புதிய அரசியலமைப்பு நிறைவேறி மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்குமா?லங்கையில் புதிய அரசியல் அமைப்பு ஒன்று கொண்டு வருவது சம்பந்தமான வாதப்பிரதிவாதங்கள் மீண்டுமொருமுறை ஆரம்பமாகியுள்ளது.

புதிய அரசியல் அமைப்பு நாட்டை இன அடிப்படையில் கூறுபோடப் போகின்றது என எதிர்க்கட்சியினரும், இனப் பிரச்சினைக்கு தீர்வை எட்டப் போகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பும், புதிய அரசியல் அமைப்பில் புதிதாக எதுவும் இல்லை, ஒற்றையாட்சியும் பௌத்த மதத்துக்கான முன்னுரிமையும் அப்படியே இருக்கும் என அரசாங்க தரப்பும் கூறி வருகின்றன.
இந்த முத்தரப்பினரின் பிரச்சாரங்களுக்கு மத்தியில் வரப்போகும் புதிய அரசியல் அமைப்பில் என்னதான் இருக்கப் போகின்றது என்ற தெளிவில்லாத குழப்பத்தில் மக்களும் இருக்கின்றனர்.

அண்மையில் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை புதிய அரசியலமைப்புக்கான வரைபு என்ற அடிப்படையில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் சமர்ப்பிக்கட்டது அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் மட்டுமே என அரசாங்கத் தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகின்றது.
வெளிப் பார்வைக்கு அரசாங்கமும் அதன் பங்காளிக் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பும் புதிய அரசியல் அமைப்பை முற்றுமுழதாக ஆதரிப்பது போலவும், மகிந்த ராஜபக்ச தலைமையிலான எதிர்க்கட்சி அதை இனவாத அடிப்படையில் எதிர்ப்பது போலவும் பெரும் பிரச்சாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.
ஆனால் உண்மை அதுவல்ல என்பதை அரசாங்கத்தின் பங்காளிகளில் ஒருவரும், அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் நீண்டகால சகாவுமான மனோ கணேசன் அம்பலத்துக்கு கொண்டு வந்துள்ளார். அவர் இரண்டு விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில் முதலாவது விடயம், புதிய அரசியல் அமைப்பு நடைமுறைக்கு வராது என்பதும், அப்படி ஒன்று வந்தாலும் அதன் மூலம் தமிழர்களின் தேசிய இனப் பிரச்சினை தீர்க்கப்படாது என்பதுமாகும்.
இரண்டாவது விடயம், எதிர்க்கட்சியினர் மாத்திரமின்றி, ஐக்கிய தேசியக் கட்சியினரிலும் பெரும்பாலோர் புதிய அரசியல் அமைப்பு வருவரத விரும்பவில்லை என்பதுமாகும்.
மனோ கணேசனின் இந்தக் கூற்றுகள் உண்மை என்பதை நடைபெறும் சம்பவங்கள் நிரூபித்துள்ளன.
அதாவது, நாட்டின் ஒற்றையாட்சி முறைமை நீக்கப்படாது என பிரதமர் ரணில் உட்பட அரசாங்க தலைவர்கள் பலரும் நாட்டு மக்களிடமும், மகாநாயக்க தேரர்களிடமும் திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கூறியுள்ளனர். எனவே இதன் அர்த்தம் இனப் பிரச்சினைக்கு தீர்வான அதிகாரப் பகிர்வு இல்லை என்பதாகும்.

மற்றது, நாடாளுமன்றத்தில் கட்சிகளின் யோசனைகள் சமர்ப்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 66 பேர் மட்டுமே பிரசன்னமாகி இருந்துள்ளனர். அதைப் பார்க்கையில் அரசாங்கத் தரப்பில் உள்ள 117 பேரில் பலர் அந்தச் சந்தர்ப்பத்தில் சபைக்கு வராமல் தவிர்த்துள்ளனர் என்பது தெளிவாகின்றது. அதன் மூலம் ஐ.தே.க. உறுப்பிர்கள் பலருக்கும் கூட மனோ கணேசன் குறிப்பிட்டவாறு இந்த புதிய அரசியல் அமைப்பு வருவதில் உடன்பாடு இல்லை என்பது தெளிவாகின்றது.

அரசாங்கத் தரப்பின் நிலை இப்படி இருக்க, புதிய அரசியலமைப்பு எப்படியும் வரும் என்றும், அதன் மூலம் தமிழர்களின் பிரச்சினை தீரும் எனவும் உறுதிபடப் பிரச்சாரம் செய்து வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பொறுத்த வரையிலும் அதன் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ இந்த புதிய அரசியல் அமைப்பை நிராகரித்துள்ளது.

இந்த நிலையில், புதிய அரசியல் அமைப்பு ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அது மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டு, பின்னர் பொதுமக்களின் கருத்துக் கணிப்புக்கு விடப்பட்டு, வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் என்பதை ஒரு சிறுபிள்ளை தன்னும் நம்புமா?

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, இந்த புதிய அரசியல் அமைப்பை ஐ.தே.க. அரசாங்கம் என்ன நோக்கத்துக்காக கொண்டு வருகின்றது என்பது முக்கியமாகும்.
தற்போது நடைமுறையிலுள்ள அரசியல் அமைப்பும் இன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மாமனாரான ‘அரசியல் குள்ளநரி’ ஜே.ஆர். ஜெயவர்த்தனவினால் 1978ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டதாகும். அப்போது ரணில் விக்கிரமசிங்க இளைஞர்கள் அலுவல்கள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராக இருந்தார். அந்த அரசியல் அமைப்பு கொண்டு வரப்பட்ட சமயம் அது ஜனநாயக விரோதமானது, எதேச்சாதிகாரமானது எனக் கூறி, அதை நீக்கும்படி அன்றிலிருந்து பல அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பிய போதிலும் ஐ.தே.க. அதற்குச் செவிசாய்க்கவில்லை. ஆனால் இப்பொழுது மட்டும் ஐ.தே.க. அதை மாற்றுவதற்கு ஆர்வமாக இருப்பது என்ன காரணத்திற்காக?

1990ஆம் ஆண்டு ஐ.தே.கவைச் சேர்ந்த ஆர்.பிரேமதாச புலிகளால் படுகொலை செய்யப்பட்ட பின்பு, கடந்த 29 வருட காலத்தில் அக்கட்சியைச் சேர்ந்த எவராலும் ஜனாதிபதியாக வர முடியவில்லை. இனிமேலும் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. இந்தச் சூழ்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் தப்பித்தவறி வெற்றி பெற்றாலும், இன்னொரு கட்சியைச் சேர்ந்தவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருக்கும்வரை ஐ.தே.க. அரசால் தான் நினைத்ததைச் செய்ய முடியாத நிலைதான் இருக்கும்.
எனவே, புதிய அரசியல் அமைப்பின் மூலம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கி நாடாளுமன்றத்துக்கு அந்த அதிகாரங்களை வழங்குவதன் மூலம், ஐ.தே.க. தான் நினைத்ததை நாடாளுமன்றத்தின் மூலம் சாதித்துக் கொள்ள முடியும் என நினைக்கிறது. அது அப்படி நினைப்பதற்கு காரணமும் இருக்கின்றது.

சில சந்தர்ப்பங்களில் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனித்து ஆட்சி அமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது போனால், ஐ.தே.க. 1965இல் செய்தது போல அல்லது சமீபத்தில் செய்தது போல, தன்னையொத்த அரசியல் கருத்துள்ள, தன்னுடன் எப்பொழுதும் கூட்டு வைத்துள்ள, வலதுசாரித்தனமான தமிழ் – முஸ்லீம் – மலையக கட்சிகளின் ஆதரவுடன் நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியமைத்துவிட முடியும் என ஐ.தே.க. திடமாக நம்புகிறது. எனவேதான் புதிய அரசியல் அமைப்பு ஒன்று கொண்டுவர வேண்டும் என்பதில் ஐ.தே.க. குறியாக உள்ளது.
சரி, அப்படி புதிய அரசியல் அமைப்பு ஒன்றின் மூலம் தனது கைகளில் அதிகாரத்தை எடுப்பதன் மூலம் ஐ.தே.க. என்னத்தைச் சாதிக்க விரும்புகின்றது. நாட்டினதும் மக்களினதும் நலனுக்காக எதையாவது செய்ய விரும்புகிறதா? அல்லது புதிய அரசியல் அமைப்பின் மூலம் நாட்டில் நீண்டகாலமாகப் புரயோடிப் போயுள்ள இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண விரும்புகிறாதா? ஆனால் உண்மை இவை எதுவுமேயல்ல.
ஐ.தே.க. கொள்கைகள் என்னவென்பது நாட்டு மக்கள் அனைவரும் அறிந்தவைதான். அதாவது, நாட்டு நலனையோ மக்களின் நலனையோ அல்லது ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இனங்களின் நலன்களையோ அடிப்படையாகக் கொண்டவையாக ஐ.தே.கவின் கொள்கைகள் ஒருபோதும் இருந்ததில்லை.

ஐ.தே.க. பதவியில் இருந்த காலங்களில் எல்லாம் நாட்டின் தேசிய சுதந்திரம், சுயாதிபத்தியம், பிரதேச ஒருமைப்பாடு என்பனவற்றை பாதிப்புக்குள்ளாக்கும் நவடிக்கைகளையே எடுத்து வந்திருக்கிறது. அதாவது, மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகளின் அரசியல், பொருளாதார, இராணுவ நலன்களுக்காகவே ஐ.தே.க. அரசுகள் செயல்பட்டு வந்திருக்கின்றன.
மறுபக்கத்தில் ஐ.தே.க. அரசுகள் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற உலக ஏகாதிபத்திய வட்டிக் கடைக்காரர்களின் உத்தரவுப்படி செயல்பட்டு நாட்டு மக்களின் மேல் ஏராளமான பொருளாதாரச் சுமைகளையும் ஏற்றி வந்திருக்கின்றன. அப்படியான ஒரு சூழ்நிலையில்தான் 1953 ஓகஸ்ட் 12 ஹர்த்தால் மூலம் டட்லி சேனநாயக்க தலைமையிலான அன்றைய ஐ.தே.க. அரசை மக்கள் பதவியிலிருந்து விரட்டியடித்தனர்.

சிறுபான்மை இனங்களின் இனப் பிரச்சினைத் தீர்வு விடயத்திலும் ஐ.தே.கதான் 1958, 1977, 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் தமிழ் மக்களின் மீது இன வன்செயலை நேரடியான முன்னின்று நடத்திய கட்சியாகும். அதுமட்டுமின்றி, இனப் பிரச்சினையை 30 ஆண்டுகால கொடூரப் போராக மாற்றிய கட்சியும் ஐ.தே.க. கட்சிதான். அதுதவிர, இலங்கை சுதந்திரமடைநத் உடனேயே மலையகத் தமிழ் மக்களின் பிராஜாவுரிமையையும் வாக்குரிமையையும் பறித்து அவர்களை நாடற்றவர்களாக்கியதும் ஐ.தே.க.தான். வடக்கு கிழக்கில் தமிழ் – முஸ்லீம் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை ஆரம்பித்து வைத்ததும் ஐ.தே.கதான்.

அதுமாத்திரமின்றி, சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசுகளால் இனப் பிரச்சினைக்குத் தீர்வுகளாக 1957இல் செய்து கொள்ளப்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தத்தையும், 2000 ஆண்டில் சந்திரிக அரசு கொண்டு வந்த தீர்வுத்திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவிடாமல் தடுத்ததும் ஐ.தே.கதான்.

எனவே இத்தகைய ஐ.தே.கவினால் தலைமை தாங்கப்படுகின்ற ஒரு அரசு கொண்டு வருகின்ற ஒரு புதிய அரசியல் அமைப்பினால் நாட்டினதும், மக்களினதும். சிறுபான்மை இனங்களினதும் நலன்கள் பாதுகாக்கப்படும் என்று யாராவது நம்ப முடியுமா?
உண்மை என்னவெனில், தற்போதைய சூழ்நிலையில் புதிய அரசியல் அமைப்பொன்று நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியம் இல்லை என்பது ஒருபுறமிருக்க, அப்படியொரு அரசியல் அமைப்பால் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்பதும் சாத்தியமில்லை.
தற்போதைய ஐ.தே.க. அரசால் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய அரசியல் அமைப்பென்பது 1978 அரசியல் அமைப்பின் இன்னொரு நகலே தவிர வேறொன்றுமல்ல.
மூலம்: வானவில் இதழ் 97 ஜனவரி 25, 2019

No comments:

Post a Comment

The danger of US-China war and Australia’s anti-democratic election laws-by Peter Symonds

The new anti-democratic election laws in Australia, aimed at deregistering so-called minor parties, go hand in hand with the efforts of the ...