Sunday, 3 February 2019

தமிழரசு கட்சியை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்!(புரட்சிகர இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வார ஏடான ‘தொழிலாளி’ பத்திரிகையில் 50 வருடங்களுக்கு முன் வெளியான இக்கட்டுரை, தமிழரசுக் கட்சியின் இன்றைய அரசியல் நிலைக்கும் பொருத்தமாக இருப்பதால் வாசகர்களுக்காக மீள் பிரசுரம் செய்யப்படுகிறது – வானவில்)

னது முன்னாள் தலைவர்களில் ஒருவரான ஊர்காவற்றுறை பாராளுமன்ற உறுப்பினர் திரு.நவரத்தினம் கூறிய அறிவுரையை ஏற்று தமிழரசுக் கட்சி எவ்வளவு விரைவாக தற்கொலை செய்து கொள்கிறதோ, அவ்வளவு தமிழ் மக்களுக்கும் முழு இலங்கை மக்களுக்கும் நல்லதாகும். தமிழரசுக் கட்சி நீண்ட காலமாக தமிழ் மக்களை ஏமாற்றி வந்துள்ளது. பாராளுமன்ற அரசியல் விளையாட்டில், அது விளையாட எடுத்த முயற்சியின் வங்கலோட்டுத்தனமும் நன்கு அம்பலமாகிவிட்டது.

கடந்த 1956 ம் வருடத்திற்குப் பிறகு இன்றுவரை தமிழரசுக் கட்சி மூன்று தடவைகள் சிங்கள முதலாளித்துவ கட்சிகளால் ஏமாற்றப்பட்டுள்ளது. முதலில், அது நம்பிக்கை வைத்திருந்த சிங்கள மத்தியிலுள்ள பிற்போக்கு, வகுப்புவாத, குறுகிய தேசியவாத சக்திகளின் நெருக்குதலினால், காலஞ்சென்ற எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா தான் செல்வநாயகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்தார்.

இரண்டாவதாக, மாவட்ட சபைகள் ஏற்படுத்தப்படும் என்று அடுத்தடுத்து சிம்மாசனப் பிரசங்கத்தில் கொடுத்த வாக்குறுதியை திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா காப்பாற்றவில்லை. மூன்றாவதாக, இப்பொழுது கனவான் டட்லி சேனநாயக்கா, “தேசிய” அரசாங்கம் ஏற்படுவதற்கு அடிப்படையாயிருந்த தமிழரசுக் கட்சிக்குத் தான் கொடுத்த ரகசிய வாக்குறுதியை கைவிட்டுவிட்டார்.


முதலாளித்துவ அரசியல்வாதிகளின் பெருமிதமான வாக்குறுதிகள், எழுதப்பட்ட தாளின் பெறுமதிகூட இல்லை என்பதை, தமிழரசுக் கட்சி தனது செல்வாக்கை இழந்து கற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலைமைக்கு வேறு யாரையுமல்ல, தமிழரசுக் கட்சி தன்னைத்தானே குற்றஞ்சாட்டிக் கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தில் ஒரு தனி அரசியல் கட்சியும் கூடுதலான பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்ற முடியாமல் இருந்த நிலையில், காலஞ்சென்ற எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் கொலைக்குப் பின் வளர்ந்து வந்த அரசியல் நிலைமையை தமிழரசுக் கட்சி பயன்படுத்திக் கொண்டு பாராளுமன்ற அரசியல் விளையாட்டை விளையாட முயன்றது. மந்திரிசபையை உருவாக்கும் சூத்திரதாரியாக வர எண்ணியது. 1960 மார்ச்சில் திரு.டட்லி சேனநாயக்காவின் சிறுபான்மை அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சியுடன் ஒத்துழைத்தது. 1964 டிசம்பரில் கூட்டரசாங்கத்தை வீழ்த்த அது யு.என்.பியுடன் சேர்ந்தது. 1965 மார்ச்சில் பூரணமான பெரும்பான்மை கிடைக்காத யு.என்.பியுடன் தனது வர்க்க நலனின் அடிப்படையில் ஒன்றுசேர்ந்து, யு.என்.பி. தலைமைப்பீடத்துடன் இரகசிய ஒப்பந்தம் செய்து அரசாங்கம் அமைக்கவும் உதவி புரிந்தது.

இம்மட்டல்ல, எல்லா வேளைகளிலும், சிங்கள மக்கள் மத்தியிலுள்ள முற்போக்காளர்களிடமும், புரட்சிகரப் பகுதிகளிடமும் – முக்கியமாக தொழிலாளி – விவசாயி மக்களில் நம்பிக்கை வைக்கவோ, அல்லது உதவி கோரவோ தமிழரசுக் கட்சி உறுதியாக மறுத்து வந்துள்ளது. உண்மையில் அதன் கொள்கைகளும், நடவடிக்கைகளும் சிங்கள மக்கள் மத்தியிலுள்ள முற்போக்குப் பகுதியைச் சினமூட்டவே செய்தன. திரு.ஜீ.ஜீ.பொன்னம்பலமும், அவரது தமிழ் காங்கிரசும் விட்ட இடத்திலிருந்து, தமிழரசுக் கட்சி பலகாலமாக தீவிரமான, இரத்தம் உறையும் சிங்கள எதிர்ப்பு வகுப்புவாதத்தில் (இனவாதத்தில்) முக்குளித்தது. இப்படித்தான் அவர்கள் சமஸ்டியைக் கோரினார்கள் – சாதாரண சந்தர்ப்பங்களில் இக் கோரிக்கை தீங்கானதல்ல – இது சிங்கள மக்களுக்கு வெறுப்பான ஒன்று.


பாராளுமன்றத்தில் பண்டாரநாயக்கா அரசாங்கங்களால் கொண்டு வரப்பட்ட ஒவ்வொரு முற்போக்கு மசோதாவையும் – நெற்காணி மசோதா, பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்றல், அந்நிய எண்ணெய் கம்பனிகளைத் தேசியமயமாக்கல், இன்சூரன்ஸ் கம்பனிகளைத் தேசியமயமாக்கல் ஆகியவற்றையெல்லாம் – எதிர்த்தனர். திருகோணமலைத் தளத்திலிருந்த பிரிட்டிசாரை வெளியேறும்படி காலஞ்சென்ற எஸ்.டபிள்யு. ஆர்.டிபண்டாரநாயக்கா கேட்ட போது, தமிழரசுக் கட்சி அதற்கெதிராக இராணிக்கு மனு அனுப்பியது. “சுதந்திர” தினத்தில் அக்கட்சியினர் சீற்றத்துடன் கறுப்புக் கொடியைப் பறக்க விட்டார்கள்.


எல்லா நடவடிக்கைகளிலும் தமிழ் மக்களின் நலன்களை – வடக்கிலும் சரி, கிழக்கிலும் சரி, அல்லது தோட்டப் பகுதிகளிலும் சரி – தமிழரசுக் கட்சி பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. சமூக ரீதியாகப் பழமை வாய்ந்ததும், மிகவும் பிற்போக்கானதுமான யாழ்ப்பாணத் தமிழ் மக்களது நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ பகுதியின் நலன்களையே அது பிரதிநிதித்துவப்படுத்தியது. ஆதனால்தான் சிங்கள மக்களின் வயற்றில் அடித்தது போல தமிழ் மக்களின் வயற்றிலும் அடித்த கூப்பன் அரிசியைப் பாதியாக வெட்டிய ஆட்சியின் நடவடிக்கையை எதிர்த்துக் குரல் எழுப்பவில்லை. ரூபாவின் மதிப்பு குறைக்கப்பட்டதையும், அதனைத் தொடர்ந்து சமாளிக்க முடியாத அளவுக்கு வானாளாவ உயர்ந்துள்ள விலைவாசி உயர்வையும் பற்றி ஒரு எதிர்ப்பையும் காட்டவில்லை. வட பகுதியில் தீண்டாமைக்கும் சாதி ஒடுக்குமுறைக்கும் எதிராக தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்தும் இயக்கங்களுக்கு ஆதரவாக ஒரு சின்னி விரலைத்தானும் உயர்த்தவில்லை. சிறுபான்மை இன மக்களுக்கு, குறிப்பாக இந்திய வம்சாவழியைச் சேர்ந்த நாடற்ற பிரஜைகளான தொழிலாளர்களுக்குச் சொல்ல முடியாத இன்னல்களை விளைவிக்கும் என்று தெரிந்தும் கூட அடையாள அட்டை மசோதாவுக்கு வெளிப்படையாக தமிழரசார் ஆதரவு கொடுத்தார்கள். இதனால் இந்திய வம்சாவழித் தொழிலாளர்கள் தமது நாடற்ற தன்மையை மெய்ப்பிக்கும்படி கேட்கப்படுவார்கள். தமிழரசார் பங்காளிகளாக இருக்கின்ற இதே அரசாங்கம்தான் வட பகுதி மக்களைத் தொல்லைக்குள்ளாக்கும் – அவர்கள் அனைவரும் கள்ளக்கடத்தல்காரர்கள் என்று அவமானப்படுத்தும் பொருட் கட்டுப்பாட்டுச் சட்டத்தைக் கொண்டு வந்தது.

தெளிவாக, தமிழரசுக் கட்சி தமிழ் மக்களை கொல்லைப்புறத்துக்கு இட்டுச் சென்றுள்ளது. அது தமிழ் மக்களுக்குச் செய்தது ஒன்றே ஒன்றுதான். சிங்கள மக்களிடையே உள்ள வகுப்புவாதிகளுக்கும், குறுகிய தேசியவாதிகளுக்கும் தீனி போட்டு அவர்களின் பெரும் பகுதியினரின் எதிர்ப்பைத் தேடிக் கொடுத்ததுதான் அது. சிங்கள வகுப்புவாதமும், தமிழ் வகுப்புவாதமும் ஒன்றிலிருந்து ஒன்று வளர்கிறது என்பது நன்கு தெரிந்த விசயமாகும்.

தமிழரசுக் கட்சியின் தலைமைப்பீடமும், அதன் கொள்கைகளின் வங்குரோட்டுத்தனமும் இன்று நாடு முழுவதும் அம்பலமாகிவிட்டது. எனவே, தமிழரசுக் கட்சித் தலைமைப்பீடத்தின் வங்கலோட்டுத்தனத்தையும், அதன் பிற்போக்கு, வகுப்புவாதக் கொள்கைகளையும் உதறித் தள்ளிவிட்டு சிங்கள மக்கள் மத்தியில் உள்ள புரட்சிகர பகுதியினருடன் ஒத்துழைப்பதிலும், நட்புறவு கொள்வதிலும் நம்பிக்கை வைக்கும் காலம் தமிழ் மக்களுக்கு வந்துவிட்டது. இவ்விரு பகுதியினரின் வர்க்க நலனும் ஒன்றே. எதிரியும் ஒன்றுதான் – வெளிநாட்டு ஏகாதிபத்தியமும் அதன் வேட்டை நாய்களுமே. தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலுள்ள புரட்சிகர அரசாங்கத்தின் கீழ் மட்டுமேயல்லாது, முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயகத்தின் கீழ் தமது உண்மையான உரிமைகளை வென்றெடுக்க முடியாதென்பதைத் தமிழ் மக்கள் நன்கு அறிய வேண்டும். சகலருக்கும் பொருளாதார உத்தரவாதமுள்ள சோசலிச அரசின் கீழ் மட்டுமே சிறுபான்மை இன மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.

தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சியின் தலைமையை உதறித்தள்ளுவதற்கு, சிங்கள மக்களின் மத்தியிலுள்ள முற்போக்கு உணர்வும், புரட்சிகர உணர்வும் வாய்ந்த பகுதிகளுக்குச் சமமான பொறுப்பு உண்டு. எல்லாத் தமிழ் மக்களும் தமிழரசுக்காரரல்ல என்பதைச் சிங்கள மக்கள் உணர வேண்டும். தமிழரசுக் கட்சியின் பிற்போக்கு, வகுப்புவாதக் கொள்கைகளை எதிர்க்கும் தமிழ் மக்கள் கணிசமாக உள்ளனர். ஆனால், பொறுப்பற்ற, சந்தர்ப்பவாத, குறுகிய தேசியவாத சிங்கள அரசியல்வாதிகளால் உரத்துப் போடப்படும் வகுப்புவாதக் கூச்சல்களால் அவர்கள் தமது கருத்துக்களை உரத்துக்கூற முடியாதுள்ளனர்.
சிங்கள தமிழ் மக்களிடையே உள்ள பிற்போக்குவாதிகள் தமது வர்க்க நலன்களின் அடிப்படையில் ஒன்று சேர முடியுமானால், இரு பகுதியிலுமுள்ள புரட்சியாளர்களும் ஒன்றுசேர முடியும். இதுதான் இன்று தேவைப்படும் உடனடிக் காரியமாகும் – புரட்சிகரத் தலைமையின் கீழ் சிங்கள, தமிழ் வெகுஜனங்களின் ஒற்றுமையைக் கட்டி வளர்ப்பதாகும்.

தொழிலாளி – 1968 யூலை 17மூலம்: வானவில் இதழ் 97 ஜனவரி 25, 2019

No comments:

Post a Comment

UK media, MPs unveil latest Assange deception

≡ Menu UK media, MPs unveil latest Assange deception 13 April 2019 In my last blog post, I  warned  that the media and p...