இது அபாயகரமான போக்கு! – சந்திரன்லங்கையில் அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது காணாமல் போன தமது உறவுகளைக் கண்டுபிடித்துத் தரும்படி தமிழ் பொதுமக்கள் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக பலவிதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இப்படி போராட்டங்கள் நடத்தும் பொதுமக்களை காலத்துக்காலம் அரசாங்கத் தலைவர்களும், தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும், சில வேளைகளில் சில வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் சந்தித்து சில வாக்குறுதிகளை வழங்கி வருகின்ற போதிலும், அந்த மக்களின் கோரிக்கைகளில் ஒரு வீதம் தன்னும் நிறைவேற்றப்படவில்லை.
இந்தப் பிரச்சினை முடிவின்றி தொடர் கதையாக இழுபடுவதற்கு உண்மையான காரணம், காணாமல் போனவர்களில் பெரும்பாலோர் உயிருடன் இல்லை என்பதே. இந்த உண்மை சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினர்க்கும் தெரிந்திருந்தும் அதை வெளியே சொல்வதற்கு அச்சப்பட்டு மூடி மறைத்து வருகின்றனர்.

“காணாமல் போனோர்” என பொதுவாகக் கூறப்பட்டாலும், இவ்வாறு காணாமல் போனோரில் பல வகைப்பட்டவர்கள் அடங்குகின்றனர். இவர்களில் ஒரு பகுதியினர் உண்மையான பொதுமக்கள். இன்னொரு பகுதியினர் புலிகளின் போராளிகள். அதனால்தான் புலிகளின் திரிகோணமலை முன்னாள் பொறுப்பாளர் எழிலனின் மனைவி அனந்தி சசிதரனும் தனது கணவர் இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் காணாமல் போயுள்ளார் என்று கூறி இந்தப் போராட்டங்களில் பங்குபற்றி வருகின்றார்.


இவர்கள் எப்படிக் காணாமல் போனார்கள் என்பதிலும் பல்வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. இராணுவம் தமது உறவுகளைக் கொன்றிருக்கலாம் என சில மக்கள் நம்புகின்றனர். இன்னும் சிலர் தமது உறவுகளை இராணுவம் இரகசிய முகாம்களில் தடுத்து வைத்திருக்கிறது என நம்புகின்றனர். ஆனால் முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கமும் சரி, தற்போதைய ரணில் விக்கிரமசிங்க அரசாங்கமும் சரி, அப்படியான இரகசிய முகாம்கள் எதுவும் இலங்கையில் இல்லை என மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் காணாமல் போனதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. புலிப் போராளிகளைப் பொறுத்தவரையில் இறுதி யுத்த நேரத்தில் இராணுவத்திடம் சரணடைந்த சுமார் பதினோராயிரம் பேர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்னொரு தொகை புலிப் போராளிகள் இறுதி யுத்த நேரத்தில் செத்து மடிந்துவிட்டனர். அவர்கள் யார் யார் என்பது அவர்களின் உறவினர்களுக்கே தெரியாமல் இருக்கலாம். சிறு பகுதியினர் தமக்கு இருந்த பண மற்றும் பௌதீக வளங்களைப் பயன்படுத்தி முதலில் இந்தியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கும் பின்னர் மேற்கத்தைய நாடுகளுக்கும் தப்பிச் சென்றிருக்கலாம். அப்படியான முக்கிய நபரொருவர், அன்ரன் பாலசிங்கத்துக்கு அடுத்ததாக தன்னை புலிகளின் ஆலோசகராக பாவனை பண்ணித் திரிந்தவர், தமிழ் நாட்டுக்குத் தப்பியோடி, சில காலம் தலைமறைவாக இருந்துவிட்டு, இப்பொழுது துணிச்சலுடன் வெளியே வந்து இலங்கை ஊடகங்களிலேயே கட்டுரைகள் எழுதி வருகின்றார்.

காணாமல் போன பொதுமக்களின் நிலைதான் பரிதாபகரமானது. புலிகளுக்கெதிராக மன்னாரில் ஆரம்பித்த இராணுவ நடவடிக்கை முன்னேற முன்னேற புலிகள் இவர்களை முள்ளிவாய்க்கால் வரை தமது பாதுகாப்பு கேடயமாகப் பிடித்துச் சென்றார்கள். இறுதிப் போர் நிகழ்ந்த போது இவர்களில் சிலர் புலிகளின் பிடியிலிருந்து தப்பி இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஓடி வந்தனர். சிலரை ஓட விடாமல் புலிகளே சுட்டுக் கொன்றதாக கண்ணால் கண்டவர்கள் கூறியிருக்கின்றனர். காயமடைந்த புலிப் போராளிகளை புலிகள் பல பஸ்களில் ஏற்றிச் சென்று அந்த பஸ்களுக்கு வெடிகுண்டுகளை வீசி அழித்த போது அதில் தெரியாத்தனமாக சில பொதுமக்களும் ஏறிச் சென்று கொலையுண்டதான தகவல்களும் உண்டு.

பொதுமக்களைப் பொறுத்தவரை, இறுதிநேரத்தில் அவர்கள் ஒரே குடும்பங்களாகக் கூட இருக்க முடியாமல் திக்குத்திக்காக சிதறி இருந்துள்ளனர். இப்படியான ஒரு சூழலில் இருதரப்பும் மாறிமாறி ஏவிய எறிகணை வீச்சிலும் துப்பாக்கிச் சூட்டிலும் யார்யார் மரணித்தனர், யார் தப்பினர் என்ற விபரமே தெரிய வரவில்லை. சில குடும்பங்களில் தந்தையும் சில பிள்ளைகளும் தப்ப, தாயும் சில பிள்ளைகளும் மரணமடைந்துள்ளனர். ஒழுங்கான ஆய்வுகள் எவையும் மேற்கொள்ளப்படாததால் உண்மையான விபரங்கள் எவையும் இதுவரை கண்டறியப்படவில்லை.
காணாமல் போனவர்களின் உறவினர்கள் நடத்தி வரும் போராட்டம் முடிவின்றி பல மாதங்களைக் கடந்துள்ள நிலையில் அந்தப் போராட்டங்களை நடத்தும் மக்கள் விரக்தியின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி அவர்களிடம் சில தீய சக்திகள் ஊடுருவ ஆரம்பித்துள்ளதை வவுனியாவில் அண்மையில் நிகழ்ந்துள்ள சம்பவம் ஒன்று எடுத்துக் காட்டியுள்ளது. அந்தச் சம்பவத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் வவுனியாவில் உள்ள கோயில் ஒன்றின் முன்னால் அமெரிக்க தேசியக் கொடியையும், ஐரோப்பிய யுனியனின் கொடியையும் பிடித்த வண்ணம், “அமெரிக்காவும் ஐரோப்பிய யுனியனும் வந்து எமது உறவுகளைக் கண்டு பிடித்துத் தாருங்கள்” என வேண்டுவதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. இது ஒரு பாரதுரமான நிலைமை.

இந்த மக்கள் இலங்கை அரசாங்கத்தின் மீதும், தமிழ் அரசியல் கட்சிகள் மீதும் நம்பிக்கை இழந்ததின் விளைவே அவர்கள் அந்நிய சக்திகளுக்கு அழைப்பு விடுவதின் அர்த்தமாகும். அவர்கள் பக்கத்திலுள்ள இந்தியாவுக்குக் கூட அழைப்பு விடவில்லை. எங்கோ உள்ள அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் அழைப்பு விடுகின்றனர். அவர்கள் அழைப்பு விடுக்கும் இந்த நாடுகள் கடந்த காலங்களில் உலகம் முழுவதும் பல காலனி நாடுகளை வைத்திருந்து பலவிதமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள். பல இலட்சம் உயிர்களைக் கொன்று குவித்தவர்கள். பல இலட்சம் மக்களை காணாமல் ஆக்கியவர்கள். இப்படியான சக்திகளுக்கு தமது பிரச்சினையைத் தீர்க்க வரும்படி நமது மக்கள் அழைப்பு விடுப்பதென்பது மிகவும் ஆபத்தான நிலைமையாகும்.
இந்த அழைப்பு நிச்சயமாக சாமானிய மக்களால் திட்டமிட்டு விடுக்கப்பட்ட ஒன்று அல்ல. இதன் பின்னணியில் சில நாசகார சக்திகள் இருந்து செயல்பட்டுள்ளன. எனவே இத்தகைய நிலைமைகளை வளரவிடாது இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டிய பொறுப்பு அரசுக்குரியதாகும்.
மூலம்: வானவில் 

மூலம்: வானவில் (இதழ்  97 ஜனவரி 25, 2019)


No comments:

Post a Comment

UK Tory Party threatens war against Russia, prepares class war at home By Thomas Scripps

  Warning Russian President Vladimir Putin of “what could be a very, very bloody war”, UK Defence Secretary Ben Wallace announced yesterday ...