக்கைக் கடைப்பிடிப்பதால், உள்நாட்டில் பதுங்கியிருந்த புலிகளின் மிச்சசொச்சங்களும், புலம்பெயர் புலிகளும் உற்சாகமடைந்து, தமது மீள் உருவாக்கத்தை ஆரம்பித்துள்ளனர்.
நீதித்துறை, பொலிஸ்துறை மற்றும் ஆயுதப்படைகள் அரசியல்மயப்படுத்தப்படுகின்றன.
இலங்கையின் நெருக்கடியான காலங்களில் தன்னலம் பாராது உதவி புரிந்த சீனா, ரஸ்யா போன்ற உலகின் பலம் வாய்ந்த நாடுகள் ஒதுக்கப்பட்டு, மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகளுக்கு ஆதரவான வெளிநாட்டுக் கொள்கை பின்பற்றப்படுகிறது.
இப்படி இன்னும் பல.
ஐ.தே.க. அரசாங்கம் பின்பற்றும் இத்தகைய கொள்கைகளை இலங்கை மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொண்டதில்லை. அதனால்தான் 1956, 1970, 2004 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் ஐ.தே.க. ஆட்சிக்கு வராமல் மக்கள் அதனை விரட்டியடித்தார்கள். இப்பொழுது கூட அது மக்கள் ஆணை பெறாமல் கபடத்தனமான முறையிலேயே தனது அசிங்கமான தலையை மீண்டும் தூக்கியுள்ளது.
எனவே, இந்த மக்கள் விரோத, மோசடித்தனமான அரசாங்கத்தை விரைவில் ஆட்சியை விட்டு விரட்ட வேண்டும் என்ற அவா மக்கள் மத்தியில் பெரிய அளவிலும், வேகமாகவும் உருவாகி வருவதை அவதானிக்க முடிகிறது. இந்த உண்மையை, முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை விரட்ட வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக ஐ.தே.கவுடன் கைகோர்த்த இன்றைய ஜனாதிபதி மைத்திரியாலோ அல்லது முன்னைய ஜனாதிபதி சந்திரிகாவாலோ கூட புறக்கணிக்க முடியாது உள்ளது. சாதாரணமாக கிராம மக்கள் சொல்வார்கள், “சரி, போனது போகட்டும், இனியாவது நல்லது நடக்கிறதுக்கு வழி பார்ப்போம்” என.
அதுபோல, மைத்திரியும், சந்திரிகாவும் குறுகிய அரசியல் நோக்கத்துக்காக, செய்யக்கூடாததைச் செய்து, ஐ.தே.கவை ஆட்சிக்குக் கொண்டு வந்த தவறுக்கு பிராயச்சித்தம் செய்வதற்கான வழிவகைகள் குறித்து இப்பொழுது சிந்திப்பது அவசியம். எப்படியும் ஐ.தே.கவை ஆட்சி அதிகாரத்திலிருந்து விரட்டுவதற்கான வழிவகைகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும்.
அதற்கு அவர்கள் செய்ய வேண்டியது யதார்த்தபூர்வமான, நடைமுறைச் சாத்தியமான நடைமுறைகளை மேற்கொள்வதுதான். அதில் முதலாவதும் முக்கியமானதுமான விடயம், என்ன விலை கொடுத்தேனும், விட்டுக்கொடுப்புச் செய்தேனும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒற்றுமையைக் குலைய விடாமல் காப்பது. இரண்டாவது விடயம், முற்போக்கு சக்திகள், ஜனநாயக சக்திகள், தேசபக்த சக்திகள் கொண்டு அமைக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்டமைப்பைத் தொடர்ந்தும் பேணுவது.
இந்த விடயத்தில் ஏற்கெனவே 1977இல் ஒரு கசப்பான அனுபவம் இருக்கின்றது. அன்று சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், இடதுசாரிக் கட்சிகளுக்கும் இடையில் பிளவு தோன்றியதால்தான், ஐ.தே.க. அமோக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. இன்றும் அப்படியொரு நிலையை உருவாக்கத்தாதான் ஐ.தே.க மனப்பால் குடிக்கிறது.
இந்த விடயத்தை சுதந்திரக் கட்சியின் மகிந்த அணியும் கவனத்தில் கொள்வது அவசியமானது. ஏனெனில் ஒரு கைவீசி ஒலி எழும்பாது.
ஏற்கெனவே சுதந்திரக் கட்சியின் இன்றைய தலைமைப் பதவியை வகிக்கும் ஜனாதிபதி மைத்திரிக்கும், முன்னாளைய ஜனாதிபதியும், சுதந்திரக் கட்சியின் போசகர்களில் ஒருவராகப் பதவி வகிக்கும் மகிந்தவுக்கும் இடையில் தமது முரண்பாடுகளைச் சீர்செய்வதற்கான பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றுள்ளது. இது ஒரு நல்ல சகுனமும், ஆரம்பமும் ஆகும். இந்தப் பேச்சுவார்த்தையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவையும் உள்ளடக்கி அதைத் தொடர வேண்டும். அதன் மூலம் நல்லதொரு நிலைமையை உருவாக்கலாம்.
அதன் மூலமே எமது அருமையான தாய்நாட்டைத் தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவதற்கு வியூகம் அமைத்துச் செயற்படும், ஏகாதிபத்திய சக்திகளின் நோக்கங்களையும், அதற்கு உதவியாகச் செயற்பட்டு தேசத்துரோக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஐ.தே.கவையும் தோற்கடிக்க முடியும்.
தனிநபர் நலன்களை விட, தேசத்தின் நலனை முன்னிறுத்துவதே இன்றைய முதல் தேவையாகும்.

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...