இலங்கைத் தமிழின் முற்போக்குக் குரல் - சண்முகம் சுப்பிரமணியம்

 


dominic-jeeva


இலங்கையின் புகழ்பெற்ற முற்போக்கு எழுத்தாளரும், இடதுசாரிச் சிந்தனையாளரும், இதழாளரும், வெளியீட்டாளருமான டொமினிக் ஜீவா, ஜனவரி 28 அன்று தனது 94-வது வயதில் கொழும்பில் காலமானார்.

1940-களில் தனது எழுத்துப் பணியை ஆரம்பித்த ஜீவா, இறுதி சில ஆண்டுகள் முதுமை காரணமாக இயங்க முடியாமல் போனதைத் தவிர, தன் வாழ்நாள் முழுவதும் ஓய்வொழிச்சல் இன்றி எழுதியவர். இலங்கை இலக்கியப் பரப்பின் தவிர்க்க முடியாத ஆளுமை அவர். 1960-ல் வெளிவந்த டொமினிக் ஜீவாவின் முதல் சிறுகதைத் தொகுதியான ‘தண்ணீரும் கண்ணீரும்'தான் இலங்கை சாகித்திய மண்டல விருதைப் பெற்ற முதல் தமிழ் நூல்.

1950-களில் ஆரம்பிக்கப்பட்ட ‘இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க’த்தின் செயல்பாடுகளில் ஆரம்பத்திலிருந்தே ஈடுபாடு காட்டிவந்த ஜீவா, அதன் வளர்ச்சிக்கான சகல முன்முயற்சிகளிலும் தவறாது பங்குபற்றி உழைத்துள்ளார்.
ஆரம்பத்தில் தினசரிகளிலும், சிறு சஞ்சிகைகளிலும் சிறுகதைகள் எழுதுவதுடன், தனது கதைகளைத் தொகுப்பாகவும் வெளியிட்டுவந்த ஜீவா, 1960-களின் பிற்பகுதியில் ‘மல்லிகை' என்ற பெயரில் கலை இலக்கிய மாத இதழ் ஒன்றை வெளியிட ஆரம்பித்தார். அந்த சஞ்சிகை சுமார் 46 ஆண்டு காலம் தொடர்ச்சியாக வெளிவந்தது. ஈழத்தில் வேறு எந்தவொரு சஞ்சிகையும் இவ்வளவு நீண்ட காலம் தொடர்ச்சியாக வெளிவந்தது கிடையாது எனத் துணிந்து கூறலாம்.






அக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த பெரும்பாலான சஞ்சிகைகள் அப்பிரதேசத்தை மையப்படுத்திய எழுத்தாளர்களுக்கே கூடுதலாகக் களம் அமைத்துக் கொடுத்துக்கொண்டிருந்த சூழலில், டொமினிக் ஜீவாவின் ‘மல்லிகை’யே கிழக்கிலங்கைத் தமிழ் எழுத்தாளர்களுக்கும், தென்னிலங்கை, கிழக்கிலங்கை, மேற்கிலங்கை போன்ற பகுதிகளில் வாழ்ந்த முஸ்லிம் எழுத்தாளர்களுக்கும், மலையகப் பகுதிகளில் வாழ்ந்த இந்திய வம்சாவழித் தமிழ் எழுத்தாளர்களுக்கும் களம் அமைத்துக் கொடுத்தது.

‘மல்லிகை’யில் பல புதிய எழுத்தாளர்கள் தமது முதல் படைப்பை எழுதியிருக்கிறார்கள். அவர்களை ஜீவா ஊக்கப்படுத்தியது மட்டுமின்றி, அவர்களது படைப்புகளைத் தொகுத்து, தான் ஆரம்பித்த ‘மல்லிகைப் பந்தல்' என்ற நிறுவனத்தின் வெளியீடுகளாகவும் வெளிக்கொண்டுவந்திருக்கிறார். ‘மல்லிகை’யில் படைப்பிலக்கியம் மட்டுமின்றி, பேராசிரியர்கள் க.கைலாசபதி, கா.சிவத்தம்பி உட்பட பல இலக்கிய விமர்சகர்களின் பெறுமதி வாய்ந்த ஆய்வுக் கட்டுரைகளைப் பிரசுரித்து, ஈழத்து தமிழ் இலக்கியத்துக்கான செல்நெறிக்கும் டொமினிக் ஜீவா வழிவகுத்திருக்கிறார். ‘மல்லிகை’யின் ஒவ்வொரு இதழின் அட்டையிலும் முக்கியமான ஆளுமைகளின் புகைப்படங்களை வெளியிட்டு, அவர்கள் பற்றிய கட்டுரைகளையும் பிரசுரித்து, அந்த ஆளுமைகளைச் சமூகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய முன்னுதாரண இதழ் ஆசிரியராகவும் ஜீவா திகழ்ந்திருக்கிறார்.

ஆரம்ப காலங்களில் ‘மல்லிகை’ இதழின் வெளியீட்டுச் செலவை ஈடுசெய்வதற்காக அவர் பட்ட துன்பங்களையும், ‘மல்லிகை’ இதழை விற்பதற்காக அவர் யாழ்ப்பாணத்தின் மூலைமுடுக்கெல்லாம் கால்நடையாகவும், துவிச்சக்கர வண்டியிலும் அலைந்து திரிந்ததையும் ஈழத்துத் தமிழ் இலக்கியம் ஒருபோதும் மறந்துவிட முடியாது.

பல தடவை தமிழகத்துக்கு வந்திருக்கும் டொமினிக் ஜீவா, அங்குள்ள பலதரப்பட்ட எழுத்தாளர்களுடனும், பத்திரிகையாளர்களுடனும், வெளியீட்டாளர்களுடனும் நல்லுறவைப் பேணிவந்துள்ளார்.

சோவியத் எழுத்தாளர்களின் அழைப்பை ஏற்று சோவியத் யூனியனுக்கும் சென்றுவந்தார். அதேபோல, இலக்கியச் சந்திப்புக்காக இரு மாதங்கள் பல ஐரோப்பிய நாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

பெரும் படிப்பு எதுவும் இல்லாத ஜீவா, ஒரு சாதாரண தொழிலாளியாகத் தனது வாழ்வை ஆரம்பித்து, அனுபவத்தின் மூலம் தன்னைச் செதுக்கிக்கொண்டவர். அவரது இலக்கிய ஆளுமையைக் கௌரவித்து, ஒருமுறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அவருக்கு ‘டாக்டர்' பட்டம் அளிக்க முன்வந்தபோது, அதைத் தன்னடக்கத்துடன் ஏற்க மறுத்து உயர்ந்து நின்றவர்.

ஜீவாவின் வெற்றியின் ரகசியம் அவர் தனது படைப்புகளில் ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட மக்களையும், இதர விளிம்புநிலை மக்களையும் கதாநாயகர்களாகப் படைத்தமையே. யாழ்ப்பாண மேட்டுக்குடி பழமைவாதிகளின் பார்வையில் ஜீவா போன்றவர்களின் இலக்கியம் ‘இழிசனர் இலக்கிய’மாகவே இருந்தது. அதே இலக்கியம்தான் தற்போது அவர்களின் பெருமைக்குரிய ஒன்றாகவும் இருக்கிறது.

- சண்முகம் சுப்பிரமணியம், கனடாவாழ் எழுத்தாளர்.


Couresy: thehindu.tamil/news. 31/01/2021

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...