பொத்துவில் முதல் பொலிகண்டி வரை….!? - ஸ்ரீதரன்

 தமிழ் தேசியர்களில் ஒரு பகுதியினர் அண்மையில் ‘பொத்துவில் முதல்

பொலிகண்டி வரை’ என ஓர் ஊர்வலத்தை நடத்தினர். சில கோரிக்கைகளை முன்வத்து நடத்தப்பட்ட இந்த ஊர்வலத்தை சிவில் சமூகமும், பொது அமைப்புகளும், மதகுருமார்களும்தான் ஏற்பாடு செய்தனர் என்று சொல்லப்பட்டாலும், தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சிலரே, குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரனும், சாணக்கியனும்தான் பின்னணியில் நின்று ஏற்பாடு செய்தார்கள் என்ற  விடயம் எல்லோருக்கும் தெரிந்த விடயம்.


இந்த ஊர்வலத்தை ஏன் திடீரென்று ஏற்பாடு செய்தார்கள் என்பதும், இதில்

ஏன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களோ,

பங்காளிக் கட்சிகளோ, இதர தமிழ் தேசியக் கட்சிகளோ பங்குபற்றவில்லை

என்பதும் போன்ற பொதுமக்களால் விளங்கிக்கொள்ள முடியாத கேள்விகள்

இருக்கின்றன.


 அத்துடன், வழமையாக முஸ்லீம் மக்களுக்கு எதிராக அரசியல் செய்யும்

இவர்கள், இம்முறை அரசாங்கம் முஸ்லீம் மக்களின் ஜனாசா எரிக்கும்

பிரச்சினையையும் ஒரு கோசமாக வைத்திருந்தனர். இது முஸ்லீம்

மக்களை அரசுக்கு எதிராகத் தூண்டிவிடும் ஒரு முயற்சி என்பதை

விளங்கிக்கொள்ள விசேட பாண்டித்தியம் எதுவும் தேவையில்லை. ஆனால்

இவர்களது சூழ்ச்சித் திட்டத்தைப் புரிந்து கொண்ட முஸ்லீம் அரசியல்

கட்சிகளோ, மத அமைப்புகளோ இந்த ஊர்வலத்தில் பங்குபற்றவில்லை.


அதேபோல, மலையக மக்களின் பிரச்சினைகளை பல தசாப்தங்களுக்கு

முன்னரே கைகழுவிவிட்ட இந்த ‘யாழ்ப்பாணத் தமிழ் தேசியர்கள்’

இம்முறை மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளக்

கோரிக்கையையும் ஒரு கோசமாக முன்வைத்திருந்தனர். ஆனாலும்

மலையகத்திலிருந்து எந்தவொரு தொழிற்சங்கமோ, ஏன் ஒரு

தனிமனதனோ கூட இவர்களது ஊர்வலத்தில் கலந்து கொள்ளவில்லை.


அப்படியானால் இவர்கள் ஏன் இந்த ஊர்வலத்தை ஏற்பாடு செய்தார்கள்

என்ற கேள்வி எழுகிறது. உண்மையில் தமது சில அந்தரங்கத் தேவைகளை

நிறைவேற்றிக் கொள்ளவே சில சக்திகளால் இந்த ஊர்வலம் ஏற்பாடு

செ;ய்யப்பட்டது என்பதுதான் உண்மை. அந்தத் தேவைகள் என்னவென்று

பார்த்தோமானால் - முதலாவது தேவை, மார்ச் மாதம் ஜெனிவாவில் ஐ.நா.

 மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தின்போது இலங்கை சம்பந்தமான

 விவாதம் நடைபெறவுள்ளது. முன்னைய ‘நல்லாட்சி’ அரசாங்கம் இருந்த

காலத்தில் இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடன் (தன் தலையில் தானே

மண்ணள்ளிப்போட்ட) அமெரிக்காவும் அதன் மேற்கத்தைய கூட்டாளிகளும்

சேர்ந்து இலங்கைக்கு எதிராகக் கொண்டுவந்த தீர்மானத்தை

தற்போதைய இலங்கை அரசாங்கம் நிராகரிப்பதாக ஏற்கெனவே

அறிவித்துவிட்டது. 

எனவே இலங்கைக்கு எதிராக இன்னாரு புதிய தீர்மனத்தை இம்முறை

 நடைபெறும் கூட்டத்தொடரில் நிறைவேற்றும்படி மேற்கு நாடுகளைத் தூண்டி

 விடுவதே இந்த ஊர்வலத்தின் ஒரு நோக்கமாகும்.

இரண்டாவது தேவை, வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் தேசியக் 

கூட்டமைப்பின், குறிப்பாக தமிழரசுக் கட்சியின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்து

வருவதை கடந்த பொதுத் தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டின.

அதுமட்டுமின்றி, அண்மையில் யாழ்ப்பாண மாநகர சபை, நல்லூர்

பிரதேச சபை, வாகரை பிரதேச சபை என்பனவற்றின் அதிகாரத்தையும் தமிழ்

தேசியக் கூட்டமைப்பு இழந்துள்ளது.


இந்த செல்வாக்கு விழ்ச்சியும், இழப்புகளும் தொடரப்போவது உறுதி.

அத்துடன், வடக்கில் டக்ளஸ் தேவானந்தா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், விக்னேஸ்வரன் போன்றோரினதும், கிழக்கில் “பிள்ளையான்” என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனினதும் எழுச்சி தமிழரசுக் கட்சியினருக்கு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.


எனவே, இழந்த செல்வாக்கை திரும்பவும் நிலைநிறுத்துவதற்கு இத்தகைய ஊர்வலங்கள் உதவக்கூடும் என்ற எதிர்பார்ப்பின்  அடிப்படையிலும் இந்த ஊர்வலம் நடத்தப்பட்டிருக்கிறது. மூன்றாவது தேவை,  தமிழரசுக் கட்சிக்குள் பதவிப் போராட்டங்களும், உள்கட்சி முரண்பாடுகளும் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக, சம்பந்தனுக்குப் பிறகு தமிழரசுக் கட்சியின்  தலைமையை யார் வகிப்பது என்பது சம்பந்தமாக மாவை சேனாதிராசாவுக்கும் சுமந்திரனுக்கும் இடையே பனிப்போரும் பகிரங்கப் போரும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதேபோல, கிழக்கில் தமிழரசுக் கட்சியின் பழைய தலைகளை உருட்டிவிட்டு தன்னை முன்னிலைக்குக் கொண்டு வரும் ஆவலில் சாணக்கியன் இருக்கின்றார்.


எனவேதான், சுமந்திரனும் சாணக்கியனும் இந்த ஊர்வலத்தில் அதிக அக்கறை

 காட்டினார்கள். இவர்கள் என்னதான் ஊர்வலம் நடத்தினாலும், தமது இழந்த

செல்வாக்கை திரும்பவும் மீட்டெடுப்பதோ அல்லது தமது உட்கட்சி 

 மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதோ நடக்கப் போவதில்லை.

 தமிழரசுக் கட்சியின் ‘தந்தை’ என வர்ணிக்கப்படும் செல்வநாயகமும்,

 ‘தளபதி’ என வர்ணிக்கப்பட்ட அமிர்தலிங்கமும் தமிழரசுக் கட்சியின்

 தலைவர்களாக இருந்த காலத்திலேயே மக்கள் ஆதரவுடன் 1961இல்

 நடத்தப்பட்ட சத்தியாக்கிரகம் மற்றும் திருமலை பாத யாத்திரை என்பன

 சாதிக்காததையா இவர்களது இந்த அற்ப மோட்டார் பவனி சாதிக்கப்

 போகிறது? இப்படியான உள்நோக்கம் கொண்ட ஊர்வலங்கள் சில தனிப்பட்ட

அரசியல்வாதிகளின் பதவி மோகத்தை நிறைவேற்றி வைக்கலாமே தவிர,

 தமிழ் பொதுமக்களுக்கு எவ்வித விமோசனத்தையும் தரப்போவதில்லை

என்பதுதான் அடிப்படையான உண்மையாகும்.


Courtesy: Vaanavil 122 Feb 2021


No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...