தப்பிச் செல்லும் கறுப்பு ஆடுகள் -வடபுலத்தான்


பாராளுமன்றத்தில் வரவுசெலவுத்திட்ட விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
அரசாங்கம் புதிய திட்டங்களை அறிவித்து, அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறது.
இந்தப் புதிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் அடுத்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை நாடு அடைந்து விடும் என்று அரசாங்கத்தரப்பினர் சொல்கிறார்கள். 

இதற்கு அவர்கள் சொல்லுகின்ற – ஆதாரப்படுத்துகின்ற விடயம்,
1.இந்த அரசாங்கம் போரை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது.
2.போருக்குப் பிறகு நாடு முழுவதிலும் உட்கட்டுமானங்களை மிகத் தரமாக கட்டியெடுழுப்பி வருகிறது.
3.வடக்குக் கிழக்குப் பகுதிகள் உட்பட நாடுமுழுவதையும் ஒரே வலையமைப்பில் தொடர்பாடல், போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வகையிலும் முழுமையான ஒருங்கிணைந்த அபிவிருத்தியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
4.பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் உற்பத்திகளுக்கு முழுமையான கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
5.ஒவ்வொரு குடும்பத்துக்கும் வீடு. அனைவருக்கும் மின்சாரம். சகலருக்குமான சுகாதார வாழ்க்கை
எனப்பலவற்றை வெற்றிகரமாகச் செய்துள்ள அரசாங்கம் அடுத்து வரவுள்ள ஆண்டுகளில் நாட்டில் முழுமையான அமைதியையும் பொருளாதார சுபீட்சத்தையும் மேம்பாடான நல்வாழ்க்கையையும் உண்டாக்கும் என்று உறுதியளிக்கின்றனர்.
அப்படி அமையும்போது 2020 ஆம் ஆண்டளவில் ஆசியாவின் அதிசயமாக இலங்கை இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.
1960 களில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சிங்கப்பூரின் பிரதமர் லீ குவான் யூ இலங்கையைப் பார்த்துவிட்டு சிங்கப்பூரை இலங்கையைப்போல ஆக்கவேண்டும் என்று சொல்லியிருந்தார்.
அன்று இலங்கை அப்படித்தான் இருந்தது. அதாவது பிறத்தியார் ஆச்சரியப்படும் வகையாக.
பிறகு மற்றவர்களைப் பார்த்து நாங்கள் ஆச்சரியப்பட வேண்டிய  கட்டத்துக்கு இலங்கையின் அரசியல்வாதிகள் கொண்டு வந்தனர்.
இப்பொழுது மீண்டும் மெல்ல மெல்ல நாடு முன்னேறி வருகிறது.
ஆனாலும் ஊழல் குற்றச்சாட்டுகளும் குடும்ப அரசியலும் அதிகாரப் பிரச்சினையும் உள்ளன என்ற குற்றச்சாட்டுகளும் இந்த அரசாங்கத்தின் ஆட்சிகுறித்து உள்ளன.
என்றபோதும் இப்பொழுது பாராளுமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் வரவுசெலவுத்திட்;ட விவாதத்தில் இது ஒரு சூடான விடயமாக விவாதிக்கப்படவில்லை.
ஏனென்றால் அரசாங்கத்தை எதிர்த்து வாதிடக்கூடிய திறன்களோடு எதிர்க்கட்சிகள் இல்லை.
எதிர்க்கட்சிகளிடம் உள்ள மாகாணசபை, பிரதேச சபைகள், நகரசபைகள் கூட ஒழுங்காக – உருப்படியாக நடப்பதாக இல்லை.
அவை வினைத்திறனை இழந்தவையாக இருக்கும் போது எதிர்க்கட்சிகளால் வாயைத்திறக்க முடியவில்லை.
குறிப்பாக தமிழ் முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற – தமிழ்த்தேசிய, முஸ்லிம்தேசவாதக் கட்சிகளைச் சேர்ந்தவர்களே இழைத்துப்போய்த்தானிருக்கிறார்கள்.
தங்களுடைய சொந்தக் காலில் நிற்கக் கூடியமாதிரி இவர்கள் தங்களுடைய மக்களுடைய வாழ்க்கைக்காக உழைக்கவில்லை.
மக்களுடைய தலையாய பிரச்சினைகளில் தங்கள் தலையை வைக்கவில்லை.
அவர்களுடைய நெருக்கடிக் காலங்களில் அவர்களோடு கூட நிற்கவில்லை.
அவர்களுக்கு ஒரு போதுமே ஆறுதலாக இருக்கவில்லை
அவர்களை மனிதாபிமானத்துடன் நோக்கவில்லை.
தேர்தல்காலங்களில் பொங்கி வழிகின்ற பாசத்தோடு அரவணைத்ததைத்தவிர வேறு எந்தப் பெரிய பணிகளையும் இவர்கள் செய்ததில்லை.
எனவே அரசாங்கத்தரப்பின் வாதங்களை வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, மறுத்துப் பேசக்கூடிய திராணியைப் பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறார்கள்.
சில சந்தர்ப்பங்களில் சில விடயங்கள் தொடர்பாக மறுத்துப் பேச முனைந்தாலும் எதிர்த்து ஒரு கேள்வி கேட்டவுடன் வாயடைத்துப்போகிறார்கள்.
சில நாட்களுக்கு முன்னர் இது போன்ற ஒரு விவாதத்தில் கலந்து கொண்ட தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த அரியநேத்திரன் என்ற எம்பி முற்றிலும் தவறான புள்ளிவிவரங்களை முன்வைத்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 40 ஆயிரம் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளன என்று சொன்னார்.
இதைக் கேட்ட அனைவரும் சிரிக்கத்தொடங்கி விட்டனர்.
ஏனென்றால், கிளிநொச்சியில் மொத்தமாக 41, 250 குடும்பங்களே உள்ளன.
இதில் 40 ஆயிரம் குடும்பங்கள் பெண்தலைமைத்துவக் குடும்பங்கள் என்று ஒரு பாராளுமன்ற உறுப்பினர் சொல்கிறார் என்றால், ஆக 1250 குடும்பங்கள் மட்டும்தான் கணவனைக்கொண்ட குடும்பங்களாக – ஆண் தலைமைத்துவக் குடும்பங்களாக உள்ளனவா?
எந்தவகையான அடிப்படைகளும் இல்லாமல் இவர்கள் கண்டபாட்டுக்கு வாயிலே வந்தபடி கதைக்கின்ற பரம்பரையைச் சேர்ந்தவர்கள்.
இப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் ஊடகங்களின் முன்பக்கத்திலேயே இருந்த கஜேந்திரன் என்பவர் 40 ஆயிரம் சவப்பெட்டிகளை  தென்பகுதிக்கு அனுப்பி வைப்போம் என்றார்.
அப்படிச் சொன்னவர் அதற்கான யதார்த்தத்தைப் பற்றிச் சிந்திக்கவேயில்லை.
அப்படிச்சொல்லிவிட்டு அதை நடைமுறைப்படுத்துவதற்காக இங்கே நிற்கவும் இல்லை.
இப்படித்தான் இவர்கள் சொல்வதெல்லாம் பொய்யாகவும் பழங்கதையாகவும் போய்க்கொண்டிருக்கிறது.
பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட விவாதம் நடந்து கொண்டிருக்கும்போது அதை எதிர்கொள்ள முடியாமல் ஆளுக்கு ஆள் சத்தமில்லாமல் வெளியேறித் தங்கள் காரியங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
இவர்களை நம்பிய மக்கள் கதியோ அதோ கதி. மூலம்: http://www.thenee.com/html/171114-2.html

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...