ஜனாதிபதி தேர்தலில் முற்போக்கு – ஜனநாயக சக்திகளின் நிலைப்பாடும் அணுகுமுறையும் என்ன?

ஜனாதிபதி தேர்தலில் முற்போக்கு – ஜனநாயக சக்திகளின் நிலைப்பாடும் அணுகுமுறையும் என்ன?

நவம்பர் 30, 2014

இலங்கை ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமாக இப்போது பல்வேறு சர்ச்சைகள் அரசியல் அரங்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று, நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை அகற்ற வேண்டும் என்பது. இன்னொன்று, தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது.
இதில் ஒரு வேடிக்கையான விடயம் என்னவெனில், 1978இல் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் தலைவராக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன புதிய அரசியல் சாசனத்தைக் கொண்டு வந்து, நிறைவேற்று ஜனாதிபதி பதவி, விகிதாசாரப் பிரதிநிதித்துவம், விருப்பு வாக்கு முறைமை என்பனவற்றை அறிமுகப்படுத்திய போது, சிறீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும், வெகுஜன அமைப்புகளும் அதைக் கடுமையாக எதிர்த்தன.
ஆனால் பின்னர், 1994 முதல் சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசுகள் கடந்த 20 வருடங்களாக ஆட்சியில் இருந்தபோதும் அதை மாற்ற முயற்சிக்கவில்லை. அதேபோல, விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை எதிர்த்த கட்சிகள், அதிலும் குறிப்பாக சிறுபான்மை இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய மற்றும் சிறிய கட்சிகள், இந்த விகிதசாரப் பிரிதிநிதித்துவ முறை இருந்தால்தான் தம்மிலும் இரண்டொருவர் நாடாளுமன்றம்; செல்லக்கூடியதாக இருக்கும் என்பதால், அதைப்பற்றிப் பேசுவதை நிறுத்திக் கொண்டன.மறுபக்கத்தில், இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை அறிமுகப்படுத்திய ஐ.தே.க, இப்பொழுது அந்த முறைமையை நீக்க வேண்டும் என குரல் எழுப்புகிறது. அந்தக் கட்சியுடன், தான் பதவிக்கு வந்தால் மூன்று மாதங்களில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வேன் என சூளுரைத்துவிட்டு, பதவிக்கு இரண்டு தடவைகள் வந்தபோதும் அதைப்பற்றி வாயே திறக்காத சந்திரிகாவும் சேர்ந்து நிற்கின்றார்.
இந்த ‘சுத்துமாத்து’ நிலைப்பாடுகளை என்ன வகையானவை என்று வர்ணிப்பதற்கு, வழம்மிக்க மொழி என்று சொல்லப்படும் தமிழில் எமக்கு போதிய சொற்கள் இல்லாததுதான் கவலையான விடயம்.

சில வேளைகளில் ஐ.தே.கவை சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாக இருந்து, சிறீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்க்கட்சியாக இருதிருந்தால், அப்பொழுது ஐ.தே.க நிறைவேற்று அதிகாரமுறையை பாதுகாத்தும், சிறீலங்கா சுதந்திரக் கட்சி அதை எதிர்த்தும் பிரச்சாரம் செய்திருக்கக்கூடும்.

இதிலிருந்து ஒரு விடயம் புலனாகின்றது. அதாவது ஆட்சி அதிகாரத்துக்கு வரும் வாய்ப்பிருந்தால், இருக்கின்ற அதிகார முறையைப் பாதுகாப்பதும், அதிகாரத்துக்கு வருவதற்கான வாய்ப்பு இல்லாவிட்டால், “சீ..சீ..இந்தப் பழம் புளிக்கும்” என்ற கணக்காக தொனியை மாற்றிக் கதைப்பதும், முதலாளித்துவ அரசியல் கட்சிகளுக்கு ஒரு சாதாரண விடயம். எனவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை சம்பந்தமாகவோ, ஜே.ஆர்.கொண்டு வந்த 78ஆம் ஆண்டு எதேச்சாதிகார அரசியல் சாசனம் சம்பந்தமாகவோ, ஆட்சிக்கு வரக்கூடிய இரண்டு கட்சிகளுக்கும் கொள்கை ரீதியிலான ஒரு நிலைப்பாடு கிடையாது என்பதே உண்மையாகும்.

ஆனால் இலங்கையின் சாதாரண மக்களைப் பொறுத்த வரையிலும், அவர்களை உண்மையாகப் பிரதிநிதித்துவம் செய்கின்ற முற்போக்கு – ஜனநாயக சக்திகளைப் பொறுத்த வரையிலும் இந்தப் பிரச்சினைகள் சம்பந்தமான நிலைப்பாடும், அணுகுமுறைகளும் என்ன என்பது ஒரு முக்கியமான விடயம். இந்த விடயங்கள் குறித்து அந்த சக்திகள் ஒரு தெளிவான நிலைப்பாட்டை கொண்டிருக்க வேண்டும்.

நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதி முறைமையைப் பொறுத்த வரையில், ஒரு தனி மனிதனிடம் அதிகாரம் குவிக்கப்பட்டிருக்கும் இந்த முறைமை நிச்சயமாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதுதான் நமது நிலைப்பாடு. அதுமட்டுமின்றி, இந்த முறைமையையும், இன்னும் சில மக்கள் விரோத சரத்துகளையும் கொண்டிருக்கும் 1978ஆம் ஆண்டின் இன்றைய அரசியல் சாசனம் முற்றாக மாற்றப்பட்டு, அதனிடத்தில் ஒரு ஜனநாயக ரீதியிலான அரசியல் அமைப்பு நடைமுறைக்கு வர வேண்டும் என்பதுதான் எமது கருத்தாகும்.

இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக நிற்பதால், அதன்பின்னர் ஒருவர் இரண்டு தரத்துக்கு மேல் போட்டியிடலாமா என்ற சர்ச்சையில் இறங்குவது அர்த்தமற்றது. ஆனாலும் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் எத்தனை தரமும் போட்டியிடலாம் என்ற திருத்தத்தை அரசியல் அமைப்பில் சேர்த்த 18ஆவது திருத்தச் சட்டத்தை நாம் எதிர்ப்பதுடன், அதை இடதுசாரிக் கட்சிகள் ஆதரித்துவிட்டு, பின்னர் ‘கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்வது- போல’ தமது தவறுக்கு வருத்தம் தெரிவித்ததையும் கண்டிக்காமல் இருக்க முடியாது.

மேற்சொல்லப்பட்ட விடயங்கள் அடிப்படையான கொள்கை நிலைப்பாடு சம்பந்தப்பட்டவை. அதேநேரத்தில், மாற்றங்கள் என்பவை திடீரென ஆகாயத்தில் இருந்து விழுபவையல்ல. எந்தவொரு மாற்றத்தினதும் கர்ப்பப்பையாக, இருக்கின்ற பழைய அமைப்புத்தான் இருந்து வந்திருக்கிறது. இதுதான் வரலாற்று யதார்த்தம்.

எனவே, இன்றிருக்கிற சூழலில் ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்ற நிலைமையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது. நாம் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை ஏற்காததால், அதைப் புறக்கணிப்பது சரியானதாக இருக்குமா?
இல்லை என்பதுதான் எமது பதில். அரசாங்கக் கட்சியைத் தவிர எதிர்க்கட்சிகள் யாவும் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதாக முடிவெடுத்தால் நாமும் அதைப் புறக்கணிக்கலாம். ஆனால் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை மாற்றச் சொல்லி பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கவும், ஏனைய எதிர்க்கட்சிகளும் வலியுறுத்திக் கொண்டே, அவை எல்லாம் ஒரே அணியாகச் சேர்ந்துகொண்டு ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்த முடிவெடுத்துள்ளன.

எனவே, இந்தக் கட்டத்தில் எமது கொள்கை சார்ந்த நிலைப்பாட்டை வலியுறுத்துவதற்காக ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பது அர்த்தமற்றது. ஏனெனில் இன்று பதவியிலிருக்கிற அரசாங்கமோ அல்லது புதிதாக பதவிக்கு வருகின்ற ஒரு அரசாங்கமோதான் இப்போதைய ஜனாதிபதி முறைமையை மாற்ற முடியும். அப்படிப் பார்க்கையில் ஐ.தே.க தலைமையிலான எதிரணி ஜனநாயகம் பற்றி எவ்வளவுதான் வாய்கிழிய கத்தினாலும், அவர்கள் தற்போதைய ஜனாதிபதி முறைமையை மாற்றுவார்கள் என்பது நிச்சயமில்லை. அதற்கான காரணங்கள் வருமாறு:

• ஐ.தே.க தான் இந்த நிறைவேற்று ஜனாதிபதி முறையை 1978இல் கொண்டு வந்தது. இன்றுவரை அந்தக் கட்சி தான் இந்த முறைமையைக் கொண்டு வந்தது தவறு என்று சுயவிமர்சன ரீதியாக ஏற்றுக் கொள்ளவோ, அதை மாற்ற வேண்டும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கவோ இல்லை.

• ஐ.தே.க ஏகாதிபத்தியத்துக்கு சார்பான, மக்களுக்கு விரோதமான, உள்ளுர் பிற்போக்கு சக்திகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒரு கட்சி என்ற வகையில், அதனது மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு இத்தகைய ஒரு எதேச்சாதிகார அரசியல் அமைப்பு தொடர்ந்தும் தேவை.

• 1977 பொதுத்தேர்தலின் போது, ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐ.தே.க, சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ‘சர்வாதிகார ஆட்சி’யை அகற்றி, ஜனநாய ஆட்சி ஒன்றைக் கொண்டு வரப்போவதாகவும், இலங்கையை சிங்கப்பூராக மாற்றப் போவதாகவும் சொல்லித்தான் ஆட்சிபிடம் ஏறியது. ஆனால் அதற்குப் பதிலாக ஆட்சிக்கு வந்ததும் சர்வாதிகார அரசியல் சட்டத்தை நிறைவேற்றிக் கொண்டு, எதிர்க்கட்சிகளையும், வெகுஜன அமைப்புகளையும் அடக்கியொடுக்கி, தமிழ் மக்களுக்கு மேல் இனவன்செயல்களை தூண்டிவிட்டு, இனப்பிரச்சினையை யுத்தமாக்கி, நாட்டை 17 வருடங்களாக சின்னாபின்னமாக்கி விட்டுத்தான் ஆட்சியைவிட்டு இறங்கியது. ஆகையால் இனிமேலும் கூட அது ஆட்சிக்கு வந்தால் அந்த வரலாறு மீளாது என்று சொல்வதற்கில்லை.

எனவே, ஜனாதிபதி தேர்தல் நிச்சயம் நடைபெறவுள்ளதால், முதலில் ஐ.தே.க தலைமையிலான ஏகாதிபத்திய சார்பு, பிற்போக்குவாத, இனவாத சக்திகள் ஆட்சிபிடம் ஏறாமல் பார்த்துக் கொள்வது அவசியம். அதேநேரத்தில், தொடர்ந்தும் தற்போதைய அரசியல் சட்டத்தை மாற்றக்கோரும் இயக்கத்தையும் வலுவுடன் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அரசியல் சட்டத்தை மாற்றுவதானால் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பங்கு உறுப்பினர்களின் வாக்குகள் தேவை. அத்தகைய ஒரு வாக்குப்பலம் இன்றைய அரசாங்கத்துக்குத்தான் உண்டு. எனவே அதை முன்னெடுப்பதற்கான சாத்தியமான நிலைமை இன்றைய அரசின் கீழ்தான் இருக்கிறது.

குறிப்பாக, அரசியல் அமைப்பை மாற்றக்கோரும் இயக்கத்தை அரசாங்கத்தில் இணைந்துள்ள இடதுசாரிக் கட்சிகளும், வெளியிலுள்ள இடதுசாரி சக்திகளும் இணைந்து முன்னெடுக்கலாம். அதற்கு ஜனநாயகத்தை நேசிக்கும் சகல சக்திகளினதும் ஆதரவையும் பெற்றுக்கொள்வதும் அவசியமானது. தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஆளும் கட்சியின் வேட்பாளரை ஆதிரிப்பதற்கு நிபந்தனையாக, அடுத்த ஜனாதிபதியின் பதிவிக் காலத்தில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை உட்பட முழு அரசியல் சாசனத்தையும் மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முற்போக்கு – ஜனநாயக சக்திகள் வலியுறுத்தினால், அது ஒரு ஆக்கபூர்வமான செயற்பாடாக இருக்கும்

வானவில் இதழ் 46

 http://manikkural.wordpress.com/

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...