இந்தியா இலங்கையின் பெரியண்ணனாக நடக்கக் கூடாது!

 ண்மைக்காலமாக இலங்கைக்கும் இந்தியாவுக்குமான உறவுகளில் சில தளும்பல்கள் அல்லது உரசல்கள் ஏற்பட்டிருக்கின்றன. முன்னரும் இப்படியான நிலைமைகள் வரலாறு முழுவதும் இருந்து வந்திருக்கின்றன.

தற்போதைய முரண்பாடுகளுக்கு உடனடிக் காரணம் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இலங்கையின் முந்தைய அரசாங்கம் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி இந்தியாவுக்கு (யப்பானுக்கும் சேர்த்து) வழங்கவில்லை என்பதில் தொடங்கியது. அது பின்னர் வட மாகாணத்தில் உள்ள மூன்று தீவுகளில் மின்சக்தி நிலையங்களை அமைப்பதற்கான உரிமையை சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியதில் வந்து நிற்கின்றது.இலங்கை இந்தியாவுடன் கொண்டுள்ள வரலாற்று ரீதியான உறவுகளையிட்டு சீனா ஒருபோதும் கேள்வி எழுப்பியதோ, அலட்டிக் கொண்டதோ, சந்தேகித்ததோ கிடையாது. ஆனால் இந்தியா எப்பொழுதும் இலங்கையின் சீனாவுடனான உறவுகளை சந்தேகக் கண்கொண்டே பார்த்து வருகிறது. இதுதான் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் சில சமயங்களில் முரண்பாடுகள் ஏற்படுவதற்குக் காரணமாகிறது.

இலங்கை பூகோள ரீதியாக இந்தியாவுக்கு மிக அருகில் (சுமார் 25 மைல்கள் தூரத்தில்) உள்ள நாடு. இலங்கையின் இரண்டு பிரதான தேசிய இனங்களான சிங்களவர்களும் தமிழர்களும் ஏதோ ஒரு வரலாற்றுக் காலகட்டத்தில் இந்தியாவின் சில பகுதிகளில் இருந்து வந்துதான் இலங்கையில் குடியேறியவர்கள் என நம்பப்படுகிறது.

அதுமாத்திரமின்றி, இலங்கையில் உள்ள பெரும்பாலான மக்களால் பின்பற்றப்படும் மதங்களான பௌத்தம், இந்து என்பனவும்கூட இந்தியாவிலிருந்தே வந்திருக்கின்றன. அதுவுமன்றி, இலங்கைத் தமிழர்கள் மொழியாலும் இந்தியாவின் தமிழகத்துடன் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். பழக்க வழக்கங்கள் கலாச்சாரம் என்பனவற்றிலும் இலங்கையர்களுக்கும் இந்தியர்களுக்குமிடையில் நிறைய ஒற்றுமைகள் உண்டு.

அதனால்தான் ‘இந்தியா எமது உறவினர்’ என்றும், ‘சீனா எமது நண்பர்’ என்றும் இலங்கைத் தலைவர்களில் சிலர் குறிப்பிடுவதுண்டு. இதில் இன்னொரு அர்த்தமும் பொதிந்துள்ளது. அதாவது, இதன் அர்த்தம் உறவினர்கள் எல்லோரும் நண்பர்களாக இருப்பார்கள் என்றோ அல்லது நண்பர்கள் எல்லோரும் உறவினர்களாக ஆகிவிடுவார்களென்றோ சொல்ல முடியாது என்பதே அது.

இந்தியா பூகோள ரீதியாக, வம்சாவழி ரீதியாக, கலாச்சார ரீதியாக, மத ரீதியாக இலங்கையுடன் பின்னிப் பிணைந்த ஒரு நாடாக இருப்பினும், வரலாறு விட்டுச் சென்ற சில பிரச்சினைகள் இரு நாடுகளுக்குமிடையில் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளன. அவை இரண்டு நாடுகளிலும் மன்னர் ஆட்சிகள் நிலவிய காலத்தில் ஆரம்பித்தவை.

அந்தப் பிரச்சினைகளில் முக்கியமானது, தமிழகத்தை ஆண்ட பலம் பொருந்திய சோழ மன்னர்கள் இலங்கையின் சில பகுதிகளைக் கைப்பற்றி நீண்டகாலம் ஆட்சி நடத்தியமையாகும். அந்தப் படையெடுப்பின் காரணமாகத்தான் இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் தமிழர்கள் வந்து குடியேறினர் என்பது இன்றும் சிங்கள மக்களில் பெரும்பாலோரின் எண்ணமாகும். இதன் காரணமாக, இந்தியா பற்றிய ஒரு அச்சவுணர்வு சிங்கள மக்களிடம் நிலவுகின்றது.

அதேநேரத்தில், இலங்கையில் ஆட்சி புரிந்த மன்னர்களுக்கிடையில் சில மோதல்கள் ஏற்பட்ட நேரங்களில் தமிழக அரசர்கள் ஏதாவது ஒரு தரப்புக்கு உதவியதும், அதேபோல, தமிழகத்தின் சேர, சோழ, பாண்டிய மன்னர்களுக்கிடையில் மோதல்கள் ஏற்பட்ட சில சந்தர்ப்பங்களில் சிங்கள மன்னர்கள் சிலர் அங்குள்ள ஏதாவதொரு தரப்புக்கு உதவியதும்கூட வரலாற்றின் ஒரு அங்கமாக இருக்கின்றது.

அது மட்டுமின்றி, சில இலங்கை மன்னர்கள் பாண்டிய நாட்டு இளவரசிகளைத் திருமணமும் செய்திருக்கிறார்கள். அந்த இளவரசிகள் வழிபாடு செய்வதற்காகவே சில பௌத்த விகாரைகளில் இந்துக் கடவுளர்களுக்கும் கோயில்கள் அமைக்கப்பட்டன.

இவ்வாறாக, புராதன இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஏற்றமும் இறக்கமுமான உறவுகள் இருந்து வந்துள்ளன.

ஆனால் நவீன காலத்தில் இலங்கையும் இந்தியாவும் பிரித்தானிய காலனித்துவவாதிகளின் ஆளுகைக்குள் ஆட்பட்டு இருந்ததால், சில புதிய பிரச்சினைகள் உருவாகின. ஒரு பக்கத்தில் இந்தியாவில் கிளர்ந்தெழுந்த தேசிய சுதந்திரப் போராட்டம் இலங்கையிலும் சுதந்திரத்தை அவாவி நின்ற தேசியத் தலைவர்களையும் மக்களையும் ஆகர்சித்தது உண்மைதான். ஆனால் அதே நேரத்தில், பிரித்தானியர் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலும், இலங்கையில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்குமிடையிலும் சில பிரச்சினைகளை திட்டமிட்டு உருவாக்கிவிட்டும் சென்றுள்ளனர்.

அதில் ஒரு பிரச்சினை, பிரித்தானியர் தாம் இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் அமைத்த தேயிலை, ரப்பர், கோப்பித் தோட்டங்களில் கூலித்தொழில் செய்வதற்காக தென்னிந்தியாவில் இருந்து மக்களைக் கொண்டு வந்தமையாகும். இந்தத் தோட்டங்களை அமைப்பதற்காக பிரித்தானியர் கண்டிய விவசாயிகளின் நிலங்களையும் பறித்தெடுத்தனர். இதன் காரணமாக சிங்கள மக்கள் மத்தியில் பிரித்தானியருக்கு எதிரான உணர்வு மட்டுமின்றி, அவர்கள் கொண்டுவந்த தென்னிந்திய மக்களுக்கெதிரான உணர்வும் உருவாகியது.இது பின்னர் இலங்கை அரசியலில் ஒரு சூடான அரசியல் பிரச்சினையாக உருவெடுத்தது. ஆனால் இலங்கை அரசியலில் ஆளுமை செலுத்திய சிறீமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் அவரது முயற்சியால் இந்தியப் பிரதமர்கள் லால்பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திராகாந்தி ஆகியோருடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் மூலம் ஓரளவு இந்தப் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டது. இறுதியில் ‘நாடற்றவர்களான’ அவர்களது பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட்டது.

பிரித்தானியர் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் உருவாக்கிய இன்னொரு பிரச்சினை. கச்சதீவு பிரச்சினையாகும். இந்தத் தீவு இந்தியாவின் தென்கோடியில் இருந்த இராமநாதபுரம் மன்னருடைய ஆட்சிக்காலத்தில் இருந்து இந்தியாவுக்குத்தான் சொந்தம் என இந்தியர்கள் உரிமை கோரி வருகின்றனர். ஆனால் பிரித்தானியாவின் விக்ரோறியா மகாராணி காலத்தில் வெளியிடப்பட்ட வரைபடம் ஒன்றில் கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானதெனக் காட்டப்பட்டுள்ளது. அதனால் இலங்கை அந்தத் தீவுக்கு உரிமை கோரியது. நல்ல வேளையாக இந்த விடயத்திலும் சிறீமாவோ பண்டாரநாயக்கவின் முயற்சியாலும் இந்தியப் பிரதமராக இருந்த இந்திராகாந்தியின் பெருந்தன்மையாலும், அவர்கள் இருவரும் செய்துகொண்ட ஒப்பந்தமொன்றின் மூலம் கச்சதீவு இலங்கைக்கு உரித்தானது.

ஆனால், தற்பொழுது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் எழுந்துள்ள பிணக்குகள் பெரும்பாலும் இந்தியாவின் அயலுறவுக் கொள்கையால் ஏற்பட்டவையாகும். காரணம், இந்தியா தனது இலங்கையுடனான உறவுகளை இருநாடுகளுக்குமிடையிலான பரஸ்பர நலன்களின் அடிப்படையில் பார்ப்பதற்குப் பதிலாக, இலங்கையுடன் சீனா கொண்டுள்ள உறவை அடிப்படையாக வைத்துப் பார்ப்பதனால்தான் இந்த வேண்டாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் எல்லைத் தகராறு சம்பந்தமாக உருவாகிய பிரச்சினை, பின்னர் இந்தியா சீனாவுடன் மோதலில் ஈடுபட்டிருந்த சோவியத் யூனியன், அமெரிக்க வல்லரசுகளுடன் கூட்டுச் சேர்ந்ததின் மூலமும், சீனாவுக்கு எதிராகப் பிரிவினைவாதக் கலகம் செய்து தீபெத்தை விட்டு ஓடி வந்த தலாய்லாமாவுக்கு இந்தியா தனது நாட்டில் அடைக்கலம் கொடுத்ததின் காரணமாகவும் பகைமையாக மாறியது.

ஆனால், இந்தியாவும் சீனாவும் 1962இல் எல்லை யுத்தத்தில் ஈடுபட்ட நாளிலிருந்து இலங்கை மிக அவதானமாக இரு நாடுகளுக்கும் இடையே (இடையில் ஜே.ஆர.ஜெயவர்த்தனவின் அமெரிக்க சார்பு ஆட்சியைத் தவிர்த்து) சமாந்திரமான கொள்கையையே கடைப்பிடித்து வருகின்றது. இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை எப்பொழுதும் 1955இல் இந்தோனேசிய நகரான பாண்டுங்கில் நடைபெற்ற ஆசிய – ஆபிரிக்க நாடுகளின் உச்சி மாநாட்டில் வகுக்கப்பட்ட பஞ்சசீலக் கொள்கைகளின் அடிப்படையிலும், 1961இல் யூகோஸ்சிலோவாக்கிய தலைநகர் பெல்கிரேட்டில் உருவான அணிசேரா இயக்கத்தின் கொள்கைகளின் அடிப்படையிலுமே இருந்து வருகிறது. இந்த இரண்டு மாநாடுகளிலும் இலங்கையும் இந்தியாவும் பங்குபற்றின.

இந்த இரண்டு மாநாடுகளிலும் எடுக்கப்பட்ட முக்கியமான தீர்மானத்தின் சாராம்சம், சுதந்திரமும் சுயாதிபத்தியமும் உள்ள வளர்முக நாடுகள் எந்தவொரு வல்லரசுக் கூட்டுகளிலும் சேராமல் இருப்பதுடன், ஒரு நாடு இன்னொரு நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடாதிருப்பதுமாகும். இலங்கை பெரும்பாலும் அதன் அடிப்படையில் செயல்பட்ட போதிலும் இந்தியா அந்தக் கொள்கைகளை மீறயே நடந்து வந்திருக்கிறது.

உதாரணமாக, இந்தியாவுக்கு சீனாவுடன் மட்டும்தான் எல்லைப் பிரச்சினை என்று இல்லை. பாகிஸ்தானுடன், நேபாளத்துடன், பூட்டானுடன், பங்களாதேசுடன், பர்மாவுடன் என பல நாடுகளுடன் இந்தியாவுக்கு எல்லைப் பிரச்சினைகள் உண்டு. (இதற்கிடையில் தனது எல்லையிலுள்ள சிக்கிம் என்ற சுதந்திர நாட்டை இராணுவம் மூலம் கைப்பற்றி தனது ஒரு மாநிலமாகவும் இந்தியா ஆக்கி வைத்திருக்கிறது.)

இந்த நிலைமைகளின் அடிப்படையில்தான் இலங்கையிலும் இந்தியா தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயல்கிறது. இலங்கை ஒரு இறமையுள்ள சுதந்திரமான நாடு என்ற போதிலும், இலங்கையைத் தனது மாநிலங்களில் ஒன்று போல வைத்திருக்கவே இந்தியா முயன்று வந்துள்ளது. இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை எப்படி இருக்க வேண்டும், இலங்கை எந்தெந்த நாடுகளுடன் உறவு வைக்க வேண்டும், இலங்கையில் எந்தெந்த நாடுகள் முதலீடு செய்யலாம் என்பன போன்ற விடயங்களையெல்லாம் இந்தியாவே தீர்மானிக்க முயல்கிறது. இதுவே இலங்கை – இந்திய உறவுகளில் விரிசல் ஏற்படக் காரணம்.

இந்தியா இலங்கையை விட பரப்பவில் 70 மடங்கு பெரிய நாடு. அது மாத்திரமின்றி, இலங்கைக்கு கூப்பிடு தூரத்தில் உள்ள ஒரு நாடு. வரலாற்று ரீதியாக இரண்டு நாடுகளும் பின்னிப் பிணைந்தவை. அதனால் இந்தியா இலங்கைக்கு சகோதர பாசத்துடன் கூடிய பெரியண்ணனாக இருக்கலாமே தவிர, ஆதிக்கம் செலுத்தும் பெரியண்ணனாக இருக்க முடியாது.

எனவே இந்தியா பஞ்சசீலக் கொள்கைகளின் அடிப்படையிலும், அணிசேராக் கொள்கையின் அடிப்படையிலும் இலங்கையின் தேசிய சுதந்திரம், சுயாதிபத்தியம், ஆட்புல ஒருமைப்பாடு என்பனவற்றை மதித்து நடப்பதே தற்போது இரு நாடுகளுக்கும் இடையில் எழுந்துள்ள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான ஒரே வழியாகும்.

Courtesy: வானவில் 122 - February 2021 

No comments:

Post a Comment

Media Release- National Peace Council of Sri Lanka

National Peace Council of Sri Lanka 12/14 Purana  Vihara Road Colombo 6  Tel:  2818344,2854127, 2819064 Tel/Fax:2819064 E Mail:   npc@sltnet...