மைத்திரிவந்தால் முதலில் அகற்றப்படப்போவது ஜனாதிபதி முறைமையல்ல மாகாணசபை முறைமையே

மைத்திரிவந்தால் முதலில் அகற்றப்படப்போவது ஜனாதிபதி முறைமையல்ல மாகாணசபை முறைமையே மட்டுநகரிலிருந்து எழுகதிரோன் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறுவதற்கு இன்னும் இருவாரங்களே Maithir and ranilஇருக்கின்ற போதிலும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை இன்னும் வெளிப்படுத்துவதற்கு தயங்கி வருகின்றது. அதற்கான காரணமாக சரியான தெளிவுபடுத்தல்கள் இன்றி முன்னுக்கு பின்னர் முரணான கதைகளே அவிழ்த்து விடப்படுகின்றன



.முதலில் இதோ வானத்திலிருந்து தேவதூதன் வருவது போல இதோ மைத்திரி வருகின்றார் மைத்திரி வருகின்றார். அவரே எமக்கு விடுதலையின் ஒளியை கொண்டுவருகின்றார் என்று கதையளந்தனர் கூட்டமைப்பினர் . அவரும் வந்தாலும் வந்தார் மஹிந்தவிடமிருந்த அத்தனை சிங்கள பெளத்த மேலாதிக்க தேசியவாதிகளையும் தன்னுடனே அழைத்துக்கொண்டுவந்தார். அப்போதே விழித்துக்கொண்டிருக்க வேண்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மெளனம் காத்தனர். ஏனிந்த மெளனம் என்று கேள்விஎழுப்பவேண்டிய ஊடகங்களோ தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மைத்திரியோடு கனவான் ஒப்பந்தம் செய்திருப்பதாக கூட்டமைப்பினரின் கள்ள மெளனத்துக்கு வக்காலத்து வாங்குகின்றனர். மைத்திரியின் மாராப்பு கூட்டணியில் அங்கம் அணிதிரண்டிருக்கும் சிங்கள தேசியவாதிகளையும் மீறி ஏதாவது நம்பிக்கை கீற்று வெளிப்படாதா என்ற நப்பாசையில் எதிரணி வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளிவரும்வரை காத்திருப்பதாக கூட்டமைப்பினரும் அறிக்கை விட்டனர். இப்போது மைத்திரியின் விஞ்ஞாபனமும் வெளிவந்து விட்டது. அதுவும் கூட்டமைப்பினரை அம்போ கைவிட்டுவிட்டது.மைத்திரியின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வினை தராதது மட்டுமல்ல சிறுபான்மை மக்கள் இந்த நாட்டில் இருக்கின்றார்களா? என்று கேள்வி எழுப்பும் அளவிற்கு அவர்களை கண்டுகொள்ளாது விட்டிருக்கின்றது. ஒருவகையில் பார்த்தால் இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்களின் இருப்பையே அது திட்டமிட்டு மறைத்திருக்கின்றது. மைத்திரியை தலையில் வைத்து கூத்தாடிய மனோகணேசனே அவர் முகத்தில் காறி உமிளாத குறையாக வாயடைத்து நிற்கிறார். இந்தநிலையில் ஆட்சிமாற்றம் வேண்டும் என்று ஆரம்பத்தில் குரலெழுப்பிய கூட்டமைப்பினர் இப்போது அதற்கான காரணங்களை மக்களுக்கு எடுத்துச்சொல்ல முடியாது திக்குமுக்காடி நிற்கின்றனர். மக்களுக்கு சரியான பாதையை காட்டமுடியாது தமது கையயாலாகாத்தனத்தை Ranil and chandrika1மூடிமறைக்க முயலுகின்றனர். ஜனாதிபதி தேர்தல் குறித்து மக்களினதும் கட்சி அபிமானிகளின் கருத்துக்களை வடக்கு கிழக்கு எங்கும் அறிந்து வருவதாகவும் அக்கருத்துக்களின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படுமென்றும் இப்போது புதிய கதைகளை அவிழ்த்து விடதொடங்கியுள்ளனர். எப்போதப்பா இந்த தமிழ் தலைமைகள் மக்களிடம் கருத்தறிந்து அரசியல் முடிவெடுத்தன? இதுவென்ன புதிய கதையென்று மக்கள் சிந்திக்க வேண்டாமா? முதலாவது கிழக்கு மாகாண சபை தேர்தல் அறிவிக்கப்பட்டபோது இது வேண்டாமென்று மக்கள் சொன்னனரா? அப்போது அதை எந்தமக்களின் கருத்தறிந்து கூட்டமைப்பினர் கிழக்கு மாகாண சபை தேர்தலை நிராகரித்தனர்? வடமாகாண சபைத்தேர்தல் போட்டியிடும்போது கொழும்பிலிருந்து நீதிமான் விக்கினேஸ்வரனை அழைத்து வாருங்கள் என்று எந்த மக்கள் கூட்டமைப்பினரிடம் விருப்பம் தெரிவித்தனர்? அப்போது யாருக்கு இந்த விக்னேஸ்வரன் என்னும் மனிதரை தெரியும்? கடந்த கிழக்குமாகாண தேர்தலில் தமிழ் முதலமைச்சரை அகற்ற செய்த சதிதிட்டம் எந்த மக்களின் கருத்தறிந்து தீட்டப்பட்டது? என்கின்ற கேள்விகளுக்கு நிச்சயம் தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் பதில்கள் கிடையாது. நமக்கு மூக்கு போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுனப்பிழையாக இருக்கவேண்டும் என்று அரசியல் தலைமைகள் பொறுப்பற்று செயல்படமுடியாது.அரசியலில் எதிரியின் எதிரி நண்பன் என்பது போட்டி நடைபெறும் வரைதான் போட்டி முடிந்தததும் அந்த நண்பனே எதிரியாவான். இது கடந்த கால அரசியலில் நாம் கண்டுவந்து உண்மை .ஒவ்வொரு தேர்தல்களிலும் ஒப்பந்தங்களிலும் இப்படி எதிரியின் எதிரியை நண்பனாக்கி கையை சுட்டுக்கொண்டவர்கள் நாம்.கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்பார்கள். ஒவ்வொரு தீர்வுகளை நடைமுறைப்படுத்த முயலும்போதும் எதிர்கட்சியினர் இந்த சிங்கள தேசியவாதிகளையும் அவர்களை ஆதரிக்கும் பிக்குமாரையும் சேர்த்துக்கொண்டு ஊர்வலம் போவதும் எதிர்ப்பு தெரிவிப்பதும் காலாகாலமாக நடப்பதுதான். ஆகவேதான் எதிரியின் எதிரி நண்பன் என்னும் கோட்பாட்டை முன்வைத்து மைத்திரி மீது ஒரு பிரமையை ஏற்படுத்தி தமிழ் மக்களை தவறாக அல்ல பிழையாக வழிநடத்தும் முயற்சியை கூட்டமைப்பினர் கைவிட வேண்டும். பண்டா-செல்வா ஒப்பந்தத்தை கைவிடகோரி யாத்திரை செய்து அதை நிர்மூலமாக்கிய யுஎன்பி மீது கொண்டிருக்கும் வர்க்க விசுவாசத்துக்காக கூட்டமைப்பினர் மக்களை தமிழ் பலிக்கடாக்களாக்க முடியாது.இன்று "மாற்றம் வேண்டும்" ஆகவே "மைத்திரி வேண்டும்" என்று குரல்கொடுக்கும் சந்திரிகா ஒரு காலத்தில் முன் வைத்த தீர்வு பொதியை மைத்திரியை கொண்டு நிறைவேற்ற தயாரா? அந்த தீர்வுபொதியையே பாராளுமன்றில் வைத்து தீயிட்டு கொளுத்திய ரணில் விக்கிரம சிங்கவை பிரதமராக்கி தமிழ் மக்களுக்கு எதை வாரி வழங்கி விடமுடியும்? வாக்குறுதி தந்தவர்களே அதை நிறைவேற்ற முடியாமல் தடுத்து நிறுத்தும் சிங்கள தேசிய வாதிகளின் புகலிடமாக போயிருக்கும் மைத்திரியின் எதிரணி கதம்பம் எப்படி தமிழ் மக்களுக்கு நம்பிக்கையளிக்க முடியும்? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலிறுக்க முடியாமல் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமது விருப்பத்தை வெளிப்படையாக தெரிவிக்கமுடியாமல் காலத்தை இழுத்தடிக்கின்றனர் என்பதே உண்மை. அரசியலில் எது பிழை எது சரி என்பதல்ல. எல்லாவேளைகளிலும் எடுக்கின்றமுடிவுகள் சரியாக இருக்கபோவதுமில்லை.எப்போதும் அரசியல் தலைமைகள் தீர்க்கதரிசனமாக செயல்படுவதும் சாத்தியமில்லைதான்.ஆனால் மீண்டும் மீண்டும் பிழையான வழிகளினூடே மக்களை அழைத்துச்செல்வது ஒரு தலைமையின் சிறப்பல்ல.குறைந்த பட்சம் எடுக்கின்ற முடிவுகளுக்கு உண்மையாக செயல்பட வேண்டும்.அதனை வெளிப்படையாக மக்களிடம் சொல்லுகின்ற தற்துணிவு வேண்டும். ஐந்தோ பத்தோ வருட வரலாறுமட்டுமே கொண்ட தமிழ் மக்கள் விடுதலைபுலிகளும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியும் தாம் சரி என்று பயணிக்கும் பாதையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஆதரித்து பகிரங்கமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றார்கள். மக்களை வழிநடத்த அந்த நேர்மையும் நெஞ்சுரமும் அவசியமாகும். அந்த துணிச்சலின்றி 65 வருடகால அரசியல் அனுபவம்கொண்ட இந்த தமிழரசுக்கட்சியினர் தனிநாட்டுகோரிக்கையின் பிதாமகர்கள் ஒரு தேசிய தேர்தலில் நிலைப்பாடு எடுக்க முடியால் திண்டாடுவதென்பது கேவலமானது. ஒருபுறம் இன்னும் "முடிவு எடுக்க வில்லை" என்று சொல்லிக்கொண்டே "மாற்றம்வேண்டும்" என்று கோழைத்தனமாக கூட்டமைப்பினர் மைத்திரிக்கு வாக்கு கேட்பது அதைவிட கேவலமானதாகும். பாராளுமன்ற தேர்தலோ அன்றி மாகாணசபை தேர்தலோ இடம்பெறும் வேளைகளில் எடுத்துவிடுகின்ற ஐ.நா அம்புகளும் சர்வதேச விசாரணை கோசங்களும் இங்கே ஏன் ஓடி ஒழிந்து விட்டன. சர்வதேசம் பார்த்துக்கொண்டிருக்கின்றது தமிழர்களே! சர்வதேசம் பார்த்துக்கொண்டிருக்கின்றது! என்று ஒவ்வொரு தேர்தலிலும் ஓயாது ஒலிக்கின்ற குரல்கள் எங்கே ஓடி ஒளிந்து விட்டன? இப்போதுமட்டுமென்ன சர்வதேசம் தூங்கி விட்டதா? இப்போதும் சர்வதேசம் பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றது? தடுமாறும் தமிழ் தலைமையையும் அதன் இராஜதந்திர லட்சணத்தையும்?அதிலும் விழிப்பாக வழமைக்கு மாறாக கண்ணுக்கு எண்ணை விட்டுக்கொண்டல்லவா பார்த்துக்கொண்டிருக்கிறது? ஒரு காலத்தில் இதோ புதிய விடியல் தனிநாடும் தன்னாட்சியதிகாரமும் கைக்கெட்டும் தூரத்தில் தலைவரின் தீர்க்கதரிசனம் உலகில் எந்த இனத்துக்கும் கிடைக்காத வரப்பிரசாதம் என்று பல புண்ணாக்குத்தனமான ஆய்வுகளை செய்து கொண்டிருந்த பலர் இன்று இந்த கூட்டமைப்பினரின் கள்ளமெளனத்துக்கு இராஜதந்திர வியாக்கியானம் கொடுக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றார்கள். மகிந்தவை கவிழ்க்கின்ற மேற்குலகின் சதிக்கு ஆமாம்சாமி போட்டு எதற்காக மைத்திரியை ஆதரிக்கவேண்டும் என்று மக்களிடம் நியாயம் சொல்ல வக்கின்றி நிற்கும் கூட்டமைப்பினருக்கு ஆலவட்டம் வீசும் செயலில் இவர்கள் இறங்கியிருக்கின்றார்கள். மைத்திரியுடன் கனவான் ஒப்பந்தம் செய்திருக்கின்றார்களாம் என்று கதைகள் கட்டிவிடப்படுகின்றன.. மக்கள் விரோத அரசியல் முடிவுகளை வெளியிடமுடியாத போக்கிரித்தனத்துக்கு அரசியல்வாதிகள் வைக்கின்ற போலி சொல்லாடலே இந்த கனவான் ஒப்பந்தம் என்பதாகும். இது கனவான் ஒப்பந்தமா? அல்லது களவாணிகளின் ஒப்பந்தமா? என்பது தப்பித்தவறி மைத்திரியார் வெல்லும் வாய்ப்பு கிடைத்தால் அம்பலமாகத்தான் போகிறது. தமிழ் மக்களுக்கு கொஞ்ச நஞ்சமாவது அதிகார பரவலாக்கத்தை வழங்கியிருக்கும் இந்த மாகாண சபை முறைமையை எப்படியாவது இல்லாதொழிக்கவேண்டும் என்று மகிந்தவிடம் மன்றாடுபோட்டு முடியாத பட்சத்தில் மைத்திரியிடம் பொய் சேர்ந்திருக்கின்றது சிஹல உறுமைய. சந்திரிகாவை ஆலோசகராகவும் ரணிலை பிரதமராகவும் கொண்டு நொண்டிகுதிரையாட்டம் களமிறங்கியிருக்கும் மைத்திரிக்கு மகிந்தவைபோல் இந்த இனவாதிகளை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து தான் நினைத்ததை செய்யும் வல்லமை இல்லை. கிழக்கு மாகாண சபையை உருவாக்கும் போதும் வடமாகாண சபையை உருவாக்கும் போதும் சிஹல உறுமைய, ஜேவிபி போன்றன படாத பாடு பட்டன. ஆனால் மகிந்தவோ வரலாற்றில் இருந்த எல்லா தலைவர்களையும் போலன்றி அந்த எதிர்ப்புகளுக்கு அஞ்சாது சிங்கள தேசிய வாதிகளை மீறி குறைந்த பட்ச அதிகார பரவலாக்கத்தை அமுல்படுத்தி காட்டியவர். எனவே ஏதாவது அதிசயங்கள் நிகழ்ந்து மைத்திரிவந்தால் முதலில் அகற்றப்படப்போவது ஜனாதிபதி முறைமையல்ல மாகாணசபை முறைமையே ஆகும் என்பதை தமிழ்இமுஸ்லிம் சிறுபான்மையினர் மனதில்கொள்ளவேண்டும்.அப்படி நடக்கப்போகும் அசம்பாவிதங்களுக்கு எதிர்காலத்தில் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினரே பொறுப்பானவர்களாகும் http://www.thenee.com/html/251214-1.html

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...