Sunday, 14 February 2021

இலங்கை மீதான மனித உரிமை குற்றச்சாட்டு போலியாக உருவாக்கப்பட்டுள்ள பொறி!

 


லங்கை மீதான மனித உரிமை குற்றச் சாட்டு போலியாக உரு வாக்கப்பட்ட பொறியாகும்’ என்று கூறுகின்றார் வெளிநாட்டமைச்சர் தினேஷ் குணவர்தன.

30வருட காலமாக இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் 2009 ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்தது. அன்று தொடக்கம் இன்று வரை இலங்கை அரசாங்கத்துக்கும், இராணுவத்துக்கு கட்டளையிட்ட இராணுவத் தலைவர்களுக்கும் எதிராக யுத்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகின்றது. நாம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பல குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானோம். இம்முறை பெப்ரவரி மாதம் எதிர்வரும் 22 ஆம் திகதி ஜெனிவாவில் நடைபெறுவுள்ள மகாநாட்டில் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன நாட்டின் இறைமையை பாதுகாக்கும் வகையில் தயாராகி வருகின்றார்.


கேள்வி: உலகமே எல். ரீ. ரீ. ஈ இயக்கம் கெரில்லா பயங்கரவாத அமைப்பு என்று ஏற்றுக் கொண்டுள்ளது. அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தத்துக்கு ஏன் தவறான விளக்கத்தை அளிக்கிறார்கள்?

பதில்: இலங்கை மீது சுமத்தப்படும் இக்குற்றச்சாட்டு பிழையானது என நாம் சுட்டிக் காட்டி வருகின்றோம். விசேடமாக 30 வருட காலமாக தோல்வியடையச் செய்ய முடியாதிருந்த பயங்கரவாத அமைப்பான எல்.ரீ. ரீ. ஈ அமைப்பை வெற்றி கொண்ட வேளையில் பல நாடுகள் எமக்கு ஆதரவு அளித்தன. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து வருகை தந்த 3 இலட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு நாம் பாதுகாப்பை வழங்கினோம். போரில் ஈடுபட்ட புலிகள் அமைப்பினரில் சுமார் 12,500 பேருக்கு புனர்வாழ்வு அளித்துள்ளோம். ஆனால் பல அமைப்புகள் பொய்யான தகவல்களையும் தவறான எண்ணிக்கைகளையும் அளித்துள்ளதால் இலங்கைக்கு தண்டனை அளிக்கக் கூடிய அதிகாரம் மிக்கவர்களாக மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் உள்ளிட்ட பலர் செயற்படுகின்றார்கள்.

கேள்வி: ஐக்கிய நாடுகள் அமைப்பின் கொள்கைக்கு அமைய எம் மீது இவ்வாறான குற்றச்சாட்டை சுமத்த முடியுமா?

பதில்: ஒரு நாட்டிற்கு தெரிவு செய்யப்பட்ட தண்டனை வழங்கும் யோசனையை கொண்டு வருவது என்பது தவறு என்ற கொள்கையின் பெயரிலேயே ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் அனுமதியுடன் மனித உரிமைகள் ஆணைக் குழு அமைக்கப்பட்டது. அந்த அடிப்படைக் கோட்பாட்டை பின்பற்ற மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தெரிந்திருக்க வேண்டும். இலங்கை மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தவறானது என நாம் சுட்டிக் காட்டியுள்ளோம். ஆனால் ‘ஹியூமன் ​ேவாட்ச்’ அமைப்பு இலங்கையின் நடவடிக்கை குறித்து சர்வதேச கவனத்தை செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட சிலரின் கருத்துகளுக்கு அமையவே அவர்கள் அவ்வாறு பேசுகிறார்கள். அதேபோன்று ஹியூமன் ​ேவாட்ச் அமைப்பு ஏற்கனவே இவ்வாறான குற்றச்சாட்டுக்களை எம் மீது சுமத்தியுள்ளது. அவ்வமைப்பு எவ்வாறு மனித உரிமை பற்றி பேசுகின்றது என்பதற்கு நல்ல உதாரணங்களைத் தரலாம். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் போது 290 க்கும் அதிகமானோர் மரணமடைந்தார்கள். இன்றும் 70 பேர் ஊனம் அடைந்த நிலையில் உள்ளார்கள். அவர்களைப் பற்றிக் கதைப்பதில்ல. அவர்கள் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை விடுதலை செய்யுமாறு கூறுகிறார்கள். இது ஒரு உதாரணமாகும். எமது வங்கிக் கணக்குகளையும் தடை செய்ய அவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். நாட்டு மக்களை வாழ வைக்கும் மனித உரிமைகளின் அடிப்படைத் தேவையான வருமானத்திற்கான வழியை இல்லாது செய்ய முயற்சி செய்யும் அவர்களில் என்ன ஹியூமன் இருக்கின்றது என கேட்கத் தோன்றுகின்றது.

கேள்வி: பல வருட காலமாக இக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. சரியான பதில் எம்மிடமிருந்து கிடைக்கவில்லையா?

பதில்: நல்லாட்சி அரசாங்கம் இணை அனுசரணை வழங்க முன்வந்ததனால் அங்கு பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. எமக்கு எதிரான நாடுகளுடன் இணைந்து, வெளிநாட்டு நீதிபதிகள் இணைந்த நீதிமன்றால் வழக்குகளை விசாரிக்க ஆணைக்குழு ஒன்றை நியமிக்க கையை உயர்த்தி விட்டு வந்துள்ளார்கள். அது இலங்கைக்கு எதிராக செயல்பட இலங்கையே ஒப்புதல் அளித்தது போன்றதாகும். அச்சந்தர்ப்பத்தில் சரியான தகவல்களை அறியவில்லை. அதே போன்று அந்த யோசனையை பாராளுமன்றத்தில் கூட முன்வைத்தார்கள். அவ்வேளையில் அரசாங்கத்துக்குள்ளும் இது தொடர்பாக பிரிவினை ஏற்பட்டது.

கேள்வி: ஆனால் இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகியுள்ளது அல்லவா?

பதில்: ஓம். எம்மால் எமது நாட்டின் உயர்நீதிமன்றம் வரையுள்ள நீதிமன்ற தொகுதிக்கு வெளிநாட்டு நீதிபதியை அனுமதிக்க முடியாது. அது எமது அரசியலமைப்புக்கு எதிரானதாகும்.

கேள்வி: இணை அனுசரணையில் இருந்து விலகும் போது வெளிநாட்டு அமைச்சர் என்ற ரீதியில் உறுதி ஒன்றைப் பெற்றுக் கொடுத்துள்ளீர்கள் அல்லவா?

பதில்: ஓம், நாம் பெற்றுக் கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்ற செயற்பட்டு வருகின்றோம். எமது அரசியல் அமைப்பின் பிரகாரம் நாம் செயற்படுகின்றோம். விசேட விசாரணை ஆணைக்குழுவை நாம் அமைத்துள்ளோம். அதே போன்று 2030 இல் வறுமையை ஒழிக்கும் எதிர்பார்ப்புடன் நிலையான அபிவிருத்தியை நோக்கி செல்ல நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அத்துடன் ஜே. ஆர்.ஜெயவர்த்தன அவரது காலத்தில் இங்கிலாந்தில் நடைமுறையிலிருந்த பயங்கரவாத சட்டத்துக்கு அமைய பயங்கரவாத தடைச் சட்டத்தை நிறுவினார்.

சட்டத்தில் குறைபாடுகளை ஆராய்ந்து சட்டத்தை திருத்தக் கூடிய நடவடிக்கைகள் என்னவென்று தற்போது சட்டமா அதிபர் திணைக்களமும் நீதி அமைச்சும் ஆராய்ந்து வருகின்றன.

கேள்வி: எமது இராணுவத்துக்கு எதிராக தொடர்ந்தும் அவர்கள் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்கள் அல்லவா?

பதில்: நாட்டின் அனைத்து மக்களுக்காகவே அவர்கள் போரிட்டார்கள். தமிழ் அரசியல் தலைவர்களுக்குக் கூட பாதுகாப்பு வழங்கினார்கள். அவர்களை ஒருபோதும் இராணுவ நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல நாம் இடமளிக்க மாட்டோம். அவர்கள் செய்தது மனிதாபிமான யுத்தம் ஆகும். அதனால் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விலக்கிக் கொள்ளுமாறு கோருகின்றோம்.

கேள்வி: ஆனால் இராணுவத் தளபதிக்கும், அவரது குடும்பத்தாருக்கும் கூட அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று இறுதி யுத்தத்தில் தலைமை வகித்தவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனையும் மனித உரிமைகள் மீறல் என வினவ முடியாதா?

பதில்: நாம் அது குறித்து விடயங்களை தெரிவித்துள்ளோம். இம்முறையும் அதுபற்றி குறிப்பிடுவோம். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த வேளையில் இங்கிலாந்துக்குச் சென்ற போது அவர் வருகை தந்த விமானம் மீண்டும் செல்வதற்கு தடை விதிக்கும் தடை உத்தரவு ஒன்றை நீதிமன்றத்திற்கு சிலர் கொண்டு சென்றார்கள். இன்று அதனை பலர் மறந்து விட்டார்கள்.

கேள்வி: பாதிக்கப்பட்ட தரப்பு நியாயம் கிடைக்கவில்லை என்று கூறுகின்றதா?

பதில்: நாட்டு பிரஜை ஒருவர் தமக்கு அநியாயம் அளிக்கப்பட்டால் சட்டத்தின் உதவியை பெற முடியும். அதே போன்று இச்சம்பவங்களைப் பற்றி ஆராய்ந்து அதற்கு அப்பாலும் செல்லலாம். பரணகம அறிக்கை மற்றும் எல்.எல்.ஆர்.சி அறிக்கையின்படி செயல்படலாம். அது மாத்திரமல்ல எவருக்கும் அதற்கு மேலதிகமாக சாட்சியங்களையும் பெற்றுக் கொடுக்க முடியும்.

கேள்வி: ஏன் மேற்குலக நாடுகள் எம் மீது இவ்வாறு குற்றங்களை சுமத்துகின்றன?

பதில்: இதற்கு தலைமை வகிக்க எம் நாட்டில் கோள் சொல்பவர்களும் இருக்கிறார்கள். எமது நாட்டைச் சேர்ந்தவர்களே இவ்வாறு தவறான கருத்துகளை அங்கு சென்று கூறும் போது மேற்குலக நாடுகள் எமக்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்றன.

கேள்வி: மனித உரிமைகள் ஆணைக்குழுவின் குற்றச்சாட்டை அனுமதிக்கின்ற வடக்கு தமிழ் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள் அல்லவா ?

பதில்: இங்கு விசேடமாக குறிப்பிட வேண்டும். அந்த அரசியல்வாதிகளை, யுத்தக் குற்றம் செய்தார்கள் என்று குற்றம் சாட்டப்படும் வீரர்களே புலி பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாத்தார்கள். யுத்தத்தை வழிநடத்திய தலைவர்கள் மனித உரிமையை மீறினார்கள் என்று கூறும் தமிழ் அரசியல்வாதிகள் அன்று வடக்கில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாக்க வாக்குகளை அளிக்குமாறு வடக்கு மக்களிடம் கூறினார்கள். யுத்தம் 2009 ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்தது. அன்று தொடக்கம் இன்று வரை இந்தக் குற்றச்சாட்டு உள்ளது. ஒருமுறை ‘சேனல் 4’ நாடகம் அரங்கேறியது.

கேள்வி: அமைச்சர் ரம்புக்வெல்ல, அமைச்சர் மங்கள சமரவீர 2015ஆம் ஆண்டில்30 பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்ததன் விளைவே நாம் இப்போது அனுபவிப்பது என்று கூறியிருந்தார் அல்லவா?

பதில்: அது உண்மையாகும். கடந்த ஆணைக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட போது வெளிநாட்டுப் பிரதிநிதிகள் ‘உங்கள் நாட்டவர்கள் அந்த யோசனைக்கு வாக்குகளை வழங்கும் போது நாம் என்ன செய்வது?’ என்று கேட்டார்கள். அன்று அரசாங்கத்தில் இருந்த அநேகமானோர் அந்த யோசனையை நிராகரித்திருந்தார்கள். ஒரு சிலரை மகிழ்ச்சிப்படுத்த எம்மால் யோசனைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. எம் எஜமானர்கள் என்று கருதி மேற்குலக ஏகாதிபத்தியத்துக்கு நாம் அடிபணிய மாட்டோம்.

கேள்வி: இம்முறை மகாநாட்டில் கலந்து கொள்ளும் அணியினரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதா?

பதில்: எமது சுதந்திர பிரதிநிதி ஜெனிவாவில் இருந்து நடவடிக்கையில் ஈடுபடுவார் அங்கு காரியாலய நடவடிக்கைகளும் சரியான முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. அதைத் தவிர இன்னும் சில பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். அதே போன்று புதிய தூதுவர் உள்ளிட்ட பலர் அங்கு பிரதிநிதிகளாக நடவடிக்கையில் ஈடுபடுகின்றார்கள். அதைத் தவிர இங்கிருந்து தொடர்பு கொள்ளும் பிரதிநிதிகளும் உள்ளார்கள்.

கேள்வி: கொவிட் -19 தொற்று நிலைமையின் கீழ் கூட்டத் தொடர் எவ்வாறு நடைபெறும்?

பதில்: இம்முறை கூட்டத்தொடர் வீடியோ தொழில்நுட்பம் மூலமாகவே நடைபெறும். இங்கு எமக்கு வழங்கப்பட்டுள்ள நேரம் மிகக் குறைவு. விசேடமாக வெளிநாட்டு அமைச்சர் என்ற ரீதியில் விடயங்களை தெரிவிப்பதற்கு எனக்கு மிகக் குறுகிய காலமே வழங்கப்பட்டுள்ளது.

கேள்வி: போதிய நேரமின்மையால் விடயங்களை தெரிவிப்பதில் சிரமம் ஏற்படுமா?

பதில்: உண்மையை உள்ளபடி தெரிவிக்க காலம் போதாது. உண்மையை சுட்டிக்காட்ட குறிப்பட்ட அளவு நேரம் அவசியம். ஆனாலும் நாம் அனைத்தையும் எழுத்து மூலம் அளித்துள்ளோம். எவ்வாறாயினும் பதில் கருத்துகளை தெரிவிக்க எமது நிரந்தர பிரதிநிதிக்கு பின்னர் கால அவகாசம் கிடைக்கும்.

கேள்வி: இம்முறையும் ஹைபிரிட் அதாவது கலப்பு முறை நீதிமன்ற கதை கூறப்பட்டால் என்ன செய்வீர்கள்?

பதில்: நாம் அதற்கு ஒருபோதும் ஒப்புதல் அளிக்க மாட்டோம். நாம் அதனாலேயே இணை அனுசரணையிலிருந்து வெளியேறினோம். இலங்கை பொதுநலவாய அங்கத்துவ நாடாகும். அதேபோன்று ஜனநாயக நாடாகும். நாம் எமது அரசியலமைப்பின்படியே நடவடிக்கையில் ஈடுபடுவோம்.

கேள்வி: உலகில் வேறு நாடுகள் இவ்வாறு குற்றச்சாட்டுகளுக்கு இம்முறை மகாநாட்டில் முகம்கொடுக்க உள்ளனவா?

பதில்: ஓம், ஒன்பது நாடுகள் தொடர்பில் இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. எமது நாட்டுக்கு எதிராக நடவடிக்கையில் ஈடுபடுவது மற்றும் பல பரிந்துரைகளை அழிப்பது நாட்டின் இறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்த முயற்சிப்பது ஆகும். அத்துடன் அது தவறான எடுத்துக்காட்டாகும். அத்துடன் 47 அங்கத்துவ நாடுகளின் கருத்துக்கள் கேட்கப்படும்.

கேள்வி: மனித உரிமைகள் ஆணைக்குழு இம்முறை இலங்கைக்கு எவ்வாறான அழுத்தத்தை ஏற்படுத்தும் என நீங்கள் எண்ணுகிறீர்கள்?

பதில்: நாம் அதற்கான பதிலை அளித்துள்ளோம். நாம் வெற்றிகரமாக முகம் கொடுப்போம். விரிவாக விவாதங்களை மேற்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தால் நல்லது. வீடியோ தொழில்நுட்ப மூலம் எமது கருத்துகளை தெரிவிக்கும் போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால் பிரச்சினை ஏற்படக் கூடும்.

கேள்வி: ஒரே நாடாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கையாக எடுக்க வேண்டிய செயலாக எதனைக் கருதுகிறீர்கள்?

பதில்: கட்சி, எதிர்க் கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும். விசேடமாக எதிர்க் கட்சியினர் இராணுவ வீரர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கத்துடன் இணைந்து குரல் கொடுக்க வேண்டும்.

பேட்டி: தாரக விக்ரம சேகர 
தமிழில்: வீ ஆர் வயலட்

Source: chakkram.com


No comments:

Post a comment

Bengal polls: Abbas Siddiqui's ISF seals seat-sharing deal with Left, talks on with Congress

  Indian Secular Front leader Abbas Siddiqui (Photo | Youtube screengrab) Addressing a press conference, Siddiqui said the Left Front has ag...