தமிழர் அரசியலின் தப்புக் கணக்குகள் - வடபுலத்தான்

தமிழர் அரசியலின் தப்புக் கணக்குகள்
-    வடபுலத்தான்

மகிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிக்க வேண்டும்' என்ற மாதிரி ஒரு பெரியபரப்புரையைப் பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் செய்து கொண்டிருக்கின்றன. புலம்பெயர் நாடுகளில் இருந்து இயங்குகின்ற சில ஊடகங்கள் இதில் இன்னும் கொஞ்சம் உற்சாகமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இதைவிட, பல்கலைக்கழக சமூகத்தினர் என்ற பேரில் இயங்குகின்ற கொஞ்சப்பேரும், புத்திஜீவிகள் என்று சொல்லப்படுவோரில் ஒரு சாராரும் வெளிப்படையாக இல்லா விட்டாலும் மறைமுகமாக மைத்திரியை ஆதரிக்கிறார்கள்.
தமிழரசுக்கட்சியும் மைத்திரியைத்தான் ஆதரிக்கிறது. ஆனால், அதற்காக அது இன்னும் வெளிப்படையாக மகிந்த ராஜபக்ஷவை எதிர்க்கவில்லை. அப்படி எதிர்க்கத்துணியவில்லை. அதேவேளை மைத்திரிக்கு தான் ஆதரவு என்று சொல்லவும் இல்லை.


தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கிற ஏனைய கட்சிகளுக்கு மைத்திரியா? மகிந்தவா? என்ற தடுமாற்றம்.
ஊர்களில் சிலர் மைத்திரியின் மச்சான், மாமன், அண்ணன், தம்பி, அயல் வீட்டுக்காரன் என்ற மாதிரி 'மைத்திரிக்காக வேலை செய்ய வேணும். மைத்திரியை வெல்ல வைக்க வேணும்' என்று சொல்லித்திரிகிறார்கள்.
இவ்வளவுக்கும் மைத்திரி ஒன்றும் தமிழர்களுக்காகவோ, தமிழ் பேசும் மக்களுக்காகவோ இரக்கப்படும் ஆளல்ல. அல்லது இலங்கையில் பெரிய புரட்சிகளையும் மாற்றங்களையும் கொண்டு வரக் கூடிய சிந்தனை உடையவரும் அல்ல.
மைத்திரியையும் விட அதிகமான கவர்ச்சியோடும் அதிகமான நம்பிக்கையோடும் 'வெண்தாமரை அரசி'யாகவும் 'சமாதானத் தேவதை'யாகவும் அரங்கேறியவர் சந்திரிகா. பிறகு, அந்த வெண்தாமரை அரசியைத் தமிழர்கள் 'ராட்சசி' என்றும் 'பொய்யரசி' என்றும் சொல்லித்திரிந்தார்கள்.
தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்கள் நம்பியமாதிரி சந்திரிகா சமாதானத்தை உருவாக்கவும் இல்லை. தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களுக்கு உரிமைகளை வழங்கவும் இல்லை. இலங்கையில் மாற்றத்தையோ புரட்சியையோ ஏற்படுத்தவும் இல்லை. இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாக இருந்து விட்டே பதவியிறங்கினார். பதவியிறங்கும்போது கூட அவர் ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க முயற்சிக்கவில்லை.
அப்படித்தான் இப்பொழுது மைத்திரியும் அரச கட்டிலில் ஏறத்துடிக்கிறார். அப்படி மைத்திரி அரச கட்டிலில் ஏறி விட்டால், அவருக்கும் பதவி மோக நோயும் அதிகார வெறியும் பிடித்து விடும்.
அதிகாரத்தின் சுவையை நன்றாக அறிந்தவர் மைத்திரி. அப்படி அறிந்தவருக்கு அதிகாரம் கிடைத்து விட்டால் அதை வைத்துக் கொண்டு அவர் என்னவெல்லாம் செய்வார் என்று சொல்லத்தேவையில்லை.
ஆனால், மைத்திரிக்கு அனுகூலமாகவும் ஆதரவாகவும் ஒரு உளவியல் பொதுவாகத் தொழிற்படுகிறது.
அது மகிந்த ராஜபக்ஷவின் குடும்பத்துக்கு எதிரான – நீண்ட கால ஆட்சிக்கு எதிரான – ஜனநாயக வெளியொன்று வேண்டும் என்று கேட்கின்ற மத்தியதர மற்றும் உயர் வர்க்க, நகர்ப்புறத்திலிருப்போரின் விருப்பம்.
இவர்களுக்கு எப்போதும் ஒருவிதமான மனக்கிளர்ச்சி ஏற்படுவதுண்டு.
மாற்றங்கள் நிகழ்ந்தால் இப்போதுள்ளதை விட வேறு ஏதாவது புதிய விசயங்கள் கிடைக்கலாம் என்ற ஒரு நம்பிக்கை.
அந்த நம்பிக்கைக்கான அடிப்படைகளைப்பற்றியெல்லாம் அவர்கள் சிந்திப்பதில்லை. அதைப்பற்றிப் பொருட்படுத்துவதும் இல்;லை.
இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக மோடியைத் தெரிவு செய்தது இந்த அடிப்படையில்தான்.
நீண்டகாலமாக ஒரு கட்சி இருக்கிறது. இனி அதைக் கொஞ்சம் மாற்றிப்பார்ப்போம் என்ற ஒரு விளையாட்டு.
ஆனால், தேர்தல் என்பதும் நாடொன்றின் விவகாரம் என்பதும் மக்களுடைய தலைவிதியுடன் சம்மந்தப்பட்டது என்பதும் விளையாட்டானதல்ல.
மைத்திரியின் பின்னால் உள்ள அல்லது மைத்திரியை மையப்படுத்தி நடக்கும் வியூகம் எப்படியானது என்பதை விடயங்களை ஆராய்வோருக்கும் வரலாற்றை அறிந்தோருக்கும் நன்றாகத் தெரியும்.
மைத்திரி ஒன்றும் புரட்சித் தலைவரும் அல்ல. வெள்ளை உள்ளங்கொண்ட நாயகனும் அல்ல. வெள்ளையர்களுக்காக உழைக்கப்போகிற பயலே தவிர, சுத்தமான நம்பிக்கைக்குரியவர் அல்ல. இதைப்பற்றிப் பலருக்கும் தெரியும்.
ஆனாலும் அவர்கள் மைத்திரியையே விரும்புகிறார்கள். ஏனென்றால், அவர்களுக்கு மகிந்த ராஜபக்ஷவை இப்பொழுது மாற்றிப்பார்க்க வேண்டும் போலிருக்கிறது. இது ஒரு சாரார் என்றால், தமிழர்களில் மைத்திரியை விரும்புகின்றவர்கள், முன்னர் மகிந்த ராஜபக்ஷவை எப்படியாவது கவிழ்க்க வேண்டும் என்று பாடுபட்டுத் தோல்வியைச் சந்தித்தவர்கள்.
இவர்கள் நினைக்கிறார்கள், மைத்திரி பதவிக்கு வந்த ஒன்றையும் தராமல் விட்டாலும் பரவாயில்லை, தாங்கள் முன்னர் எதிர்த்த தலை இப்பொழுது மாறட்டும் என்று.

இப்படித்தான் தப்புக்கணக்குகளோடு எப்போதும் தமிழரின் அரசியலும் இலங்கையின் அரசியலும் இலங்கை போன்ற நாடுகளின் அரசியலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
00

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...