சுமந்திரன் வகுக்கும் புதிய வியுகம் தமிழ் மக்களிடம் எடுபடுமா? -புனிதன்


ண்மைக் காலமாக தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியினதும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் வருங்காலத் தலைவராக வரக்கூடியவர் எனக் கருதப்படுபவருமான எம்.ஏ.சுமந்திரன் விடுதலைப் புலிகளை பொது மேடைகளில் விமர்சித்து வருகின்றார். புலிகள் கோலோச்சிய காலத்தில் இந்தச் சுமந்திரன் என்பவர் யார், இவர் எங்கு இருந்தார், என்ன செய்து கொண்டிருந்தார் என்பது பொதுமக்களுக்குத் தெரியவே தெரியாது. பொதுமக்களுக்கென்ன, தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பலருக்குக்கூடத் தெரியாது. அதுமட்டுமல்லாமல், புலிகள் இறுதி யுத்த நேரத்தில் அரச படைகளால் அழிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கடக்கும் வரையிலும் கூட சுமந்திரன் புலிகள் மீது எந்தவிதமான விமர்சனங்களையும் முன் வைக்கவும் இல்லை.

அப்படியிருக்க, இப்பொழுது மட்டும் சுமந்திரன் புலிகளைத் திடீரென விமர்சிக்க புறப்பட்டிருப்பதன் பின்னணி என்ன என்ற கேள்வி எழுகின்றது. நீண்டகாலமாக புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்து வரும் சிலர் மத்தியில் சுமந்திரனின் இந்த திடீர் நிலைப்பாடு குழப்பங்களையும் ஏற்படுத்தி இருப்பதையும் அவதானிக்க முடிகிறது. கடந்த காலங்களில் சுமந்திரனின் அரசியல் நிலைப்பாடுகளால், அவர் மேற்கத்தைய சார்பானவர், ஐக்கிய தேசியக் கட்சியின் கையாள் என்று கருதியிருந்த சிலர் கூட, சுமந்திரனின் புலி எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கண்டு ஆச்சரியப்பட்டு, “என்ன இருந்தாலும் உண்மையை வெளிப்படையாகப் பேசும் ஒரேயொரு கூட்டமைப்பு அரசியல்வாதி” எனப் புகழாரமும் சூட்டுகின்றனர்.
ஆனால் சுமந்திரனின் புலிகளுக்கெதிரான இந்த திடீர் நிலைப்பாட்டுக்குக் காரணம் என்ன என்பதை தீர ஆராய்ந்தால்தான் அவரது இந்தப் புதிய நாடகத்துக்கு என்ன காரணம் என்பதை அறிந்துகொள்ள முடியும்.


சுமந்திரன் முதலாளித்துவ தத்துவ நோக்கும், தந்திரங்களும் கொண்ட ஒரு புத்திஜீவி அரசியல்வாதி. இவரைப் போன்ற ஒருவரை சம்பந்தனைத் தவிர்த்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு அணிகளில் காண முடியாது. எனவே தமிழ் மக்கள் மத்தியில் உள்ள அரசியல் மனநிலை என்னவென்பதை ஓரளவு துல்லியமாக அறிந்து வைத்திருக்கிறார் சுமந்திரன்.
அதன் அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வழமையான புலி சார்பு அரசியல் அடிப்படையில் தமது எதிர்காலப் பிரச்சாரங்களைச் செய்யாமல் சற்று வித்தியாசமாக புலி எதிர்ப்பு அரசியலையும் சேர்த்து தமது அரசியல் தந்திரோபாயத்தை வகுப்பதற்கு சுமந்தின் தீர்மானித்துள்ளார் எனத் தெரிய வருகிறது. அப்படி அவர் தீர்மானிப்பதற்கு தமிழர் அரசியலில் கடந்த சில வருடங்களாக ஏற்பட்டு வரும் மாற்றங்களை அவர் கவனத்தில் எடுத்திருக்கிறார்.
முக்கியமாக, புலிகள் இருந்த காலத்திலும் பின்னர் அவர்கள் அழிக்கப்பட்ட பின்னரான சிறிது காலப் பகுதியிலும் அவர்களுக்கான செல்வாக்கு தமிழ் மக்கள் மத்தியில் இருந்தது உண்மையே. அந்தச் செல்வாக்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் வெற்றிக்காகப் பயன்படுத்தியதும் உண்மையே. ஆனால் தற்போதைய சூழலில் புலிகள் மீண்டும் புனர்ஜென்மம் எடுப்பதற்கான சூழல் அறவே இல்லை. தமிழ் மக்கள் மத்தியிலும் அவர்களது செல்வாக்கு நாளுக்குநாள் அருகி வருகின்றது. உள்நாட்டிலும் புலம் பெயர் நாடுகளிலும் புலிகளின் சில அனுதாபிகளும், அவர்களை வைத்து பிழைப்பு நடத்தியவர்களும் இடையிடையே புலிகளின் பெயரை உச்சரிப்பதைத் தவிர வேறு எந்த எழுச்சிச் சூழலும் அவர்களுக்கு இல்லை. எனவே புலிகளின் பெயரைச் சொல்லி வாக்கு வேட்டையாட வேண்டிய தேவை இனியும் இல்லை என சுமந்திரன் கருதுகின்றார்.

அத்துடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை தம் வசம் வைத்திருக்கும் சம்பந்தன், சுமந்திரன் போன்றோர் முன்னைய காலங்களில் இருந்த தமிழ் தலைமைகளை விட மிகவும் வெளிப்படையாக மேற்குலக சக்திகளுடனும், ஐக்கிய தேசியக் கட்சியுடனும் கைகோர்த்து செயல்பட ஆரம்பித்துவிட்டனர். இந்தச் சூழலில் ஏறத்தரழ 27 உலக நாடுகளால் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்ட புலிகளின் வாலில் தொடர்ந்தும் தொங்கிக் கொண்டிருப்பது தாம் தேர்ந்தெடுத்த தரகு அரசியலுக்கு சரிப்பட்டு வராது எனவும் சுமந்திரன் கருதுகிறார்.
இதுதவிர, புலிகளை மையப்படுத்தி கடந்த காலத்தில் முனனெடுத்து வந்த தீவிர தமிழ் தேசியவாத அரசியலிலும் இப்பொழுது வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

சம்பந்தன், சுமந்திரன் போன்றோர் எடுத்துள்ள ஐ.தே.க. சார்பு அரசியல் நிலைப்பாட்டால் தமிழர்களின் ஏகப் பிரதிநிதி தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் என்ற நிலையில் உடைவு ஏற்பட்டுள்ளது. இவர்களின் நிலைப்பாட்டால் ஏற்கெனவே இவர்களுக்கு எதிராக தீவிர தமிழ் தேசிய நிலைப்பாட்டை எடுத்து வந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு சிறிது ஆதரவு அதிகரித்துள்ளதுடன், முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் கூட்டமைப்பு என்ற தீவிர தமிழ் தேசியவாத அமைப்பொன்றும் உருவாகியுள்ளது. இந்த இரு அணியினரும் வருங்காலத்தில் நடக்கவுள்ள தேர்தல்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கியை நிச்சயமாகப் பங்கிடப் போகிறார்கள். இதற்கான அத்தாட்சியாக கடந்த வருடம் பெப்ரவரியில் நடைபெற்ற உள்ளுராட்சி தேர்தலின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகள் வீழ்ச்சியடைந்ததைக் குறிப்பிடலாம்.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, புலிகளின் பாசிசப் போக்கை ஆரம்பம் முதல் தொடர்ச்சியாகவும் விடாப்பிடியாகவும் உயிராபத்துகளுக்கு மத்தியில் எதிர்த்து வரும் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பிக்கு தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஒரு இடத்தை வழங்கி வருகின்றனர். இந்த உண்மை கடந்த உள்ளுராட்சி தேர்தலில் ஈ.பி.டி.பியின் வாக்கு வங்கியின் அதிகரிப்பு எடுத்துக் காட்டியிருக்கிறது. புலி எதிர்ப்பு அரசியல் தமிழ் மக்களிடையே வளர்ச்சி கண்டு வருகிறது என்ற உண்மை இதன் மூலம் சுமந்திரனுக்கு தெளிவாகியிருக்கிறது.

இந்த நிலைமைகளையெல்லாம் கூட்டிக்கழித்து கணக்குப் பார்த்த சுமந்திரனின் அப்புக்காத்து மூளை சில முடிவுகளுக்கு வந்திருக்கிறது. அதாவது புலிகளுக்கு சார்பான தீவிர தமிழ் தேசியவாத அரசியலை மட்டும் நம்பி அரசியல் செய்தால் எதிர்காலத் தேர்தல்களில் வெற்றியீட்டுவது சிரமம். எனவே கஜேந்திரகுமாரும் விக்னேஸ்வரனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து உடைக்கப் போகும் வாக்குகளை ஏதாவது ஒரு விதத்தில் ஈடு செய்வதானால் ஈ.பி.டி.பியின் புலி எதிர்ப்பு வாக்குளில் ஒரு பகுதியை உடைப்பதைத் தவிர கூட்டமைப்புக்கு வேறு வழியில்லை என்ற முடிவுக்கு சுமந்திரன் வந்திருக்கிறார்.

அதன் காரணமாகவே சுமந்திரன் இப்பொழுது புலி எதிர்ப்பு வேசம் கட்டி ஆடத் தொடங்கியிருக்கிறார். தவிர, அவர் புலிகளின் பாசிசப் போக்கை காலம் கடந்து உணர்ந்ததாவது இப்பொழுது ஞானம் பெற்றிருக்கிறார் என யாராவது தப்புக்கணக்குப் போட்டால் அது அவரின் தவறே தவிர சுமந்திரனின் தவறு அல்ல.



வானவில் இதழ் 97 ஜனவரி 25, 2019

No comments:

Post a Comment

மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கேட்பது? BY த ஜெயபாலன்

        எனக்கு விரைந்து புரிந்து கொள்ளும் ஆற்றல் குறைவு. இந்த மனித உரிமை, மனித உரிமை என்று பேசுகிறர்களே அது என்றால் என்ன?அதை யாரிடம் யார் கே...