Saturday, 9 February 2019

தமிழ் தேசியக் கூட்டமைக்குள் அதிகரிக்கும் முட்டி மோதல்கள்! -சுப்பராயன்


மிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் நாளுக்குநாள் உள் முரண்பாடுகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இது சம்பந்தமான பிரதிபலிப்புகளை அண்மைக் காலத்தில் மேலும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

கூட்டமைப்புக்குள் முரண்பாடு என்பது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. அதற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. ஆனால் முன்னர் அது கூட்டமைப்புக்குள் உள்ள சிலரின் சுயநல நோக்கங்களால் வெளித் தெரியாமல் அமுக்கி வைக்கப்பட்டிருந்தது.
முதலாவதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட நோக்கமும் விதமுமே பிழையான அடிப்படையைக் கொண்டவை.

புலிகள் கொடிகட்டிப் பறந்த காலத்தில் அவர்கள் எவ்வளவுதான் இராணுவ வெற்றிகளைக் குவித்த போதும், அவர்களால் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற முடியவில்லை. அவர்களை இலங்கை – இந்திய அரசாங்கங்கள் மட்டுமின்றி, பல சர்வதேச நாடுகளும் குறிப்பாக மேற்கு நாடுகள் பயங்கரவாத இயக்கமாக முத்திரை குத்தித் தடை செய்து வைத்திருந்தன.


அதனால் அவர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் பெறுவதற்கு ஜனநாயக ரீதியாகத் தோற்றமளித்த ஒரு முன்னணி அரசியல் அமைப்புத் தேவையாகவிருந்தது. அந்த நோக்கத்துக்காகவே அகிம்சை பேசி வந்த தமிழரசுக் கட்சியுடன் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று ஆயதக் குழுக்களையும் சேர்த்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் அமைப்பொன்றை புலிகள் உருவாக்கினார்கள்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியமைக்கு புலிகளுக்கு இன்னொரு நோக்கமும் இருந்தது. தமக்கென ஒரு அமைப்பு இல்லாவிட்டால், நடைபெறும் தேர்தல்களில் ஈ.பி.டி.பியும், சில தென்னிலங்கைக் கட்சிகளும் வடக்கு கிழக்கில்; போட்டியிட்டு வெற்றிபெறக்கூடிய சூழலும் இருந்தது. எனவே அதைத் தடுப்பதானாலும் அவர்களுக்கு ஒரு போலி ஜனநாயக அமைப்பு தேவையாகவிருந்தது.

ஆனால் புலிகள் என்னதான் தம்மை ஜனநாயகவாதிகளாகக் காட்டிக்கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியிருந்தாலும் 2004ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மற்றையவர்களைப் போட்டியிட முடியாதபடி வன்முறையைப் பாவித்துத் தடுத்ததின் மூலமும், கள்ள வாக்குகளை பெருமளவில் போட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை வெற்றி பெற வைத்ததின் மூலமும், அவர்களது போலி ஜனநாயகம் அம்பலத்துக்கு வந்தது.

அவர்களது இந்த ஜனநாயக விரோத மோசடியை தேர்தல் கண்காணிப்புக்கு என வந்திருந்த ஜரோப்பிய யூனியன் தேர்தல் கண்காணிப்புக் குழு பட்டவர்ததனமாகவும் பகிரங்கமாகவும் வெளி உலகிற்கு அம்பலப்படுத்தியது

புலிகள் தமது தேவையின் பொருட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியிருந்தாலும், அதற்கென எவ்விதமான சட்ட திட்டங்களையும், ஸ்தாபன அமைப்பு ஒழுங்குமுறைகளையும் அவர்கள் வகுத்து வைக்கவில்லை. அவர்களது ஆணையின் கீழ் நான்கு இயக்கங்களும் சமமாகவே நடத்தப்பட்டன. ஆனால் 2009இல் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் நிலைமை தலைகீழாக மாறியது. ‘பூனை இல்லாத வீட்டில் எலிகளுக்கு கொண்டாட்டம்’ என்பது போல, கூட்டமைப்புக்குள் இருந்த நான்கு கட்சிகளும் தாம்தாம் நினைத்தபடி நடக்கத் தலைப்பட்டனர். இருந்தாலும் தமிழரசுக் கட்சியியே இவற்றுள் பெரியண்ணன் போல் நடக்கக்கூடிய தகுதியைப் பெற்றிருந்தது.

தமிழரசுக் கட்சி அவ்வாறு நடந்து கொள்வதற்குக் காரணங்கள் இருந்தன. முதலாவது காரணம், கூட்டமைப்பில் இணைந்திருந்த ஏனைய அமைப்புகளான புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். என்பன ஆயுதப் போராட்டத்துக்கூடாக வளர்ந்து, பின்னர் 1987இல் செய்து கொள்ளப்பட்ட இந்திய – இலங்கை உடன்படிக்கையைத் தொடர்ந்து நாடாளுமன்ற அரசியலுக்கு வந்தவை. ஆனால் தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரை அது தோற்றம் பெற்ற காலத்திலிருந்து ‘அகிம்சை’ பேசி வளர்ந்த கட்சியாகும். (தமிழரசுக் கட்சியும் அதன் தலைமையில் உருவான தமிழர் விடுதலைக் கூட்டணியும்தான் வீர வசனம் பேசி தமிழ் இளைஞர்களை ஆயுதப் போராட்டப் பாதையில் தூண்டிவிட்டவர்கள் என்பது தனியாக ஆராயப்பட வேண்டிய விடயம்)

இரண்டாவது காரணம், தமிழ் தேசியக் கூட்டமைப்பில் நான்கு கட்சிகள் இணைந்திருந்தாலும் அவ்வமைப்பு தனியொரு கட்சியாக தேர்தல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை. அதனால் அது உருவான காலத்திலிருந்து நடைபெற்ற எல்லாத் தேர்தல்களிலும் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்திலேயே போட்டியிட்டு வந்திருக்கிறது. அதுவும் தமிழரசுக் கட்சி மற்றைய கட்சிகள் மீது சட்டாம்பிள்ளைத்தனம் செய்வதற்கு ஏதுவாக அமைந்துவிட்டது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை தனியொரு கட்சியாக தேர்தல்கள் திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும் என ஏனைய பங்காளிக் கட்சிகள் தொடர்ச்சியாகக் கோரி வந்த போதிலும் தமிழரசுத் தலைமை அதை சாதுரியமாகத் தட்டிக் கழித்து வந்தது தனது பிடியைக் கூட்டமைப்பில் வைத்திருப்பதற்காகவே.

தமிழரசுக் கட்சியின் எதேச்சாதிகாரப் போக்கால் ஏனைய கட்சிகள் அதிருப்தி அடைந்திருந்தாலும், சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப். மட்டும் முரண்டு கொண்டு கூட்டமைப்பை விட்டு வெளியேறியுள்ளது. கூட்டமைப்புக்குள் உள்ள கட்சிகளிடையே அமைப்பு ரீதியிலான மோதல்கள் ஒருபுறமிருக்க, அரசியல் ரீதியிலான முரண்பாடுகளும் அண்மைக்காலத்தில் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, 2015இல் ‘நல்லாட்சி’ பதவிக்கு வருவதற்கு கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியதுடன், அந்த அரசாங்கத்தை எதிர்க்கட்சிப் பதவியையும் வைத்துக்கொண்டு தொடர்ச்சியாக ஆதரித்தும் வந்துள்ளது. குறிப்பாக தமிழரசுக் கட்சித் தலைமையில் இருக்கும் சம்பந்தன், சுமந்திரன் போன்றோரே அரசை ஆதரிப்பதில் முனைப்பாக இருந்ததால், மற்றைய கட்சிகள் அதிருப்தி அடைந்துள்ளன. அதுமட்டுமின்றி, மக்களும் கூட்டமைப்பின் போக்கை ஏற்கவில்லை என்பதை 2018 பெப்ருவரி 10இல் நடைபெற்ற தேர்தலின் போது கூட்டமைக்கு ஏற்பட்ட வாக்கு வங்கி வீழ்ச்சி எடுத்துக் காட்டியது.

தவிர, கடந்த வருடம் ஒக்ரோபர் 26ஆம் திகதி இலங்கையில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையின் போது, சம்பந்தனும், சுமந்திரனும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாக வெளிப்படையாகச் செயல்பட்டதுடன், ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்குவதற்காக கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துகளையும் (ஓரளவு பலவந்தமாக) பெற்றும் கொடுத்தனர்.

தமிழரசுக் கட்சித் தலைமையின் இத்தகைய போக்குகளால் அக்கட்சிக்கும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கும் இடையில் மோதல் அதிகரித்துள்ளது மட்டுமின்றி, தமிழரசுக் கட்சிக்குள்ளும் முரண்பாடுகள் அதிகரித்துள்ளன. அண்மையில் நிகழ்ந்த சம்பவங்கள் இதற்குச் சான்று.

எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்சவை நியமித்த பின்னர், சம்பந்தனும் சுமந்திரனும் தாம்தான் எதிர்க்கட்சியினர் என தொடர்ச்சியாக விதண்டாவாதம் புரிந்து வந்தனர். இந்த நிலைமையில் தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ தலைவரான மாவை சேனாதிராசா, எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சண்டையிடாது என்றும், நீதிமன்றம் செல்லாது என்றும் பகிரங்கமாக அறிவித்தார். மாவையின் இந்த அறிவிப்பு சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் கொடுத்த அடியாகவே கருதப்படுகிறது.

அதேபோல, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட்டின் தலைவர் சித்தார்த்தன், நாடாளுமன்ற நெறிமுறைகளின்படி எதிர்க்கட்சித் தலைவர் பதவி அதிக ஆசனங்களைக் கொண்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த மகிந்தவுக்கே உரியது என, தமிழரசுத் தலைமைக்கு இன்னொரு அடியைக் கொடுத்துள்ளார்.
அதே நேரத்தில், கூட்டமைப்பின் இன்னொரு பங்காளிக் கட்சியான ரெலோ இந்த விவகாரத்தில் கருத்து எதனையும் கூறாது மௌனமாக இருப்பதின் மூலம் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக இல்லை என்பது தெளிவாகிறது.

இது ஒரு புறமிருக்க, சுமந்திரன் புலிகளுக்கு எதிராகத் தொடங்கியுள்ள பிரச்சாரமும் தமிழரசுக் கட்சி அணிகளிடையே குழப்பத்தை உருவாக்கிவிட்டுள்ளது. குறிப்பாக புலிகளின் தீவிர ஆதரவாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கொதித்துப் போயிருக்கிறார்.
மற்றொரு பக்கத்தில், புலிகள் சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு தடையாக இருந்தனர் என சுமந்திரன் ஒரு குற்றச்சாட்டுக் குண்டைத் தூக்கி எறிய, சுமந்திரனின் கூற்று தவறு, புலிகள் சமாதானத் தீர்வுக்கு ஆதரவாகவே செயல்பட்டனர் என தமிழரசுக் கட்சியின் நீண்டகால உறுப்பினரான சி.வி.கே.சிவஞானம் ஊடக மாநாடு கூட்டித் தெரிவித்து, சுமந்திரன் மீது பதில் குண்டொன்றை வீசியிருக்கிறார். இது போன்ற எதிரும் புதிருமான அறிக்கைப் போர்களை எதிர்காலத்தில், குறிப்பாக தேர்தல் நெருங்கும் வேளையில் காணக்கூடியதாக இருக்கும்.

எப்படிப் பார்த்தாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு, குறிப்பாக தமிழரசுக் கட்சிக்கு ‘சனியன்’ பிடித்துள்ளது என்பதையும், அதனால் அதன் எதிர்காலம் மங்குதசையில் உள்ளது என்பதும் தெளிவாகக் காணக்கூடியதாக இருக்கின்றது. அந்த நிலைமையைச் சிருஸ்டித்த பெருமை சம்பந்தன், சுமந்திரன் இருவருக்குமே உரியது.மூலம் :வானவில் இதழ் 97, ஜனவரி 25, 2019


No comments:

Post a Comment

UK media, MPs unveil latest Assange deception

≡ Menu UK media, MPs unveil latest Assange deception 13 April 2019 In my last blog post, I  warned  that the media and p...