மக்களைச் சுயமாகச் சிந்திப்பதற்கு அனுமதிப்பதே கருத்துச் சுதந்திரமும் ஊடகப் பணியுமாகும்


-யதீந்திரா
(ஊடகவியலாளர் ந. வித்தியாதரனின் 'என் எழுத்தாயுதம்' என்ற நூல் அறிமுக நிகழ்வு யாழ்ப்பாணத்தில் கடந்த 30.11.2014 அன்று நடைபெற்ற போது அதில் அரசியல் ஆய்வாளர் யதீந்திரா ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்.)

 வித்தியாதரனின் ' ஊடகத்துறை அனுபவம் என்பது கிட்டத்தட்ட எனது jatheendraவயது. அவர் 1979ஆம் ஆண்டு ஊடகத்துறைக்குள் பிரவேசித்திருக்கின்றார் தினபதியின் ஊடாக. அதாவது நான் பிறந்து மூன்று வருடங்களுக்கு பின்னர். அந்த வகையில் வித்தியாதரனின் 'என் எழுத்தாயுதம்' என்னும் இந்த நூல் ஒரு ஊடகவியலாளரின் சுமார் 35 வருடகால அனுபவங்களின் ஒரு பகுதியாகும். வித்தியாதரன் என்னும் ஊடவியாலாளரின் ஊடகத்துறையின் மீது காண்பித்த அர்ப்பணிப்பையும், ஈடுபாட்டையும் எவரும் கேள்விக்குள்ளாக்க முடியாது – அந்தளவிற்கு மிகவும் நெருக்கடியான காலத்தில், பல்வேறு சவால்களுக்கு மத்தியில், பலதரப்பட்ட அதிகார சக்திகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் யாழ்பாணத்தில் நிலைகொண்டு பணியாற்றிய ஒருவர் என்னும் வகையில் அவரது அனுபவங்கள் முக்கியமானவை.
இன்றைக்கும் உதயன் என்னும் ஒரு பத்திரிகை யாழ்ப்பாணத்தில் வெளிவந்துகொண்டிருக்கிறதென்றால் அதற்கான காரணம் வித்தி என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. இந்த நூலில் அவர் பதிவுசெய்திருக்கும் தகவல்களின் அடிப்படையில்தான் நான் இதனை குறிப்பிடுகிறேன். எல்லாவற்றுக்கும் மேல் இத்தனை நெருக்கடியான காலகட்டத்தில் இந்த மண்ணில் கால்பதித்து அவர் பணியாற்றியிருக்கிறார் என்பதுதான் மிக முக்கியமானது. ஏனெனில் இந்த மண்ணில் கால்பதித்திருந்து பணியாற்றுவதென்பதே மிகப்பெரிய அரசியல் - ஊடகப் பணியாகும். அப்படியொரு அர்ப்பணிப்புமிக்க பணியை வித்தியாதரன் தன்னுடைய துறையில் மேற்கொண்டிருந்திருக்;கிறார் என்பதை இந்த நூலில் ஒவ்வொரு பக்கங்களிலும் தெரிகிறது.
இந்த நூலில், வித்தியின் அனுபவங்களாக பல தகவல்களை அவர் பதிவு செய்திருக்கின்றார். அவர் பதிவு செய்திருக்கும் தகவல்களின் சரி பிழை பற்றி பேசுவதற்கான தகுதி எனக்கில்லை. காரணம் நான் யாழ்பாணத்திற்கு வெளியில் இருந்த ஒருவன். இந்த நூலில் விபரிக்கப்பட்டிருக்கும் காலகட்டத்தில் நான் யாழ்பாணத்தை எட்டிப்பார்த்தது கூட இல்லை. எழுதப்பட்ட குறிப்புக்கள், சில நண்பர்களுடனான தொடர்பு - இவற்றின் மூலமாக மட்டுமே விடயங்களை அறிந்துகொண்டவன். எனவே இங்கு பதிவுசெய்யப்பட்டிருக்கும் சில தகவல்கள் ஒரு ஊடகவியலாளரின் அனுபவம் என்னும் வகையில் அதன் சரி பிழைகளுக்குள் நான் செல்லவில்லை. ஒருவேளை வித்தியாதரன் குறிப்பிட்டிருக்கும் காலகட்டத்தோடு தொடர்பானவர்கள் இவற்றை மறுதலிக்கலாம் அல்லது ஏற்கலாம்.
எனவே நான் இந்த நூலை வாசித்த போது எனக்குள் எழுந்த சில அபிப்பிராயங்கள், கேள்விகளை அடியொற்றி சில விடயங்களை இங்கு பகிர்ந்துகொள்ளலாமென்று எண்ணுகிறேன். என்னுடைய அபிப்பிராயங்கள் இரண்டு வகையானது – ஒன்று, அரசியல் சார்ந்தது – மற்றையது ஊடகத்துறை சார்ந்தது.
வித்தி தன்னுடைய அனுபவங்களை நூலாக்கியிருக்கின்ற இன்றைய காலம் முற்றிலும் வேறானது. இது, கடந்த காலத்தை காய்தல் உவத்தலின்றி பார்க்கப்பட வேண்டியகாலம். அப்படி பார்க்கவிரும்பாதவர்கள் கடந்தகாலம் குறித்து எதையுமே பேசாமலும் விடலாம். இந்த நூல் ஒரு ஊடகவிலாளரின் அனுபவங்கள் என்பதற்கு அப்பால் ஒரு காலகட்ட வரலாறை அடுத்த தலைமுறையிடம் சேர்ப்பிக்கும் ஒரு ஆவணமும் கூட. அந்த வகையில் இது ஒரு வரலாற்றுப்பதிவு. இங்கு வித்தி தன்னுடைய அனுபவங்களாக பல்வேறு இயக்கங்கள் பற்றிய தகவல்களை பதிவுசெய்திருக்கிறார். ஈ.பி.ஆர்.எல.எப்.  புளொட், டெலோ மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி பற்றி பேசியிருக்கிறார். விடுதலைப் புலிகள் பற்றியும் பேசியிருக்கிறார்.
ஆனால் ஏனைய இயக்கங்கள் பற்றி தன்னுடைய அனுபவங்களை குறிப்பிடும் போது, வித்தியாதரன் பய்னபடுத்தியிருக்கும் சொற்பிரயோங்களும் புலிகள் பற்றி அவரது அனுபப்பதிவுகளில் கையாண்டிருக்கும் சொற்பிரயோகங்களும், அவரது சார்புநிலையை காட்டிவிடுகிறது. அதாவது ஏனைய அமைப்புக்கள் பற்றி குறிப்பிடும் போது பல இடங்களில் அராஜகம், அடாவடித்தனம், துணைப்படை, அரசபடைகளுடன் ஒட்டியிருந்தவர்கள் - இப்படியான சொற்பிரயோகங்களின் ஊடாகத்தான் ஏனைய இயக்கங்கள் பற்றி குறிப்பிடுகின்றார்.
குறிப்பாக அவரது ஊடகத்துறை அனுபவத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் யாழ் குடாநாட்டில் நிலைகொண்டிருந்த காலத்தில் - யாழில் இயங்கிய ஊடகங்கள் எதிர்கொண்ட அச்சுறுத்தல்கள் நெருக்கடிகள் போன்று வேறு எந்தவொரு காலத்திலும் அப்படி நிகழ்ந்ததில்லை என்றவாறு ஒரு வாசகர் புரிந்துகொள்ளக் கூடியவாறு அவருடைய அனுபவங்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. இந்த தகவல்கள் அனைத்தையும் தொகுத்து பார்க்கும் போது, வித்தியின், அனுபவப் பதிவில், புலிகள் குறித்து ஒரு மென்போக்கான அணுகுமுறையையும் ஏனைய அமைப்புக்கள் தொடர்பில் காட்டமான ஒரு பார்வையும் தெளிவாக பார்க்கக் கூடியதாக இருக்கிறது.
உதாரணமாக பிரம்பால் அடிப்பதற்கும் மயிலிறகால் அடிப்பதற்கும் வித்தியாசமுண்டு. இரண்டும் அடிதான் - ஒன்று வலி நிறைந்தது மற்றையதும் அடிதான் ஆனால் உண்மையில் அது ஒரு தடவல். தன்னுடைய அனுபவங்களின் வழியாக ஏனைய அமைப்புக்கள் அனைத்தையும் பிரம்பால் அடித்துவிட்டு, புலிகளை மயிலிறகால் தடவிச் சென்றிருக்கிறார். இரண்டு இடங்களில்தான் புலிகள் பற்றிய கொஞ்சம் வெளிப்படையாக பேசியிருக்கிறார் – ஒன்று, முரசொலி பத்திரிகையின் மீதான தடை விவகாரம் - இரண்டு, மதிமுகராஜன் என்பவரை புலிகள் படுகொலை செய்தமையை அவர் கண்டித்து உதயனில்  செய்தி வெளியிட்டது. அதுவும் தான் அவ்வளவு சொன்ன பிறகும் சுட்டுப்போட்டாங்களே என்னும் ஆதங்கமாகத்தான் அங்கும் தெரிகிறது. உண்மையில் இங்கு தரப்பட்டிருக்கும் தகவல்கள் - வித்தியின் அனுபவங்களாக இருக்கலாம். ஆனால் இங்கு ஒரு பிரச்சினையிருக்கிறது. புலிகளின் கடும்போக்கான நடவடிக்கைள் எதனையும் அனுபவிக்கவேண்டிய தேவை வித்தியாதரன் என்னும் ஊடகவியலாளனுக்கு இருக்கவில்லை. ஓரு வேளை, வித்தி உதயன் சுடரொளி ஆகியவற்றின் ஆசிரியராக இருந்த காலத்தில், பிரபாகரனின், பொட்டு அம்மானின் நடவடிக்கைகளை விமர்சிப்பவராக, கேள்விக்குளாக்குபவராக இருந்திருந்தால், அவருடைய அனுபவங்கள் என்னவாக இருந்திருக்கும்? வித்தி, உதயன் சுடரொளி ஆசிரியராக இருந்தகாலத்தில் பிரபாகரனின் மாவீரர்தின உரையை வரிபிசகாமல் பிரசுரித்திருக்கின்றார். அதாவது 1990 தொடக்கம் 2008 வரையில். ஆனால் அந்த உரைகளை விமர்சித்து, இதில் பிரபாகரன் இப்படிச் சொல்லுவது தவறு, இப்படிச் சொல்லியிருக்கக் கூடாது என்று குறிப்பிட்டிருந்;தால் வித்தியின் இடம் என்னவாக இருந்;திருக்கும். உதயன் பத்திரிகையின் இடம் என்னவாகிருக்கும்?
இந்த நூலை வாசித்த போது நான் குறித்துக்கொண்ட பிறிதொரு விடயம் - வித்தியாதரன், தன்னுடைய அனுபவங்களை பதிவுசெய்திருக்கும் அதே வேளை, தன்னுடைய அபிப்பிராயங்கள் சிலவற்றையும் இங்கு செருகியிருக்கிறார். அவ்வாறு அபிப்பிராயங்கள் செருகப்படுகின்றபொழுது, உண்மையில் வித்தியாதரன் என்பவர் ஒரு ஊடகவியலாளர் என்னும் எல்லையை தாண்டி அரசியல்வாதியாக மாறிவிடுகிறார். அப்படிச் செருக்கப்பட்ட ஒரு கருத்தை நான் உங்களுக்கு வாசித்தளிக்கிறேன்.
ஒரு புறம் இராணுவ அச்சுறுத்தல்கள் என்றால் மறுபுறம் இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் தமிழ்க் குழுக்களின் அட்டுழியங்கள், அச்சுறுத்தல்கள் அராஜகங்களும் கொஞ்சநஞ்சமல்ல. அன்று அந;த நிலையில் நமது இனம் அல்லற்பட்டுக் கொண்டிருந்தபோது. அரசுப்படைகளின் நடவடிகைகளுக்கு ஒத்தூதி, ஒத்துழைத்த பல குழுக்களும் இன்று எப்படியோ தங்களுக்குப் பிராயச்சித்தம் செய்துகொண்டு தமிழ் கூட்டமைப்புக்குள் ஐக்கியமாகிவிட்டன. ஈ.பி.டி.பி மட்டும் வெளியில் நிற்கிறது.  – 451 –
இப்படியொரு கருத்தை வித்தியாதரன் இன்றைய சூழலில் ஏன் குறிப்பிடுகின்றார் என்பது அவருக்குமட்டும்தான் தெரிந்திருக்கும். ஆனால் இந்த நூலை வாசிக்கும் ஒருவர் இப்படியொரு கருத்தை உருவாக்குவதற்காகத்தானா, ஏனைய இயக்கங்களின் கடந்தகாலத்தை பற்றி வித்தி பேசியிருக்கின்றார் என்னும் கேள்வியையும் எழுப்பிவிடக் கூடும்.
ஆனால் வித்தியாதரனின் இந்தக் கருத்தை, அவர் இந்தூலில் பதிவுசெய்திருக்கும் பிறிதொரு தகவலின் ஊடாக நான் மறுதலிக்க முற்படுகின்றேன். இந்த நூலில் மிதவாத பாரம்பரியத்திலிருந்து வந்த அரசியல் தலைவர்கள் பற்றியும் வித்தி பேசியிருக்கிறார். 186 – 190 வரையான பக்கங்களில் அதனை நீங்கள் காணலாம்.
வித்தியின் பார்வையில் இந்த மிதவாதத் தலைவர்கள் என்பவர்கள் 'காட்போர்ட் சண்டியர்கள்' ஆவர். இது ஒரு புதுசொற்பிரயோகம். வித்தி இவ்வாறு குறிப்பிடுகின்றார்.
வாக்கு வேட்டைக்காகத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்கள் மேற்கொண்ட உசுப்பேற்றலின் பின்னால் புதைந்துகிடந்த செயற்திறனின்மையை விளங்கிக் கொள்ளாத இளைஞர்கள் கூட்டணி தலைவர்களை விடுதலை நாயகர்களாக கற்பனை செய்துகொண்டனர்.
1981இல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை குறிப்பிட்டு அதில் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ஆற்றிய உரை தொடர்பில் ஒரு முக்கியமான தகவலை பதிவுசெய்திருக்கிறார்.

யாழ் நகரில் அரச படைகள் மேற்கொண்ட வன்முறைச் சம்பவங்களை அடுத்து, நான் சில வெளிநாட்டு தூதுவர்களுடன் தொடர்புகொண்டேன், உங்கள் இளைஞர்கள் இச்சம்பவங்களின் போது என்ன செய்தார்கள் என்று அவர்கள் கேட்டனர். இளைஞர்கள் இருக்கிறார்கள் - ஆனால் அவர்களிடம் போதிய ஆயுதங்கள் இல்லை என்றேன். இங்கு விரைவில் தமிழ் மக்களுக்கு எவ்வித பாதுகாப்புத் தேவையோ அதனைப் பெற்றுத்தர அதற்கான நடவடிக்கை எடுப்பேன்- என்று சூழுரைத்தார்.
அதாவது வெளிநாட்டுத் தூதுவர்களுடன் பேசி, வெளிநாடுகள் மூலம் இங்குள்ள துடிப்;பான இளைஞர்களுக்கு ஆயுத வலிமையைப் பெற்றுத்தருவேன் என்று சூசகமாக அறிவித்தார் அவர்.
(இதன் போது சம்பந்தன் ஐயா உட்பட 12 கூட்டணி எம்பிக்கள் அங்கு உடனிருந்திருக்கின்றனர். அதாவது யோகேஸ்வரனின் கருத்தை ஆமோத்திருக்கின்றனர்)
இப்போது கேள்வி எழுகிறது - இந்த தமிழரசு கட்சியின் மிதவாத பாசறையிலிருந்து வந்தவர்கள் சொல்ல முடியுமா தங்களுக்கும் வன்முறைக்கும் ஒரு தொடர்பும் இல்லையனெ;று? நாங்கள் இரத்தக்கறை அற்றவர்கள். எங்கள் சால்வைகளில் அது தெறித்ததே இல்லை. இப்படியெல்லாம் சொல்லும் தகுதி மிதவாதிகளுக்கு உண்டா?
வித்தி பதிவு செய்திருக்கும் இந்தத் தகவல் இப்படியொரு கேள்வியை எனக்குள் எழுப்பியது. ஆகவே இந்த அடிப்படையில் நோக்கினால், இன்று கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கின்ற ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், டெலோ அனைத்தும் கூட்டமைப்புக்குள் இருந்து பிராயச்சித்தம் தேடவில்லை மாறாக காலத் தேவையை உணர்ந்து செயற்படுகின்றனர். அதாவது உசுப்பேற்றப்பட்டவர்கள் உசுப்பியேற்றிவர்களுடன் இணைந்திருக்கின்றனர். அப்படியொரு சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதாவது சேய்கள் தாயுடன் இணைந்து பணியாற்ற வந்திருக்கின்றன. இதற்கும் பிராயச்சித்திற்கும் என்ன தொடர்பு. ஒரு வேளை பிராயச்சித்தம் தேட வேண்டுமானால் தங்களின் உசுப்பேற்றலினால் முன்னர் இளைஞர்கள் உணர்சிவசப்பட்டு பலவற்றை செய்ய முற்பட்டது போன்றதொரு நிலைமை மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாதென்னும் பொறுப்புணர்வுடன் செயலாற்ற வேண்டிய பொறுப்பு மிதவாதிகளுக்கே உண்டு .
இந்த நூலை வாசித்தபோது இப்படியான சில அபிப்பிராயங்கள் எனக்குள் எழுந்தன. இந்த நூலை வாசித்தபோது தமிழ் ஊடகத்துறை சார்ந்தும் எனக்குள் எழுந்த சில அபிப்பிராயங்களையும் இந்த இடத்தில் சுருக்கமாக பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
வித்தி பதிவு செய்திருக்கும் முரசொலி பத்திரிகையின் தடையை அடிப்படையாகக் கொண்டே சொல்லலாமென்று நினைக்கிறேன். புலிகள் முரசொலியை  தடைசெய்கின்றனர். பின்னர் வித்தி, உதயன் பத்திரிகைய நட்புரீதியாக நிறுத்தி, புலிகளுக்கு அழுத்தம்கொடுத்து தடையை நீக்குகின்றார் – அது அவருடைய அனுபவம். இங்கு முரசொலி பத்திரிகையில் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் நிலைப்பாடுகளுக்கு சார்பான கருத்துக்கள், செய்திகள் வெளியானதை சகித்துக்கொள்ள முடியாமையினால்தான் புலிகள் அதனை தடைசெய்கின்றனர். அதாவது தங்களுக்கு மாறான கொள்கையுடைய அரசியல் நிலைப்பாடுகள் மக்கள் மத்தியில் சென்றடைவதை புலிகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இங்கு விடுதலைப் புலிகள் ஒரு பத்திரிகைய தடைசெய்யும்; அதிகாரத்தை எடுத்துக்கொள்ளவது சரியெனின் அதனை ஏனைய அமைப்புக்கள் எடுத்துக்கொள்வதும் சரியே!
இங்கு வித்தி; ஒரு தகவலைப் பதிவுசெய்திருக்கிறார். ஈழநாடு, உதயன், முரசொலி போன்ற பத்திரிகைகளை ஈ.பி.ஆர்.எல்.எப் முடக்கி, விடுதலை என்னும் பத்திரிகையை வெளியிடுகின்றனர் என்று குறிப்பிட்டிருக்கும் அவர், இப்படியொரு தகவலையும் சொல்லிச் செல்கிறார். மீண்டும் குடாநாடு புலிகள் கைகளுக்குள் வந்தபோது இந்த இரு பத்;திரிகையாளர்களும் காணாமல்போகச் செய்யப்பட்டனர். அன்றிருந்த சூழலில் அதனை நாங்களும் கண்டும் கவனியாது இருந்தமை மனவருத்தத்திற்குரிய குற்றம்தான். இங்கு கேள்வி இப்போது புலிகளுக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப் இற்கும் என்ன வித்தியாசம் ஊடகங்களை கையாளுகின்ற அடிப்படையில்? என்பதாகும்.
ஏனெனில் ஒவ்வொரு அதிகார சக்திகளும் நினைக்கின்றன, தங்களுடைய கருத்துக்கள் மட்டுமே சமூகத்தால் கவனிக்கப்பட வேண்டும். ஏனென்;றால் அது மட்டும்தான் சரி. இதற்கு ஊடகங்கள் இடமளிக்காத போது அவவைகளை தடைசெய்ய, நெருக்கடிகளை கொடுக்க  வேண்டும் என்றுதான் ஒவ்;வொரு அமைப்புக்களும் முற்படுகின்றன. இயக்க அதிகாரம் செலுத்தி குறிப்பிட்ட காலத்தில் ஊடகங்கள் தொடர்பில் அனைத்து அமைப்புக்களும் இப்படியான ஒரு மனோபாவத்துடனேயே  நடந்துகொண்டன. இதற்கு, ஊடகங்களை வழிநடத்துவோரும் ஒரு முக்கிய காரணம் என்பது என்னுடைய அபிப்பிராயம்.
தமிழ் ஊடகங்களைப் பொறுத்தவரையில் அங்கு முன்கூட்டிய தீர்மானத்தின் அடிப்படையில்தான் செய்திகள் கருத்துக்கள் பிரசுரிக்கப்படுகின்றன. அவர் சொன்னால் சரி - இவர் சொல்லுவது பிழை – அது சரியானதல்ல என்றவாறான தீர்மானத்துடன் செய்திகள் பிரசுரிக்கப்படுகின்றன. உதாரணமாக யாழ்பாணத்தை எடுத்துக்கொண்டால், இங்கு மூன்றுவிதமான அரசியல் நிலைப்பாடுகள் இருக்கின்றன. ஒன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு, அடுத்தது, ஈழ மக்கள் ஜனாநாயக கட்சி. அடுத்து கஜேந்திர குமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய விடுதலை முன்னிணியின் நிலைப்பாடு. இந்த மூன்று அரசியல் அமைப்புக்கள் அல்லது கட்சிகள் என்பது, மூன்றுவிதமான அசியல் நிலைப்பாடாகும். இந்த மூன்றுவிதமான அரசியல் நிலைப்பாடுகளுக்கும் யாழ் குடாநாட்டில் வெளிவருகின்ற பத்திரிகைகள் சமவாய்ப்பை, சமமதிப்பை, சம அங்கீகாரத்தை கொடுக்கின்றனவா? சில நேரங்களில் கஜேந்திரகுமாரின் கருத்துக்களைப் பார்த்தால் விளையாட்டுத்துறைக்கு அருகில் கிடக்கிறது. அந்தளவிற்கு அவர்களது கருத்துக்கள் மமலினப்படுத்தப்படுகின்றன. இந்த மலினப்படுத்தும் வேலையும் கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் செயல்தான்.
நான் கருத்துச் சுதந்திரம் என்று யோசிக்கும் போது ஒரு உதாரணத்தை யோசிப்பதுண்டு. சரிநிகர் என்றொரு பத்திரியை வெளிவந்ததை நீங்கள் அறிவீர்கள். அது புலிகளால் வன்னிக்குள் தடை செய்யப்படடிருந்தது. சரிநிகரில் - யார் இந்த ராசிக் - என்னும் கட்டுரையொன்று வெளிவந்தது. சரியாக இரு வாரங்களுக்கு பின்னர் நான்தான் ராசிக் என்று தலைப்பில் ராசிக் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார் – அதில் தன்னுடைய நியாயங்களை அவர் சொல்லியிருந்தார். இங்கு ராசிக் சரியா, பிழையா என்பதல்ல விடயம். ஒவ்வொருவருக்கும் தன்னுடைய நியாயத்தை சொல்லுவதற்கான சந்;தர்ப்பம் சமமாக வழங்கப்பட வேண்டும் என்பதே விடயமாகும். எல்லோருக்கும் சொல்லுவதற்கு நியாயங்கள் உண்டு. அது மதிக்கப்பட வேண்;டும். அப்படி மதிக்கப்படும் போது, ஊடகத்துறை மீது அதிருப்திப்திகள் தோற்ற வாய்ப்பு இல்லாமல் போகும். மக்கள் தீர்மானிப்பார்கள் எது சரி, எது தங்களுக்கு தேவை என்;பதை, எதனுடன் இணைந்திருப்பது தங்களுக்கு உசிமானது என்பதையெல்லாம் அவர்கள் தீர்மானிக்கட்டும். ஊடகங்கள் அல்ல.

இப்படியான சில அபிப்பிராயங்கள் இந்த நூலை வாசித்தபோது எனக்குள் எழுந்தது. வித்தி ஒரு மூத்த ஊடவியலாளர் என்னும்; வகையில் அவர் எதிர்கால தலைமுறைக்குப் பல விடயங்களை சொல்லிச் செல்ல வேண்டிய பொறுப்புள்ளவர். அவரிடம் சொல்லுவதற்கு இன்னும் ஏராளமான விடயங்கள் உண்டு. குறிப்பாக பாலசிங்கம் வித்தியாதரனிடம் எவ்வளவோ விடயங்களை இறுதிக்காலத்தில் சொல்லிச் சென்றிருக்கிறார். அவை அனைத்தும் அடுத்த தலைமுறைக்கு போய்ச் சேர வேண்டும். அவ்வாறான விடயங்கள் பகிரப்படாதபோது ஊகங்களே அதிகரிக்கும். தெரிந்தவர்கள் விடயங்களை சொல்ல வேண்டும். வித்தி காலம் கனியும் போது பல விடயங்களை எழுத்துருவில் கொண்டுவருதாக குறிப்பிட்டிருக்கின்றார். காலம் நல்லா கனிந்தே இருக்கிறது. எனவே இதுதான் கனிந்த காலம். அவர் தன்னிடம் உள்ளவற்றை எங்களிடம் ஒப்படைப்பதற்கு.
source:  http://thenee.com/html/061214-1.html

No comments:

Post a Comment

The danger of US-China war and Australia’s anti-democratic election laws-by Peter Symonds

The new anti-democratic election laws in Australia, aimed at deregistering so-called minor parties, go hand in hand with the efforts of the ...