இதுதான் ‘சம்பந்தன் ஜனநாயகம்’ போலும்! -சயந்தன்


டந்த வருடம் ஒக்ரோபர் 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமர் ஆக்கியதும், அவருக்கு நாடாளுமன்றத்தில் போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில் திரும்பவும் ரணிலை பிரதமராக்கியதும் முடிந்துபோன கதை.

இந்த அரசியல் குழப்பங்களின் போது ரணிலை மீண்டும் பிரதமராக்குவதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முக்கியமானதும் தீவிரமானதுமான ஒரு பாத்திரத்தை வகித்தது. குறிப்பாக சம்பந்தனும் அவரது சகாவான சுமந்திரனும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர்கள் போலவே செயற்பட்டனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்களின் கையெழுத்து அடங்கிய ஆதரவுக் கடிதம் இல்லாதுவிட்டால் ரணில் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் மீண்டும் அமைந்திருக்க வாய்ப்பே இருந்திருக்காது.ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்த நரித்தனமான வேலைகளால் மறுபக்கத்தில் சம்பந்தன் வகித்து வந்த போலித்தனமான எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழக்க வேண்டி வந்துவிட்டது. காரணம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஐ.தே.கவுடனான தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிவிட்டதால், அவர்களது 98 உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டனர். எனவே இயல்பாகவே 14 உறுப்பினர்களிடம் இருந்த எதிர்க்கட்சிப் பதவி 98 பேர் அடங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடம் போய்விட்டது. ஏற்கெனவே அரசியல் குழப்பங்களின் போது நாடாளுமன்ற நெறிமுறைகளை மீறி பக்கச் சார்பாக ஐ.தே.கவுக்கு ஆதரவாகச் செயற்பட்ட சபாநாயகர் கருஜெயசூரிய தன்மீது உள்ள கறையைப் போக்குவதற்காக மகிந்த ராஜபக்சதான் எதிர்க்கட்சித் தலைவர் என்று அறிவித்தும் விட்டார்.

ஆனால் பதவி சுகத்தை விட மனம் இல்லாத சம்பந்தனும் அவரது சீடப்பிள்ளை சுமந்திரனும் தாம்தான் இன்னமும் எதிர்க்கட்சித் தலைவர் என்று சொல்லிக் கொண்டு, நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தையும், வெளியில் உள்ள காரியாலயத்தையும், எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தையும் ஆக்கிரமித்து வைத்திருந்தனர். இத்தகைய ஒரு சின்னத்தனமாக செயல்பாடு அ.அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கூட நடைபெறவில்லை.

இதில் வேடிக்கை என்னவென்றால், தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவி பறிபோனதும், இது சிங்களப் பேரினவாதம் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் தொடர்ச்சி என சம்பந்தன் நாக்கூசாமல் புலம்பினதுதான். ஏண்ணிக்கையின் அடிப்படையில் நியமிக்கப்படும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கும் சிங்களப் பேரினவாதத்துக்கும் என்ன தொடர்பு என்று விளங்கவில்லை.

ரணிலுக்கு பெரும்பான்மை இருக்க பெரும்பான்மை இல்லாத மகிந்தவை பிரதமராக்கியது ஜனநாயக விரோதம் என்று கூப்பாடு போட்ட சம்பந்தனும் அவரது சகாக்களும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடம் பெரும்பான்மை இருக்க அதற்குக் கிட்டவும் நெருங்க முடியாத தமக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்படவில்லை எனக் கூப்பாடு போடுவதும், அதற்கு சிங்களப் பேரினவாதத்தை துணைக்கு இழுப்பதும் என்ன வகையான ஜனநாயகம் என்று தெரியவில்லை.
இப்படியான ஜனநாயத்துக்கு இனிமேல் “சம்பந்தன் ஜனநாயகம்” எனப் பெயர் வைத்து அழைத்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

No comments:

Post a Comment

61 ஆண்டுகளுக்குப் பிறகு ஒப்படைக்கப்பட்ட லுமும்பாவின் பல்- இந்து குணசேகர்

   Courtesy: Wikipedia  பெல்ஜியத்தால் மிகக் கொடூரமாக கொல்லப்பட்ட கொங்கோவின் விடுதலை நாயகன் பற்றிஸ் லுமும்பாவின் (Patrice Lulumba ) ‘பல்’ 61 ...