இனப்போதையின் பரிசு - கத்திக்குக் கத்தி ரத்தத்துக்கு ரத்தம் -வடபுலத்தான்


போதை வஸ்தையும் விடப் படு பயங்கரமானது இனவாதம், மதவாதம், பிரதேச வாதம் நிறவாதம் போன்றவற்றினால் ஏற்படுகின்ற அழிவுகள் என்பதை உலகம் அனுபவித்தறிந்து இதையெல்லாம் கைவிடுங்கள் என்று அறைகூவல் விட்டுக்கொண்டிருக்கிறது. 


இந்த வாதங்களைக் கட்டிப் பிடித்துக்கொண்டிருப்போரைப் பிற்போக்குவாதிகள் என்றும் மடமைவாதிகள் என்றும் சொன்னது போய் இவர்களே ஜனநாயகத்துக்கும் அமைதிக்கும் தடையானவர்கள். இவர்களே முன்னேற்றத்துக்கு எதிர்ப்பானவர்கள். இவர்கள்தான் சமூகத்தை அழிக்கின்றவர்கள் என்று உலகம் சொல்கிறது.
அது மட்டுமல்ல இத்தகைய சக்திகள் கையில் ஆயுதம் வைத்திருந்தால் என்ன மனசிலும் மூளையிலும் இந்த நச்சுக்கருத்துகளை வைத்திருந்தால் என்ன எல்லாமே அழிவுதான் என்பதால் இந்தச் சக்திகளைப் புறந்தள்ளி வருகிறது. அல்லது அழித்து வருகிறது.
உலகத்தின் அதிபயங்கரம் என்பது இந்த வாதங்களால் பீடிக்கும் நிலைதான்.
இலங்கையில் இந்த வாதங்களால் ஏற்பட்ட அழிவுகளும் அனர்த்தங்களும் நாமறிந்தவை. இந்த வாதங்கள் உண்டாக்கிய பேரழிவிலிருந்து நாம் இன்னும் மீளவில்லை. இந்த வலியின்னும் எங்களை விட்டுப்போகவில்லை.

ஆனாலும் நாமின்னும் இந்த வாதங்களையே கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கிறோம் என்றால் எங்களின் கதி என்ன?

இனவாதத்துக்குப் பதில் இனவாதம் என்றால் கத்திக்குப் பதில் கத்தி. ரத்தத்துக்குப் பதில் ரத்தம்தானா.

அப்படியென்றால் விளைவு? முடிவு?
இனவாதத்தையே தமிழ்த்தேசிய சக்திகள் தீவிரமாகப் பரப்புகின்றன.
இந்த நாட்டில் ஏனைய சமூகங்களோடு தமிழர்கள் வாழ முடியாது.

அப்படி வாழக்கூடாது என்பதில் அவை பிடிவாதமாக இருக்கின்றன.

தமிழர்களை நம்ப முடியாது. அவர்கள் இந்தியாவோடு சேர்ந்து கொண்டு இலங்கைத்தீவு முழுவதையும் தங்களின் காலடிக்குள் கொண்டு வந்து விடுவார்கள். அப்படி நடந்தால் இலங்கையில் உள்ள சிங்களவர் அத்தனைபேரும் கடலுக்குள்தான் குதிக்க  வேணும் என்று சிங்கள இனவாதிகள் சொல்கிறார்கள்.

இதெல்லாம் சுத்தமான பைத்தியக்காரத்தனம் அல்லாமல் வேறு என்ன?
ஆனால், இந்தப் பைத்தியக்காரத்தனத்தைத்தான் பெரும்பாலான மக்கள் (தமிழர்களும் சரி சிங்களவர்களும் சரி) விரும்புகிறார்கள்.
அதனால்தான் இலங்கையில் இனவாதம் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறது.

இனவாதம் கொடி கட்டிப் பறக்கப் பறக்க மக்களின் கொடி தாழத் தொடங்கும். அதாவது மக்களின் கோவணம் கிழியத்தொடங்கும்.
இதைத் தடுப்பதற்கு என்ன செய்யலாம்?

இந்தப் போதைக்கு என்ன வைத்தியம் செய்வது?

இனவாதப் போதையை ஊட்டுவோரை எப்படித் தண்டிப்பது?

போதை வஸ்தை விரும்பாத மக்கள் எப்படி இனவாதப் போதையை விரும்புகிறார்கள்? இனவாதப் போதை உண்டாக்கிய பேரழிவுகளையும் அலைச்சல்களையும் அவமானங்களையும் பட்ட பிறகும் எதற்காக இந்த இனவாதத்தைப் பிறகும் பிறகும் விரும்புகிறார்கள்?

இது மக்களிடம் ஊறிப்போன பழக்கத்தின் பாற்பட்ட வினையா? அல்லது மக்கள் பழிக்குப் பழி தீர்க்க வேணும் எண்ட வெறியோடுதான் - கத்திக்குக் கத்தி, இரத்தத்துக்கு இரத்தம் என்றமாதிரிச் சிந்திக்கிறார்களா?

அப்படியென்றால் இதனுடைய விதி என்னவாக இருக்கும்?
மீண்டும் போர்தானா?

அப்படிச் சிந்திக்கிறபடியால்தான் யாரும் நல்லிணக்கத்தை ஒரு முக்கியமான விசயமாகப் பார்க்கவில்லைப்போலும்.

அதனால்தான் மீண்டும் இனவாதப்போதைக்கு தாராளமாக இடமளிக்கப்படுகிறதா?

இது உலக நியதிக்கும் உலக நீதிக்கும் மாறான ஒரு விசயமே.

இது ஜனநாயக விதிமுறைக்கும் நடைமுறைக்கும் மாறான ஒன்றே.

இப்படியெல்லாம் உலக நியதிக்கு மாறாக உள்ள இந்தப் போதையை இப்படியே விட்டு வைக்கலாமா?

இந்தப் போதை வஸ்தைப் பரப்புவோரை இன்னும் அனுமதிக்கலாமா?

போதை வஸ்தை விரும்பாதா சமூகம் இதைப்பற்றி ஆழமாகச் சிந்திக்க வேணும்


http://www.thenee.com/html/121214-4.html

Comments

Popular posts from this blog

“மறப்போம்! மன்னிப்போம்!! “

“ सत्यमेव जयति “ ( “சத்யமேவ ஜெயதே “ )

"வேர் ஆறுதலின் வலி " - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்