மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் அரசியல் (அ)சிங்கங்கள்


-எஸ். எம்.எம். பஷீர்
இன்று இலங்கையில் நடைபெறும் பொதுத்  தேர்தலை பொறுத்தவரை குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுதந்திரமான வாக்களிப்பு  சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர் இடம்பெறுவதால் இத் தேர்தல்  மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. இதுவரை காலமும் எதுவரை  செல்லும் தமிழீழக்கனவு என்ற கேள்விக்கும் பதிலை தேடி நிற்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின்  பரிசோதனைத தேர்தலாகவும்  புலிகள் வெறும் அறிக்கைதான் என்று தனது வார்த்தைகளையே சாப்பிட்டு முழுங்கிய உள்ளார்ந்த சுயநிர்ணய உரிமையை  (Internal self determination) மீண்டும் தூக்கிக்கொண்டு நீதித்துறையால் நிராகரிக்கப்பட்ட    இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை (Interim Self Governing Authority) வட கிழக்கு இணைப்பு பற்றிஎல்லாம் பிதற்றிக்கொண்டு தமிழ் அரசுக்கட்சியும் களத்தில் குதித்துள்ளது. அதிலும் இம்முறை கிழக்கு மாகான சபையை பலப்படுத்தவென தமிழீழ விடுதலிப்புலிகள் எனும் கிழக்கு தலைமைத்துவத்துடன் உருவான தமிழ் கட்சியினர் மறுபுறம் கிழக்கில் மக்கள் ஆணையை பெற இன்னுமொருபுறம் நாடாளுமன்ற தேர்தலை முதன் முதலில் எதிர்கொள்கின்றனர்.

சில தினங்களுக்கு முன்னர் லண்டன் தமிழோசை மட்டக்களப்பு தேர்தல் நிலவரம் குறித்து ஒலிபரப்பிய நிகழ்ச்சியில்  தமிழர் அரசியல் குறித்து ஒரு  விசாலமான பார்வையினை கொண்டிருந்தது எனவே  மட்டக்களப்பு மாவட்டத்தில்  முஸ்லிம் வேட்பாளர்களிடையே நடைபெறும் தேர்தல் நிகழ்வுகள்  பற்றி ஒரு மட்டுப்படுத்தப்பட்ட  ஆனால் சுவாரசியமான தகவல்களுடனான எனது சிறு குறிப்பே
இக்கட்டுரையாகும்.
முஸ்லிம் அரசியல் ஜாம்பவான்கள் பலர் பிரதான இரு கட்சிகளில் போட்டியிடுகிறார்கள் அவர்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது ஊரையும் ஏனைய ஊர்களில் உள்ள தமது சிறு தொகையினரான ஆதரவாளர்களுடன் புதிய ஆதரவினை திரட்டுவதற்கு தமது வழக்கமான தேர்தல் கால கொடுப்பனவுகளை அவ்வூர் வறிய முஸ்லிம் மக்களுக்கு வழங்கி தமது மாமூல் அரசியல் ஈடுபட்டு அறுவடையை எதிர்பார்த்து நிற்கின்றனர். மேலும் தமிழ் மக்களுக்கும் தமிழர் பிரதேசங்களில் இன உறவு பாலமாக தாங்களே விளங்குவதாக பறைசாற்றி,  உதவி ஒத்தாசைகள் பலவற்றை தேர்தல் பிரகடனப்படுத்தப்பட்ட நாளிலிருந்து தீவிரமாக செய்து வருகிறார்கள் தமிழ் மக்களுக்கு இவர்களில் யார் தேர்வுக்குரியவர்கள் என்பது ஒரு புறமிருக்க  இத்தேர்தலில் தமிழர்களின் ஒரு கணிசமான வாக்குகளை கொண்டே தாங்கள் வெற்றிபெறமுடியும் என்று ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் சேகு தாவூத் உட்பட ஹிஸ்புல்லாஹ் , அமீர் அலி  சாகிர் மௌலானா ஆகியோர் நம்புகிறார்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இப்போது போட்டியிடும் சகல முன்னாள் நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள்  கடந்த காலங்களில் தமிழர் வாக்குகளை பெற்ற அனுபவத்தை இம்முறையும் பெறுவதற்கான சகல வழிமுறைகளையும் செய்து வந்துள்ளார்கள். தமிழர்களின் வாக்குகளை பெறுவதில் தமிழ் விளிம்பு நிலை மக்களின் போதைபழக்கத்தையும் அவர்களின் வறுமையும் கூட இஸ்லாமிய மத ரீதியான நம்பிக்கைக்கு முரணாக சுய நலத்துடன்  பயன்படுதிவதில் கூட இங்கு போட்டியிடும் எல்லா முஸ்லிம் முன்னாள் எம். பீக்களும் கைதேர்ந்த்தவர்கள். தமிழர்கள் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று எதிபார்க்கும் முஸ்லிம் வேட்பாளர்கள் அல்லது அவர்களின் ஆதரவாளர்கள் யாரும் தமிழருக்கு வாக்களிப்பார்களா என்ற கேள்விக்கு  நாம் விடையை தேர்தல் முடிவுகள் வந்த பிறகே சொல்லலாம். ஆனால் முஸ்லிம்கள் பொதுவாக பெரும்பான்மையாக தமது ஊர் பிறந்த வேட்பாளர்களுக்கே வாக்களிக்க தயாரகவிருக்கிரார்கள் என்பதுடன் ஒரே கட்சியில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க தயாராகவில்லை. அவ்வாறு வாக்களிக்ககூடாது என்ற ஊர் சார்ந்த பிரச்சாரத்தையும் அவவ்வூர் வேட்பாளர்கள் இரகசியமாக செய்து தமது விருப்பு வாக்குகளை உறுதி செய்துவருகிறார்கள்.
தமிழ் வேட்பாளர்கள் இன்று பல கட்சிகளாக பிளவுற்றிருப்பினும்  அவர்களிடேயே தமது செல்வாக்கை அதிகரிக்க முற்பட்ட " முஸ்லிம்-தமிழ் இன உறவு" சுலோகம் இம்முறை வெற்றி பெறுமா என்பது அனேகமாக நாளை தெரிந்துவிடும். முஸ்லிம் வறியமக்களுக்கு ஒருபுறம் அலி சாகிர் மௌலானா இலவச (மாட்டு) இறைச்சி   விநியோகம் செய்த  நிகழ்வுகளுடன் சேகு தாவூத் அமது அபார அரசியல் அறிவினை பயன்படுத்தி யானைதீப்பெட்டிகளை ( தமது உருவமும் சின்னமும் பொறித்து!)  வீடுவீடாக விநியோகம் செய்த செய்திகளும் வெளியாகியுள்ளன.
தனது மனைவியின் பெயரில் ஏழை மக்களின் சேமிப்பினை வங்கி கடனாகப்பெற்று தனது குடும்பத்தை வளம்படுத்திக்கொண்ட முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் முதலீட்டாளரின் பணத்தினை திருப்பித்தருவதாக வேறு வாக்குறுதி அளித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. ஊர்வாதம் அழிய "உம்மா" (சமூகம்) என்று வாய் கிழிய கத்துவது இஸ்லாம் மதக் கோட்பாடுகள் தமது வாழ்க்கை என்று முழங்கி கையூட்டு அளித்து சோம பானம் வழங்கி தேர்தல் வியாபாரம் செய்வது எல்லாமே முஸ்லிம் வேட்பாளர்கள் பலரின் வழக்கமான நடைமுறைதான்.   
மொத்தத்தில் இத்தேர்தல் வழக்கம்போல் எந்த பாடத்தையும் புகட்டப்போவதில்லை ஏனெனில் மக்கள் பணத்துக்கும் தீப்பெட்டிக்கும் இறைச்சிக்கும் மதுபானத்துக்கும் என்று தமது வாக்குகளை விற்கும் வரை இந்த முஸ்லிம் அரசியல் ஜாம்பவான்களின் காட்டில் மழைதான். 

   09.04.2010
 http://www.thenee.com/html/080410-3.html

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...