சீனா தொடங்கிய புதிய ஆசிய வங்கிக்கு ஆதரவு பெருகுகின்றது - சமரன்

ரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னர் உலகம் இரண்டு எதிரெதிர் முகாம்களாகப் பிரிந்தது. ஒன்று முதலாளித்துவ முகாம், மற்றது சோசலிச முகாம்.

1990இல் சோவியத் யூனியன் தலைமையிலான சோசலிச முகாம் வீழ்ச்சியடைந்தது. அதன்பின்னர் முதலாளித்துவ அமைப்பு முறையே சிறந்தது, நிரந்தரமானது என, முதலாளித்துவ தத்துவவியலாளர்களும், ‘அரசியல் அறிஞர்களும்’ பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர்.
ஆனால் அவர்களது பிரச்சாரங்களை மேவிக்கொண்டு, முதலாளித்துவ உலகம் முன்னொருபோதும் இல்லாத பொருளாதார நெருக்கடியில் வீழந்தது.


முதலாளித்துவ சமூக அமைப்பில் பணமே சகலதினதும் அச்சாணி. அந்தப் பணத்தை உலகம் முழுவதும் மூன்று பெரும் நிதி நிறுவனங்களே கட்டுப்படுத்தி வருகின்றன. அவையாவன, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி என்பனவாகும். இவை மூன்றும் உலகின் வல்லமை படைத்த அமெரிக்காவின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளன. இவைகளிடம் உதவி பெற்ற வளர்முக நாடுகள், மார்வாடியிடம் வட்டிக்குப் பணம் பெற்றவன் நிலையில் சீரழிந்து போனதுதான் வரலாறு.
எனவே இந்த நிதி அமைப்புகளின் மீது அமெரிக்காவுக்கு இருக்கும் ஆதிக்கத்தைத் தகர்ப்பதற்காகவும், அமெரிக்க டொலரின் ஏகபோகத்துக்கு முடிவு கட்டுவதற்காகவும், உலக சனத்தொகையில் 40 வீதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னணி நாடுகளான சீனா, ரஸ்யா, இந்தியா, பிரேசில், தென்ஆபிரிக்கா என்பன இணைந்து ‘பிரிக்ஸ்’ (BRICS) என்றொரு அமைப்பை உருவாக்கின. அந்த அமைப்பு புதிய சர்வதேச வங்கி ஒன்றையும் உருவாக்கியதுடன், அமெரிக்க டொலருக்கு மாற்றீடாக புதிய நாணயம் ஒன்றைப் புழக்கத்துக்குக் கொண்டு வருவது குறித்தும் ஆராய்ந்து வருகிறது. அந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை சுழற்சி முறையில் தற்போது இந்தியா வகித்து வருகிறது.
இதைவிட, சீனா தற்பொழுது தனியாக பிறிதொரு வங்கியொன்றையும் ஆரம்பித்துள்ளது. ஆசிய உள்கட்டுமான முதலீட்டு வங்கி (Asian Infrastructure Investment Bank – AIIB) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வங்கியை சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் (Xi Jinping) கடந்த ஒக்ரோபரில் முறைப்படி ஆரம்பித்து வைத்துள்ளார். அத்துடன் அதன் ஆரம்ப அடிப்படை நிதியாக 50 பில்லியன் டொலர்களை சீனா வைப்புச் செய்து அதன் 50 வீதமான பங்குகளைத் தன்வசம் வைத்துள்ளது. ஆசிய நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கு கடன் உதவிகளை வழங்குவதே இந்த வங்கியின் நோக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் இந்த நடவடிக்கை ஏற்கெனவே உள்ள உலகின் மூன்று பெரும் நிறுவனங்களுக்கும், அவற்றின் மீது அமெரிக்கா செலுத்தி வரும் ஆதிக்கத்திற்கும் பெரும் சவாலாக அமையும் என சர்வதேச பொருளாதார – அரசியல் வல்லுனர்கள் ஆரூடம் கூறியுள்ளனர். அவர்களின் கூற்றை நிரூபிப்பது போல, அமெரிக்காவின் நெருங்கிய நேசநாடுகளிடமிருந்தே இந்த வங்கிக்கு ஆதரவுக்கரங்கள் நீள ஆரம்பித்துள்ளன.

சீனாவுடன் பலவிதமான பிரச்சினைகளைக் கொண்டுள்ள, ஆசியாவில் அதன் போட்டி நாடான யப்பானின் நிதியமைச்சர் Taro Aso அவர்களே, சமீபத்தில் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கருத்துத் தெரிவிக்கையில், ஷயப்பான் பொருத்தமான சந்தர்ப்பத்தில் இந்த வங்கியில் இணைந்து கொள்ளும்| எனத் தெரிவித்திருக்கிறார்.
அதுதவிர, சீனாவின் புதிய வங்கியில் இணைந்து கொள்வதற்கு பிரித்தானியா மார்ச் 13ஆம் திகதியே விண்ணப்பம் செய்துவிட்டது. அதைத் தொடர்ந்து ஐரோப்பாவின் முன்னணி நாடுகளான பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, சுவிற்சலாந்து என்பனவும் பிரித்தானியாவின் பாதையைத் தொடரப்போவதாக அறிவித்துள்ளன.

மேலும், அமெரிக்காவின் இரண்டு நெருங்கிய நேசநாடுகளான அவுஸ்திரேலியாவும், தென்கொரியாவும் கூட, இந்த வங்கியில் இணைவது குறித்துப் பரிசீலித்து வருகின்றன. அவுஸ்திரேலியா ஏற்கெனவே சீனாவுடன் உச்சகட்ட வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளது. அதேபோல, தென்கொரியா அமெரிக்காவுடனும் யப்பானுடனும் செய்யும் வர்த்தகத்தின் மொத்த அளவைவிடக் கூடுதலான அளவுக்கு சீனாவுடன் வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளது.
அதுமாத்திரமின்றி, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் என்பனவும் சீனா தொடங்கியுள்ள புதிய வங்கியுடன் ஒத்துழைக்கப் போவதாக அறிவித்துள்ளன.
இந்த நடவடிக்கைகளைப் பார்க்கும் போது, இந்த நாடுகள் கடந்த காலங்களைப் போல அமெரிக்கா மீது மட்டும் நம்பிக்கை வைக்கவோ, அதைச் சார்ந்திருக்கவோ விரும்பவில்லை அல்லது தயாரில்லை என்பது புலனாகின்றது. இதன்மூலம் அமெரிக்கா உலக அரங்கில் தனிமைப்படக்கூடிய நிலைமை உருவாகலாம்.

அமெரிக்காவின் இந்த நிலைமைக்கு ஜனாதிபதி பராக் ஒபாமா பின்பற்றும் கொள்கைகளே காரணம் என, அவரது அரசியல் எதிரிகளான குடியரசுக்கட்சி அரசியல்வாதிகள் சாடி வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, உலகின் வல்லமைமிக்க நாடுகள் எல்லாம் சீனாவின் உதவியையும், தயவையும் வேண்டி நிற்கையில், இலங்கையில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள மேற்கத்தைய சார்பு – இந்திய சார்பான ரணில் – மைத்திரி தலைமையிலான அரசாங்கம், இலங்கை சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து தன்னலமில்லாத உதவியைச் செய்து வரும் சீனாவை உதாசீனப்படுத்தி வருகின்றது. இது இலங்கை அரசின் ஏகாதிபத்திய சார்பு அழிவுப்போக்கையே எடுத்துக் காட்டுகிறது.

‘கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இருக்கும்வரை சீன மக்களால் சகலவிதமான அற்புதங்களையும் நிகழ்த்த முடியும்’ – மாஓ

நன்றி: வானவில் 53

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...