வாடாத ‘மல்லிகை’ –எம்.எஸ். தேவகௌரி

 


ல்லிகை ஜீவா’ என எல்லோராலும் அறியப்பட்ட டொமினிக் ஜீவா, தனது 94ஆவது வயதில், ஜனவரி மாதம் 29ஆம்திகதி மாலை, கொழும்பில் காலமானார் என்பதை, அத்தனை முகப்புத்தக சுவர்களும் காட்டி நின்றன! இந்திய, புலம்பெயர் இணையத்தளங்கள், பத்திரிகைகள் பேசின! சமூகப் போராளி, பேச்சாளர், எழுத்தாளர், சஞ்சிகை ஆசிரியர், விமர்சகர், பதிப்பாளர் என எல்லா முகங்களையும் ஒருங்கே கொண்ட இலக்கிய உழைப்பாளி! வர்த்தகர்களையும் இலக்கியத்துக்குள் இழுத்துவந்த இலக்கிய விநியோகஸ்தர்! இலக்கிய உற்பத்தி என்பது ‘கற்றோர் மாட்டன்று’ என்பதை சரித்திரமாக்கிய வரலாறு எழுதி!

இனி, அவரது உடல் இந்தப் பூமியிலும் இல்லை; பூமிக்குள்ளும் (உடல் புதைக்கப்படவில்லை) இல்லை. ஆனால், மறுக்க முடியாத, மறக்க முடியாத ஒரு சக்தியாகத் துருத்திக்கொண்டு, எப்போதும் ஈழத்து இலக்கிய வரலாற்றில் நிலைத்திருப்பார் என்பதுதான் உண்மை.

‘சமூகத்தின் நன்மைக்காகவும் ஆரோக்கியத்துக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் தங்களை அர்ப்பணித்து, உழைத்துப் பிழைத்துவரும் பாமர மக்களின் ஆசாபாசங்கள், வாழ்க்கை முறைகள், அநுபவங்கள் எல்லாம், சரித்திர வரலாறு அடைப்புக்குறிக்குள் அடங்கமுடியாதவைகளா?’ இதுதான், ஜீவா அவர்களின் இளமைக்கால சிந்தனைப் புள்ளியாக இருந்தது. இதை அவர் தனது சுயசரிதையான ‘எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சிந்தனைப்புள்ளி, யாழ்ப்பாண சமூகத்திலும் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் சிக்கலுக்குரியதும் ஒவ்வாத சிந்தனையுமாகும். ஏனெனில், யாழ்ப்பாணச் சமூகம், சாதிய கட்டமைப்பில் இறுக்கமாக இயங்கிய சமூகமாகும். கல்வியும் அதனால் பெற்ற செல்வமும் உயர்வர்க்க நிலவுடைமையாளர்களிடம் இருந்தது. இலக்கியம், மொழி என்பன பண்டிதர்களின்பால் சிறைப்பட்டிருந்தன. அதுவே, மொழியின் தூய்மை என பார்க்கப்பட்ட காலம் அது. சாமானிய மக்களின் வாழ்க்கையை, சிந்தனைகளைப் பொதுவெளிக்கு கொண்டுவருதல் என்பது குதிரைக்கொம்பாக இருந்தது. நவீன ஊடகங்கள் வரும்வரைக்கும், தகவல்களைப் பொதுவெளியில் வைப்பதில், பிரதான ஊடகங்கள் எவ்வாறு தமது அதிகாரத்தைச் செலுத்தினவோ, அதேபோல் சாமானியர்களின் சிந்தனைகளைத் தணிக்கை அல்லது, தடை செய்யக்கூடிய வல்லமையைப் பண்டிதர்களும் உயர் வர்க்கத்தினரும் கொண்டிருந்தனர்.


இந்தச் சூழலில்தான் டொமினிக் ஜீவா, சாமானியர்கள் சார்பில் போராட்டத்தை ஆரம்பித்தார். அந்நேரம் நடுத்தர வர்க்க நிலவுடைமையாளர்களின் எழுச்சியும் ஆரம்பமானது. பொதுவுடைக் கருத்துகள், இளைஞர்களிடையே தீவிரமாகப் பரவிய காலம் அது. ஜீவாவும் அந்தக் கொள்கையில் ஈர்க்கப்பட்டு சமூகப் போராளியானார்.

அக்காலத்தில், முற்போக்குக் கருத்துகள், இலங்கைக்கான தேசிய இலக்கியம் என்ற எண்ணப்பாடு என்பன முனைப்புற்றன. அதற்காக முற்போக்கு எண்ணம் கொண்ட ஈழத்து எழுத்தாளர்களை ஒன்று திரட்டும் புத்திஜீவிகளின் முயற்சியாக 1954இல் ‘முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’ உருவாகியிருந்தது. ஜீவா, அதில் முக்கிய பங்காளர் ஆனார். அந்நேரம் பிரசுர களமாக, ‘ஈழகேசரி’ பத்திரிகை, ‘மறுமலர்ச்சி’ சஞ்சிகை என்பன இருந்தன. ஆனாலும், போதாமை இருந்தது. டொமினிக் ஜீவாவின் கதைகளை இந்திய சஞ்சிகைகள் பிரசுரித்தன. குறிப்பாக, 1955களில் ‘சரஸ்வதி’ சஞ்சிகை இவரின் கதைகளைப் பிரசுரித்தது.

இலங்கையில் ஜீவாவின் தனிச் சிந்தனை, கூட்டாகிப் பொதுவெளிக்கு வந்தபோது, அவரையும் அவர் எழுத்துகளையும் எதிர்த்தவர்கள் பலர். ஆனாலும் முற்போக்கு அணியில் இருந்த பலரும், அவருக்குப் பக்கபலமாகச் செயற்பட்டனர்.

1960இல் இவரது சிறகதைத் தொகுப்பு ‘தண்ணீரும் கண்ணீரும்’ சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது. இந்தச் சூழலில் தமக்கென நிலையான ஒரு பிரசுர களத்தை உருவாக்கும் நோக்கில் ‘மல்லிகை’ உருவாக்கப்பட்டது(1966). இது முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கொள்கை பரப்பும் ஏடாகவும் செயற்பட்டது. அது பற்றி அவர் குறிப்பிடுகையில், ‘எமது மண்வாசனையுடன் யதார்த்த இலக்கியம் தோன்றிய போது, அதற்குத் தளம் கொடுக்க சஞ்சிகைகள் இருக்கவில்லை. இந்திய சஞ்சிகைகளும் எமது இலக்கியத்தை முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ளாது புறக்கணித்தன. இந்நிலையில் எமக்கென்றொரு சஞ்சிகையின் அவசியத்தை உணர்ந்து, அந்த வழி மல்லிகையைத் தோற்றுவித்தேன். எம்மண்ணின் ஆக்க கர்த்தாக்களை அறிமுகப்படுத்துவதும் ஊக்குவிப்பதும் அவசியமாக இருந்தது. அதற்கு ஒரு பிரசுரக்களம் தேவைப்பட்டது. இதன் வழியே மல்லிகை மலர்ந்தது’ என்கிறார்.

சாமானிய தொழிலாள வர்க்கத்தின் பாடுகள், அவர்களின் பேச்சு மொழியினூடாக எழுத்துவடிவம் பெற்று, ‘ஜோசப் சலூனில்’ இருந்து இலக்கிய ஏடாக வெளிவந்தபோது, சமூக அதிர்வு ஏற்படத்தான் செய்தது. அதை வாசகர்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பது எப்படி? அதையும் டொமினிக் ஜீவாவே செய்தார். ஒவ்வொரு நபர்களையும் தேடித் தேடி, மல்லிகையைக் கொடுப்பார். பணத்துக்காகக் காத்து நிற்கமாட்டார். தான் எழுதும் விடயங்கள், மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதே, அவரது அவா!

இந்தச் சூழலில்தான், இலக்கியம் இவருக்குத் தொழிலாகியது; இவரது வாழ்வு இலக்கியமாகியது. ஈழத்து இலக்கிய சூழலில், ‘ஈழத்தின் இலக்கியம்’ (மண்வாசனை) ‘முற்போக்கு இலக்கியம்’ எல்லாம் அக்குவேறு ஆணிவேறாக ஆராயப்பட்டன.

இந்தப் பேச்சு மொழி, ‘இழிசனர் வழக்கு’ என்றும், ‘இலக்கிய அழகியல்’ இல்லாத பிரசாரக் கதைகள் என்றும் விமர்சனங்கள் வெளிப்பட, அவற்றையும் தனது மல்லிகையில் பிரசுரித்து,“ ‘இழிசனர் வழக்கு’ என்று நீங்கள் சொல்வதுதான் சாமானிய மக்களின் வாழ்வு” என்றும் “‘இலக்கிய அழகியல்’ என்று சொல்வது, இலக்கியம் இலக்கியத்துக்காக அல்ல; இலக்கியம் மக்களுக்காக; அது மக்களின் இலக்கியம்” என்றும் விவாதிக்க வைத்தார்.

இந்த விவாதங்கள் எல்லாம், எழுத்தாளர்களாலும் பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் சிவத்தம்பி எனப் பல்கலைக்கழகம் சார்ந்தவர்களாலும் முன்னெடுக்கப்பட்டன. அவற்றைக் கருத்தாளத்துடனும் சமூகப் பொறுப்புடனும் ‘மல்லிகை ஜீவா’ பிரசுரித்து, ஒரு காலகட்டத்தின் இலக்கியப் போக்குகளையும் விமர்சனப் போக்குகளையும் வரலாறாக்கினார்.

சாமானிய மக்களின் வாழ்வியலும் இலக்கியம்தான் என்று நிறுவுவதற்கு, ஜீவா, தன் வாழ்நாள் முழுவதிலும் இலக்கிய ஊழியம் செய்தார். ஏனெனில், இலக்கியத்தை உற்பத்தி செய்தல், அதைச் சந்தைப்படுத்தல், அதனூடாக இலக்கியம் பற்றிய புதிய கருத்துருவாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தல், மீண்டும் அதைப் பேசு பொருளாக்கி, இலக்கிய விமர்சனமாக்குதல் என, மனித எண்ணங்களை மடைமாற்றம் செய்யும் பெருந்தொழில் இது. இதை ‘மல்லிகை’யினூடாக வெற்றிகரமாகச் செய்தார். அதற்கு அவரது, கொள்கைப் பற்றும் விடாமுயற்சியும் அசுர உழைப்பும் தான் காரணங்கள்.

பாடத்திட்டக் கல்வியில் ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்திருந்த டொமினிக் ஜீவாவைத் தேடி, ‘80களில் ஈழத்து விமர்சனப் போக்கு எப்படி இருந்தது’ என்று ஆய்வு செய்வதற்காக, 1991இல் நான், பல்கலைக்கழக மாணவியாக இருந்தபோது, ஜோசப் சலூனுக்குள் சென்றேன். அப்போது அது அச்சுக்கூடமாக இருந்தது. வாசலில் வெள்ளை வேட்டியும் நஷனலுமாக நின்றிருந்தவர், “வாங்கோ என்ன விசயம்” என்று கேட்டார்? விடயம் சொல்லப்பட்டது. “எனக்குத் தெரியும், பல்கலைக்கழகம் ஒரு நாள் என்னைத்தேடி வரும் எண்டு” சொல்லி, புன்முறுவல் பூத்தார்.

ஆனாலும், அன்று இலகுவாக எல்லா நூல்களும் எனக்குப் பார்க்கக் கிடைக்கவில்லை. இன்று, ஒரு சேர எல்லா ‘மல்லிகை’களையும் நூலகத்தில் (https://noolaham.net/) பார்வையிட முடியும். அன்று, இன்னொரு பிரபலமான எழுத்தாளராக இருந்த ‘நாவற்குழியூர்’ நடராஜனை சந்திக்கச் சொன்னார். 60 பக்கங்களைக் கொண்ட 100 புத்தகங்களை அவரது வீட்டுநூலகத்தில் இருந்தே, முழுமையாக வாசித்து, 1992இல் பட்டப்படிப்பில் ஒரு பகுதியாக, ‘80களில் ஈழத்து இலக்கிய விமர்சனங்கள்’ சமர்ப்பிக்கப்பட்து.

1995இல் என்னை, ஒரு பத்திரிகையாளராகக் கொழும்பில் சந்தித்த டொமினிக் ஜீவா, “நீங்கள் தானே ‘மல்லிகை’யை ஆய்வுசெய்தீர்கள். அதைப் புத்தகமாகப் போடவேண்டும்” என்றார். அதன்படி மல்லிகைப்பந்தல் வெளியீடாக 1996இல் ‘எண்பதுகளில் மல்லிகை விமர்சனங்கள்’ என்று அந்த ஆய்வு, நூலாகியது.

‘நதி ஓடிக்கொண்டே இருக்கும் அப்பப்போ வருவோர் போவோர் கால்நனைப்பர்’ என்பதுபோல் மல்லிகை மாதாந்தம் வந்துகொண்டே இருந்தது. பலரும் தமது எழுத்துகளுடன் வந்து போய்க்கொண்டிருந்தனர். அது கொண்டிருந்த அம்சங்கள் எந்தச் சலிப்பையும் ஏற்படுத்தாத துரித வாசிப்புக்கானதாக இருந்தது.பல்திறப்பட்டவர்களிடம் இருந்தும் கட்டுரைகளை வாங்கி, அதை நேர்த்தியாகக் கருத்து, மொழி, எழுத்து எனக் கூறியது கூறல் இல்லாமல் வெளியிட்டார் ஆசிரியர். ஆக்க இலக்கியங்கள் விமர்சனக் கொள்கைகள் என மொழிபெயர்புகளும் இடம்பிடித்தன.

ஒரு மாதாந்த சஞ்சிகையைத் தனியாளாக 48 வருடங்கள் வெளிக்கொண்டு வருவதென்பது, சாதாரண இலக்கிய தாகம் கொண்டவராலோ பணபலம் கொண்டவராலோ முடியாததொன்று. இந்த அசாத்திய மனிதனால் முடிந்திருக்கிறது.“இதனால், இவரிடம் இருந்து வரவேண்டிய சிறுகதைகள் வரவில்லை; ஒரு நல்ல சிறுகதை எழுத்தாளனை இழந்துவிட்டோம்” எனப் பலரும் வேதனை கொள்வதுண்டு.

ஆனால், இன்று இந்த நவீன ஊடகங்களின் வருகைக்கு பின்னர், உள்ளதை உள்ளபடி சொல்லலே இலக்கியமாகிறது போல் உள்ளது. கதைபுனையத் தேவையில்லை. சமூக ஊடகப் பதிவுகளும் முகப்பக்க சம்பவங்களும் அதையே அபரிமிதமாகச் செய்கின்றன. இதை அவர், அன்றே செய்தார்.

இன்று, இணையத்தளத்தைச் சொடுக்கினால் அவர் பற்றிய அனைத்துத் தகவல்களும் கொட்டும். அந்தளவுக்குத் தனது வரலாற்றையும் அதனூடு ஈழத்து இலக்கிய வரலாற்றையும் எழுதிச்சென்றுள்ளார்.

சுறுசுறுப்பு, படபடவென சொல்லாடல், உணர்ச்சி வேகத்துடனான கருத்துகள் என மக்களுக்காக வாழ்ந்து, மக்களுக்காக உழைத்து, ‘நீங்கள் எதுவும் எனக்குத் திருப்பித் தரதேவையில்லை…உங்களிடம் நான் எந்தக் கடனும் படவில்லை..உங்கள் இறுதி மரியாதையையும் நான் எதிர்பார்க்கவில்லை….’ என சொல்லாமல் சொல்லி, மக்களின் கண்களில் படாமலே (பாதுகாப்பு காரணங்களுக்காக சுகாதார முறைப்படி அவரது உடல் தகனம் செய்யப்பட்டது) சென்று மறைந்திருக்கிறார் டொமினிக் ஜீவா. ஐயா..நீர் ஓர்மம் கொண்ட இலக்கிய அகங்காரம்கொண்ட எழுத்தரசன்தான். சென்று வாருங்கள்!!!

தமிழ்மிரர்
2021.02.02

Source: Chakkaram.com

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...